இலாவணிப் பாடல்கள்

அறிமுகம்

தஞ்சையைப் பிறப்பிடமாகக் கொண்ட பல்வேறு கலைகளுள் ஒன்று இலாவணி ஆகும். தமிழகத்தின் பழமை வாய்ந்த நாட்டுப்புறக் குரலிசைப் பாடற்கலையான இலாவணி மகாராட்டிரம், தெற்கு மத்தியப்பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது. தஞ்சையை ஆண்ட மராத்தியர்கள் தங்களுடன் இலாவணிக் கலையையும் கொண்டு வந்தார்களென நாட்டுப்புற ஆய்வுகள் வழி அறிய முடிகின்றது.

இலாவணி என்ற சொல்லுக்கு மராத்திய மொழியில் ‘நாற்றுநடுதல்’ என்று பொருள் உண்டு. வயலில் விவசாயப் பணி புரியும் பெண்கள் தங்களின் உழைப்பின் களைப்பினை அறியாமலிருக்க, ஒருவரை ஒருவர் கிண்டல்-கேலி செய்யும் படியான இயல்பினைப் பெற்றுள்ளது இலாவணிப்பாடல். இது ஹோலித்திருவிழாவின் போதும், குழந்தை பிறந்த எட்டு நாட்கள் வரையில், அக்குழந்தைகளைத் தீய சக்திகள் அண்டாதிருக்கவும் பாடப்படுவதாக நாட்டுப்புற ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தமிழகத்தில் மாசி மாதக்காலத்தில் நடைபெறும் ‘காமன் பண்டிகையில்’ இலாவணி பாடப்படுகின்ற வழக்கம் இருந்தது.

வடிவமைப்பு:

இலாவணி மராத்தியர்கள் வழிவந்த ஒரு கலை வடிவமாகப் பேசப்படினும், தமிழகத்தில் சங்க காலத்திற்கு முன்னதாக வேறு பெயர்களில் வேரூன்றி இருந்ததாக ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தவிர, தமிழ் பேசும் மக்களிடம் வழக்காடுதல் அல்லது எதிர்ப்பாட்டுப் பாடுதல் என்ற வடிவம் தொடக்க காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. அவ்வடிவிற்குள் தன்னை எளிதாகப் புகுத்திக் கொண்ட இலாவணிக் குரலிசைப் பாடல்கள், விருத்தமாகவும், ‘துந்தனா’ எனும் நரம்பிசைக் கருவியின் இசைப்பின்னணியிலும் இசைப்பாடலாகப் பாடப்பட்டுள்ளது.

இதில் இசைக்குச் சிறிதளவு இடம் மட்டுமே தரப்படும். சொல் திறமைக்கே பேரளவு இடம் தரப்படும். இலாவணிக் குரலிசைப்பாடற் கலையில் எரிந்தகட்சி, எரியாத கட்சி என்று இரண்டு எதிரெதிர் வடிவங்கள் உண்டு. இந்த எதிர் வடிவத்திற்கு தமிழகத்தில் நிலவிய ‘சைவ-வைணவப் போராட்டமே’ சாராம்சமாகும்.

அதாவது காமனை அரூபமாகக் காமம் எனக் கொள்பவர்கள், காமனை சிவன் எரித்திருக்க முடியாதென்று தங்களை ‘எரியாத கட்சியாகவும்’, காமன் எரிக்கப்பட்டான் என்பவர்கள் ‘எரிந்த கட்சியாகவும்’ தங்களைப் பிரித்துக் கொண்டு பாடுவர். காமனைப் பற்றிய தகவல்களுக்குக் கந்தபுராணம், விஷ்ணு புராணம், சிவபுராணம் ஆகியவை அடிப்படையாக அமைந்துள்ளன.

இலாவணியின் தனிச்சிறப்பென்பது,

1) இரண்டு எதிரெதிர் அணிகள் தனக்குத் தரப்பட்டு இருக்கும் தலைப்பினை வலுப்படுத்துவது.

2) எதிர் தரப்பினைக் கேள்விக்கு உள்ளாக்குவது.

3) அவர்களின் கேள்விகளுக்குப் பதிலுரைப்பது என்ற போக்கில் பாடப்படுவதேயாகும்.

