மரபணுத் தொடரா? சமூகம் சார்ந்த பண்பா?

மரபணுத் தொடர்பான அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் ஒவ்வொருவரும் தனது கல்வி, விளையாட்டு, இசை போன்ற அனைத்திலும் தமது திறமையை பரம்பரையாக கிடைக்கப் பெற்ற கொடை என்று, ரத்தத்தில் ஊறிய பண்பு என்று பெருமைப்படுவதும் பிறரை இழிவாக பேசுவதும் மிகச்சாதாரண நிகழ்வாக உள்ளது. உண்மைதான் என்ன?
ஒருவருடைய குணங்களை, தனித் திறமைகளை மரபணுவழிப் பண்பு (Genotype) என்ற அறிவியல் கோட்பாடிலிருந்து மரபணுத் தொடரா? சமூகம் சார்ந்த பண்பா? என்று எவ்வாறு பிறித்து அறிந்து கொள்வது?

அறிவியல் கூறும் மரபுவழி:. (Genotype)
ஓவ்வொரு உயிரினமும் தனது தாய்வழிச் செல்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் பண்புகளை மரபுவழி பண்புகள் என்று அறிவியல் கூறுகிறது. இதனைச் சரியாக சொல்வதென்றால் மரபணுத் தொடர் பண்பு என்றே சொல்ல வேண்டும் இது செல்களில் உள்ள குரொம்சோம்களில் அடங்கியுள்ளது. புதியவனாகும் ஒவ்வொரு செல்லும். உயிரும் தாய்வழிச்செல்லின் தொடர்பும், அதே நேரத்தில புதிய சில பண்புகளும் பெற்றதாக இருக்கும். இந்தப் புதியப் பண்பு, சுற்றுச்சுழலை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப இவ்வுலகில் உயிர்வாழ்வதற்கான தன்மையை தகவமைத்துக் கொள்வதற்கானதாகும். இதனையே பரிணாமம் என்கிறது அறிவியல்.

சமூக நடைமுறையில் கூறப்படும் மரபுவழி: (Hereditary)
சமூகம் சார்ந்த பண்பு என்பதையும் பரம்பரை பழக்கம் என்பதையும் மரபுவழிப் பண்புகள் என்றச் சொல்லாள் அழைக்கப்பட்டதில் ஏற்பட்ட குழப்பம் இது. குடும்பம், சாதி, இனம், மொழி, மதம் போன்ற பிரிவுகளாக வாழும் மக்கள் தத்தமது பிரிவின் பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பதை மரபுவழி என்று மக்கள் அழைத்துக் கொள்கின்றனர். இது இவர்கள் தம்மை தனித்து அடையாளப்படுத்திக் கொள்வதற்கான செயல். இந்த தனித்த அடையாளம் ஒன்றை இன்னொன்றிலிருந்து உயர்வாக உயர்த்திக் கொள்வதற்கே மிகவும் பயன்பட்டுவந்துள்ளது. இது எவ்வாறு தோன்றிருக்கும் என்பதை குலங்களும் அதனுள் அமைந்த கோத்திரங்களும் பற்றிய வரலாறு படிப்பதால் தெரிந்துக் கொள்ளலாம். இது பெரும்பாலும் இனக்குழக்களின் தலைமையை ஏற்றவர்களுடைய பழக்கவழக்கங்கள், வாழிடச்சுழ்நிலை, மொழி ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுகின்றன. இதனை சமூகம் சார்ந்த பண்பு என்று அழைப்பதுதான் சரியானதாகும்.
மரபணுத் தொடர் பண்புகள் என்பதையும் மரபுவழிப் பண்புகள் என்பதையும் குழப்புவதே அறிவுஜீவிகளின் தலையாய மரபுவழிப் பண்பாக (சமூகம் சார்ந்த பண்பாக) உள்ளது.

இவ்விரண்டிற்குமான முக்கிய வேறுபாடுகள்
1. அறிவியல் கூறும் மரபணுத்தொடர், செல்கள் வழியாக தொடரும் பண்புகளை கொண்டு விவரிக்கப்படுகின்றன.
சமூகம் கூறும் மரபுவழி என்பது பழக்கவழக்கம் சார்ந்த பண்புகளைக் கொண்டு விளக்கப்படுகிறது.

2. மரபணுத்தொடர், ஒருவர் வாழும் இடத்தின் இயற்கைச் சுழ்நிலையை கொண்டு உருவாகிறது.
சமூக மரபுவழி, அந்தந்த காலங்களில் வாழும் மக்களால் குறிப்பாக தலைமை ஏற்று வழி நடத்துபவர்களின் விருப்பத்தால் உருவாகிறது.

3. மரபணுத்தொடர் உயிர்வாழ்வதற்கான அவசியத் தேவையாகிறது.
சமூக மரபுவழி உயிர்வாழ்வதற்கான எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை.

4. மரபணுத்தொடர் ஒருவரின் விருப்பத்தினடிப்படையில் தொடர்வதில்லை அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும தொடர்வதும விட்டுவிடுவதும் அவரது சுற்றுப்புறச் சுழ்நிலையைக் கொண்டு அவரின் உடலுறுப்புச் செல்கள் தேர்ந்தெடுத்துக் கொள்பவை.
ஆனால் சமூக தொடர்புகள் ஒருவரின் தனிப்பட்ட விருப்பத் தேர்வாகும். அது எவ்வகையிலும் ஒருவரின் விருபமின்றி நடைமுறைக்கு வராது.

