ஒரு இலக்கியம், நாடகம், திரைப்படம் எதுவானாலும் மக்களுக்கானது என்றால் அது நடைமுறையில் இருப்பதைச் சொல்ல வேண்டும். அல்லது நடந்ததைச் சொல்ல வேண்டும். அல்லது ஒரு சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்று தமது கருத்தாகச் சொல்ல வேண்டும். இன்றைய இலக்கியம் என்பது நாளைய சமுதாயத்திற்கான வரலாற்றுப் பதிவுகள். இதில் பொய்களையும் புரட்டுகளையும் பதிவு செய்வது சமுதாயத்திற்கு நாம் செய்யும் துரோகமாகும்.

      திரைப்படத்தையோ அல்லது ஒரு இலக்கியத்தையோ பார்க்கும் அல்லது படிக்கும் ஒருவர் அதிலிருந்து என்ன புரிந்துகொள்ளகிறார் அல்லது புரிந்துகொள்வார் என்ற புரிதலில் இருந்து அதற்கான விமர்சனங்களைச் செய்வதே மக்களுக்கு பயன் தருதுவதாக அமையும். இந்த வகையில் திரைப்படங்கள் பெரும்பாலும் சமூகக் குற்றங்களையே செய்து வருகின்றன. வானம் என்ற திரைப்படத்தின் பதிவுகளைப் பார்ப்போம்.

      இப்படத்தில் ஐந்து வகையான வாழ்வியல் தளத்திலிருந்து கதையை புனையும் இயக்குனர் க்ரீஷ்  ஒரு புள்ளியில் இணைத்து கதையை முடிக்கிறார். ‘தெய்வம் வாழ்வது தவறுகளை உணர்ந்த மனிதனின் நெஞ்சங்களில்‘ மற்றும் ‘பணம் என்பதே வாழ்க்கையின் அடிப்படைத்தேவை‘ என்ற தமது கருத்துக்களுக்கான கதைத் தளமாக இத்திரைப்டத்தை எடுத்துள்ளார். இடையிடையே அமைத்துள் சினிமாத்தனமான காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் மற்றும் ஒரு திரைப்படத்தின் உயிராதாரமான இறுதிக்காட்சியை இயல்பு மீறி காட்சிப்படுத்துவதன் மூலம் இதுவும் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் என்பதற்கு சான்றாக உள்ளது.

கதை 1. கதாநாயகன் சிம்பு.

 கேபிள் ராஜாவாக வரும் குப்பத்து இளைஞரான இவருக்கு பணம் என்பதே வாழ்க்கையின் குறிக்கோள். அதனால் தமக்கு ஆங்கிலம் எளிதாக பேசவரும் என்ற தகுதியைக்கொண்டு பணக்காரனாக நடித்து பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறார். அதற்காக திருடவும் தயங்காத ராஜா ஒரு கட்டத்தில் தன் மனசாட்சியால் அதுவும் கிட்னியை விற்ற ஒரு ஏழையிடம் திருடிவிட்டோமே என்ற குற்ற உணர்வால் திருந்துகிறார். திருடு என்பதே ஒரு குற்றம் என்று உணர்வதாக காட்சிப்பதிவுகள் இல்லை. சேட்டுப் பெண்ணிடம் திருடும்போது “நம்மள்ட வட்டியாக கொள்ளையடித்த பணம்தான்” என்றுச் சொல்லி திருடுகிறார். எதேச்சையாக போலிசிடம் மாட்டிக்கொண்டு திருடினதை பறிகொடுத்தாலும் அவருக்கு அத்திருட்டு மனசாட்சியை உலுப்பவில்லை. ஏகாதிபத்திய, தரகுமுதலாளிகளின் கொள்ளைக்கு துணைபோகும் போலிக் கம்யூனிஸ்ட்களும் தங்களது கொள்ளை வகைகளை இப்படித்தானே நியாப்படுத்துகிறார்கள.

கேபிள் ராஜா மூலம் “பணம்” இருந்தால்தான் வாழ்க்கை சுகமாக இருக்கும் என்பதை இயக்குனர் பதிவு செய்கிறார். “நாத்தம் வெளியே தெரியாம இருக்கும் டெக்னிக்குகூட பணக்காரனுக்குத்தான் தெரியுது”, நாம(ஏழை) செத்தா குப்பத் தொட்டில போடுறாங்க, பணக்காரன் செத்தா ஐஸ் பொட்டில போடுறாங்க’, ‘சாவு நல்லாயிருக்கனும்னாகூட பணம் வேணும்போல இருக்கே’ என்ற வசனங்கள் மூலம் பணத்தின் இன்றியமையாமையை இயக்குனர் பதிவு செய்கிறார்.

