உண்மையின் தத்துவம்.

காலம்:
வரலாற்றின் தத்துவம் உண்மை

எனும் ஆவணப்படத்தை முன் வைத்து ஒரு சிறுபார்வை.

கி.பி. 1755 தொடங்கி 1947 வரை இந்திய தேச விடுதலைப் போர் வரலாறு என்கிற பெரும் தளத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழகத்தில் திருநெல்வேலிச்சீமையின் அருகேயுள்ள நெற்கட்டும் செவற்பாளையத்திலே, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் புழுதியைக் கிளப்பிய பூலித்தேவனில் தொடங்கி காந்தியைக் கோட்சே சுட்டுக் கொள்வது வரையில் 37 பகுதிகளாக ஆய்வுத்தொகுப்பாக்க ஆவணப்படமாகக் காலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழக வரலாற்றியல் பிரிவு, அரசின் தொல்லியல் பிரிவு இவைகளினால் மட்டுமே செய்யக்கூடிய இந்தக் கடும் பணியை தமிழக ஆய்வு வரலாற்றில் முதல் முயற்சியாக தனது ஜெகமதி கல்வி அறக்கட்டளையின் சார்பாக ஜெகமதி கலைக்கூடத்தின் மூலம் தயாரித்திருக்கிறார் சி. தீனதயாளபாண்டியன்.
இந்தியத் துணைக்கண்டத்தின் பலபகுதிகளிலும், பல கால கட்டங்களிலும் நடந்திருக்கிற இந்த நீண்ட நெடிய வரலாற்றைக் கோர்க்கும் சரடு எதுவாக இருக்கமுடியும் என்பதைக் கண்டுபிடிக்கிற அடங்கா ஆய்வுத்தேடலோடு, தனது கடுமையான உழைப்பையும், ஆர்வத்தினையும், அர்ப்பணிப்பையும் கொட்டி, இப்படத்தினை இயக்கியிருக்கிறார், நமக்கு மருதிருவர், மற்றும் ரேகை ஆகிய ஆவணப்படங்கள் மூலமாக ஏற்கனவே அறிமுகமாகியிருக்கிற இயக்குநர் தினகரன்ஜெய்.
முன்னர் நடந்து முடிந்துவிட்ட, சுமார் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை, இன்று நாம் நமது கண்ணோட்டத்தில் அணுகுகிறோம். வரலாற்றுச் சான்றாதாரங்கள் மூலமாகவே நாம் வரலாற்றின் உண்மையை நெருங்கமுடியும். இந்தச் சான்றாதாரங்கள் எவ்வளவு அவசியமோ, அந்த அளவிற்குக் கூடுதலாகவே, வரலாறு குறித்த நமது கண்ணோட்டமும் அவசியமானதாகும்.
அடிமை நாட்டின் தேசத்துரோகிகள்தான், சுதந்திரநாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள். ஆளும் அரசிற்கு பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் இருப்பவர்கள்தான், ஆளப்படுகிற மக்களுக்கு விடுதலைப்போராளிகளாக இருக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நமக்குத் தெளிவாகப் புரியவைப்பது, வரலாறு குறித்த நமது கண்ணோட்டம்தான்.
பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கு பகத்சிங் ஒரு தேசத் துரோகக் கிரிமினல் குற்றவாளி. மோகந்தாஸ் காந்திக்கோ அவன் ஒரு வன்முறையாளன். ஆனால் நமக்கு பகத்சிங் ஒரு மாவீரன், தியாகி, விடுதலைப் போராளி. இதற்குக் காரணம் வரலாறு குறித்த நமது கண்ணோட்டமும் அதன் சார்புத் தன்மையும் தானே தவிர வரலாறு அல்ல. வரலாறு எப்போதுமே வரலாறுதான். பகத்சிங் எப்போதும் தியாகி தான். மாறுவதெல்லாம் அதை அணுகுபவர்களின் சார்புத்தன்மைதான்.
எதன் சார்பில் நாம் நமது கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோமோ, அதன் சார்பிலேயே நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும். எத்தகைய சார்பும் இல்லாமல், எதையும் புரிந்து கொள்ள முடியாது. நடுநிலை என்பது பொய்யானது. வரலாறு குறித்த நமது கண்ணோட்டம் எதுவாக இருக்க முடியும்?. இயக்குநரின் கண்ணோட்டம் எது?.
