சுவரை வைத்துதான் சித்திரம்.

(ஓர் உண்மை கதை)

அப்படியென்றும் அழகில் அவன் ரொம்பவும் மோசம் கிடையாது. இல்லாத குறைதான். விளக்குமாற்றுக்கு பட்டுகுஞ்சம் வைத்து கட்டினால் அழகாக இருப்பதில்லையா? இவனுடைய தாய் தந்தையும் வசதிவாய்ப்புடன் இருந்திருந்தால் கொழு கொழுவென்று ஹார்லிக்ஸ் பேபியாக அழகாய்தான் பிறந்திருப்பான்.

அவன் போட்டு இருக்கிற மேல்சட்டை தொள தொளன்னு இருந்தாலும், அவனுக்கு அது அதிகமாகவே பயன்பட்டது……

பாடுபடும்போது தோன்றும் நெற்றிவியர்வையை துடைக்க, வெயில் வேக்காட்டினால் கண்னில் தோன்றும் பீழையை எடுக்க, வடியும் மூக்கை உள்ளுக்கு இழுத்த கையோடு துடைத்துக்கொள்ள, வாயைதுடைக்க—இப்படி எத்தனையோ வழிகளில் துண்டாகவும் கைகுட்டையாகவும்…. ஏழைத் தொழிலாளியின் சின்னமாக இருந்த்து.

பெரும்பாலான நேரங்களில் கால் டவுசரோடுதான் இருந்தான்.
விழி பிதுங்கிய பெரிய கண்கள், வீங்கிய புருவம், கண்னின் கருவிழிக்கு அருகில் நுரை போன்ற வெள்ளையான திட்டு, மஞ்சளானபற்கள், கருப்பான ஒல்லியன தேகம், வாலிப வயசுக்கு அடையாளமாக அரும்பத் தொடங்கிய சிறுமீசை. கன்னங்களில் ஆங்கங்கே முளைக்கும் தாடி…. இளவயதுக் கேற்ற உழைப்பும் எவ்வளவு கடினமான வேலையானாலும் செய்யும் பொறுமையும், தனக்கு கீழ் உள்ளவர்கள் சின்னபையனாலும் மதிப்பு தரும் நட்பும்…. .ஆக உள்ளத்திலே அழகாய் இருந்தான்

வடக்கு வாசலுக்கு அருகில்லுள்ள ஒரு அச்சகத்தில் பழக்கத்தின் மூலம் சம்பளமில்லாமல் வேலை பழகுநராக சேர்ந்தான். முதலாளியின் வற்புறுத்தலுக்காக அச்சகத்திலே  இரவு காவலாளியாகவும் தங்கினான். இரவில் தூங்கி எழுந்து காலையில் வீட்டுக்கு சென்று ரெடியாகி வேலைக்கு வருவான். டிரைசைக்கிள்ல கொண்டு போகக்கூடிய அளவுள்ள  பேப்பர் பண்டல்களையும் சைக்கிளில் கொண்டு வந்து இறக்குவான். முதலாளி ரீம் கணக்குகளில் கட்டிங் மிஷினில் வைத்து சுத்த சொல்லும் போது காளை மாடு மதிரி வேகமாக  சுழற்றுவான்.  முதலாளி  பாராட்டி இவன் தலையில் ஐஸ் கட்டியைவைப்பார். இவனுக்கும் பெருமையாக இருக்கும். ஐஸ்கட்டி வைத்து வேலை வாங்குவதில் கில்லாடியாக இருந்தார் இவனுடைய முதலாளி.

இவனுடைய எட்டாவது வயதில் தந்தை  இறந்தார்.  இவனின் தாய் கூர்வார் தெரியாத, மூடநம்பிக்கை நிறைந்த பாமரத்தி. ஒரே அக்கா. அவள் வயதுக்கு  வந்த பத்தாவது வயதிலேயே  தன் அண்ணன் மகனுக்கு திருமணத்தை முடித்து வைத்தாள்  பாமரத்தி.

பெரிய செல்வந்தரும் நிலக்கிழாரும் அந்த வார்டு கவுன்சிலருமான பெரிய அய்யா வீட்டில் தான் வீட்டு வேலை செய்து வந்தாள் அவனுடைய அம்மா. காலையில்   செல்பவள் மாலையில் தான் வீட்டுக்கு திரும்புவாள் இந்த பாமரத்தி. இவள் ஒண்டியிருக்கும் குடிசையோ ஆயிரம் கண்ணுடையவளாக காட்சியளித்தன. வீட்டுக்குள் இருந்தபடியே வானத்தில்  பறப்பனவற்றை எல்லாம் பார்க்கலாம்

ஒருநாள் அம்மாவைத் தேடி பெரிய அய்யா வீட்டுக்கு போயிருந்தான். அய்யாவின் மனைவி இவனை கண்டு சத்தம் போட்டாள்.    ‘’என்னடா? கணேசா!  ரெம்ப பெரியஆளாயிட்டீயாடா நீ? ராத்திரி வீட்டுக்கே வரதில்லையாமே? கொம்மா புலம்ப்பறா! கட்சி கட்சீன்னு வேற அலையுறியாமே? ஒங்கய்யா மகன் மணிகூட உன்னைப்ப பாத்து சத்தம் போட்டானாம்லடா!’’