இந்த வசனங்கள், ‘பொருளாதாரமே சமூகப் பிரச்சனைக்கெல்லாம் அடிப்படை; அது தீர்கப்படும்போது சமூக வாழ்வியல் சமநிலையடைந்து குற்றங்களற்றதாக மாறும் என்ற மார்க்ஸிய கருத்துக்களைப் பிரதிபலிப்பதாக, அதனை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் வசனம் உள்ளதாக அதாவது இயக்குனர் முற்போக்கான சிந்தனை உடையவர் என்று சாதாரண ஒருவர் கூறமுடியும். போலி கம்யூனிஸ்டுகளும் அப்படி பணம்தான் எல்லாம் என்று புரிந்துகொள்ளச் சொல்கிறார்கள். இது மக்களின் கருத்தாக நடைமுறையில் இருந்தாலும் காஸ்ட் (சாதி) இரண்டுதான்; ஒன்று பணக்கார காஸ்ட், இன்னொன்று இல்லாதவன் காஸ்ட் என்று கேபிள்ராஜா கூறுவதும் ‘வர்க்கம்’ என்று மார்க்ஸ் கூறுவதை வேறு சொற்களில் கூறுவதாகவும் ஒருவர் வாதிடமுடியும். அதனால் இதில் உள்ள போலி முற்போக்கை புரிந்து கொள்வது இன்றியமையாதது.

                      அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்வதன் மூலம் அதாவது பொருளாதார நிலைமைகளை அனைவரும் பெறச் செய்வதன் மூலம் இந்த சமூகத்தை ஏற்றத் தாழ்வற்றதாக, குற்றம் புரியும் சிந்தனையிலிருந்து விடுபட்டதாக மாற்றவேண்டும் என்பது கம்யூனிசம். அதன்படி தேவைக்கேற்ற உற்பத்தியும், ஒரு பொதுவினியோகம் மூலம் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதும் கம்யூனிசம் கூறும் பொருளாதாரம். இதில் பொருள் விலையற்றதாக மாற்றப்படும். பணம் என்ற ஒன்று ஒழிக்கப்படும். பணம்தான் வாழ்க்கை என்று ஏற்றுக்கொண்டால் அப்படிப்பட்ட சமுதாயத்திற்கான போராட்டங்களை பணம் குவிப்பதற்கான போராட்டம் என்பது போல் கொச்சைப்படுத்திவிடும். பணம் இருந்தால்தான் சுகமான வாழ்க்கையை நுகரமுடியும் என்று ஒருவர் சிந்திக்கவே இப்படம் துணைபுரியும். இந்த உலகம் மூலதனத்தால் (பணம்) உருவாக்கப்பட்டதல்ல. தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. தேவை பணம் அல்ல. தனக்கு உரிமையானதை உடமையாக்குவதே!

பணம்பற்றிய இக்கருத்து எங்கே இட்டுச் செல்லகிறது? போலிப்பொருள்களை விற்பனை செய்வதிலும், பதுக்கலிலும், குறைபாடுள்ளதையும் தரமிக்கதாக ஏமாற்றியும் இலாபமீட்ட நினைக்கும் வணிகர்களை உருவாக்குகிறது. மீன் கூடையை சுமந்து தெருத்தெருவாக விற்கும் ஏழை மீனவர்கள்கூட அழுகிய மீன்களை நல்லதென்று கூறி தனக்கு ஏற்படும் இழப்பை பிறர் தலையில் கட்டிவிடத் தூண்டுகிறது. ஒவ்வொரு தொழிலாளியையும், உதிரி உழைப்பாளர்களையும் கூட ஏமாற்றி பணம் சம்பாதிக்க தூண்டுகிறது. சமூகத்தின் எல்லாபிரிவினரையும் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொண்டு இந்தப் பணத்தைச் சேர்க்கத் தூண்டுகிறது. பணத்தின் மாற்றை அதாவது பொருள் தனது விலையை இழக்கச் செய்து அனைவருக்குமானதாக மாற்றும் வழியை சிந்நிக்கத் தடுக்கிறது.

கதை 2 ; கதாநாயகன் பரத்.

ஹிப்பிவகை இசைக்கலைஞராக வரும் இவர், பிறர் ஆபத்துக்குள்ளாகும்போது மனசாட்சியற்று வாழும் மேட்டுக்குடி வகையைச் சார்ந்தவராக காட்சிப்படுத்தப்படுகிறார். இவர் சாலையில் வழிவிடாமல் காரை ஓட்டிச் சென்றதால், சீக்கிய லாரிடிரைவர் இவரை திட்ட இவருக்கு ஆத்திரம் எற்படுகிறது. அந்த ஆத்திரத்தில் சீக்கியரின் லாரியை எக்குத்தப்பாக முந்த எதிரில் வரும் டிராக்டர் விபத்திற்குள்ளாகி பலர் காயமடைகின்றனர். அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பயணிக்கிறார். தன் தோழி இதுகுறித்து கண்டித்தும்கூட அலட்சியப்படுத்திவிடுகிறார். தொடர்ந்து பயணம் செய்யும் அவர் காரின் டயர் பஞ்சர் ஆகிவிட இந்து தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டு தாலிகட்டு அல்லது ராக்கிகட்டு என்று என்று நெருக்கடிக்குள்ளாகி தாக்கப்படுகிறார். அவ்வழியே வரும் சீக்கிய லாரி டிரைவரால் உதவிசெய்யப்பட்டு காப்பாற்றப்படுகிறார். ஒரு கன்னத்தில் அடித்தாலும் மறு கன்னத்தையும் காட்டும் லாரி டிரைவரின் பெருந்தன்மையால் மனம் திருந்துகிறார். தெய்வம் வாழ்வது எங்கே என்ற பழைய பாடலின் வரிகளை மாற்றி தெய்வம் வாழ்வது எங்கே?  தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சங்களில் என்று ஒரு பாட்டும் பாடிவிடுகிறார்.   இதன் மூலம் காந்தியின் அகிம்சாவை இயக்குனர் போதிக்கிறார். மேட்டுக்குடியைச் சேர்ந்த ஒருவர் மோசமான குற்றத்தை செய்திருந்தாலும் மனம் திருந்திவிட்டாள் பெருந்தன்மையாக நாம் மன்னித்து தெய்வம் வாழும் நெஞ்சமாகப் போற்ற வேண்டும் என்ற இவரின் கருத்தில் மனுதர்மம் வாசனை அடிக்கிறது.