வரலாற்றின் தத்துவம் உண்மை, என்பதுதான் இயக்குநரின் கண்ணோட்டம். இன்று, விடுதலைப் போராட்ட வரலாறு என எழுதி வைக்கப்பட்டிருக்கிற கருத்துக்களில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறானவை; இன்று புகழ்மாலை சூட்டப்பட்டிருக்கிற பலர் அதற்குத் தகுதியில்லாத செயல்களையும் செய்துள்ளார்கள். இன்று நிலவுகிற உருவாக்கப்பட்ட மதிப்பீடுகள் பலவும் பொய்யாகவும் உள்ளன. மறைக்கப்பட்டுள்ள விசயங்கள் ஏராளமாக உள்ளன. இவைகளை வெளிக் கொணர வேண்டியதையே அதாவது, உண்மையை வெளிக்காட்ட வேண்டுமென்பதே, இந்த ஆவணப்பட முயற்சியின் நோக்கமாக இருக்கிறது, என்பதை எழுத்துருக்களாக ஒவ்வொரு பகுதிகளிலும் வருகின்ற வாசகங்களிலிருந்தும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
உண்மையைக் கண்டறியவேண்டும் என்கிற நோக்கமானது வரலாற்றின் தத்துவமே உண்மைதான் என இயக்குநரைக் கூற வைத்துவிடுகிறது. ஆனால், இது உண்மையல்ல. காரணம் வரலாற்றின் தத்துவம் உண்மை என்பது அல்ல; வரலாற்றின் தத்துவம் போராட்டம் தான். ஏடறிந்த வரலாறெல்லாம், வர்க்கப்போராட்டங்களின் வரலாறே, என்கிறார் பேராசான் கார்ல்மார்க்ஸ். ஒருவேளை படம் கூறுவது போல், வரலாற்றின் தத்துவம் உண்மை எனக்கொண்டால் அந்த உண்மை என்பது வர்க்கப்போராட்டம் தான். இதை இனிமேல்தான் நிரூபணம் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை, ஏற்கனவே போதுமான ஆய்வுகள் வந்துள்ளன.
காலம் என்பது மூன்று பாகங்களைக் கொண்டது. இறந்தகாலம், நிகழ்காலம்,எதிர்காலம் என்கிற இம்மூன்றும் ஒன்றின் மூன்று பாகங்கள்தான். இவற்றைத் தனித்தனியாக வெட்டி எடுத்துப் பேசுவது, முழுமையற்ற தன்மைகொண்டதே. இறந்தகாலத்தை ஆய்வு செய்தாலும் கூட அதில் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைத்துப் பார்க்கும் போதே அந்த ஆய்வு நிறைவு பெறும். பிறபாகங்களூக்கும் இது பொருந்தும்.
காலம் என்பதில் மூன்று பாகங்கள் இருக்கின்றன. ஆனால், உண்மை என்பதில் மூன்று பாகங்கள் இல்லை. உண்மை என்பது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும். பலவிதமான உண்மைகள் இருக்கமுடியும் என்கிற அகிராகுரோசேவாவின் ரசோமான் தத்துவம் ஒரு அபத்தவாதமே!. இதை எப்படி விளங்கிக் கொள்வது?.
வெள்ளையர்களுக்கு மருதிருவர்கள் பயங்கரவாதிகள்தான், தேசத் துரோகிகள்தான். இது வெள்ளையர்களுக்கான உண்மை. ஆனால் நமக்கு மருதிருவர்கள், போராளிகள், நாட்டுப்பற்றாளர்கள். இது நமக்கான உண்மை. ஆக இரண்டு உண்மைகள் இருக்கின்றன. இது உண்மையா?. இரண்டு உண்மைகள் இருக்கமுடியுமா? இங்கு இரண்டு உண்மைகள் இருக்கிறதா? இல்லை.

