பேராண்மைதுருவன்: நவீனத்துவ சந்தேகவாதப் போராளி!

பேராண்மை-யை ஆதரிப்பதா? கூடாதா? இக்கேள்வியானது படம் பார்த்து முடித்த பலருக்கும் உடனடியாகத் தோன்றியிருக்கலாம். அல்லது படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு குழப்பத்தில் மனநிலையைச் செல்லவைத்திருக்கலாம். இந்தக் கேள்வியே படத்தை சரியாக பார்க்கவிடாமல் மனதைக் குழப்பிவிட்டிருக்கலாம் இன்னும் இரண்டையுமே மனதார ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கலாம்.

அல்லது இந்தக் கேள்வியையே பெரும் கேள்விக்குறியாகக் கொள்ளும் ஒரு பிரிவினரும் இருக்கலாம். அவர்கள் ஒருவேளை கமல் கைகாட்டிய அன்பேசிவம் வாதிகளாக அய்யய்யோ நம்ம கம்யுனிஸ்டா இருந்துக்கிட்டே அஹிம்சை வழி நடக்குறோம். ஆனா தலைகீழாகல்ல படம் சொல்லுது என்று பயந்துபோனவர்கள், ஆதவன், சூர்யா இரசிகர்கள் வழி தி.மு.க துய தொண்டர்கள், அல்லது மார்க்சீய மெய்ஞானத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு பொருள்முதல்வாதிகளாக வாழும் நேர்மையான கம்யுனிசவாதிகள். அல்லது அரசியலும் தெரியாது, அறிவியலும் தெரியாது ஒரு முழுமையான கருத்துமுதல்வாதச் சித்தரிப்பில் உருவாகியுள்ள பெரும்பான்மைவாதிகள். இவர்களெல்லாம் எதிர்ப்பாளர்களாக இருக்கலாம் என்று கூறமுடியாது, கண்டிப்பாக இருப்பார்கள்.

படத்தில் கூறியுள்ளபடி நான் போர் முறைகளை ஆதரிப்பவன் என்று மேலோட்டமாக துருவனின் கருத்துக்கு ஆட்பட்டு சந்தேகவாதத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் சந்தேகவாதிகள் நிச்சயம் பேராண்மை ஆதரவாளர்களாகத்தான் இருப்பார்கள். அல்லது முன்பு கூறிய குழப்ப நிலையில் உள்ளவர்களும் இவ்வகையிலேயே அடங்குவர். ஆக சந்தேகவாதம் என்ற நிலைப்பாட்டின் பிரதிவடிவமே பேராண்மை. ஏனெனில் ஆதரவாளர்கள் அனைவரும் பேராண்மையை முழுமனதாக மனதில் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது. படமும் அத்தகைய கருத்துத்தளத்திலேதான் உள்ளது.

இத்தகைய சந்தேகவாத மனப்போக்கின் பிடியிலிருந்து உதித்த இயக்குநரின் கருத்துதான் 2009-ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கும் இச்சினிமா. ஆக சந்தேகவாதத்தின் பெயரில் பேராண்மையை நிலைநிறுத்திப் பார்ப்பதே சரியென்பதால் இவ்விமர்சனம் எழுதப்படுகிறது.

கருத்துமுதல்வாதம் பற்றியும், பொருள்முதல்வாதம் பற்றியும் விளக்கவேண்டிய தேவையில்லை. படமே மார்க்சியம்தான் பேசுகிறது. கருத்துமுதல்வாதமும், பொருள்முதல்வாதமும் பிளவுற்று முரண்பாடுகள் வலுப்பெற்றபோது, பொருள்முதல்வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் கருத்துமுதல்வாதத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த பொழுதுதான் இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், அந்நியமாதல் மற்றும் மூன்றாவதுவாதம் (சந்தேகவாதம்) போன்றவைகள் உருவாகின. ஆனால் அதன் வரலாறுகள் விரிவடைந்தபின் மூன்றாவது வாதம் என்ற நிலையே கிடையாது. அதுவும் கருத்துமுதல்வாதத்தையே அனுமானிக்கிறது என்று கண்டறியப்பட்டது. எனினும் நவீனத்துவத்தின் பிடியும், தாக்கமும் சந்தேகவாதத்தை விடவில்லை.

ஜனநாதனும், துருவனும் மார்க்சியவாதிகளாக இருப்பதால்தான் இத்தகைய அளவுகோல்கள் தேவைப்படுகின்றன. 21ம் நூற்றாண்டின் புதிய பொருளாதாரக் கொள்கையில் சிக்கித்தவித்து, மெல்லவும் இயலாமல் விழுங்கவும் இயலாமல் வெளிவந்திருக்கும் முழுமையான சந்தேகவாதத்தின் படமே பேராண்மை. ஆக பேராண்மையை ஆதரிப்பதா? கூடாதா?