ஒரு சிறுமியை கற்பழித்து கொலையும் செய்த மோகன்ராஜ் என்பவனை போலீசு என்கவுண்டரில் கொன்றபோது தமிழகமே வரவேற்றது. இந்த இயக்குனரும்கூட வரவேற்றுத்தான் இருப்பார். கைது, கோர்ட்டு, விசாரனை எல்லாம் சரிவராது; இப்படி போட்டுத்தள்ளூனாத்தான் இவனுகலெல்லாம் திருந்துவானுக என்று என்கவுன்டருக்கு வக்காலத்து வாங்கியது இந்த சமூகம். விபத்தை ஏற்படுத்திய ஹிப்பி கலைஞனுக்கு மட்டும் மனம் திருந்தினால் போதும் என்று கூறுவதேன்? குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனை என்று ஒருவர் வாதிடலாம். இந்த விபத்து ஒரு வக்கிரமான சிந்தனையால் ஏற்பட்டதாகத் தான் காட்சிப் படுத்துகிறார். மனம் திருந்துவதற்கு வளுவான காரணம் வேண்டுமல்லவா! அதனால் தான் வெறியில் ஏற்பட்ட விபத்தாக காட்சிப்படுத்துகிறார். வக்கிரமான வெறியால் செய்யும் குற்றங்களுக்கு திருந்திவிட்டதாக கூறினால் மன்னிபளித்துவிடலாமா?

அம்மாவை கைது செய்த தற்காக 4 மாணவிகளை எரித்துக் கொன்ற அதிமுக காலிகளின் வக்கிர சிந்தனைக்கு இப்படி மனம் திருந்தினால் போதும் என்று இந்த இயக்குனரால் கதையமைக்க முடியுமா? கல்லாபெட்டி ரொம்பாது. மோகன்ராஜ் மீது ஏற்பட்ட கோபம்போல, அதிமுக காலிகள்மீது ஏற்பட்ட கோபம்போல இதற்கு ஏன் தண்டிக்கவேண்டும் என்று கோவம் கொள்ளக்கூடாது? மக்களின் சிந்தனை காந்தியின் உளுத்துப் போன கோட்பாட்டை மீறிவிடக் கூடாது. அதற்காக விபத்தில் என்ன நிகழ்ந்தது என்பதையும் தெளிவாக காட்சிப்படுத்தாமல் மனம் திருந்துவதற்கான வளுவான காரணத்தை ஆழமாக காட்சிப்படுத்தாமல் நழுவி விடுகிறார்.

கதை 3 : கதாநாயகி சரண்யா

இவர் வாக்கிய கடனுக்காக கள்ளக் கணக்கும் கந்துவட்டியும் வசூலிக்கும் ரௌடி, அவரது மகனை வாங்கிய வட்டிக் கடனுக்காக கொத்தடிமையாக பிடித்துச் சென்று உப்பளத்தில் வேலை வாங்குகிறான். சரண்யா, தன் மகனை மீட்க  தனது கிட்னியை விற்று பணம் திரட்டுகிறார். இடையில் ஒரு திருடனிடம் (சிம்புவிடம்) பறிகொடுத்தாலும் திருடியவன் மனம் திருந்தியதால் மீண்டும் கிடைக்கப் பெற்று தன் மகனை மீட்டெடுக்கிறார். கடன் பணத்தை கொஞ்சம் குறைய பெற்றுக்கொண்டாலும் அந்தப் பையன் நல்லா படிக்கிறான் என்று புல்லரித்துப்போய் மீதப் பணத்தை கேட்டு வம்பு பண்ணாமல் ரௌடி மனம் திருந்துகிறார். அவர் நெஞ்சிலும் தெய்வம் குடிவந்துவிடுகிறது.