உண்மையில் சமூகவழி மரபுத் தொடர்புகளை அறிவியல் பூர்வமாக விளக்க முற்பட்டதில்தான இந்த ஆய்வு தொடங்கப்பட்டுளளது. இதன் மூலவர் ஒரு மாதிரி (பெயர் மறந்துவிட்டேன்) புக்களைக்கொண்டு ஆய்வுகளைத் தொடங்கிய இவர், தகுந்த இனம் (வாழ்வதற்கும் ஆழ்வதற்கும்) என்பதை அதன் ஆரோக்கியமான உடலமைப்பைக் கொண்டு விளக்கத் தொடங்கினார். ஆனாலும் அவர் எதிர்பார்த்ததைவிட ஆய்வுகள் முன்னேற்றமடைந்து அதனையும் தாண்டி பொருள்முதல் வாதத்தை உறுதி செய்துவிடுகிறது.

ஒருவரின் ஒரு குறிப்பிட்ட பண்புவை மரபணுத்தொடரா, சமூகவழித் தொடர்பா என்று எவ்வாறு வேறுபடுத்தி பார்ப்பது?

ஒருவர் முயன்று பெரும் எந்த ஒரு பண்பும் மரபணுத்தொடராகப் பெறமுடியாது என்று ராகுல் சாங்கிருத்தியான் ஒற்றைவரியில் விளக்கிவிடுகிறார். அவர் தந்துள்ள எடுத்துக்காட்டு : ஒருவர் மருத்துவப்படிப்பு முடித்து மருத்துவராக இருந்தால் அவரது பிள்ளை மருத்துவனாக இருக்கமுடியாது என்பதாகும். ஆனால் நாம சற்று ஆழமான எடுத்துக்காட்டுகள் மூலம் வேறுபாடுகளைப் பார்ப்போம்.

வெர்னியா ( என்மகள்) தாயின் கருவரையிலிருந்து வெளியேறிய அந்த நிமிடம் அலறினாலும் வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் வைத்து கழுவிய பிறகு அவளின் அழுகை நின்றது. தாயும் உற்றார் உறவினரும் அவளின் கருமையான முடியையும் நீண்ட விரல்களையும் சிவப்பழகு மேனியையும் பார்த்துப் பார்த்துப் பூரித்திக் கொண்டிருந்தனர். ஆனாலும் வெர்னியாவின் கண்கள் இன்னும் திறக்கவில்லை. தாயின் வயிற்றிலிருந்து வெளிவர அவள் எடுத்துக் கொண்ட சிரமத்தின் அலுப்பு இன்னும் தீரவில்லையோ. சில மணிநேரம் கழித்து திடிரென வீறிட்டு அழுதால் அவள். கொசு கடித்து விட்டதோ இல்லை வேறெதுவும் நோய் வலியால் கத்துகிறாளோ என்று சற்றும் சிந்திக்காத என் துணைவி குழந்தையை மிகவும் பக்குவமாக எடுத்து “என் கண்ணுக்கு பசி எடுத்துடுச்சிமா” என்று தனது மார்போடு அணைத்துக்கொண்டு இளந்தளரின் வாய்க்கருகில் தனது மார்பின் காம்புகளை வைத்ததும் சட்டென்று அழுகை காணாமல் போனது. பாலை சுவைத்துப் பருகிய அவளின் செயல் மரபுவழிப்பண்பா? மரபணுத் தொடர்பண்பா? யாரும் இப்படித்தான் சுவைத்து பருக வேண்டும் என்ற சொல்லிக் கொடுக்கப்படாமலே தான் பசியாறிக் கொண்டாலே!. ஆம் இதுதான் மரபணுத் தொடர் பண்பு. பாலூட்டினங்கள் தமது உயிர்வாழ்விற்கான உணவை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொண்ட தகவமைப்பு.

ஒரு சில நாட்கள் கழித்தது. “ஹாய் வெர்னியா என்னைப்பாரு எங்கே என்னைப்பாரு சிரி” என்று ஆவலாக கையிலெடுத்துக் கொஞ்சினேன். சறறு ஏதோ ஆழமாக என்னை ஆய்வுசெய்வதுபோல் சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்த என் செல்ல மகள் வெர்னியா புன்னகைத்தால். இவ்வுலகில் தனக்கான ஒரு வாரிசை பெற்றெடுத்த பெருமிதத்துடன் என்தோளில் சாய்ந்திருந்த என்னவள் “அடியே! அப்பனைப் பார்த்ததும் சிரிக்கிறதப் பாரேன்” என்று என் மகளின் முதல் சிரிப்பைக் கண்டு கத்தியேவிட்டாள். அவளின் அந்த மகிழ்வை சொற்களால் கூறவே முடியாது. “அடியே! (மகிழ்வான நேரங்களில் மட்டும் நான் பயன்படுத்தும் சொல். மற்றபடி துணைவியை வாடி போடி என்ற அழைக்கும் பழக்கம் இல்லை). அப்படியே உன்னை மாதிரியே இருக்குதடி இவ சிரிக்கிறதும்” என்று அந்த சிரிப்பில் நான் பெற்ற மகிழ்வையும் சொற்களால் கூறமுடியுமோ! அந்த சிரிப்பு வெர்னியாவின் அந்த சிரிப்பின் சாயல் மரபணுத்தொடர் பண்பாகும். தொடு உணர்வு, பார்த்தல், கேட்டல், சுவையறிதல், ஒலி எழுப்புதல், ஆகிய ஐந்தறிவுகளுடன் சிரித்தலும் அழுகையும் கோவமும் மரபணுத் தொடர்பண்பாகும்.