மருதுபாண்டியர்கள் விடுதலை வீரர்கள் என்பதுதான் ஒரே உண்மை. எப்படி? நம்மவர்கள் என்பதால் அல்லது நமது மண்ணிற்காகப் போராடியவர்கள் என்பதால் அவர்கள் விடுதலை வீரர்கள் எனும் மதிப்பீட்டிற்கு வரவில்லை, மாறாக, ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியான கிழக்கிந்தியக் கம்பெனியின் அநீதியை எதிர்த்தவர்கள் என்பதாலும் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியமே பயங்கரவாதியாகவும், காலனிய நாடுகளின் தேசத்துரோகியாகவும் இருப்பதால், மற்றவர்களைச் சொல்லும் தகுதி இழந்த அயோக்கியர்களின் பொய் என்பதாலும் தான் நாம் மருதிருவரை விடுதலை வீரர்கள் என்கிற ஒரே உண்மைதான் உண்டு என்கிறோம்.
இந்த உண்மை ஒரு எளிய உண்மை. இதுதான் வரலாற்றின் தத்துவம் என ஒன்று இருக்குமேயானால் அந்தத் தத்துவம் சொல்லும் உண்மை.
1805 வரை அந்த உண்மையை வெகுவாக நெருங்கி வருகிற படம், அதன் பின் வெகுவாக விலகிப் போய்விடுகிறது. இதற்கு ஏராளமான உதாரணங்களை படத்தில் காட்டமுடியும். ஒன்றிரண்டைப் பார்க்கலாம்.
குறிப்பாக, காந்தியையும் நேதாஜியையும் படம் அணுகும் முறையினைச் சொல்லலாம். இருவரையுமே படம் சாதகமானதாக அணுகுகிறது. இருவரின் மீதான அணுகுமுறைக்கான சார்பு எதுவென்றே புரியவில்லை அல்லது வெறும் புகழ்ச்சி என்பதாக மட்டுமே இருக்கிறது.
நேதாஜியின் மீதான அணுகுமுறையைக்கூட அபிமானம் என யூகிக்க முடிகிறது. ஆனால் காந்தி குறித்த அணுகுமுறை ஏராளமான கோளாறுகளைக் கொண்டிருக்கிறது.
காந்தியை உரசிப்பார்க்க பல்வேறு செய்திகள் இருக்கின்றன. இருப்பினும் முழுவதுமாக நமக்கு உதவக்கூடிய ஒரு உரைகல், பகத்சிங். ஆனால், படத்தில் பகத்சிங் குறித்த பதிவுகளில்லை. பகத்சிங் பற்றிப் பேசாமல் இந்திய வரலாறா?.
பகத்சிங் குறித்துப் பேசாமலிருப்பது காந்தியின் முகத்திரையைக் காப்பாற்றத்தானோ எனும் அளவிற்கு காந்தி குறித்த புகழ்ச்சியான பார்வை இருக்கிறது. பகத்சிங் குறித்த பதிவுகள் (அவரது புகைப்படம் இருந்தாலும் கூட) இல்லாதது, இம்மொத்த ஆவணத்தொடரையுமே அர்த்தமிழக்கச்செய்யும் வகையில் அமைந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். படத்தில் தவறான தகவல்கள் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் விளக்க இங்கு இடமில்லை.ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லலாம்.
ஒன்றுபட்ட இந்தியாவிற்கு ஜின்னாதான் பிரதமர் என்கிற காந்தியின் திட்டத்தை எற்க மறுத்தது ஜின்னா அல்ல, நேருவும், படேலும் தான். ஆனால், படம் ஜின்னாவைக் குற்றவாளியாக்குகிறது.
1922 ல் துவக்கப்பட்ட இந்துமகாசபையின் தலைவர் பாய்பரமானந்தா தான் பாகிஸ்தானை முதலில் அறிவித்தார். 1937 ல் சாவர்க்கர், இந்தியா ஒரே தேசமல்ல இரண்டு தேசங்கள், எனச்சொன்னார். 1936 ல் அகில இந்திய முஸ்ஸீம் லீக் கட்சி கூட கூட்டாட்சி தான் கோரியதே தவிர, பிரிவினை அல்ல. 1933 லண்டன் வால்டோரிப் ஓட்டலில் தனக்கு விருந்து வைத்துப் பேசிய ரஸ்மத் அலி எனும் மாணவர் பாகிஸ்தான் பிரிவினையை வற்புறுத்தியபோது, உடனடியாக நிராகரித்துப் பேசினார் ஜின்னா. அதன் பிறகு 1937 உ.பி தேர்தலில் கூட்டணிக்கு வந்த முஸ்லீம்லீக்கை, கட்சியையே கலைத்துவிடவேண்டுமென்று நிபந்தனை வைத்து நெருக்கடிக்குள் தள்ளினார் நேரு. இவ்வளவிற்கும் பிறகுதான் 1940 லாகூர் மாநாட்டில் லீக்கானது தனிநாடு கோரிக்கையை முன்வைத்தது.
