பேராண்மையின் பேருண்மை : மசாலா

பேராண்மை

மசாலா என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது ஒரு இந்திச் சொல் மசாலாவை எங்களது கிராமத்தில், கூட்டிஅரைப்பது எனச் சொல்வார்கள். பலவிதமான பொருட்களைச் சேர்த்து அரைத்து, உணவில் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற ஒரு கலவைதான் மசாலா. பலர் நினைப்பது போல மசாலா என்றால் பலவிதமான சுவைகள் கொண்டதல்ல. அதற்குப் பெயர் மிக்சர். மசாலா என்பது ஒரு சுவையைக் கொண்டதுதான். இனிப்புமசாலா, காரமசாலா என இதில் வகைகளும் உண்டு. உணவின் கூடுதல் சுவைக்காக அல்லது உணவை தடங்கலின்றி உள்ளே தள்ளுவதற்காக தயாரிக்கப்படுவதுதான் மசாலா. தமிழ் சினிமா உலகின் புகழ்பெற்ற 99 சதவீதம் பேர் மசாலா தயாரிப்பவர்கள்தான்.
ஹாலிவுட் ஆக்ஷன் படங்களை இந்தியில் அதிரடிப் படங்களாக உருமாற்றம் செய்தபோது அப்படங்களுக்கு இடப்பட்ட பெயர்தான் மசாலாப் படங்கள். எனினும், கரம்மசாலா எனும் காரவகைக்குத்தான் இந்தியில் பெயரைப் பயன்படுத்தினார்களே தவிர சுவீட்மசாலா எனப்படும் இனிப்புவகைப்படங்களுக்கு அந்தப் பெயர் பயன்படுத்தப்படவில்லை. பலவிதமானவைகளைச் சேர்த்து அரைத்து ஒரு சுவையை வித்தியாசமாகக் கொடுக்கும் மசாலா முயற்சிதான் பேராண்மை.
தமிழில் சாகசப்படங்கள் மிகமிகக்குறைவு. சமூக வாழ்வியல் படங்களே கூட மிகமிகக் குறைவுதான். எழுத்தாளர் குமரன்தாஸ் சொல்கிற ஒரு விவரத்தைப் பார்க்கலாம். தமிழக்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக நடைபெறும் பெருந்தொழில் மீன்பிடிப்பு. ஆனால் மீனவர்களை மையப்படுத்தி வந்துள்ள தமிழ்ப்படங்கள் மொத்தமே பத்துக்குள்தான், இருக்கிறது. சிவாஜி, ரஜினி போன்ற நடிகர்கள் மீனவர் பாத்திரத்தில் நடித்ததில்லை. மீனவர்களில் கிறித்துவ மதம் தழுவியவர்கள்தான் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பிரதிபலித்த கதாநாயகப்பாத்திரம் விஜய் நடித்த ஒரு படம் மட்டுமே. தாஜ்மகாலில் மனோஜ் துணைக் கதாநாயகன்தான் இதுவரை வந்துள்ள மீனவர் குறித்த படங்களில், விஜயகாந்த் அறிமுகமான கே.விஜயனின் துரத்து இடி முழக்கம் குறிப்பிடத்தக்க படமாக இருந்தாலும், மீனவர்களின் பிரச்சனைகளைப் பரவலாகத் தொட்டுக்காண்பித்து உணர்வுபுர்வமாக அவைகளைப் பற்றிப் பேசும் படமாக இருக்கிற ஒரே தமிழ்ப்படம் படகோட்டிதான் என அவர் கூறுகிறார். ஆனால், படகோட்டி எனும் மசாலாபடத்தின் சுவை மீனவர்களின் வாழ்நிலை என்பதுதான். ஒருநாள் போவார், ஒருநாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம். ஒரு சாண் வயிரை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் மசாலாக் கவிஞன் வாலியின் வரிகள்தான் இவை மேற்சொன்ன அதே சுவையைக் கொண்ட மசாலா. பேராண்மையின் மசாலா எது? சாகசம்.