ஆயி. முகத்தை பார்த்தபடி பேசாமல் நின்றான்.இவன். “என்ன மோப்பா! நாலு பேரப்போல நாமும் நல்லாயிருக்கனும்ங்கிறதை மனசுல வச்சுக்க’’

‘’சரிங்க     ஆயி’’-ன்னு தலையை மெதுவாக ஆட்டினான். அம்மாவைப் பார்த்து வர்ரேன்ம்மா? என்று சொல்லியபடி நடையைகட்டினான்.

‘’இருடா’’ன்னு கையால் சைகை காண்பித்துவிட்டு, ஆயிடம் சென்றாள். ஆயிடம் ஐந்து ரூபாயை வாங்கி வந்து மகனிடம் கொடுத்தாள்.

****************************

 

 

 

 

மதுரை மாநகரின் மைய பேருந்து நிலையம் வெளியே செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் கணேசும் இரு தோழர்களும் கையில்
புத்தங்களை சுமந்தபடி அருகில் நின்ற பேருந்தில் ஏறினார்கள்.

பஸ்ஸின் டிரைவர் சீட்கருகில் நின்றுகொண்ட கணேசன்,

‘’அன்பார்ந்த, உழைக்கும் மக்களே! உங்களுக்கு எங்கள் புரட்சிகர வணக்கங்கள். இதோ. நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிற பத்திரிக்கை எங்களின் புரட்சிகரமான அமைப்பின் மாத இதழ். .இது மற்ற பத்திரிக்கையிலிருந்து மாறுபட்ட வேறுபட்ட பத்திரிக்கை

இந்த பத்திரிக்கையிலே, சினிமா கழிசடைகளின் கிசுகிசு செய்திகளோ
அவர்களின் அரைகுறை நிர்வானப்படங்களோ இல்லை. மூளைக்கு வேலை
என்று வித்தியாசங்களை கண்டுபிடி என்று அறிவைக் கெடுக்கும்
விசயங்களில்லை. சீப்பு, சோப்பு, கண்ணாடி போன்ற விளம்பரங்கள் இல்லை.

இன்றைக்கு நம்நாட்டில் நிலவக்கூடிய பஞ்சம, பட்டினி, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்ட்டாட்டம் போன்ற என்னற்ற பிரச்சினைகளுக்கு காரணம்யார்? என்பதை சொல்வதோடு நிற்காமல் பிரச்னைகளுக்கு தீர்வையும் சொல்கின்ற ஒரே பத்திரிக்கை. ஓட்டு கட்சிகளின் பித்தலாட்டத்தை தோலுரித்து, அக்கட்சிகளின் தலைவர்களின் சந்தர்பவாதத்தையும் அம்பலப்படுத்தி, “தேர்தல்பாதை, திருடர்பாதை” “மக்கள் பாதை புரட்சிபாதை ”என முழங்க்கூடிய ஒரே பத்திரிக்கை. லாப நோக்கமற்ற பத்திரிக்கை. வாங்கிப் படியுஙகள! ஆதரவு தாருங்கள்!’’  —பேசி முடித்தான். பிறகு ஒவ்வொரு இருக்கையாக சென்று பத்திரிக்கையை மூன்று தோழர்களுமாக விற்பனை செய்தனர். பஸ் கிளம்பியதும்.மூவரும் ஓடும் பஸ்லிருந்து லாவகமாக இறங்கினர்.

“எத்தனை தோழர்?

“இருபதுதோழர்”

கணேசனை தட்டிகொடுத்த லீடர் தோழர், “வெரிகுட் தோழர்”  நல்லா பேசினிங்க, கடைசியில் இருப்பவர்களும் கேட்கும்படியாக சத்தமாக பேசனும் தோழர்’’ ஆலோசனையும் கூறினார்.

அடுத்து பேசும்போது பேசுகிறேன் தோழர்”

இப்படியாக, மூன்று பேர்களும்மாறி மாறி பேசி பிராச்சாரம் செய்து பத்திரிக்கையை இரவு 7 மணி வரை விற்றனர். சோர்வு ஏற்பட்டதால் விற்பனையை முடித்துக் கொண்டு டீ கடைக்கு சென்றனர்.

‘’மூனு டீ போடுங்க’’ லீடர் தோழர் டீபோட சொன்னார்

‘’எனக்கு டீ வேணாம் தோழர். பால் போடச் சொல்லுங்க’’ இது கணேஷ். ‘’பால்குடிக்கிறத மறக்காத தோழருங்க இந்த கணேஷ்’’ —இருவரும் கேலி செய்தனர்.

டீ யை குடித்தபடியே சிறிதுநேரம் உரையாடினர். ‘’என்ன கணேஷ் தோழர், வேலையெல்லாம் எப்படிஇருக்கு? உங்க பாஸ் என்ன சொல்றார்?’’

‘’நிறைய வேல முடிக்காம கெடக்குன்னு புலம்புராரு தோழர்.      அமைப்பு வேலைகளுக்கு லீவு எடுத்தா, அதை மற்ற லீவு
நாட்களில் வேலை செய்து கழித்து டுறேன் தோழர். அப்படி இருந்தும் டென்சனாக இருக்கிறார்  தோழர்.’’