இதுபோன்று படம் விளக்கிக் கூறுகிற பல கருத்துக்கள் விவாதத்திற்குரியவை. அடிப்படையில் இந்திய வரலாற்றைப் படம் அணுகுகிற முறையில் சில உடன்பாடுகளும், ஏராளமான முரண்பாடுகளும் இருக்கின்றன.
இந்திய மக்களின் விருந்தோம்பல் பண்பினால் வணிகம் செய்ய வந்த அய்ரோப்பியர்கள் இங்கே தங்கினர்…….. எனப் படம் துவங்குகிறது. இது பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
இங்கிலாந்து ராணி பிரிட்டிஸ் முதலாளிகளிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தன்னுடைய ராணுவத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறினார். ராணுவவீரர்கள், ஆயுதங்களோடு பிரிட்டிஸ்வணிகர்கள் கப்பல்களில் கிளம்பினார்கள். மூலதனத்தின் விரிவாக்கம்தான் இது. உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்கே ஆண்டுகொண்டிருந்த நிலப்பிரபுத்துவ அதிகாரக்குழுவினரில் சரசமம் செய்துகொண்டோருக்கு மரியாதையும் எதிர்த்துநின்று சமர் புரிந்தோர்க்கு அழிவையும் கொடுத்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர்.
இந்தியத் துணைக்கண்டத்திலும் கூட இதுதான் நடந்தது. முதலில் வந்தார்கள்; தனித்தனியான பாளையங்களை ஒடுக்கி ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கினார்கள்; மாவீரன் திப்புவின் மரணத்தின் பின் நடந்த 1857 எழுச்சியையும் அடக்கி வென்றார்கள். பிறகு இந்தியா எனும் நாட்டினை உருவாக்கி, இந்தியத் துணைக்கண்டத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக நிலப்பிரபுத்துவத்துடன் கடுமையாகப் போராட பிரிட்டிஸ் முதலாளித்துவத்திற்கு சுமார் 200 ஆண்டுகள் பிடித்தன.
இடையில் 1917 ல் நடைபெற்ற ரஸ்யப்புரட்சி உலகமுதலாளிகளுக்கு பெரும் படிப்பினையைத் தந்தது. எனவே நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தாமல் அதனோடு சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நிலைக்கு அது வந்தது, அந்தச் சமரசம் தான் 1947 ஆகஸ்டு 15.
முதலாளித்துவம் தனக்கு தேவையான ஒரு கல்வி முறையை இங்கே நடைமுறைப் படுத்தியது. அதன் மூலம் இங்கே புதிய இந்திய முதலாளிகள் உருவானார்கள். அவர்களின் தேவைகளுக்கான கோரிக்கையாக சுயாட்சிக் கோரிக்கை உருவானது. ஜமீந்தார்களுக்கும் அவர்களிலிருந்தே உருவான புதிய முதலாளிகளுக்குமிடையில் ஏற்பட்ட தகராறுகளினால் சுயாட்சி கோரிக்கை ஒருங்கிணைய முடியவில்லை. இந்தியத் துணைக்கண்டம் முழவதும் இருந்த இந்தத் தகராறுகளைத் தீர்க்க வந்த பொருத்தமான தரகர்தான் மோகந்தாஸ் கரம்சந்காந்தி. இந்திய நிலப்பிரபுக்களுக்கும், பிரிட்டிஸ் அரசால் அடிவருடிகளாக உருவாக்கப்பட்ட சர் பட்ட முதலாளிகளுக்கும் அறிவுரையாளனாகவும், பிரிட்டிஸாரின் நண்பனாகவும் வளர்ந்தவர்தான் காந்தி.