தமிழ்சாகசப்படங்களின் பெரும்பான்மைக் கதாநாயகன் எம்.ஜி.ஆர்தான். அவரது ஆயிரத்தில் ஒருவன் கதைக்களம் தமிழில் அதற்கு முன்னுமில்லை பின்னுமில்லை. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனும் அதே கதைக்களம் என்கிறார்கள். படம் வந்தால் தெரியும், வனங்கள் சார்ந்த சாகசப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுபவை. ஜெய்சஙகர்-கர்ணன் படங்கள், (ஜம்பு, குழந்தையைத்தேடி, கங்கா, நேர்வழி காலம் மாறும், கன்னித்தீவு (இப்படத்தின் வில்லனாக நடித்தவர் சிவகங்கையின் மன்னர் கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா. இவரது நெஞ்சில் தனது புட்ஸ்காலால் ராதிகா எட்டி உதைக்கும் போது சிவகங்கையில் தியேட்டரே அதிரும். வரலாற்று துரோகத்தின் வாரிசுக்கு போர்வாளின் வாரிசு கொடுக்கும் பதிலடி எனக்கூட அதை நினைத்தது உண்டு). மற்றும் பல தெலுங்கு டப்பிங் படங்கள் (யானைவளர்த்த வானம்பாடி, காட்டுக்கு ஒரு தோட்டக்காரன், காட்டுமனிதன் மற்றும் பல) சமீபத்திய ஆங்கில டப்பிங்படங்கள் (டாடர்ஜான் ஜூராசிக்பார்க், ஏலியன், டீப்பாரஸ்ட், கிங்காங், அனகோண்டா, காட்ஸில்லா, இப்படி நிறைய) தமிழ்ப் படங்கள் (சிலம்பு – டாவின்சிகோடின் முன்னோடி-, அசுரன்.)
விறுவிறுப்பும், மௌனமும், திகைப்பும், ரகசியமும் கலந்து வனப்பகுதிக் கதைக்களத்தில் படமெடுத்தால் படம் வசூலில் வெற்றிதான். ஆனாலும் அந்த வனக்கள கவனமாக அரைக்கப்பட்டாக வேண்டும். இல்லையெனில் சில நேரங்களில் அது கண்களில் தண்ணீரை வரவழைத்து விடும். உதாரணம், காட்டுக்குள்ளே திருவிழா, ஈட்டி, முரட்டுகரங்கள் ஆகிய படங்கள்.
இயக்குநர் ஜனநாதன் மிகக் கவனமாக இந்த மசாலாவை அரைத்திருக்கிறார். சிலருக்கு இந்த மசாலாவேக்கூட தொட்டு நக்கிப் பார்த்தால் சுவையாக இருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால் வெறும் மசாலாவைச் சாப்பிட முடியர்து. ஏதாவது உணவுப் பொருளோடு இணைத்துத்தான் ஆக வேண்டும். அப்படிச் சேர்த்த உணவுப் பொருளில்தான் ஜனநாதனின் கவனம் சிதறிப் போயிருக்கிறது. இதனால் இவர் சில தவறுகளைச் செய்திருக்கிறார் இதனால் மசாலாவும் கெட்டு உணவு கொட்டுப் போய்விட்டது.
முதல் தவறு மசாலாவை அரைக்க அவர் தேர்ந்தெடுத்த மிக்ஸி-இந்த ரஷ்ய மிக்ஸி. அசலில் ரஷ்ய மிக்ஸியானது பலவித உணர்வுகளைக் குலுக்கிப் போட்டு இறுதியில் ஒரு மகத்தான, புரிப்படையத்தக்க, நாட்டுப்பற்றையும், பொறுப்புணர்ச்சியையும் கொண்ட ஒரு போர்வீரக் குடிமகனின் வாழ்வியலைச் சுவையாகத் தந்தது. நேர்மையான கலவையாக இருந்ததால் அந்தச்சுவை அதற்குச் சாத்தியமானது. ஆனால் ஜனநாதனின் மிக்ஸியில் எல்லாவற்றையும் அதே போலப் போட்டுக் கலக்கினாலும் உப்புப் போட்டுக் கொள்ள மறந்து விட்டார். அந்த உப்புதான் நேர்மை. இந்த நேர்மையற்ற கலவைக்கு அவர் ரஷ்ய மிக்ஸியைத் தேர்ந்தெடுத்திருக்கத் தேவையில்லை. சாமர்த்தியம் எனும் சாகச் சுவையை சரியான விகிதத்தில் சேர்த்தாலும் கூட நேர்மை எனும் உப்பிழந்த பண்டமாகவே பேராண்மை சந்தைக்கு வந்திருக்கிறது. மக்களில் பெரும்பாலோனோர் உப்பிழந்த பத்தியச்சாப்பாடு சாப்பிட்டுச்சாப்பிட்டு, உப்பின் சுவையையே மறந்து போய்விட்டதால், இந்த உப்பிழந்த மசாலாவும் அவர்களுக்கு உவப்பானதாகவே இருக்கிறது.