      இக் கதையின் இடையில் மனசாட்சிமிக்க தனியார் மருத்தவமனையும் மருத்துவரும் கிட்னியை விற்க சரண்யா வந்துள்ளதை அறிந்து பொங்கி எழுகின்றனர். ஆனால் இன்னொரு தனியார் மருத்துவமனை சந்தடியில்லாமல் வாங்கிக் கொள்கிறது. பொங்கி எழும் மருத்துவனைக்கு தந்த காட்சியழுத்தம் திருடிக்கொண்ட (விலைகொடுத்துதான்) மருத்துவனைக்கான காட்சிகளே இல்லாமல் படம் நகர்ந்து விடுகிறது. தனியார் மருத்துவ மனைகளும் மருத்துவர்களும் நல்லவர்கள்தான். ஒரு சிலரே தப்பு பண்ணுகிறார்கள். என்பது இவரின் கருத்தாக அமைகிறது. அதாவது இந்த அரசாங்கம், போலீசு, அரசு அதிகாரிகள் எல்லோரும் தவறு செய்யவில்லை. ஒரு சில கருப்பு ஆடுகளால் தான் ஒட்டுமொத்த அமைப்புக்கும் அவப் பெயர் ஏற்படுகிறது என்ற முதாளித்துவ புளுகுமூட்டையைக்  காக்க இயக்குனர் க்ரீஷ் விடும் கதை இது.

      கிட்னி விற்பதற்கு இடைதரகர்களாக வருபவர்கள் எவரும் நல்லவர்கள் இயக்குனருக்கு கிடைக்கவில்லையோ? கிட்னியை விற்பவர்கள் எங்கு விற்பதென்று தெரியாமல் அலையக்கூடாது என்றுதான் ஒரு சிறு தொகையை சேவைக் கட்டணமாக பெற்றுக்கொண்டு உழைக்கிறோம் என்ற தரகர் கதாபாத்திரத்தையும் உருவாக்கி கதைத்திருந்தால் இன்னும் இந்தப் படம் சிறப்பாக இருந்திருக்கும் போலத்தெரிகிறது. ஒரு வேளை இடைத்தரகர் இல்லாமல் விற்பனை நடந்தால் நேரடி விற்பனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இன்னும் குறைந்தவிலைக்கு கிட்னி கிடைக்கும் என்பதால் நல்ல மனம்கொண்ட தரகரை இயக்குனர் உருவாக்கவில்லையோ!

      இக்கதையின் இறுதிக் காட்சியில் இவரது புரட்சிகரமான கருத்து அம்மனமா நிற்கிறது. கந்துவட்டிக்காரன் “போகட்டும்யா! அவன் நல்லா படிக்கிறான். என்னமா கணக்கு போட்டான் பார்த்தியா” என்று புல்லரித்து நிற்பதைப்பார்த்து எனக்கும் புல்லரித்துப் போய்விட்டது. எங்குமே நடைபெறாத ஒரு நிகழ்வை இயக்குனர் திணிப்பது ஏன்? தெய்வம் வாழ்வது தவறை உணர்ந்து மனிதனின் நெஞ்சங்களில் என்று நாம் சொல்லவிட்டோம் என்பதற்காக பொய்களையே உண்மைபோல் புனைகிறார். அப்படி அநியாயமாக வட்டிவாங்குகிறாயே என்று கந்துவட்டிக்காரனிடம் கேட்டால் என்ன சொல்வான்? பணம் தான் எல்லாம் என்று இயக்குனர் சொன்னதையே திருப்பிச் சொல்வான். இது இக்காலத்தினை பிரதிபலிக்கும் பதிவு அல்ல. பொய்களையை வரலாறாக பதிப்பவர்களின் பதிவு இது.  கந்துவட்டியால் விளையும் கொடுமைகளைச் சுட்டிக்காட்டி கந்துவட்டிகாரனாக இருந்தாலும் திருந்தவேண்டும் என்பது இவரின் அறிவுறையாக இக்கதை இருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் கந்துவட்டிக்காரன் என்ன செய்திருக்கவேண்டும்? நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.

கதை 4; கதாநாயகி அனுஷ்கா.

      விபச்சாரம் செய்வதன் மூலம் பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ நினைப்பதாக படைக்கப்பட்ட கதாபாத்திரம். கொத்தடிமை விபச்சாரியாக இருக்கும் இவர், தனியாகத் தொழில் தொடங்கி நிறைய சம்பாதிக்கலாம் என்று வேறொரு தரகனை நம்பி தான் சிறைபட்டிருந்த விபச்சார விடுதியிலிருந்து தப்பித்துவிடுகிறார். தப்பித்து வெளியேரும் இவர் போலீசிடம் மாட்டிக்கொண்டு அல்லல்பட்டும், மற்றொரு தரகு கூட்டத்திடம் சிறைப்பட்டு தப்பித்து போதும்டா சாமி இந்தத் தொழில் வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று திருந்திய நெஞ்சமாக இரயிலேறுகிறார்.

            இக்கதையினூடாக, நாங்க வேலையில்லாம விபச்சாரம் செய்கிறோம்; உங்களுக்கு (போலீசுக்கு) வேலையும் இருக்கு, போட்டுக்கிற யூனிஃபார்மும் இருக்கு; நாங்க துணியை அவுத்துப் போட்டுட்டு விலை போகிறோம்; நீங்க துணியை போட்டுக்கிட்டு விலை போகிறீங்க” என்ற வசனங்கள் மூலம் போலிசும் யூனிஃபார்ம் போட்ட விபச்சாரி என்று கூறுகிறார். அது உண்மையே. ஆனாலும் காட்சிப்பதிவு இயல்பை மீறுகிறது. சாதாரண ஒருவர், அதிலும் விபச்சாரியாக இருக்கும் ஒருவர் இவ் வசனங்களை ஒரு போலீசு அதிகாரியிடம் நேரிடையாகப் பேசி சண்டையிடுவதாக உள்ள காட்சிப்பதிவு நாட்டில் ஜனநாயகம் தலைவிரித்தாடுவது போல் காட்டப்படுகறது. இது இயல்பாக இல்லை. இப்படி பேசினால் என்ன நடக்கும்? போலீசு எதிர்வாதம் செய்யுமா? நையப்புடைத்து கொட்டடிக் கொலையை நடத்துமா?