‘’மாத ஒரு முறையோடு மாதமிருமுறை இதழையும் சேர்த்து     கடைகளில் விநியோகம் செய்ய ஒரு மாதத்தில் இருபது நாட்கள்    அலைய வேண்டியுள்ளது தோழர். பத்திரிக்கையின் வால்போஸ்டர்    ஒட்ட வேண்டியுள்ளது. தோழர்கள் யாரவது உதவி செய்தால்    பரவலாக ஒட்டி இன்னும் விளம்பரம் செய்யலாம் தோழர்.’’ -என்றான் அதற்கு லீடர்தோழர் பதிலேதும் சொல்லாமல் பேச்சை வேறுபக்கம் திருப்பினார்.

‘’புதுப்பேண்ட், புதுசட்டை  கண்ணாடி போட்டு கல்லுரி மாணவராட்டம்   வந்திருக்கீங்க! ‘’

 

‘’ரெம்ப நாள்களுக்கு அப்புறமா? எடுத்துருக்கேன் தோழர். எங்க முதலாளி    இப்போ நான் கொஞ்சம் தொழில் கற்று கொண்டதால் மாதம் 300 ரூபா சம்பளம் போட்டு தருகிறார் தோழர். அத மூணுமாசமா சேர்த்து வைத்து ஒரு பேண்ட்சர்ட் எடுத்துருக்கேன் .இப்படியெல்லாம் வந்தாத்தானே புத்தகம் விக்கமுடியுது தோழர்.

‘’இந்தஉடை உங்களுக்கு நல்லாயிருக்குதோழர்’’ —லீடர்தோழர்.

**********************

 

அரசரடியில் தொடங்கி புதூர் போயி, கலெக்டர் ஆபிஸ் வந்து தெப்பக்குளம், கீழவாசல், தெற்குவாசல், ரவுண்டு அடித்து இரவு 12 மணி அளவில் மையபேருந்து நிலைய 3வது பிளாட்பார டீ கடைக்கருகிலுள்ள பிளாட்பார சிமெணட் பெஞ்சில் சைக்கிளை சரியாக நிறுத்தாமல் புத்தககட்டை தலைக்குஅடியில் வைத்து படுத்தான். படுத்த சிலநொடிகளில் சுயநினைவற்றுப்போனான்.

மறுநாள் காலையில் (சுயநினைவுவந்து) கண்களை துடைத்தபடி மெதுவாக எழுந்து அமர்ந்தான். புத்தகட்டையும், வசூல் பணத்தையும் காணாது திடுக்கிட்டான்.

டீ, கடை மாஸ்டர் இவன் எழுந்து அமர்ந்திருந்த்தைப் பார்த்து, சத்தம் கொடுத்தார். டீ மாஸ்டர் இவனுடை ஏரியாக்காரர். கடையில்  புத்தகம் போடும் போது இருவரும் பழக்கமாயிருந்தனர்.

“என்னப்பா? சரியாயிருச்சா?”

“தலையையாட்டினான்”

டீ மாஸ்டர் பாலும்பன்னும் கொண்டுவந்து வைத்தார்.

எழுந்துமுகத்தை கழுவி விரலால் பற்களை தேய்த்து வாயை கொப்பளித்தான். பன்னை பாலில்தொட்டு வயிற்றுக்குள் இறக்கினான்.

“என்னப்பா? எம்புட்டு நேரமா, உன்ன எழுப்புறது! அப்புறமா? சிஜடி போலிஸ்காரங்கதான். தூங்கட்டும்னு சொல்லி புத்தகத்தையும் வசூல் பணத்தையும் எங்கிட்ட கொடுத்துட்டு போனாங்கப்பா!

டீ மாஸ்டர் கொடுத்த புத்தகத்தையும் பணத்தையும் வாங்கிக்கொண்டான்.  பால்பன்குரிய காசை கொடுத்தான்.

“காசா, எதுக்கு? வேணாமப்பபோய்!   சரி, கிளம்பு. வீட்டுக்கு    போவோம். ”உனக்காகத்தான் வெயிட்டிங்…………..

**********************************

 

தொடர்ந்த அலைச்சலாலும் தூக்கமின்மையாலும் அவனின் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது. உடல்மெலிந்து. தலைவலியும். சைனஸ்ம் பாடாய்படுத்தியது.

சைக்களில் போய் கொண்டு இருக்கும் போதோ, அல்லது ஏதாவது வேலை செய்து கொண்டு இருக்கும் போதோ, “முதலில் இலேசாக கண்களில் பார்வைமங்கும். பார்வை மங்கும் போதே பாதுகாப்பான இடம் தேடிக்கொள்வான். சுத்தமாக பார்வைமங்கிய அடுத்தநொடியில் நெற்றிப்பொட்டில் வின்வின்னொன்று பொறுக்க முடியாத தலைவலி வந்துவிடும்.  வலியின் உக்கிரத்தால் உடல் முழுவதும் மதமதப்பு ஏற்ப்பட்டு சொரனையற்று மரத்து போய்விடும். இந்நிலையில்
அவன் சுயநினைவற்று கிடப்பான் நன்றாக உறங்கி ஓய்வெடுத்தபின், சுயநினைவு வந்தபின்பே கண்விழிப்பான். இப்படியாக மாதத்தில் பல தடவை  பாதிக்கப்பட்டு வந்தான். பேருந்து நிலைய பிளாட்பாரங்களில் இவன் படுத்துகிடப்பதைக் கண்டு “போதையில் கிடக்கும், குடிமகன்” என்றுயாரும் கணடு கொள்ளமாட்டார்கள். எப்பொழுது விழிப்பு வருகிறதோ அதுவரை படுத்துக்கெடப்பான்.