ஒருபுறம் இட்லரின் அட்டகாசத்தால், உள்ளதும் போய்விடும் என்கிற நிலை; ஒடுக்க ஒடுக்க வளரும் உள்நாட்டுமக்களின் போராட்டம்; காந்தியைக் கொண்டு எவ்வளவுதான் தடுத்துநிறுத்தினாலும் மீறிக்கொண்டு வளரும் நிலை; சுரண்டலை அப்படியே வைத்துக்கொண்டு அதிகாரத்தை மட்டும் இந்தியர்களிடம் மாற்றிக்கொடுத்தது பிரிட்டிஸ் அரசு.
இன்னொருபுறம் இட்லரை வீழ்த்திய சோவியத் ரஸ்யாவைக் கண்டு மிரண்டன் ஏகாதிபத்தியங்கள், தங்களது முதலாளித்துவ அதிகாரத்திற்காக நிலப்பிரபுத்துவத்தை முழுவதுமாக வீழ்த்தினால் கம்யூனிஸ்டுகளால் புரட்சி செய்யப்பட்டு தாங்கள் வீழ்த்தப்படும் வாய்ப்பு ஏற்படுவதை அறிந்து, நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டன. அந்த சமரசம் இன்றும் தொடர்வதுதான் நிகழ்கால வரலாறு.
சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தாலம் கூட, இதுதான் இந்திய வரலாறு குறித்த சரியான கண்ணோட்டம். இந்தக் கண்ணோட்டத்தில் விளங்கிக் கொள்வதுதான் வரலாறு.
பூலித்தேவனும், வேலுநாச்சியும், மருதிருவரும், கட்டபொம்மனும், ஊமத்துரையும், கோபால்நாயக்கரும், சுந்தரலிங்கமும், தீரன்சின்னமலையும், ஹைதரலியும், திப்புசுல்தானும், பகத்சிங்கும், வ.உ.சி யும் நாயகர்களாக, தியாகிகளாக, போராளிகளாக இந்த வரலாற்றில் தான் இடம் பெறுகிறார்கள்.
அதேசமயம், எட்டபொம்மு நாயக்கர், புதுக்கோட்டைத்தொண்டைமான் துவங்கி கட்டபொம்மனைப் பாடாத; எட்டப்பன் பரம்பரை மன்னனிடம் வேலை பார்த்த கவிஞர் பாரதி ஊடாக, இன்றைய மன்மோகன்சிங், ப.சிதம்பரம் வரை துரோகிகளாகவும் இதே வரலாற்றில் தான் இடம் பெறுகிறார்கள்.
இந்த துரோகப் பட்டியலில் இடம் பெறும் சிலரையும் கூட படம் கதாநாயகர்களாகவே காண்பிக்கிறது. வேலூர்ப்புரட்சி வரை சரியாக இருக்கிற வரலாற்றுக் கண்ணோட்டத்தின் சார்புத்தன்மையானது அதன் பிறகு வருகிற கட்டங்களில் தடுமாற்றம் கொண்டு தவறானதாகவும் மாறிவிடுகிறது.
ஒரு ஆவணப்பட இயக்குனராக, தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிற இயக்குநர், தனது சார்புத்தன்மையை உணர்ந்து கொண்டு சமரசம் செய்து கொள்ளாமல் வரலாற்றைப் பின் தொடரவேண்டும்.அவ்வாறு பின் தொடரும் போது, இந்தக் காலத்தையும் அவர் திருத்துவார், திருத்தவும் வேண்டும். அப்போதுதான், காலனியாதிக்கம் என்கிற இறந்த காலத்தையும், மறுகாலனியாதிக்கம் என்கிற நிகழ்காலத்தையும், புரட்சி என்கிற எதிர்காலத்தையும் புரிந்துகொள்வதோடு, வரலாற்றின் தத்துவத்தையும், காலத்தின் தத்துவத்தையும், ஏன் உண்மையின் தத்துவத்தையும் கூட இப்படத்தின் பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்கள். வாழ்த்துக்கள்!.

-குருசாமிமயில்வாகனன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s