பாடுபொருள்:

சிவாஜி அரசவையிலிருந்த கடைசி சிவாஜியின் ஆட்சியில் இலாவணி வேங்கடராவ் என்பவர் இலாவணி பாடுவதில் சிறந்து விளங்கியதை வரலாறுகள் கூறுகின்றன. இவர் காதற்சுவை உடைய இலாவணிகள் பலவற்றை இயற்றியுள்ளார். அக்கால இலாவணி இசைக்கலைஞர்கள் சமயம், புதிர்கள் ஆகியவற்றைக் கேள்விகள் கேட்டுப் பதில் கூறும் அமைப்பில் எளிமையாகப் பாடியுள்ளனர். தத்துவம், வரலாறு, பக்தி, காதற்சுவையுள் ஏதேனுமொன்றைக் கருவாகக் கொண்டதாகப் பாடுபொருள் அமைந்திருந்தது.

மேலும் கண்ணன் – இராதையின் காதலன்பினைச் ‘சிருங்கார இலாவணி’ கூறுகிறது. கண்ணனைப் பற்றிக் கோபியர்கள் முறையிடுவதைப் பற்றி ‘பஞ்ச பாஷா’ எனும் இலாவணி விளக்குகிறது. இரண்டாம் சரபோஜி மன்னரின் காசிப்பயணத்தை வருணித்து துண்டீசுத சிவா என்பவர் ‘சரபோஜியின் தீர்த்த யாத்திரை இலாவணி’ என்ற இலாவணியை இயற்றினார். இந்நூலில் மன்னர் செய்த அறங்கள், வழிபாடுகள் மற்றும் தலங்களின் புராண வரலாறுகள் ஆகியவற்றைப் பற்றியக் குறிப்புகள் உண்டு.

சிறுவர்களின் குறும்புகளை விளக்கிய இலாவணி, ஆண்டுக்குறிப்புகளைத் தருகின்ற இலாவணி, வேதாந்த இலாவணி, அத்வைத இலாவணி, சிவன்-பார்வதி, நாரதர்-சுகரம்பை ஆகியோர் உரையாடுதல் விதமான இலாவணி, சிறுகடவுளர்களைப் புகழ்ந்து பாடக்கூடிய இலாவணி, இராமயண இலாவணி, பாகவத இலாவணி, தசாவதார இலாவணி, சுபத்திரைத் திருமண இலாவணி போன்றவை மராத்தி மொழியில் தஞ்சையில் மராத்தியர் ஆட்சியில் இயற்றப்பட்டதாகும்.

இரண்டாம் உலகப்போர் தேவையா? இல்லையா?, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டுமா? வேண்டாமா? போன்ற பாடுபொருளைக் கொண்டு தமிழ்மொழியில் இலாவணி பாடப்பட்டுள்ளது. சந்திரோதயம் திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், என்.எஸ்.கிருஷ்ணனும் இணைந்து பகுத்தறிவு கருத்துக்களைப் பாடும் இலாவணிப்பாடல் பதிவாகியுள்ளது.

மேலும் தமிழக அரசின் குடும்பக்கட்டுப்பாட்டினை வலியுறுத்தவும் இலாவணி வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது, ஐ.எம்.எஸ்.லிருந்து உலகவங்கி, கடன் வாங்குவதா? வேண்டாமா? என்ற பாடுபொருளில் கூட இலாவணிப்பாடல் பாடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இசைக்கலைஞர்கள்:

தொடக்க காலத்தில் இலாவணியைப் பாடுவதற்கும், அதைக் காண்பதற்கும் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏனெனில், அக்காலத்தில் இலாவணிப் பாடல்களில் அதிகமாகக் காமம் பாடுபொருளாக இருந்தது. பிறகு, இலாவணிக்கான சரியான வரையறை செய்தவுடன் பெண்களும் பங்கேற்றுள்ளமையைக் காண முடிகிறது. அதன் பிறகான நாட்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்ததோ, தனித்தனியாகவோ இலாவணியைப் பாடினர். தஞ்சையில் மராட்டியத்தைச் சேர்ந்த எஸ்நாவுடன் எல்லம்மா என்ற பெண்மணி இணைந்து லாலணியைப் பாடியது பிரபலமாகியிருந்தது.