இரண்டு மாதங்கள் கழித்து பூப்போன்ற மென்மையுடைய இளஞ்சிவப்பு வண்ண சின்னஞ்சிறு பஞ்சுமெத்தையில் படுத்திருந்த வெர்னியா சற்றுத்தள்ளிக்கிடந்த கிலுகிலுப்பையை எடுக்க தன் கால் கைகளால் உந்தி கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றால் தவழ்ந்து அக்கிலுகிலுப்பையை எடுத்ததும் இமயமலை உச்சிலே ஏறி தனது வெற்றிக்கொடியை ஊன்றியவனின் முகத்தைவிட அவளின் முகம் ஜொலித்தது. தவழ்ந்து சென்றாலே, அது யாரும் தவழ்ந்து காட்டியதோ அல்லது கைகளால் பிடித்திழுத்தோ செய்யச் சொன்னதல்ல. ஒவ்வொரு உயிர்னத்திற்கும் இப்பெயர்ச்சி இயக்கம் உயிர்வாழ ஏற்படுத்திக் கொண்ட செயல் இது இயல்பூக்கமானது. ஆனாலும் இது சமூகவழி தொடர்புப் பண்பே. தன்னை சுற்றியுள்ளவர்களின் இயக்கங்களை பார்த்துப் பார்த்து தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று தன்னுள் எழும் உணர்வினால் நடைபெறும் செயல்கள். நிமிர்ந்து நிற்பது, நடப்பது, உட்காருவது போன்றவைகளுக்கான உடல் தகவமைப்புகளை மனிதன் பெற்றிருந்தாலும் ஒரு குழந்தை எதனையாவது பிடித்துக்கொண்டு எழுந்து நிற்க முயற்ச்சிப்பதும் நடைபழகுவதும் சமூகவழி பண்புதான்.

இப்பொழுது என்மகளுக்கு வயது இரண்டு. துருதுருவென்று எதனையும் இழுத்து தள்ளிவிட்டு உடைப்பது அவளுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவளின் அம்மா “இவளை வச்சுக்கிட்டு சமாளிக்கமுடியலம்மா. நம்மல ஒரு வேளையும் பார்க்கவிடமாட்டேங்குறா. கட்டிப்போட்டுதான் வளர்க்கனும்போல” என்று அடிக்கடி அலுத்துக்கொள்வாள். ஆனால் மகளின் மா….மா… என்ற அழைப்பு கேட்கும் பொழுதெல்லாம் அந்த குறும்புகளை எல்லாம் ஒரு நொடியில் மறந்து “அம்மா சொல்லு, அப்பா சொல்லு” என்று சொல்லிச்சொல்லி மகிழ்வடைவாள் என் மகளும் வளர வளர மா.. என்பதிலிருந்து ம்மா…. என்றும் அதன்பிறகு அம்மா என்றும், பா என்பதிலிருந்து பாபா (அப்பா) என்றும் சொல்லிப்பழகிவிட்டால். பால், தண்ணீ……. என்று ஒவ்வொரு சொல்லாக சொல்லிப்பழகிவிட்டாள். ஒலி எழுப்புவதற்கான தகவமைப்புகளைக் கொண்டிருந்தாலும் ஒருவரின் மொழித்திறன் சமூகவழிப்பண்புதான். ஒலி எழுப்புதல் என்பது மட்டுமே மரபணுத் தொடர்பண்பு. வேறுபட்ட மொழி பேசபவனாக மனிதன் இருப்பது இதற்கு ஒரு சாட்சியாக இருந்தாலும் இதனிலும் ஆழமான ஒரு சான்று உள்ளது. தடையற்று நன்றாக பேசும் திறனுடையதற்கு ஏற்ப தொண்டை, நாக்கு, பல் ஆகியவற்றின் அமைப்புகள் குறைவற்று இருந்தாலும் கேட்கும் தன்மை இரு காதுகள் முழுவதுமாக இழந்து பிறக்கும் குழந்தை எந்த மொழியிலும் பேச முடியாது என்பது மிகப்பெரும் சான்றாகும்.

குறல்வளை (Larynx – vocal cord), நாக்கு, பல், மூச்சுக்குழல் வழியாக காற்றை வெளியேற்றுதல் ஆகியவற்றைக் கொண்டு கட்டுப்படுத்தி பேசும் திறன், அவற்றின் சாயல்கள் (Physical properties- style of speech) மரபணுத் தொடர் வழியாக கிடைக்கப்பெற்றவை. ஆனால் அவற்றை பயன்படுத்தி பேசுதல் என்பது சமூகவழி பண்பே ஆகும். அதற்கு பிறர் பயிற்சி தரவேண்டும் என்பது தவிர்க்க முடியாதது.

அதுவே அவள் எதற்காக சிரிக்கிறாளோ (அதாவது ஒரு செய்தி அல்லது நிகழச்சி தொடர்பாக) அது மரபணுத்தொடர்பில்லை. பிறப்புவழியில் உள்ளவர்கள் எது ஒன்றிற்கு சிரித்தார்களோ அதற்காகவே இவளும் சிரிக்கமாட்டாள். இவள் அந்த ஒன்று சிரிப்பானதாக உணர்ந்தால்தான் சிரிப்பாள். இது இவளின் தனித்தேர்வு. சமூகவழித் தொடர்புப் பண்பு.
திண்ணியத்தில் தாழ்திவைக்கப்பட்டவர்களை மலம் திண்ணவைத்து மகிழ்ச்சியடைந்தது சமூகவழித் தொடர்பண்பு. அதனை அந்த சாதியிலேயே பிறந்த நாகரீகமடைந்த மக்கள் அருவறுக்கவே செய்வார்கள். அதனால் அது மரபணுத்தொடர் பண்பு அல்ல.