இனி, பேராண்மையில் அரைத்துக் கூட்டப்பட்டிருக்கும் சேர்மானங்களில் ஒன்றிரண்டை மட்டும் பார்க்கலாம். (ஏற்கனவே தாமதமாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது.
ருத்ரய்யா இயக்கி கமல், ரஜினி நடித்த அவள் அப்படித்தான் படத்தில் கதாநாயகி ஸ்ரீபிரியா, ரஜினிகாந்தைச் செருப்பால் அடிப்பார். தமிழ் சினிமாவில் செருப்படி வாங்கிய முதல் கதாநாயகன் ரஜினிகாந்த்தான். அதற்கு நீண்டநாட்களுக்குப் பிறகு ஜனநாதன் இயக்கிய ஈயில் தான் கதாநாயகி நயன்தாரா கதாநாயகன் ஜீவாவை நோக்கி செருப்பை வீசுவார். அப்படி வந்த ஜனநாதன், பேராண்மையில் பெண்களை ஜட்டியை உருவி முகர்ந்து பார்க்கும் பெண்களாகவும், காட்டுக்குள் பாம்மைப் பார்க்கவில்லை சார் என்று ஆபாச வசனம் பேசும் பெண்களாகவும் காட்சிப் படுத்தியிருக்கிறார். பெண்களின் பேராண்மையைச் சொல்லவந்த ஜனநாதனின் மசாலாவில் இந்த துர்நாற்றச் சேர்மானம் மிகவும் அருவருப்பானது.
வீரம்,கட்டுப்பாடு, துணிச்சல், அடிபணியாமை, நியாயம், இவைகளோடு வாழ்கின்ற மலைவாழ்ப் பழங்குடி இன மக்களிலிருந்து வரும் துருவனின் மேலதிகாரி சாதிவெறியன் கணபதிராம் செய்கிற அவமானங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் குணமானது பின்பாதியில் அவன் பேசும் தேசப்பற்றையும் அறுவறுப்பானதாக்கி விடுகிறது. அரசியல், பொருளாதாரம், பொதுவுடமை அரசியல் படித்தவனால் இப்படி ஒரு புழுவைப் போல இருக்க முடியுமா? முடியுமென்றால் ஒன்று, எந்த ஒரு இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல், அதாவது நடைமுறைக்கு வராமல், வெறும் ஆய்வுரை எழுதுகின்ற திண்ணைப் பேச்சுப் புரட்சியாளர்களால் முடியும். இரண்டாவது, இப்படி பொறுத்துக் கொள்வதையும், (அநாகரிக் கம்யுனிஸ்டுகள் – ஜெயலலிதா) ஒரு நிலைப்பாடாக எடுத்துக் கொள்கிற போலிக் கம்யுனிஸ்டுகளால் முடியும். துருவன் திண்ணைப் பேச்சாளனாகவும் இருக்கிறான், போலிக்கம்யுனிஸ்டாகவும் இருக்கிறான். துக்கியெறியப்பட்டிருக்க வேண்டிய இந்தச் சேர்மானத்தை சேர்த்து அழுந்த அரைத்துவிட்டதால் அது துர்நாற்றமுடையதாக ஆகிவிடுகிறது. அது மட்டுமல்ல இப்படிச் சேர்மானத்திற்காக மார்க்சியத்தைத் தொட்டுக் கொண்டால் உணவே உப்பிழந்த பண்டமாகிப் போகும் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகி விடுகிறது.