இப்படித்தான்,“முதன்முதலாக தலைவலி வந்தபோது , பேருந்து நிலைய கடைகளில் பத்திரிக்கையை போட்டுக் கொண்டு இருக்கும் போது இலேசாக பார்வை மங்க ஆரம்பித்து தலைவலி வந்துவிட்டது. பிளாட்பார சிமெண்ட் இருக்கையில் அப்படியே படுத்துவிட்டான். (ரோந்து) இரவு பாரா போலீசார் லத்திக்கம்பால் தட்டி பார்த்தும் இவனை எழுப்ப முடியவில்லை. அந்த நேரத்தில்தான் இவனுடைய நடவடிக்கையை கண்கானித்து வந்த உளவுபிரிவு (க்யுபிராஞ்) போலீசார் இருவர், இவன் நிலையைக்கண்டு, பாரா போலீசாரிடம் விபரத்தைச்சொல்லி அவனுக்கு பாதுகாப்பு செய்தனர். இவனை சந்திக்கும்போதெல்லாம் இரு உளவு போலீசாரும் இவனிடம் உடல்நிலையை கவனித்து கொள்ளும்படி பலமுறை சொல்லிவிட்டார்கள்.

பிரிதொரு சந்தர்ப்பத்தில் இருஉளவு போலிசாரும் இவனின் உடல் நிலையை குறித்து விசாரித்தனர். உரிய சிகிச்சை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

“நாங்களும் கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலமைக்கு வந்திருக்கோம் கணேஷ்”   “சுவரு இருந்தாத்தான் சித்திரம் வரையமுடியும்”  அதுமாதிரி உங்க உடம்பு நல்லா இருந்தாத்தான் கட்சி வேலசெய்ய முடியும். சைக்கிள்ல நகரத்தை சுற்றி பத்திரிக்கை போட முடியும். நாங்க சொல்றது உங்க கட்சிவேலையை தடுக்குறதற்காக என்று நினைக்க கூடாது.’’ இப்படி பல தடவை சொல்லிவிட்டார்கள். “எருமை மாடுமேல மழைபேஞ்ச கதையாக” இவன் இருந்தான்.

தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் நேரம். போலித் தேர்தல் புறக்கணிப்பு வேலைகள் நிறைந்த நேரம், திடிரென்று ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதால், பரபரப்பும் பதட்டமும் நிறைந்திருந்த்து. ஓட்டு
கட்சி களின் தேர்தல் வேலைகளும் புரட்சிகட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பு  வேலைகளும் முடங்கிவிட்டன.

ராஜீவ்காந்தீயை கொன்றது யார்? என்று ஜனநாயகத்தின் நான்காவது  தூண்கள் எல்லாம் பரப்பாக செய்திகள் வெளீயீட்டு கல்லாவை ரொப்பிக்கொண்டிருந்தன. அந்த நேரத்தில் விடுதலைபுலிகளின் தலைவர்களில் ஒருவரான கிட்டு என்பவர். “மதுரையிலுள்ள புதிய கலாச்சாரகாரர்கள்-தான் ராஜீவ்காந்தியை கொன்றிருப்பார்கள்” என்று பேட்டி கொடுத்தார். அதனால் புரட்சிகர பத்திரிக்கை விற்பவர்களுக்கெல்லாம் போலீசு பத்திரிக்கையை விற்கவிடாமல் கடுமையாக நடவடிக்கை எடுத்தது. அதனால் இவனும் கொஞ்சநாளுக்கு தன்னுடைய அமைப்பு பத்திரிக்கையை விற்கப்போகவில்லை

அந்தநாட்களில் இவனை சைனசும் தலைவலியும் ஆட்டிபடைத்து கொண்டுயிருந்தன. அச்சாபிஸ் வேலைக்கு கூட செல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடந்தான்.

நாட்கள் செல்லச் செல்ல பரபரப்பும் பதட்டமும் ஓய்ந்து சகஜ நிலைமைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிற நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, புரட்சி தலைவரின் ஆசி பெற்ற புரட்சி தலைவி, அண்ணி ஜெயாலலிதா பெரும்பாண்மை பெற்று முதன்முதலாக ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.

ஆட்சிகட்டிலில் அமர்ந்த அடுத்த வினாடியே கருணைத்தாய், தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவுவிட்டார்.  எதிர்த்த மற்ற கட்சிகளையும் அமைப்பினரையும் ஒடுக்கி சிறையில் தள்ளினார்.

அந்தசமயத்தியில் “ஒண்டவந்த பிடாரியே! இலங்கைத் தமிழரைவிராட்டாதே! தலைப்பிட்ட அமைப்பு பத்திரிக்கையின் வால்போஸ்டரை மதுரை நகரமெங்கும் ஒட்டிவிட்டு, பத்திரிக்கையை விநியோகம் செய்ய கடைகளுக்குச்  சென்றான்.

மையப்பேருந்து நிலையக்கடைக்காரகள் அனைவரும் ஒண்ணு சேர்ந்தார்போல் பத்திரிக்கையை  வாங்க மறுத்தவிட்டனர். பஸ் வெளியேறும் இடத்தில் இருந்த பாய்கடையில்தான் அதிகமாக விற்பனையாகும்.

“என்னங்கபாய், தீடிரென்று பத்திரிக்கையை வேணான்னு மொட்டையா சொன்னா எப்படி பாய்? விவரத்தைச் சொல்லுங்கபாய்?

கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரே ஆளாக இருந்ததால் சைகையால் நிக்கச் சொல்லிவிட்டு, வியாபாரத்தை கவனித்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து அவர் மகன் வந்தார். இவனுக்கு சலாம் செய்தார். பதிலுக்கு சலாம் செய்தான். பாய் இவனை அருகில் அழைத்தார்.

‘’உங்க பத்திரிக்கையை வாங்கி விற்கக்கூடாதுன்னு, தீடிர் நகர் போலீஸ்வந்து சொல்லிட்டு போகுது.’’

பயந்திட்டிங்கிளா பாய்?

“வேற வழி?’’ ஒங்களமாதிரி இருந்தா இந்நேரம் நாடு எங்கோயோ போயிருக்காது!’’

“சரிங்க, பாய்…. இந்த பத்திரிக்கை., அரசாங்க அனுமதி வாங்கி., ரிஜிஸ்டர் நம்பர் வாங்கி, அச்சடிக்கிற ஆபிஸ் முகவரி…. அலுவலகம் எல்லாத்தையும் போட்டுத்தான் வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? பாய்!

“எனக்கு , தெரிஞ்சு என்ன செய்யப்பா!

“ஒரு நிமிஷம் பாய்…!  சில சிகரெட் அட்டையை வாங்கி அதன் ஒரு பக்கத்தில் தன் வீட்டு முகவரியை எழுதினான்.

‘’பாய்!…….இது என்னோட வீட்டு முகவரி………நீங்க எதுக்கும்பயப்பட வேண்டாம். திடீர்நகர் போலிஸ்காரங்க வந்தா இத அவுங்ககிட்ட கொடுங்க….. இவன் தான் விக்கச் சொன்னான்னு சொல்லுங்க!!!. உங்களுக்கு எந்தப்பிரச்சனையும் வராது. ஒரு மாதத்துல எத்தனை தடவை கடைக்கு வந்து போறேன்….அப்படியேவா காணமலா பேயிடுவேன். பாய.’’

“அதுக்கில்லேப்பா?’’ -பாய்

பாயின் மகனிடம், அடுத்த வெளியீட்டு புத்தகத்தில் ரப்பர் ஸ்டாம்பில் என் முகவரி இருக்கும். பாய்,”

—மகன் நம்பிக்கையடைந்து தந்தையைப் பார்த்தார்.

“என்னப்பா? விடமாட்டுறியே!’’  டெலிபோனை எடுத்து பேசினார். எதிர்முனை பேச்சில் திருப்திடைந்தவராக அட்ரசை வாங்கி படித்துப்பார்த்தார்.

இப்படியே எல்லாக்கடைகளுக்கும் முகவரியைக் கொடுத்தான். பேருந்து நிலைய கடைகளுக்கு போட்டு விட்டு பாய் கடையை கடக்கும் போது முகப்பில் தொங்கவிட்டுருந்த பெரும்பாலான புத்தகங்கள் விற்பனையாயிருந்தன. மன நிறைவோடு திரும்பினான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 

ஒரு வாரம் கழித்து , அவன் அம்மா சொன்னாள். “ஒன்னத்தேடி ரெண்டு போலிஸ்காரங்க வந்தாங்கப்பா’’

எந்த ஸ்டேசன்னு கேட்ட போது, ’கணேசன் இருக்கிறாரா? இல்லையான்னு கேட்டுட்டு, வந்ததும். நாங்க வந்ததா சொல்லுங்கன்ன ஸ்டேசன் பற்றி எதுவும் சொல்லாமல் போய்விட்டார்களாம்.

அதிலிருந்து, இவனைத் தேடி யாரு வந்தாலும். யாரு? எவரு? என்ன சொல்லனும்னு,  குறிப்பாக,, போலிஸ்காரங்க வந்தா எந்த ஸ்டேசன்னு கேட்கச் சொல்லியிருந்தான்..

வந்தது திடீர்நகர் போலிஸ்சாகாத்தான் இருக்கும்னு நினைத்தான் திரும்ப வரட்டும் என எதிர்பார்த்தான்.

இரவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்பொழுது அவன் அம்மா சொன்னார்.

“அய்யா, அன்னைக்கு கொருநாள் ரெண்டு போலிஸ்காரங்க வாந்தாங்கல்ல, அவுங்க காலையில வேற வந்தாங்கய்யா! ஒன்னய கேட்டாங்க, நாளைக்கு பத்து மணிக்கு மேல பஸ்ஸாண்டுக்கு பக்கத்தில இருக்கிற ஏ.சி.ஆபிஸ்க்கு வரச்சொன்னாங்கய்யா! அப்படி நீ வராட்டி உங்க அம்மாவ கூட்டிட்டு போயிருவோம்னு சொல்லச் சொன்னாங்கய்யா?’’

“என்னய்யா,எதுவும்சண்டையா?

“ஒன்னுமில்லம்மா? பத்திரிக்கை விசயமா வரச்சொல்லி யிருப்பாங்க!!

மறுநாள் காலை 10 மணிக்கு திடீர்நகர் காவல்நிலையத்திலுள்ள உதவி கமிஷனர் அலுவலத்துக்கு சென்றான்.

“சார், நான்தான் கணேசன்.’’ அந்த பத்திரிக்கையோட முகவர். என்னய இங்க வரச் சொன்னாங்களாம். நான் யார பார்க்கனும்?’’