கோவப்படும் நெத்தியடி முகம்மது பல்லைக்கடிக்கிறார். கண்கள் அலக விரிகிறது முகம் கடுகடுப்பாகிறது. காதுகள் சூடடைந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் அவர் அவரின் அப்பாவைப் போல் கோபமடைவதாக கூறுகிறார்கள். அக்கோப உணர்வு உடலில் ஏற்படுத்தியுள்ள தோற்றமாற்றம் அவரின் அப்பாவின் சாயாலை ஒத்திருப்பதாக கூறுகின்றனர். இது மரபணுத்தொடர் பண்பு.
நேத்தியடி அவர் அப்பாவைப்போல முன்கோபியாக இருப்பதகவும் அவர்கள் கூறுகிறாகள். இது சமூகவழித்தொடர். ஏனெனில் அவரின் பிறப்பு வழியில் உள்ளவர்கள் எதற்கெல்லாம் கோவப்பட்டார்களோ அதற்காகவே இவரும் கோவப்படுவார் என்பது பொருந்தாது. எதற்கு கோவப்படவேண்டும் என்பது இவரது தனிப்பட்ட தேர்வு. இவருக்கு (ஜெய்னுலாப்பிதீன் வகையாறாக்கள்- நஜ்ஜாத்துகள்) இன்று சன்னி ஜமாத்தினரின் மேல் ஏற்பட்டுள்ள கோவம் அன்று அவரது பிறப்புவழியில் உள்ளவர்களிடம் இல்லை.

அடிக்கடி கோவப்படுவது, எதற்கெடுத்தாலும் கோவப்படுவது போன்றதில் மரபணுத்தொடர் என்பதில் எந்தத் தெடர்பும் இல்லை. இது உடலின் நோய் மற்றும் ஆரோக்கியமான நிலை ஆகியன தீர்மானிப்பவை. கோவப்படும்போது உடல் நடுங்குவதும் இவ்வகையே. இவைகளை மருந்துகள் மற்றும் சத்தான உணவுகள் மூலம் குணப்படுத்தலாம். எடுத்துக்காட்டிற்கு மலச்சிக்கல் உள்ள பலர் அடிக்கடி கோவப்படுவார்கள்.
ஆர்வி நல்ல சிவப்பு நிறம். அமெரிக்காவின் மிதகுளிர் தட்பவெப்பநிலையில் வாழ்வதால் இந்தியவில் தமிழகத்திலுள்ள பார்பனர்களைவிட சற்று வெளுப்பு கூடுதலாக உள்ளார். வடஇநதிய குளிர்பிரதேசங்களில வாழும் பார்பனர்களும் நல்ல சிவப்பாக உள்ளனர். இனக்கலப்பால் கும்பகோணததில் கருப்பாக உள்ள பார்பனர்களும் உள்ளனர். இது மரபணுத்தொடர் பண்பு.
இடமாற்றச் சூழ்நிலையும், நல்ல சத்தான உணவுகளை உண்பவர்களாகவும் இருந்தால் அவர் முன்பிருந்த நிறத்தைவிட சற்று வெளுத்த நிறமுடைவராக மினுமினுப்பாக மாற்றம் பெறுவார். இது புறஊதாக்கதிர்களால் தாக்கப்பட்ட செல்கள் தன்னுடைய இழப்பை, கிடைக்கப்பட்ட நல்லபுரதங்களிலிருந்து மீட்டெடுப்பதால் நடக்கும் நிகழ்வு. புரதக்குறைபாடால் (genetotropic) சில பண்புகள் மரபணுவழியாக தொடர்கின்றன. எடுத்துக்காட்டாக குட்டையாக, சற்று கருப்பாக, பரம்பரை நோய்யுடனாக போன்ற குறைகளுடன் பிறத்தல் என்பது தாய்வழிச் செல்களில் ஏற்பட்ட , புரதக்குறைபாடாலும் ஏற்படலாம். இதனை நல்ல புரதச்சத்தான உணவுகளை உண்பதும் மூலம் மீட்டெடுக்கவும் முடியும்.

குடுமியும் பூனூலும் சமூகவழித்தொடர். பார்பனர்கள் பலரும் குடுமியை வெட்டிவிடுவதும் பூனூல் தனது சாதிய அடையாளம் என்று பிடித்து தொங்குவதும் சமூகவழித்தொடர். பார்பனர்கள் மாமிசம் உண்பவர்களாக இருந்தும் சைவமே பர்பனர்களின் பண்பாடு என்று இன்று புழுகுவது சமூகவழித்தொடர் . இதனை அப்பட்டமாக அம்பலபடுத்தி இதற்கு எதிரான பண்பாட்டில் வாழும் நமது பார்பனக்குடியிருப்பு தேழர்கள் ஏராளம் என்பதுவே இதற்குச் சான்றாக உள்ளது.
ஆர்வி பார்பனர்களின் பபூனூலை ஆதரிப்பதும் ஆதரிக்காததும், தில்லை பார்பனர்களும் தியாக அய்யரும் தமிழை வேசி மொழி என்று கூறுவதும், தோழர் மருதையன் மார்க்ஸியவாதியாக இருப்பதும், ருத்ரன் சிறந்த ஆன்மீகவாதியின் தோற்றத்திலிருந்தாலும் ஆன்மீகவாதிகள்போல் அறிவியலை புறக்கணிக்காமல் திரிந்துகூற முற்படாமல் இருப்பதும் சமூகவழித்தொடர்பும் பண்புகளே!

