தில்லை சமரில் வென்றது தமிழ்”

ஆவணப்படம் குறித்த ஒரு அனுபவம்.

ஒரு ஆவணப் படத்தைப் பார்க்கும்போது ஏக்கம், கவலை, ஆதங்கம், கோபம்,  ஆத்திரம், அவலம், நெகிழ்ச்சி, மகிழ்சி எனப் பலவிதமான உணர்வுகள் ஏற்படுமா? ஏற்படுத்துகிறது, “தில்லை சமரில் வென்றது தமிழ்” எனும் இந்த ஆவணப்படம்.

சிலர் ஆச்சரியப்படலாம்! இது ஆவணப்படமா? வலைத் தளங்களிலிருந்து பிரதிகளை இறக்கி அதையே தமிழ் பேச வைப்பதெல்லாம் ஆவணப்படமாக ஆகும் பொழுது ஆண்டாண்டுகாலமாய்த் தொடர்ந்து வரும் போரில் தமிழ் வென்றதைப் பதிப்பித்திருப்பது ஆவணப்படமாகாதா என்ன? இப்படமட்டுமல்ல, இப் போராட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆர்பாட்டப் பிரசுரம்கூட ஒரு ஆவணமே!

நடராசர் கோயிலின் தெற்கு வாயிலின் சுவர் போல அல்லாமல், நுழைந்த உடனேயே நம்மைக் களத்திற்குள் அழைத்துச் செல்கிறது தோழர் மருதையனின் குரல்.. படம் ஏக்கத்துடன் நகருகிறது.

ஆறுமுக சாமி ! “பாப்பான் வாயில விழுந்தா ஆகாது” என தில்லையம்பதியே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கையில், குடிகெடுத்த தீட்சிதர்களை எதிர்த்து 79 வயதில் ஒரு கிழவன். இளவயதிலேயே துறவறம், காசியாத்திரை, காணும் சிவாலயங்களில் எல்லாம் தேவாரமும் திருவாசகமும் ஓதி, “எப்பொழுது என்னை கைலாயத்திற்கு கூட்டிச் செல்வாய்” என வழக்கமான சிவனடியார்களைப் போலவே சிவனிடம் விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தவர். கையில் கம்பு ஊன்றித்தான் நிற்கவோ நடக்கவோ முடிகிறது. கண்பார்வையும் கோளாறு. ஆனால், இந்த ஆண்டிற்கான மிகச் சிறந்த வீரன் ஆறுமுகசாமிதான். காரணம் இந்த வீரம் அவரிடமிருந்து புறப்பட்ட புள்ளி. சுயமரியாதை எனும் புள்ளி.

சிற்றம்பல மேடைக்குத் தூக்கிச் செல்லப்படும்போது ஏடிஎஸ்பி செந்தில் வேலன், ஆறுமுகசாமி தலையில் கட்டிருந்த காவித் துண்டை அவிழ்த்துப்போட, பதறியடித்து அதை வாங்க எக்கி எக்கி கையை நீட்டுகிறார் அவர். ஏன்? துண்டு பறிபோகிறது என்றா? இல்லை. வெளியில் வரும்போது ஒருவிதமான மவுன மன இறுக்கத்துடன் அதைத் தலையில் கட்டிக்கொள்கிறார். தோளிலே நீளமாகத் தொங்கவிட்டுக்கொண்டு, தோட்டங்களிலே மலந்தின்று கொண்டிருக்கிற பன்றிகள் அணிந்திருக்கும் கருப்புத் துண்டல்ல அது. இது காவித்துண்டுதான். ஆனாலும் அதன் அரசியல் அர்த்தம் ஆறுமுக சாமிக்குத் தெரியாது. அது அந்த துண்டின் உண்மையான நிறம் பெரியாரின் கருப்புதான் என்பது நமக்குத் தெரியும்.

“இது கலைஞர் போட்ட உத்தரவு; போலீசார் இப்படி நியாயமில்லம செய்யலாமா?” ஆதங்கத்தோடு கேட்கிறார் ஆறுமுகசாமி. 4 மணி பூசைக்குப் பிறகு மீண்டும் பாடுவதற்காகச் செல்லும்போது ஏடிஎஸ்பி செந்தில் வேலன் தோழர் ராஜுவை மிரட்டுகிறார். “டூ மினிட்ஸ்” என கலைந்து போகச் சொல்லி எச்சரிக்கிறார். கூடியிருக்கும் தோழர்களை விரட்டுகிறார். அடிக்கிறார். ஏன்? காலையில் மேலிடத்துப் பிரஷ்ஷர். ‘தீட்சிதர்களைத் தூக்கிப் போடுங்கள்’ என்பது. மாலையில் அதே மேலிடத்துப் பிரஷ்ஷர் ‘தோழர்களை அடித்து விரட்டுங்கள்’ என்பது. பிரஷ்ஷருக்குள் சிக்கிய போலீசு எப்போதும்போல புத்தியை இழந்திருக்கிறது. ஏன் இந்தப் போராட்டம்? “இது எங்க உணர்வு சம்பந்தப்பட்ட விசயம்” என்று மிகப் பொறுமையாகவும் பொறுப்புணர்வோடும் தோழர் ராஜு எடுத்துக் கூறுவதைக்கூடப் புரிந்து கொள்ளாத ஏடிஎஸ்பி, செந்தில் வேலன். காக்கிச் சட்டை வேர்வையைத்தான் உறிஞ்சும் என்பதல்ல. இங்கே அது நேர்மையையும் உறிஞ்சுகிறது.