இது ஒருபுறமிருக்க, விபச்சாரி என்றால் பொத்தாம் பொதுவில் ஆடம்பர வாழ்க்கைக்காக உடலை விற்பவர்களா? இது பற்றிய என் சொந்த அனுபவத்தை, அதில் கிடைத்த உண்மைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அப்பொழுது எனக்கு வயது 22. நானும் ஒரு சமூக குற்றவாளியாக அதாவது தங்கம், அந்நியச் செலவாணி கடத்தும் கூலியாக சுற்றிக்கொண்டிருந்த காலம். மும்பை, கொல்கத்தா, டில்லி, நேபாளம், சிங்கப்பூர், இலங்கை என்று சுற்றிக் கொண்டிருந்தவன். கடத்தல் தொழிலை சமூக குற்றமாக பார்க்கத் தெரியாத, இயக்குனர் கூறுவதுபோல பணம்தான் வாழ்க்கை என்ற முதலாளித்துவ சிந்தனையில் வாழ்த்த காலம் அது. என்னிடம் கொஞ்சம் மது அருந்தும் பழக்கம் இருந்தாலும் 15 வயதிலேயே நாத்திகனாக மாறியதால் ஏற்பட்ட அரைகுறையான சமூக சிந்தனையால் விபச்சாரிகளிடமெல்லாம் செல்லுவதை தவிர்த்தவன். ஆனாலும் நண்பர்களுடன் சுற்றுவதும் செய்திகளை அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தவன். 1982களில், மும்பையில் பிரபலமான டிஸ்கோ நடனம் என்ற பெயரில் விபச்சார விடுதியாக செயல்படும் மயூரி போன்ற 3 ஸ்டார் ஹோட்டலுக்குள்ளும் (இன்று சென்னையிலும் டிஸ்கோ விடுதிகள் உள்ளன) சென்று வந்தவன். அதில் நானறிந்த உண்மைகளையே இங்கு பதிவு சேய்கிறேன்.

      விபச்சாரிகளில் பலர் ஏறக்குறைய 50 விழுக்காடு சினிமா மோகத்தில் வீட்டைவிட்டு ஒடிவந்து ஏமாந்து, சீரழிந்து வேறுவழி இல்லாமல் விபச்சார விடுகளில் தஞ்சமடைந்தவர்கள். ஏமாற்றப்பட்ட பலர் இவ்விடுதிகளில் விற்கப்பட்டவர்கள். மீதியுள்ளோர் முதலாளித்துவம் தந்த பரிசாக, வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரிகளானவர்கள். கொல்கத்தா, நேபாளம், பேங்காக் போன்ற இடங்களில் குடுபத்துடன் இணைந்து வாழ்ந்து கொண்டே தனியறை ஒதுக்கி தொழில் செய்பவர்களும் இவர்களில் உள்ளனர். அதிலும் குறிப்பாக நேப்பாளிகளும், கூர்க்கா இனத்தவர்களும் அதிகம். ஆடம்பர வாழ்விற்காக விபச்சாரம் செய்பவர்கள் இவர்களில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக  ஆடம்பரப் பிரியர்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்கள் மிகச் சொற்பமானவர்கள். தமிழகத்தின் பல நகரங்களில் பேரூந்து நிலைய விபச்சாரிகள்கூட பொட்டுக்கட்டிவிட்ட குலரீதியாக தொழில் நடத்துபவர்கள். இவர்களும் வயிற்றுப் பிழைப்புக்காக தொழில் நடத்துபவர்களே. இவர்களின் விட்டேத்தியான பேச்சுகள் அவர்களுடைய இச் சமூகமீதான கோபவத்தின் வெளிப்பாடே தவிர, அவர்களின் மறு பக்கம் முற்றிலும் வேறு.

      இயக்குனர் க்ரீஷ் இந்தக் கதையை சொல்லாமலேயே சென்றிருக்கலாம். ஏனெனில் இது சில நிமிடங்களில் அமைக்கப்படும் காட்சிப்பதிவிற்கான கதை இல்லை. இவர் இக்கதையை ஒப்புக்குத் தொட்டுச் செல்லுவதன் மூலம் இவர்களை ஒட்டுமோத்தமாக சமூகக் குற்றவாளிகளாக் கூறிச்செல்கிறார். இது இவர்களை உருவாக்கிய சமூகத்தை, குற்றங்களுக்கான மூல காரணங்களை காண மறுக்கச் செய்து தப்புவிக்கவே செய்யும். “விபச்சாரி- அசிங்கம்’ என்று சமூகம் பார்க்கவே இது உதவும்.