இர்ஷாத் தனது தாய் மற்றும் தந்தையைவிட சற்று உயரமானர். அவரது தாத்தைவைப்போல. இதுமரபணுத் தொடர் பண்பு. இர்ஷாத் தனக்கோ அல்லது தன்னருகில் உள்ளவருக்கோ திடிரென்று ஒரு ஆபத்து ஏற்படும்போது அல்லா என்று தனனையமறியாமல் கத்திவிடுகிறார். இது சமூகவழித்தொடர் பண்பாகம். கந்தசாமி அவ்வாறான சுழ்நிலையில் முருகா என்றும் ஜான்பிரிட்டோ ஏசுவே என்றும் கத்துவது இதற்கு சான்றாக உள்ளது.
தவில் வித்வானின் பிள்ளை முறையாக பயிலாமலே தவிலை அற்புதமாக இசைக்கிறது. இது மரபணுத் தொடர் பண்புகளா? மரபுவழித் தொடர்பா? மிக சிக்கலான விஷயமாகத் தெரிகிறதா? தவில் போன்ற இசைக்கருவிகளை இயக்கும் பண்பும் பாடும் கலையை தொடரும் பண்பும் இயல்பிலேயே மரபணுத் தொடர் பண்புகள் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஒரு மருத்துவனின் குழந்தையும், அறிவியலானின் குழந்தையும், விளையாட்டு வீரனின் குழந்தையும், மருத்துவனாக அறிவியலானா விளையாட்டு வீரான இயல்பிலேயே இருக்க முடியுமா என்பதை சிந்தியுங்கள். தவில் வித்வானின் குழந்தைபோல மருத்துவன் அறிவியலாளன் விளையாட்டு வீரனின் குழந்தை பயிற்சி எடுத்துக்கொள்ளாமல் தந்தைபோல் மாறமுடியாது. அவர்கள்போல் ஒப்புக்கு ஏதாவது செய்யலாம். அதற்கேகூட சில பயிற்சிகள் தேவை. அப்படியானால் தவில் விஷயம் மரபணுத் தொடர் பண்புகள் என்றும் மருத்துவனின் விஷயம் சமூகவழித் தொடர்பும் என்றும் எடுத்துக்கொள்ளலாமா?

முடியாது. இரண்டுமே ஒன்றுதான். தவில், பாடகன் விஷயத்தில் அக்குழந்தை பிறந்தது முதல் கேட்டும் பார்த்தும் பழகுறது. தப்புப்தப்பாக வேணும் பயிற்சி எடுக்கிறது. பெற்றோர்களால் தவறுகள் திருத்தப்படுகிறது. அத்தனை விஷயங்களும் முறையாகப் பயிற்றுவிக்கப்படாமல் அங்கங்கே கண்ணுக்குப் புலப்படாதவாறு பயிற்சி எடுக்கப்படுகிறது. முறையான பாடமாக பயிற்றுவிக்கப்படாததாலேயே இதனைபிறப்பிலேயே ரத்தத்திலேயே ஊறிய பண்பாக கூறுகிறோம். மருத்துவமோ, அறிவியலோ விளையாட்டோ கடுமையான, பிறரின் கண்கள் அப்பட்டமாக அறிநது கொள்ளும் வகையிலான பயிற்ச்சிகளை பாடங்களாக படித்துத்தேற வேண்டியிருக்கும். அதனால் இதனை ரத்தத்தில் ஊறிய பண்பாக நாம் கூறுவதிலலை. இவ்விரண்டிலும் ஒரு குழந்தையின் தனிப்பட்ட விருப்பமும் அடங்கியுள்ளது. விருப்பும் குழந்தையே தந்தைவழித் தொழிலை தேர்ந்தெடுக்கும். எனவே இவ்விரண்டும் சமூகவழி தொடாபுதானேயொழிய மரபணுத் தொடர் பண்புகளாகாது.
ஒரு சமூகவழி தொடர்புப் பண்பும் செலவழித் தொடர்பாக மாறுமா?
இந்தக் கேள்விக்கு பதில் மாறும் என்பதே. ஆனால் எவ்வகைப் பண்புகள் மாறும். எவ்வகைப் பண்புகள் மாறாது என்பதை தெளிவாக வேறுபடுத்தி அறிந்துகொள்ள வேண்டும். இதற்கான எடத்துக்காட்டுமூலம் கோட்பாட்டின் வரையறைப் பார்ப்போம்.

இதற்கு ஒரு நல்ல எடத்துக்காட்டு உணவு பழக்கம். வேகவைக்காத மரம் செடி கொடிகளின் தழையையும் காய்களையும் பழங்களையும் பச்சை மாமிசங்களையும் ஆதி மனிதன் உணவாக உட்கொண்டான் என்பதை நாம் அறிவோம். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வு இது. தற்செயலா வெந்த இறைச்சியை உண்ணத்தொடங்கிய மனிதன் வேகவைத்து உண்பதில் சுவை கூடுதலாக இருப்பதை உணர்கிறான். இதுவே நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சமூகத்தின் தொடர் நிகழ்வாக மாறுகிறது இது ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பழக்கவழக்கம். அன்றைய காலங்களில் வேகவைத்தாலும் வேகவைக்காவிட்டாலும் மனிதனின் குடல்கள் அதனைச் செரித்துவிடுறது. இதற்கு நம் உடலில் செயல்பட்ட உறுப்புதான் குடல்வாழ்வு என்பது.

இன்று நன்கு வேகவைத்தே உண்டு பழகிவிட்டதால் நாம் வேகவவைக்காத இலை, தழை இறைச்சிகளை உண்டால் செரிமானம் ஆகாமல் நோய்க்கு ஆளாகிறோம். நம் உடலில் குடல்வாழ்வு இன்று இருந்தாலும் அதன் வேலையை சில ஆயிரம் ஆண்டுகளாக நிறுத்திவிட்டதால் அது செயலிழக்கமாகி வெறுமனே உள்ளது. அது நம் உடலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எந்த பலனும் இல்லை.

உணவை வேகவைத்து உண்ணத்தொடங்கியது மனிதனின் சுயமுயற்சியின் விளைவு. அதனால் இது சமூகவழியாகத் தொடரும் பண்பு. ஆனால் அதுவே நம் உடல் உறுப்பில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் அது மரபணுத் தொடர்பாக மாறிவிடுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம்போல் வேகவைக்காத இலை இறைச்சிகளை இனி நம் குடல்கள் செரிக்காது. இதயம்போல் செரிமான மண்டலமும் நம் விருபத்திற்கு இயங்காது அல்லவா!