சபாரி உடையணிந்த போலிஸ்காரா ‘’அடடே, நீங்கதான் கணேசனா, உங்க வீட்டுக்கு வந்தது நாங்க தான் தம்பி.’’

“சரி சார், எத்தனை தடவை என்னைப் பார்த்து வரச்சொன்னீங்க நா, வராம போயிட்டேன். நான் வரலேன்னா, எங்கம்மாவ தூக்கிட்டு வந்துரு வோம்னு சொல்லியிருக்கீங்க?’’

“கோவிக்காதிங்க கணேசன், அப்பத்தான் சீக்கிரமா வருவீங்கன்னு சொன்னோம். ஏ.சி.பலதடவை சொல்லிட்டாரு. நாங்கதான் பல வேலையில மறந்திட்டோம்.

இன்னெரு போலிஸ்காரன் எழுந்து வந்து இவன் தோள்மேல் கையைப் போட்டு ”சாரிங்க கணேசன்” உட்காருங்க என்றான்

“அண்ணே, ஏ.சி.கிட்டே சரண்டர் பண்ணிடலாமா?

“இருய்யா, எழுத்து வேலய முடுச்சுகிறேன்”.

“கணேசன்,கையில் கொண்டுவந்திருந்த பத்திரிக்கையை புரட்டிக்  கொண்டு இருந்தான்.

“அய்யா, முடிஞ்சிருச்சுங்கய்யா’’. நோட்டு கட்டை தூக்கிட்டு அடுத்த அறைக்கு ஓடினார் சபாரி போலீஸ். பிறகு, கணேசனின் கைகளை இரு போலிஸ்காராகளும் பிடித்தபடி  அடுத்த அறைக்குள் நுழைந்தனர். “அய்யா, அக்யுஸ்டை பிடித்து விட்டோம்ய்யா’’ ஏ.சி.முன் இவனை நிறுத்தினார்கள்.

உதவி கமிஷனர் பில்டர் வில்சை பற்றவைத்து,   முக்கால்வாசி புகையை வெளியே விட்டுட்டு, கொஞ்சம் புகையை உள்ளுக்குள் இழுத்து பின் அந்த புகையை மெதுவாகவிட்டபடியே இவனைக் கவனித்தார்

“லாக்கப்ல அடையுங்க! என்றார்.

மறுநாள் காலை 7 மணிக் கெல்லாம் ஏ.சி. முன் நிருத்தப்பட்டான் .ஏ.சி. புகையை ஊதிக் கொண்டுருந்தார். நெடுநேரமாக நிற்க வைக்கப்பட்டான் .ஏ.சி. பைல்களை பிரிப்பதும் படிப்பதும் கையெழுத்து போடுவதுமாய் இடையிடையே போன் பேசுவதுமாய் இருந்தார்.

இவனும் பொருமையாய் நின்று கொண்டு இருந்தான். இவனை கொண்டு வந்து நிருத்திய போலிஸ்காராகளும் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தனர் .மணி 9 ஒன்பதை நெருங்கி கொண்டு இருந்தது

“சார்,ரெம்ப நேரமா நிற்கிறேன்.சார்?.

“ சேர் போடனுமா?”

“சேர் வேணாம் சார். என்ன விசாரிச்சு வழக்கு போட்டு உள்ளே தள்ளுங்க. இல்லவெளியில விடுங்க. இல்ல, மணி பத்தாகுது சாப்பாடு வாங்கிக்குடுங்க சார்’’

கடைசியாக சிகரெட்டை ஒரு இழு இழுத்துவிட்டு அனைத்தார். புகையை விட்டபடியே, இவனுக்கு எதிரில் வந்துநின்றார். படாரென்று எதிர்பாராதவிதமாக இருகைகளால் இரு செவுகளிலும் ஓங்கி அறைந்தார்.

அடித்த அடியில் கிர்ர்….ர்..ஒலியைத்தவிர வேறு எந்த ஒலியும் இந்த உலகில் இல்லாதது போல் அமைதியாக இருந்தது. காது அதிக வலியெடுத்தது. காதை இருகைகளால் பொத்தியபடி குனிந்தான். குண்டியில் எத்து விழுந்தது. பல்டியடிக்காத குறையாக விழுந்தான்.

“ஏண்டா? பரதேசி நாயீ ! சூத்துகொழுப்பா!! மேஜையிருந்த உருளை கம்பை எடுத்து அடித்தார். அடிபலமாக விழுந்தும் .இவன் சத்தம்போடவோ, அடியை தடுக்கவோ முயலவில்லை. காதை பொத்தியபடியே சுருண்டு கிடந்தான். அடி ஒய்ந்தபின் சற்று நேர்ம கழித்து தலையை நிமிர்த்திப் பார்த்தான். ஏ.சி. போன் பேசிக்கொண்டு இருந்தார்.

இரண்டு போலிஸ் வந்து இவனை துக்கி பெஞ்சில் உட்கார வைத்தனர். சிறிதுநேரத்தில் பால்பன், மூன்று வாழைப்பழம் இவன் முன் வைக்கப்பட்டது.

“வேண்டாம் சார், இதுக்கு பதிலாகத்தான் குடுத்திட்டாரே! இனி எதுக்கு?.