      திருமங்கை என்ற பாத்திரத்தையும் ஒட்டுப்போட்டு ஒரு கேலிப்பொருளாக எவ்வித விமர்சனமும் இல்லாது விட்டுச் செல்வது அவர்களுக்குச் செய்யும் துரேகம். தெய்வம் வாழ்வது திருந்திய மனித நெஞ்சங்களில் என்றால் ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் படைக்கப்பட்டு காலங்காலமாக அவமானத்திற்கும், சமூக அசிங்கமாக புறங்கணிப்புக்கும் உள்ளானவர்களாக இருக்கும் இவர்களின் அவலம்,  ‘தெய்வமே குற்றம் செய்த நெஞ்சாக’ வாழ்வதை அல்லவா காட்டுகிறது.

கதை 5 ; கதாநாயகன் பிரகாஷ் ராஜ்.

      இது 5வது கதையல்ல. இத்திரைப்டத்தின் உயிர்நாடிக் கதை. பிற 4 கதைகளும் புளித்துபோன கல்லாப் பெட்டியை நிரப்பாத பழைய பன்னாசு. கல்லாப் பெட்டிக்குத் தேவை சூடான கதை. மக்களின் இன்றைய மன நிலையை கைக்கொள்ளும் கதை. அது இசுலாமிய தீவிரவாதக்கதை.

     பிள்ளையார் ஊர்வலத்தில் இந்துத்தவ்வாதிகள் தன் மனைவிமீது கலர் பொடியைத் தடவ கோபம் கொள்ளும் ரஹீம் பாய் (பிரகாஷ்ராஜ்) “குடித்துவிட்டு கலாட்டாவா போடுறீங்க” என்று கோபப்பட “கும்பிட்டாத்தான் சாமியா? நின்னு ஆடினா சாமி இல்லையா?” என்று இந்துத்துவா வாதிகளால் தாக்கப்படுகிறார். இடையில் வரும் போலீசு “இங்க எல்லாம் அப்படித்தான்” என்று என்ன ஏதுவென்று கேட்காமல் ரஹீம் பாய் கன்னத்தில் அறைந்து கலைத்துவிடுகிறது. இவ் வன்முறையில் ரஹீம் பாய் மனைவியின் கர்ப்பம் கலைந்துவிடுகிறது. இதனால் ரஹீம் பாயின் தம்பி நசீர் ஆத்திரம் கொண்டு தீவிரவாதியாக மாறுகிறான்.

      காணாமல் போன தன் தம்பியை கோவையிலிருந்து சென்னைக்கு தேடிச் செல்கிறார். சென்ற இடத்தில்  அறைவிட்ட அதே போலீசு அதிகாரி, தீவிரவாதிகளை தேடிவந்த இடத்தில் ரஹீம் பாயை சந்திக்க, அவரையும் சந்தேகப்பட்டு தீவிரவாதி பட்டியலில் இணைத்து வதை செய்கிறார். போலீசு தாக்குதலால் காயமடைந்த இவர் மருத்துவமனையில் சேர்கப்படுகிறார். அங்கே தன் தம்பி நசீர் தீவிரவாதிகளுடன் சேர்ந்து அப்பாவிகளையும் நோயாளிகளையும் சுட்டுத் தள்ளிக்கொண்டு வருவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். தன் அண்ணனைக் கண்ட நசீர், தன் அண்ணனையும் சுட்டுத்தள்ள வேண்டுமோ என்ற நினைப்பில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக் கொள்கிறார். பிற தீவிரவாதிகள், பிற 2 கதைகளில் வரும் மனம் திருந்திய நாயகர்களின் சாகசத்தால் ஒழிக்கப் படுகிறார்கள்.

      ஒரு கதையின் இறுதிக்காட்சி என்பது மிகவும் முக்கியமானது. ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அரங்கைவிட்டு வேளியேறினாலும் அதிக நேரம் அசைபோடுவது இறுதிக் காட்சிகளைத்தான். அந்த வகையில் இயக்குனர் ஒரு வரலாற்றுப் புளுகை திணிக்கிறார். இசுலாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடங்கிய காலம் முதல் உச்சக்கட்ட கோவை குண்டு வெடிப்புகள் வரை இப்படிப்பட்ட நிகழ்சி நடந்ததில்லை. இரயில் வண்டி, இரயில் நிலையம், கார் நிறுத்தம், மக்கள் கூடுமிடங்களான சந்தைகள் போன்ற இடங்களில் குண்டுகளை வைத்துவிட்டு ஒடிவிடுவது நடந்துள்ளது. இவைகலெல்லாம் மன்னிக்க முடியாத குற்றங்கள்தான். மறுப்பதற்கில்லை. மருத்துவமனையின் சைக்கிள் நிறுத்தத்தில்கூட வெடிகுண்டுகளை வெடித்துள்ளனர். ஆனால் ஒரு மருத்துவமனையில் புகுந்து நோயாளிகளை, குழந்தைகளை, அப்பாவிகளை, இவர்கதைப்படி திருந்திவாழும் தெய்வ நெஞ்சங்களை எல்லாம் நாயைச் சுடுவதுபோல சுட்டுத்தள்ளுவதாக அமைத்திருக்கும் காட்சி, இசுலாமியத் தீவிரவாதிகள் மனசாட்சியை இழந்த மிருகங்கள் என்பதுபோல் சித்தரிக்கிறது.