ஆனாலும் இங்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அப்பொழுதுதன் இன்னும் ஆழமாக பகுத்தறியமுடியும். அதாவது உங்களது குழப்பம் சில ஆயிரம் ஆண்டுகளாக சைவ உணவு உண்பவர்களாக பார்பனர்களின் சமூகவழி தொடர்பண்பு மாற்றம் பெற்றுவிட்டாலும் இன்றும் அவர்கள் இறைச்சி உணடால் செரிமாணம் நடைபெறவே செய்கிறது என்பது முதல் குழப்பம். வேகவைத்த எநத உணவையும் செரிக்கச்செய்திடும் நமது குடல் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலும் பித்தநீரிலும் மாற்றம் ஏற்படவில்லை. என்பதே இதற்கு விடையாகும். செரிமான மண்டலத்தில் மாற்றம் ஏற்பட்டால்தான் மாமிசம் உண்ணமுடியாத நிலைக்கு மாறுவர். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் (தாய் தந்தை இருவரும் ஒரே வகையினராக இருக்க வேண்டும்.) அந்த பண்பு கடத்தப்படும். இன்றும் ஊட்டி போன்ற மலைபிரதேசங்களிலும் அந்தமான் காடுகளிலும் அடர் காட்டுப்பகுதிக்குள் நாகரீக மனிதன் நுழயைமுடியாத பகுதிகளில் வாழும் மனித இனங்கள் இலை, தழை, பச்சை இறைச்சிகளை உண்பவர்களாக உள்ளனர் என்பதை மறந்துவிடாதீர்கள். நாகரீக மனிதனும், அநாகரீக மனிதனும் இனறும் உலகில் வாழ்கிறான் என்பதுபோல் நாகரீக மனிதர்களிடத்தில சைவப் பிராணியாகவும் மாமிசப்பிராணியாகவும் வாழும் பிரிவு ஏற்படும். இவ்வாறு மாற இன்னும் சில ஆயிரம ஆண்டுகளாகும். ஆனாலும் இவ்வாறு மாற்றம் ஏற்படாமலும் போகலாம். காரணம் மரபணுவழி மாற்றம் நமது சிந்தனையால் நடைபெறுவதில்லை. ஊடலில் உள்ள ஒவ்வொரு செல்லும், உறுப்பும் தன் விருப்பப்படி தகவமைத்துக் கொள்வதால் மட்டுமே மரபணுவழி பண்புகளில் மாற்றம் ஏற்படும்.
இரண்டாவதும் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. இரும்புப்பட்டரை நடத்தும் முனுசாமியின் கைகள் காய்த்துப்போய் உரமேரி இருக்கிறது. அவரிடம் கேட்டால் மூவாயிர் ஆண்டுகளாக என் பாட்டன் முப்பாட்டன் எல்லோரும் இதே தொழிலைத்தன் செய்தார்கள். இதேபோல்தான் உடலமை இருந்ததாகவும கூறுகிறார். மூவாயிரம் ஆண்டு என்று அவர் பொய்சொல்வதாக நம் அறிவுக்கு புலப்பட்டாலும் அது உண்மை என்று எடுத்துக் கொள்வோமே. ஆனால் முனுசாமியின் பிள்ளை பிறக்கும்போதே அப்படி இல்லை என்பதை நாம் பார்த்துவிடுகிறோம். உடலுறுப்பு ஒன்று, ஒன்றை செய்து பழக்கப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் பொழுது தன்னுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு தகவமைத்துக் கொள்கிறது என்றால் முனசாமியின் மகனின் கைகள் ஏன் காய்த்துப் போயும் ஆணழகன் தசையுடனும் இல்லை என்ற கேள்வி எழுகிறது. உடலுறுப்பு தகவமைத்துக் கொள்வதில்லை என்பது எளிதான பதிலாக இருந்தாலும் உணவு பழக்கத்தில் மட்டும் ஏன் தகவமைத்துக் கொள்கிறது என்று கேள்வி இப்பொழுது எழுந்துவிடுகிறது.

இந்த இரண்டுக்குமான வேறுபாட்டை சிந்தனையை சிதறவிடாமல் கவனமாக படியுங்கள். இந்த வேறுபாட்டினை தெளிவாக புரிந்து கொண்டால் ஒருவரின் பழக்கவழக்கம் அறிவுத்திறன் சிந்தனையின போக்கு போன்ற அனைத்தும் மரபணுத்தொடர்பானதா (Genotype) அல்லது சமூகவழித்தொடர்பானதா (hereditory) என்பதை எளிதாக வேறுபடுத்திவிடலாம்.