1990க்குப் பிறகு தமிழகத்தில் இக்கலையை நிகழ்த்துபவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணுமளவிற்கே இருக்கின்றது. இலாவணி இசைக்கலைஞர்களில் ‘டேப்’அப்துல்காதர்  (வயது 68) குறிப்பிடத்தக்கவர். மணச்சநல்லூர் ஜெயா, திருச்சி கிட்டப்பா, புதுக்கோட்டை கல்யாணி, புதுக்கோட்டை கனகாம்புஜம், குளிச்சப்பட்டு இராமசாமி, அவரது மகன் குளிச்சப்பட்டு சச்சிதானந்தன், உய்யகொண்டான் நடராசன், கடுவெளி மாணிக்கம், மெட்ராஸ் செல்லம்மா, ஸ்ரீரங்கம் மனோண்மணி, சென்னை ஏகவள்ளி போன்றவர்கள் குறிப்பிடத்தக்க இலாவணி இசைக்கலைஞர்கள் ஆவர்.

ஆய்வுகளும் ஆவணப்படங்களும்:

தஞ்சையைச் சேர்ந்த விவேகானந்த கோபால் அவர்களின் முனைவர் பட்ட ஆய்விற்காக, இலாவணி குறித்துப் பத்து வருடங்கள் முயற்சித்து அவர் சமர்பித்த ஆய்வே இலாவணி குறித்தான ஆய்வாக நமக்குக் கிடைக்கின்றது. இவரது வரலாற்று ஆய்வைப் பின்புலமாகக் கொண்டு, தஞ்சையைச் சேர்ந்த ‘தஞ்சை நஞ்சைக் கலைக்குழு’ என்னும் நாட்டுப்புறவியல் நிறுவனத்துடன் இணைந்து, சென்னையைச் சேர்ந்த தமிழ்க்கூடம் – கலை இலக்கிய இயக்கம் எழுத்தாளர்-இயக்குநர் எஸ்.ராஜகுமாரன் இக்கலையைக் குறித்த விரிவான   ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். தொண்ணூறு நிமிடங்கள் இப்படம் இலாவணி குறித்துப் பேசுகிறது.

இந்த ஆவணப்படத்தில் இலாவணி கலைஞர்களான டேப் அப்துல் காதர் மற்றும் குளிச்சப்பட்டு சச்சிதானந்தன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாடியுள்ள அப்துல்காதர் என்பவர் பொதுவுடைமை மேடைகளில் சமூகப் பாடல்களோடு இலாவணியையும் இணைத்துப் பாடுவதை வழக்கமாகக் கொண்டவர் ஆவார்.

இவ்வாறாகத் தமிழகத்தில் இருந்த எதிர்ப்பாட்டு வடிவைத் தனதாக்கிக்கொண்டு நன்கு செழித்து வளர்ந்த இலாவணி, இடைப்பட்ட காலத்தில் அழியக் கூடிய கலைகளுள் ஒன்றாகிய போதும், இக்குரலிசைப்பாடற் கலைக்குரிய அடையாளம் தற்போது கண்டுகொள்ளப்பட்டு ஆங்காங்கே மீட்டுருவாக்கப் பணிகள் பரவலாக நடந்து வருகின்றதைக் காண முடிகின்றது.

-மகேஷ்வரி  ராஜேந்திரன்

 

3 thoughts on “அருகிவரும் இலாவணிக் கச்சேரி

  1. நல்ல பதிவுகள் இதில் தஞ்சை பாப்பு தாசனின் எரியாத கட்சி பாடல்கள் பற்றியோ கவிமாமணி தஞ்சை பாப்புதசனை பற்றிய குறிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன

  2. தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, பழைய தென்னாற்காடு மாவட்டங்களில் பரவிய இலாவணி கலைஞர் பற்றிய தகவல்களை “இலாவணி: வரலாறும் வளர்ச்சியும்” என்ற நூலில் காணலாம். ஆசிரியர் – முனைவர் இராக. விவேகானந்த கோபால்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s