ஐந்து என்.சி.சி. மாணவிகளைப் பயிற்சிக்காக காட்டிற்குள் கூட்டிக் கொண்டு போகிற பயிற்சியதிகாரி துருவன், தனது தேசத்திற்கு ஏற்படுகிற ஆபத்தைப் போக்குவதற்காக செய்கிற சாகசங்கள்தான் கதை. ஆனால் இந்தக் கதை படத்தின் இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறது. அதுவரை படத்தில் என்ன இருக்கிறது? பொதுவுடைமை அரசியலே நாட்டுக்கு அவசியம் என துருவன், மாணவிகளுக்குச் சொல்லுகிறார். ஆனால் மாணவிகள் அதைப் புறக்கணிக்கிறார்கள். எஸ்.டி என்பதால் துருவனை மேலதிகாரியான சாதிவெறியன் கணபதிராம் திட்டுகிறான், இழிவு படுத்துகிறான், மேல் சாதிப்பெண்கள் அவமானப் படுத்துகிறார்கள். ஆனால் துருவன் அதைப் புன்னகையோடு பொறுத்துக் கொள்கிறான். அவன் மீது வீண்பழி சுமத்தி தண்டனை வாங்கித் தருகிறார்கள். அதையும் ஏற்றுக் கொள்கிறான். டாய்லட் கழுவுகிற தண்டனையை ஏற்றுக் கொள்வதுமட்டுமல்ல. பாத்ரூம்கூட எனக்கு கிளாஸ் ரூம்தான் என தத்துவத்தையும் போட்டுத்தாக்குகிறான். காந்தியவாதத்தில் அன்பேசிவம் கமலையும் விஞ்சுகிறான் துருவன். ஜனநாதன் அரைத்த மசாலாவின் வாசனையில் டாய்லட் வாசனையும் கலந்து விடுவதால் அது தின்கிற உணவையும் துப்ப வைத்துவிடுகிறது. சாகசம் என்னும் இந்த மசாலாவை ஒளிப்பதிவு, படப்பிடிப்பு இடங்கள், நடிப்புப் பயிற்சி போன்றவைகளைக் கொண்டு மிகுந்த பிரயாசைப்பட்டு அரைத்துதிருந்தாலும்கூட, மேற்சொல்லிய நாத்தமெடுத்த சேர்மானங்களையும் அதில் சேர்த்து விட்டதால், பழங்குடியினத்தவன், அரசியல் பொருளாதாரம், பொதுவுடைமை அரசியல் என்கிற உணவுப் பொருள்களோடு சேர்க்கப்பட்டாலும் நாத்தமே மேலோங்கி படமானது விடலைகளின் விசிலடிப்பாகவே முடிந்து போய்விடுகிறது.
அஜிதா, கல்பனா, ஜெனிபர் என்று பெயர்களைக்கூட மிகக்கவனத்தோடு வைத்திருப்பதற்காகவாவது படத்தின் கடைசியில் நாம் கைதட்டலாம் என்கிற முடிவுக்கு வரும்போதே, நீ காளி, நீ துர்க்கை என அப்பெண்கள் குங்குமப் பொட்டு வைத்து உக்கிரமடைவதைப் பார்த்து, ஆர்.எஸ்.எஸ்காரனும் எழுந்து கைதட்டி, பாரத்மாத்தாகி ஜே என்கிறான். இந்த நாசமாய்ப் போன ஒத்திசைவை முன்வைத்து பார்க்கையில் கைதட்ட வேண்டும் என்கிற நினைப்பை நமக்குள் துண்ட வைத்த பேராண்மையின் ஆபத்தை எண்ணி கவனத்தோடு இருக்க வேண்டியிருக்கிறது.
சரி, இன்னும் நிறைய சொல்லாம், ஆனாலும் போதும். சினிமா மீதான பிரமிப்பை நகர்த்தி வைத்துவிட்டுதான், பேராண்மை பற்றிப் பேச முடியும். ஏனென்றால், படம் சமகால சமூக அரசியலை குறித்து பேசுகிறது. அப்படியில்லையெனில் அந்தப் பிரமிப்பே துருவனின் ஜீப்பைப் போல நம்மையும் குப்புறத்தள்ளிக் கீழே விழவைத்த விடும். எச்சரிக்கை!
-குருசாமி மயில்வாகனன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s