ஏ.சி….. ‘’சாப்ட்றா வெண்ண ’’ என்றபடி முருகேசன் என்ற போலிசை கூப்பிட்டார். பைல்களை கொடுத்து விட்டு பேசியபடியே எழுந்து சென்றார்.

“கணேசன் எதுக்கு அடி வாங்கினிங்க.?

“அவர்ட்டயே கேக்க வேண்டியதுதானே?

“அய்யா மீட்டீங்க்கு பேயிருக்காரு கணேசன்!” ஏன் இன்னும் இதையெல்லாம் சப்பிடாம  இருக்கிங்க? என்றபடி ஒரு வாழைப் பழத்தை உரித்து அவர் வாயில் போட்டுக்கொண்டார்.

“அந்தநேரம் கியுபோலிஸ் இருவர் வந்தனர். அவரிடம் விபரத்தை சொன்னார். “சாப்டுங்க கணேஷ் அப்பத்தானே, அடி வாங்குவதற்காவாது தெம்பு இருக்கும்.’’

“ஊர்பட்ட அடி அடிச்சுபுட்டு ரெண்டு பழத்தக் கொடுத்த எப்படி சார்?’’ மூவரும் சத்த்த்துடன் சிரித்தனர். “சரிங்க கணேஷ் கேஸ் பைல் பன்னியாச்சு, எங்களாள ஒரு சின்ன உதவி என்று ஒரு துண்டுசீட்ட என்னிடம்  கொடுத்து ‘’இதுல கேஸ் நம்பர் இருக்கு. உங்க கட்சி வக்கீல பார்த்து முன்ஜாமீன் வாங்கீங்க. வாங்கவில்லையெனறால் ஆறு ஏழு மணிக்கெல்லாம் வந்து சரண்டர் ஆகிடுங்க.’’ என்றனர்

“ என்னங்க கணேஷ்  சரியா”?

“சரிங்க என்று தலையாட்டினான்”.

“அப்புறம் கணேஷ், உயரதிகாரிடம் பேசும்போது பணிவா பேசனும். எங்ககிட்ட பேசுறமாதிரி பேசக்கூடாது“ — கியுபோலிஸ் முருகேசன்.

“சண்டியர்கணக்கவோ, திமிராவோ பேசல சார். நீங்க சொல்லுங்க உங்கட்ட அப்படி பேசியிருக்கேனா?’’ கியுவைப்பார்த்துக் கேட்டான்.

“சரி விடுங்க., இந்த பாலையும்பன்னையும் சாப்ட்டு கிளம்புங்க!.”

‘’கணேசு! நான் சொல்ரதை எதையும் நீ கேட்கமாட்டேங்குறே. வசதியுள்ளவனுக்குத்தாண்டா கட்சி உதவும். உன்ன மாதிரி ஆளுகளை வேலைகளுக்குத்தான்டா பயண்படுத்துவாங்க’’  முருகேசன்சார் (கியூ) கூறினார்.

########################

காலை 11மணி

சைக்கிளில் வரும்போதே பிரஸ்முதலாளி அச்சகத்தில் இருப்பதை உறுதப்படுத்திக் கொண்டான். ஓனரின் வண்டி டிவிஸ் சாம்ப் ஆபிஸ்முன் நின்று இருந்தது.  உள்ளே போய் அவரிடம்  ஏ.சி. ஆபிஸில் நடந்ததைக் கூறி முன் ஜாமீன் எடுக்குமாறு வேண்டினான்.

“எங்கிட்ட இப்ப பணம் இல்லையே கணேசு, யாரிடமாவது வாங்கலாம் என்றால் ஒழுங்கா வேலைக்கு வர்ரதில்ல!  ம்ம்ம்ம………

“இல்லையென்று சொல்லாதிங்க சார்!  லீவு எடுக்காம வேலைக்கு வர்ரேன்சார்! இனிமேல் ஓ.டீ யெல்லாம் பார்க்கிறேன் சார்!. தயவு செய்யுங்கசார்!. பத்திரிக்கை பணத்தையெல்லாம் நேத்துதான் சார் அனுப்பினேன். உதவி செய்யுங்க சார்! எவ்வளவு  கெஞ்சியும் கடைசிவரை பணமில்லையென்று என்று ஓனர் கைவிரித்துவிட்டார்.

முற்பகல் மணி 12.10

அமைப்பு வக்கில் அ.பிரகாஷிடம் வழக்கு எண் குறித்த சீட்டை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டான். அவர் சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு ஜாமீன் வாங்கிவிடலாம். சூரியன் தோழர் சொன்னா ஏற்பாடு செய்கிறேன் கணேசு என்றார்.

“அவர் அமைப்பு வேலையா வெளியூர்க்கு போயிருக்கார் சார்!  எங்க இருக்காருன்னு தெரியாதுசார். ஒங்க தனிப்பட்ட முறையிலகூட ஜாமீன் வாங்குங்க சார். ஒரு மாத்திற்குள் செலவு தொகையை  செட்டில் பண்ணிவிடுகிறேன் சார்!’’

“பணத்துக்காக இல்ல கணேசு, அமைப்பு விதி முறையை கடைபிடிக்கனனுமில்லையா?  பொருப்பாளார், தலைவர் சொல்லாம செய்யக்கூடாது கணேசு.

பிற்பகல் 3மணி

வட்டிக்கு பணம் கொடுக்கும் நண்பனைத் தேடி..அவன் வீட்டுக்கு  சென்றான். கதவை தட்டினான்.