உணவு விஷயத்தில் ஒருவரின் செரிமான மண்டலத்தில் மாற்றம் ஏற்பட்டால் நம் உடல் எந்திர அமைப்புகள் எடுத்துக்கொண்ட நடவடிக்கை அது. பிறக்கும் ஒவ்வொரு புது உயிரும் தன்னுள் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது. ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கும் செயல் இது. இன்று நாம் அதிகமாக சிந்திப்பதாலும் அதிக தகவலை மூலையில் பதிவு செய்துக்கொள்வதாலும் மூளையின் அளவு அன்றிருந்ததைவிட இன்று கூடுதலாகி உள்ளது. இது தேவையின் பொருட்டு உடல் எந்திர அமைப்புகள் ஏற்படுத்திக் கொண்ட அமைப்பு. இதன் மாற்றம் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையிலும் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவை. அதன் அளவு மிக நுட்பமாக இருப்பதால் சில ஆண்டுகள் உயிர்வாழும் நாம் கண்களால் நேரிடையாக காணமுடியாது. உணவு விஷயத்திலும் இடையிடையே இறைச்சி உண்பவர்களாக இருந்தால் மாற்றம் ஏற்படவே செய்யாது.
ஆனால் முனுசாமியின் மகன் முனுசாமியடைய காய்த்துப்போன கைகளுடனும் ஆணழகு தசைகளுடன் பிறக்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல முனுசாமியும் பிறக்கும்போது அவ்வாறில்லை என்பதும் முனுசாமியின் பாட்டன் முப்பாட்டனும் பிறக்கும்போது அவ்வாறில்லை என்பதும் உண்மையான ஒன்று. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அத்தொழிலை செய்வதன் மூலம் (பயிற்சி செய்வதின் மூலம்) மட்டுமே அவ்வுடலமைப்பைப் பெறுகின்றனர். அத்தொழிலை செய்யாத அவர்களுடைய பிற குழந்தைகளுக்கு அவ்வாறான உடலமைப்பு வரவில்லை. அதுபோல இத் தொழிலைச் செய்யாமல் முனுசாமி நிறுத்திவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னவாகிறது? கொஞ்சம் கொஞ்சமாக அவரது உரமேறிய கைகளும் மாறிவிடுகிறதே. அதனாலேயே மரபணுத்தொடர் பண்புக்கடத்தலாக இது இல்லை.

இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இரண்டு சுவையான நிகழ்சிகளை எழுதுவதுடன் இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். இது ஒருவருடைய பண்பு எவ்வகையைச் சார்ந்தது என்று வேறுபடுத்தி அறிந்துக்கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.

எனது தாத்தாவும் தந்தையும் ஆலிமாக இருந்தவர்கள். நானும் தொழுகையையும் நோன்பையும் ஏறக்குறைய தவறாமல் கடைப்பிடிப்பதில் தனி ஆர்வமுடையவனாகவே இருந்தேன். தராவீஹ், மௌலீது, ராத்திபு (இசுலாமியக் கலாச்சாரத்தின் வழிபாடு வகைகள்) மிக ஆர்வமுடையவனாக இருந்தேன். இவை எல்லாம் எனக்கு வயது 14ஆக இருந்தவரைதான். ஏன் என்ற கேள்வியைக்கேட்கும் புரிந்துக்கொள்ளக்கூடிய பருவம் தொடங்கியபோது என்னுள் எழுந்த கேள்விகளுக்கு கிடைத்த முரண்பட்ட பதில்களும், சமூகத்தில் உச்சாணிக் கொம்புவில் இருப்பவர்களே நடைமுறையில் கோட்பாடுகளை மீறுவதும் என்னை இசுலாத்திலிருந்து வெளியேற்றியது. இன்றுவரை நான் கேட்கும் எந்த கேள்விக்கும் (கோட்பாடு, நடைமுறை இரண்டிலும்தான்) பதில் கிடைத்ததே இல்லை. நான் வெளியேறிய காலங்களில் என்னையும் அறியாமல் டக் என்று அல்லா என்று கூறிவிடுவேன். அப்பொழுது இச் சமூகவழி பண்புவை என் ரத்தத்தில் கலந்துள்ள பண்பாக (மரபனுத் தொடர்பண்பு வழியாக) கூறி நீ எவ்வளவுதான் இசுலாத்தை மறுத்து கூறினாலும் உன் உள்ளத்தில் உள்ள உன் பாரம்பரிய உணர்வு வெளிபட்டுவிடுகிறதுதானே என்று கூறினார்கள். இதற்கு பதில் சொல்ல முடியாதவனாக இருந்தேன். என்ன தீர்வு என்பதை ஆராய்ந்தவனாக சில ஆண்டுகள் கழிந்தது.

ஒருமுறை வருவான் வடிவேலன் என்ற திரைப்படத்தை பார்க்கச்சென்றிருந்தேன். அதில் நாகேஷ் ஷ்ஷ்ஷ். அப்பா! கந்தா கடம்பா! இது என்ன உடம்பா என்று அடிக்கடி கூறுவார். எனக்கு மாற்று வழியும் சட்டன்று கிடைத்தது. நானும் நாகேஷ் போல் சொல்லப் பழகினேன். ஏதற்கெடுத்தாலும் அதுவே என்னையறியாது சொல்லப்படும் சொல்லாக மாறியது. முன்பு கேட்டவர்களுக்கு இப்பொழுது பாருங்கள் என்னையறியாமல் கந்தா கடம்பா என்று வருகிறது பார்த்தீர்களா! அதனால் உண்மையானக் கடவுள் கந்தன் தான் என்று கூறினேன். அவர்கள் போடா மூதேவி வேறு வேளையப்பாரு என்று கூறினர்.