தோழர் பாலுவைக் கண்மூடித்தனமாகத் தாக்குகிறது ஒரு போலீசு.; தோழர் வாஞ்சிநாதனை பிடரியைப்பிடித்து இழுத்துச் செல்கிறது இன்னொரு போலீசு ; இன்னொரு தோழர் சரமாரியாக அடிக்கப்படுகிறார். தீட்சித விசுவாச நெடி கோயில் முழுக்க நாறுகிறது. ஆனாலும் இன்னுமொருமுறை நுழைய வேண்டியிருப்பதால்…. இவைகளெல்லாம் நமக்கு சில வழிகாட்டுதல்களாகவும் இருக்கிறது.

கைது செய்யப்பட்ட தோழர்கள் நீதிமன்றத்தில் முழக்கமிடுகிறார்கள். மறுநாள் காலையில், எல்லை தாண்டிய கன்னட வெறியனுக்கு எதிராக குரல் எழுப்பும் எந்தத் தமிழனும் இந்தத் தில்லைக் கோயிலுக்குப் பக்கம் தலைநீட்டிக்கூடப் பார்க்கவில்லை. இது ஒரு அவலம். இதைப்போக்க தோழர்களே சிற்றம்பல மேடையில் ஏறிப் பாடுகிறார்கள். “பொன்னார் மேனியனே ! புலித்தோலை அரைக் கசைத்து…….” பக்கத்தில் தலைகவிழ்து, பசுத்தோலை அரைக்கசைத்து நிற்கிறார் ஏடிஎஸ்பி செந்தில் வேலன். நடராசனுக்கு புலித் தோல். செந்தில் வேலனுக்கு பசுத் தோல். மனிதத் தோலின் உணர்சிகளறியாதவர்களுக்கு மிருகங்களின் தோல் அரைக்கசைக்க பொருத்தம்தானே !

அனைவரும் விடுதலை செய்யப்பட்டு, ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் நின்று பாடுகிறார். புகைப்படக் காட்சியாக இது வருகிறது. திரைப்படங்களில் சிவன் ருத்ர தாண்டவம் ஆடும் போது ஒலிக்கும் உடுக்கின் தாளம், டிரம்ஸ் இசையாக பின்னணில் ஒலிக்கிறது. கைத்தாங்கலாக ஆறுமுகசாமி வெளியே கொண்டுவரப்படுகிறார்.. செய்தியாளர்களிடம் பேசுகிறார்.

“என்ன ஆனாலும் பாத்துக்கிறலாம்னு தோழர்கள் சொன்னாங்க….. ஒழுங்கா சிவனப் பார்த்தேன் ; அழகா தேவாரம் பாடினேன்; எனக்கும் சுகம், உங்களுக்கும் சுகம்” என மகிழ்ச்சியோடு சிரித்தபடி சொல்கிறார். அடிக்கடி உணர முடியாத அந்த உணர்வு, நெகிழ்சி, அது தன்னைத் திவமாய் மாற்றிக்கொண்டு கண்களின் வழியே சொட்டாக வடிகிறது.

“இந்தப் போர் எங்களால் தொடங்கப்படவும் இல்லை; எங்களோடு முடியப் போவதுமில்லை” என்கிற தோழன் பகத்சிங்கின் சொற்கள் அசரீரியாய் மனதினுள் ஒலிக்க படம் நிறைவுறுகிறது.

மிகவும் குறைவான கால அவகாசத்தில் இந்தப் படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம். இது தமிழனின் விடுதோறும் இருக்க வேண்டும். தமிழகத்தின் தெருக்கள் மற்றும் பள்ளிகளில் திரையிடப்படவேண்டும். இணையத்திலும் வைக்கப்படவேண்டும். கோயில் திருவிழாக்களில் திரையிடப்பட வேண்டும்.

சற்று யோசித்துப் பார்த்தால் ஒரு அற்பமான விசயம்தான். ஆனால் ஆண்டாண்டு காலத் தீட்சிதத் தீண்டாமையை, பார்பன பாசிசத்தை அசைத்துக் காட்டிருக்கும் வரலாற்றுச் சம்பவமல்லவா இது !

படத்தின் இறுதி ஒரு புகைப்டக் காட்சியாய் நிற்கிறது. சிவனடியார் ஆறுமுகசாமி யானை மீதமர்ந்து தலைக்குமேலே தன் இரு கரங்களைக் கூப்பி வணங்குகிறார். அவர் காரியம் முடிந்தது. நன்றி சொல்லிவிட்டார். அவர் வீரத்தையும் சுயமரியாதையையும் பெருமிதப்படுத்தும் நாம் அடுத்து என்ன செய்வது? ஆறுமுகசாமிக்கு அடுத்ததாக யானையில் அமர அவர் அருகிலேயே ஒரு செய்தி அட்டை தயாராக இருக்கிறது. “தமிழகத்தை இந்துத்துவாவின் கல்லரையாக்குவோம் !” எனும் அந்த அட்டையிலுள்ள செய்தியையும் யானையின் மீது அமர வைக்கவேண்டும். அமரவைப்போம்!

—- குருசாமி மயில்வாகனன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s