                பொது இடத்தில் குண்டு வெடித்தாலும் அப்பாவிகளும், குழந்தைகளும், நோயாளிகளும் சின்னாபின்னமாக்கப்பட்டு துடிதுடித்து சாகமாட்டார்களா என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம். இதனைப் புரிந்துகொள்ள அண்மையில் நடந்த இலங்கைப் போரின் விளைவுகளைப் பார்ப்போம். ராஜபக்ஷே, இந்திய அரசுகளால் இலங்கைத் தமிழர்கள் மீது குண்டுமாறிப் பொழிந்து இலட்சக்கணக்கான மக்கள் பிய்த்து எரியப்பட்டனர். ஆளும் வர்க்கம், போர் என்றால் இப்படித்தான் என்றது. அய்யோ பாவம் என்று இச் கொட்டிய மக்கள் கூட அதற்குமேல் ஒரு துரும்பைக்கூட அசைக்காதது மட்டுமல்ல, அதற்கு காரணமானவர்களுக்கே அதன் பிறகு நடந்த தேர்தலில் பெரும் வாக்குகளை அளித்து வெற்றியைத் தந்தனர். அதே சமயம் அதே இராணுவம் அப்பாவிகளை தனித்தனியா பிடித்துச் சென்று சித்திரவதைச் செய்து கொன்றதைக் கண்டு மனம் குமுறுகின்றனர். முன்னது பொத்தாம் பொதுவான யாரையும் சுட்டிக்காட்டி குற்றம் கூற முடியாத நிகழ்வாகும். வரலாறு முழுக்க நடந்த போர்களில் பார்த்துப் பார்த்து பழகி மரத்துவிட்ட மனநிலையில் இது தன்னிலிருந்து அன்னியப்பட்டதாகவும், தனிப்பட்ட தாக்குதல்கள் அநியாயமான குற்றங்களாகவும் பாரக்கப் பழகியுள்ளனர். ஈராக் போரிலும், அபுகிரைப் சித்திரவதையிலும்கூட இந்த மனப்பான்மை வெகுஜன மக்களுடையதாக வெளிப்பட்டது..

பெரும்பாலும், திட்டமிட்டு முதலாளித்துவ ஊடகங்கள் பரபரப்பூட்டும் வன்கொடுமைகளுக்கு எதிராக மட்டுமே சாதாரண மக்கள் கோவப்படுகின்றனர். கருத்து கூறுகின்றனர். அதனால் ஒருவரை என்கவுண்டரில் கொள்ளவேண்டும் என்றால் அவரைப் பற்றிய தவரான மதிப்பீடுகளை முதலில் போலிசு உருவாக்குகிறது. போஸ்டர்கூட அச்சடித்து ஒட்டுகிறது. சட்டம், கோர்ட் எல்லாம் சரிவராது என்று கதைக்கிறது. ஊடகங்களும் சேர்ந்துகொண்டு ஒப்பாரி வைக்கிறது. குருவியை சுடுவதுபோல சுட்டுத் தள்ளுகிறது. அதுவே மக்கள் போராட்டங்களில் கோவம் கொண்டு எதிர்தாக்குத்தல் நடத்தினால் சட்டம் பேசுகின்றனர். அந்தவகை ஊடகங்களில் ஒன்றாக இருப்பதுதான் சினிமா.

அதனால் இயக்குனரும் ‘சென்டிமென்ட்’ காட்சியாக இல்லாததை புனைந்து இசுலாமியத் தீவரவாதிகள் என்றாலே மனசாட்சியற்றவர்கள் என்பதுபோல் சித்தரிக்கிறார். தீவிரவாதிகளின் தலைவன் “அழுதது போதும் இனி அழவைப்போம்” என்று வன்முறையை துவக்கிவைத்துக் கூறுவதாக வசனமியற்றியுள்ளது இவரின் வக்கிரமான மனநிலையைக் காட்டுகிறது.

‘பம்பாய்’ படத்தில் “அரே! அல்லா, போதும் நிறுத்து” என்று இறுதிக் காட்சியில் மணிரத்தினம் வசனமியற்றி கலவரங்களுக்குக் காரணமே இசுலாமியர்கள்தான் என்பதுபோல் சித்தரித்தார். இவர் முசுலீம் தீவிரவாதிகளின் இலக்கு பொதுமக்கள்தான் என்பதுபோல் சித்தரிக்கிறார். திலகர் தொடங்கி வைத்த பிள்ளையார் ஊர்வலம் முதல் அண்மைக்காலங்கள் வரை வினாயகர் ஊர்வலமும் அதன் வக்கிரமான முழக்கங்களும், ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமும் யாவரும் அறிந்ததே. ஆனால் இயக்குனர் தனிப்பட்ட சிலரின் கோவத்தால் உருவானதுபோல் கலர்பவுடருக்கு உண்டான தீவிரவாதம்போல் காட்சிப்படுத்துகிறார். இசுலாமியர்களின் கோவம் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் மீதா? சாதாரண இந்துக்களின் மீதா? தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எப்படி போராடவேண்டும் என்றும், எவர்களுடன் இணைந்து போராடவேண்டும் என்றும் புரியாது சுயநலமிகளின் கொள்ளைக்கு பலிகடாவானவர்கள் இவர்கள். குண்டுவெடிப்புகளை தமது சாகசமாக, இந்து தீவிரவாத அமைப்புகளை பயபீதியூட்டி ஓடி ஒளிந்துக்கொள்ளச் செய்துவிடும் என்ற கற்பனையில், தாமும் ‘வீரம் செரிந்த மரபினர், நாங்களும் அழித்தொழிப்போம்’ என்று மடத்தனமாக இவர்கள் செய்யும் வன்முறைகளை மறுக்க முடியாது. ஆனால் அவர்களின் இலக்கு இந்துக்களல்ல. இதனை மறைத்து இயக்குனரின் பார்வை  தவறாகக் காட்சிப்படுத்தப்டுகிறது.