“யாருஅது?… ஓ…..நீங்களா!!!  அவரு இல்லையே!!!

“செருப்புகெடக்கே!!!

“செருப்பை மறந்துட்டு போயிருக்காரு!!!!! எப்பவருவாருன்னு தெரியலேயே?’’

வாசலியே பேசி திருப்பி அனுப்பிவிட்டார் நண்பனின் மனைவி.

மாலை மணி 4

சந்திக்க முடிந்த அமைப்புத் தோழர்களை சந்தித்து விபரத்தை சொன்னான்

ஒரு தோழர்;- பயப்படாதிங்க தோழர். சிறையையும் அனுபவமாக பயன்படுத்திங்க என்றார்

இவன்;-  அடிக்கடிதலைவலி, சைனஸ் வருதே? உள்ளே போயி எப்படி சமாளிக்கிறதுன்னுதான்  தெரியல.

மற்றொரு தோழர்;- இது ஒங்க சொந்தகேஸா இருக்கும் தோழர்.

இவன் ;-  விடியவிடிய ராமாயாணம் கேட்டுட்டு விடிஞ்ச பிறகு இராவணனுக்கு பொண்டாட்டி சீதைன்னு சொன்ன கதையா இருக்கு தோழர்.

இன்னெரு தோழர் ;-   உள்ளபோயி, ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க!!

இவன் ;- சிறைச்சாலை ரெஸ்ட்  எடுக்கிற இடமா? அது அடக்கு முறையின் ஒரு அங்கமின்னு  தெரியலையா?

இரவு 8 மணி

இவன் உள்ளே நுழைந்த சிறிதுநேரத்தில் ஏ.சி. முன் நிருத்தப்பட்டான். முருகேசன் போலிசை கூப்பிட்டு கச்சாத்தெல்லாம் சரியா இருக்க என்று கேட்டார்.

சரி , ரிமாண்ட் பன்னுங்க. என்றார் ஏ.சீ.

போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டு இரவு 9 மணி வாக்கில் ரேஸ்கோர்ஸ் அருகில் ஒரு மாஜிஸ்ட்ரேட் வீட்டில் அவர்க்கு முன்னால் நிருத்தப்பட்டான். போலீஸ் கொடுத்த பேப்பரை வாங்கி பார்த்துவிட்டு கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு உள்ளே சென்றுவிட்டார் மாஜிஸ்ட்ரேட்.

மீண்டும் வண்டியில் ஏற்றப்பட்டு புதுஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டான்.

ஜெயில்வாசலில் நெடு நேரமாக காக்க வைக்கப்பட்டான். இவனுக்கு முன் பலர் வர்சையில் நின்று கொண்டு இருந்தனர். இவன் முறை வந்த போது அரை நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்பட்டான். சோதனையின்போது இடுப்பு கயிறு ரெல்லாம் புடுங்கி எறியப்பட்டது.

கீழ் பிளாக்கில் இடமில்லையென்று மேல் பிளாக்கில் அடைக்கப்பட்டான். உள்ளே கூட்டம் அதிகமாக இருந்த்து. 40வாட்ஸ் குண்டு பல்ப் வெளிச்சத்தில் இடம் கண்டுபிடிப்பதில் சிரம்ம்மாக இருந்தது.  பூட்டப்பட் கேட் அருகில் நின்றுகொண்டே  இருந்தான்

“ஏய் ! என்ன கேஸ்? –ஒரு கைதி

“கட்சிகேஸ் !” -இவன்

‘’எந்த கட்சி?’’

இவன் கட்சிப்பேரை கூறினான்

“……………….”

“எந்த ஊரு?” -அடுத்தகைதி.

“மதுரதான்”..

“மதுரயில எந்தஇடம்?”

“அரசரடி -காளாவாசல்”

“ம்ம்ம்…..ஜெயிலுக்கு பக்கத்தில்தானா….என்னாளுக?”

“அப்பிடின்னா?”

“என்னஜாதி?”

“தோழர் ஜாதி” —-தன்னை விசாரித்தது தாதா கைதிகள் என்று காலையில் தான் தெரிந்தது.

மறுநாள் காலை கண் விழித்த போது தனக்கு மிக அருகில் ஒருவர் முக்கி முக்கி வெளிக்கி இருந்து கொண்டு இருந்தார். பரபரப்பாக எழுந்து பார்த்தபோதுதான் புரிந்து, அது கழிப்பறை…….இரவில் விசாரித்த கைதிகள் அங்குதான் என்னை படுக்கவைத்துள்ளனர் என்று..

குத்துகாலிட்டு உட்காருந்த கைதிகள் எல்லாம் எண்ணிக்கை எடுத்தான் போலீஸ் வார்டன். இவன் வரிசையில் உட்காருந்த சமயம் லேசாக கண் மங்க ஆரம்பித்தது சமாளித்து பார்த்தான் முடியவில்லை

”சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்” உடம்பு நல்ல இருந்தால்தான் எந்த வேலையையும் செய்ய முடியும்………… நாங்க சொல்றது வேப்பங்காயக இருக்கும்யா. நீங்க அனுபவப்படயிலேதான் புரியும்’’ க்யு போலீஸ் முருகேசன் அடிக்கடி சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே தலைவலியும், மயக்கமும் வந்தது.

 

-மாநகர் எருமை

 

2 thoughts on “சுவரை வைத்துதான் சித்திரம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s