மற்றொரு நிகழ்ச்சி. நவீன கண்டுபிடிப்புகளும் குர்ஆனும் என்ற பி.ஜே.வின் உரையுள்ள ஒலிநாடா ஒன்று உள்ளது. அதில் க்ளோனிங் பற்றிய கண்டுபிடிப்பினை ஒப்பிட்டு ஈஸா நபியின் (ஏசுவின்) பிறப்பினை விளக்கி இருக்கிறார். க்ளோனிங் செய்யப்பட்ட உயிர் அதன் தாய் செல்லின் குணம்களை அப்படியே பெற்றிருக்கும். இன்னும் சொல்லப்போனால் நகல்(ஒசழஒ) எடுத்ததுபோல் உருவமும் குணமும் இருக்கும். இதனை ஈஸா நபியின் பிறப்புடன் ஒப்பிட்டுள்ளார். ஈஸா நபி, தந்தை இல்லாது அதாவது மரியம் எந்த ஒரு ஆணுடனும் உறவு கொள்ளாது– விந்தனு சேராது—பிறந்தவர். அது சத்தியம், உண்மை என்பதற்கு க்ளோனிங் முறையை சாட்சியமாக ஒப்பிட்டுளளார். மனிதனால் முடியும் என்கிறபோது உலகையே படைத்த அல்லாவால் ஆணில்லாமல் பெண, குழந்தை பெற முடியாதா? என்பது அவரது விளக்கம். ஈஸா, தான் அவ்வறு தந்தையில்லாமல் பிறந்தவன்தான என்பதை பிறந்த மூன்றாவது நாளில் தாயின் மடியில் இருந்த நிலையில் சந்தேகம் கொண்டவர்களின் கேள்விக்கு பதிலாக கூறுவார். எனவே பிறந்த மூன்றாவது நாளில் குழந்தை பேசுவது அதிசயமில்லை. அதிசயமே இல்லை என்று பி.ஜே.தனது ஒலிநாடாவில் கூறுகிறர். குளோனிங் செய்யப்பட்ட குழந்தை தனது தாய் கம்ப்யுட்டர் படித்தவராக இருந்தால் பிறந்தவுடன் எங்கே கம்ப்யுட்டர்? எனக்கும் தா? என்று கேட்கும் என்று அற்புதமாக விளக்குவார். எனக்கு அப்பொழுது ஏற்பட்ட சிரிப்பும் இசுலாமியர்கள்மீது ஏற்பட்ட அனுதாபமும் அளவுகடந்ததாக இருந்தது. தவறான கருத்துக்களைக் கொஞ்சமும் கூச்சப்படாமல் தினித்து இவர்கள் தனது சமூகத்தை இன்னும் சிந்திக்கவிடாமல தடுப்பதைக் கண்டு சில நேரங்களில் ஆத்திரமும் ஏற்பட்டதுண்டு.

ஒருவரின் ஒரு குறிப்பிட்ட பண்புவை மரபணுத் தொடர்பண்பா அல்லது சமூகம் சார்ந்த பண்பா என்று எளிமையாக வேறுபடுத்திக்கொள்ள அப் பண்பு அவரின் தன் விருப்ப முயற்சியால் முடியுமா அல்லது முடியதா என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் மூலம் அறிந்துக் கொள்ளலாம். முடியும் என்றால் சமூகம் சார்ந்த பண்பு. முடியாது என்றால் மரபணுத் தொடர் பண்பு.
இறுதியாக ஒரு வேணடுகோள். மரபுவழிப் பண்புகள் என்று பொத்தாம் பொதுவாக இனிக் கூறாமல் குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ள மரபணுத் தொடர்ப்பண்பு என்றும் சமூகவழித் தொடர்பு பண்பு அல்லது சமூகம் சார்ந்த பண்பு என்று கூறப்பழகலாமே!
சாகித்

Advertisements

5 thoughts on “பரம்பரைப் புத்தி

  1. சுய அனுபவத்தின் தெளிவான விளக்கங்கள். இந்த கட்டுரையின் சுருக்கமானது, மரபணுத்தொடர் பண்பு (Genotype Heredity or traits) என்பது நம்மை மீறிய நமக்குள் ஊறிய இயற்கை பண்பு. இதன் சாதக பாதகங்கள் நமக்கேயன்றி பிற‌ருக்கில்லை. ஆனால், சமூகம் சார்ந்த (மரபுவழி) பண்பு என்பது, ஆரம்பத்தில் (குழந்தை பருவத்தில்) ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் வழிகாட்டுதலால் (தீயதோ அல்லது நன்றோ) திணிக்கப்பெற்று பின்னர் மற்றவ‌ரை பார்த்து அப்படியே தமக்குள் தாமே விதைத்திட்ட செயற்கை பண்பு. மேலும் இது நம்முடைய முயற்சி, உழைப்பு, பகுத்தறிவு ஆகியவற்றால் எளிதில் நன்மை பயக்கும் விதத்தில் மாற்றிவிடக்கூடிய பண்பாகும். இந்த புரிதல் கிடைக்கப்பெறின் சமுக கட்டமைப்பின் உயர்வு தாழ்வுகளின் இடைவெளி குறைக்கப்பெறலாம்.

  2. “நமக்குள் ஊறிய இயற்கைப் பண்பு” என்றச் சொல்லாடல்தான் குழப்பத்தை உருவாக்கிவிடுகிறது. அதனை “நமது உடலுறுப்புகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பண்புகள்” என்றுச் சொல்ல்லாமே!

    1. “நமக்குள் ஊறிய இயற்கைப் பண்பு” என்று சொல்வதற்கு காரணம், சில பண்புகளை நம்மால் தேர்வு செய்ய முடியாத, நம் செல்(cell) கிரகித்து கொள்ளகூடிய பண்புகளாய் இருப்பதாலேயே. எனினும் நம் கருத்து ஒத்ததே!

  3. “இப்படித்தான் சுவைத்து பருக வேண்டும் என்ற சொல்லிக் கொடுக்கப்படாமலே தான் பசியாறிக் கொண்டாலே!. ஆம் இதுதான் மரபணுத் தொடர் பண்பு. பாலூட்டினங்கள் தமது உயிர்வாழ்விற்கான உணவை பெறுவதற்கு ஏற்படுத்திக் கொண்ட தகவமைப்பு.”
    அப்படியென்றால் ஒரு 30 அல்லது 40 தலைமுறையாக தான் உயர்ந்தவன் என்ற அகங்காரத்தில் வாழும் பார்ப்பனின் என்ணம் மரபணுத் தொடர் பண்பாக இருக்க முடியாதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s