இயக்குனர், தன்னை நியாயவானாக காட்ட ஹிப்பி இசைக்கலைஞர் இந்துத் தீவிரவாதிகளால் தாக்கப்படுவதாக கதைப்படுத்துகிறார். ஹிப்பி இசைக்கலைஞர் திருந்த இந்தக் கட்டமைப்பு அவசியமே இல்லை. வேறு எத்தனையோ காரண கதைத்தளங்களைச் சொல்லமுடியும். இந்து தீவிரவாதிகள் வெறுமனே ராக்கியைகட்டு என்று காதலர்களை துன்பப்படுத்துவதை மட்டும்தானா செய்கிறார்கள்? மீரட், மும்பை, குஜராத் கலவரங்கள், இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய குண்டுவெடிப்புகள் என்று இரத்த ஆறு ஓடிய நிகழ்வுகள் பலவும் இருக்க உப்புச் சப்பில்லாத ராக்கியை தூக்கிக்கொண்டு காட்சிப்படுத்துவது இயக்குனரின் விஷமத்தனத்தைத்தான் காட்டுகிறது, ஆனால் நியாயவானாக இருந்து இசுலாமிய தீவிரவாதத்தை சொன்னால்  பொதுவான இந்துக்களிடம் தனது விஷமத்தை திணித்தது போன்றும் இருக்கும்.  கல்லா கட்டியது போன்றும் இருக்கும் என்பதே அவருடைய “வானம்” நமக்கு சொல்கிறது. இது ஒருக்காலும் இசுலாமியத் தீவிரவாதிகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த தூண்டுகோலாக இருக்காது.

இப்படத்தின் மிகவும் கொடுமையான கருத்து, தன் மீது நடந்த வன்முறையை கண்டிக்காமல் தன்னையே குற்றவாளியாக கருதிய போலீசுக்காரன், தன்னையும் தீவிரவாத பட்டியலில் இணைத்து சித்திரவதைசெய்த போலீசுக்காரன், தீவரவாதிகளால் தாக்கப்பட்டு காயமுற்று கிடக்கும்போது அவனால் பாதிக்கப்பட்ட ஒருவரே அவரை காப்பாற்றுவதுபோல் கதைப்பதன் மூலம் தன்னுடைய நேர்மையான எண்ணத்தை இசுலாமியர்கள் இப்படி வெளிப்படுத்தவேண்டும் என்று இயக்குனர் விரும்புவது மிகவும் கொடுமையானது. இதனை அப்படியே 4 கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்ற அதிமுக ரௌடிகளுடன் இணைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

—சாகித்

Advertisements

3 thoughts on “கள்ளும் பழசு, மொந்தையும் பழசு

 1. தோழர் சாஹித் ,
  அருமையான பதிவு , வினவிலே வந்த பதிவினை விட இதன் திறனாய்வு மற்றும் தரம் கூடுதலானது.
  வாழ்த்துக்கள் !!
  இஸ்லாமிய தீவிரவாதம் என்பது ஒடுக்கப்பட்ட மற்றும் பாதிப்புக்குள்ளான சமூகத்தில் இருந்தே எழுகிறது. உதாரணமாக காஷ்மீர இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் போராளி குழுக்களே !. அவர்களின் கோரிக்கை தனி காஷ்மீரம் தானே தவிர அது இஸ்லாமிய மத போராட்டம் அல்ல. அந்த போராட்டத்தை அவர்கள் ஜிஹாத் என்ற இஸ்லாமிய போராட்ட சித்தாந்தத்துடன் கலக்கும் பொது அது இன்னும் வலுப்பெறுகிறது.
  கோவை கலவரம் மற்றும் குண்டுவெடிப்பும் இஸ்லாமிய சித்தாந்த போராட்டங்கள் இல்லை. அது இரண்டு மாறுபட்ட மத குழுக்களின் முன்பகையினால் எழுந்த எதிரெதிர் தாக்குதல்களே !

 2. அருமை தோழரே . . . வினவு இந்த திரைப்படத்தை பாராட்டி எழுதியது எனக்கு மிகுந்த வருத்தமே . . .
  உங்களுடைய பார்வை மிகவும் சிறப்பு . இதை வினாவுக்கு அனுப்பி வையுங்கள்
  நம் பனி சிறக்க வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s