உன்னைப்போல் ஒருவன் தொடங்கி, கமல்50 மற்றும் அவரின் தொலைக்காட்சிப் பேட்டிகள் வரையான கமலின் பெரு அந்தஸ்துதான் தற்பொழுதைய சினிமா மற்றும் தொலைக்காட்சி இரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறது. ரஜினிகாந்தின் இமேஜையே பாமர மக்கள் வரை உடைத்தெரிந்திருக்கிறது இந்தக் கமலஹாசனின் புதிய அந்தஸ்து.
உன்னைப்போல் ஒருவன் படம் வெளிவந்த பின்பு கூட கலைஞர் தொலைக்காட்சி தொலைபேசி உரையாடலில் கலந்துகொள்ளாத கமல், காந்தி ஜெயந்தியன்று (02.10.09 அன்று) காந்தியின் விசுவாசி என்பதற்காகவும் உன்னைப் போல் ஒருவன் பில்டப்புகளுக்காகவும் சுமார் மூன்று மணி நேரமாக பேட்டியளித்தார். இந்தப்பேட்டி தவிர விஜய் தொலைக்காட்சி மற்றும் பொதிகை தொலைக்காட்சிக்கான பேட்டியிலும் தன்னை ஒரு முழுமையான காந்தியவாதியாக அஹிம்சை ஒன்றுதான் அனைத்திற்குமான இறுதித்தீர்வு என்பதையும் காட்டிக்கொண்டார். இந்தப் பேட்டிகளைப் பார்த்த பலரும் மகாத்மா என்கின்றோமே அவர் மேல் ஒரு மதிப்புமிக்க பார்வை கொண்டு தொழுவர். இதை மீண்டும் பாமர மக்கள் வரை சென்றடையச் செய்த பெருமை கமலையே சாரும். ஒரு காந்திய எதிர்ப்புவாதி கமல் இரசிகராக இருந்து இவற்றைப் பார்த்திருந்தாலும் ஒருவேளை நாமதான் காந்தியை தப்பா நினைத்திருந்தோமோ?! என எண்ணத்தை மாற்றிக் கொண்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. ஏனெனில் ஒரு பகுத்தறிவுவாதியாக அடையாளப்பத்திக் கொண்டு கமல் பேசும் பேச்சுக்கள் அவ்வளவு வசீகரமானவை. போர்முறைகள் தவறான வழி என்றும், பேச்சுவார்த்தை மற்றும் அஹிம்சாவாதம் தான் இறுதிதீர்வு என்றும் இதைத்தான் இந்தியா மட்டுமல்ல உலக அரசியலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெளிவாக விளக்கமாக காட்டிவிட்டார். இந்தக் காலகட்டத்தில் பக்கவாக வெளிவந்து கமலஹாசனையே துக்கி அடித்த பெருமை பேராண்மையையே சாரும்.

பழங்குடி இனத்தவரான துருவனை நாயகனாகப் பார்த்தவுடனேயே கமலஹாசனின் பாதி உயிர் நின்றிருக்கும். அதுவும் கொலைகளை பார்த்தும், செய்தும் பழகவேண்டும் என்றவுடனேயே மொத்தமாகப் போயிருக்கும். எனினும் அவர் அஞ்சமாட்டா. அடுத்தே அஹிம்சை என்ற தலைப்பில் இதற்கு எதிராக படமெடுக்கத் தொடங்கிவிடுவார்.

பேராண்மையின் நிலைப்பாடாக நாம் கொள்ளவேண்டியது இதைத்தான். துருவனை நாம் மார்க்சீயவாதியாகக் கொள்ளமுடியாதுதான் இலங்கை அரசுக்குத் துணைபோன இந்திய அரசை எதிர்க்கவில்லை. ஆனால் விவசாயத்திற்காக இந்திய அரசு அனுப்பும் ராக்கெட்டையும் இந்திய அரசையும் நம்புகின்றான். நம்பட்டுமே(!?) அப்படி நம்பினாலும்கூட அதனை அழிக்கவரும் அமெரிக்கக் கூலிப்படையை அவனால் அடையாளங்காட்ட முடியவில்லை. சர்வதேச கூலிப்படை என்றும் நாட்டு உணர்வு அற்றவர்கள் என்றும் சொல்லி மறைத்துவிடுகிறான். ஏன் சர்வதேச அரசியல் படித்த. பொதுவுடைமை அரசியல் படித்த துருவனுக்கு இது தெரியாதா? கீழ்சாதி என்ற ஒரே காரணத்திற்காக தவனை அசிங்கப்படுத்தும் அந்த அதிகாரி கணபதிராம் அரசு மரியாதை பெற்ற பிறகாவது (தனது இன மக்கள் அடித்து துறத்தப்பட்ட பின்னரும்) , தன்னுடைய வேலையை உதரித்தள்ளி அதற்கு எதிராகச் செயல்படுகிறாரா இல்லை. தனது அடுத்த என்.சி.சி படையின் தயாரிப்புகளுக்குத் தயாராகிறார். ஆக கருத்துக்களை வெளிப்படுத்தும் முறையிலும், செயல்பாட்டு முறையிலும் ஒரு முழுமையான சந்தேகவாதியாகவே துருவனை ஜனநாதன் உருவாக்கிவிட்டார். காரணங்கள் என்ன? ஏன் துருவன் மார்க்சீயவாதியாக செயல்படவில்லை? ஏன் ஜனநாதன் அவனை மார்க்சீயவாதியாக செயல்படவைக்கவில்லை? ஐங்கரன் நிறுவனமும், தமிழ் சென்சாரும் இன்னபிற லொட்டு,லொசுக்குகளும் போதும்,போதும் நீ முற்போக்கு பேசியது, இந்திய தேசப்பற்றை பற்றி பேசு என திசைதிருப்ப ஜனநாதனும் திசை திருப்பியிருக்கிறார். இதற்காக ஜனநாதன் வருத்தப்படுகிறாரோ இல்லையோ துருவன் மிகவும் வருத்தப்பட்டிருப்பான். இதிலிருந்து நாம் புரிவது என்னவென்றால் சந்தேகவாதத்தில் சிக்கியிருந்தால் மார்க்சியம் பேசுவதே தப்பாகிவிடும் என்பதே.

மற்றபடி கமலஹாசனின் அன்பே சிவம் போல நாயகனுக்கு கால்களை உடைத்துவிட்டு காதலை மட்டுமல்ல, கம்யுனிசத்தையும் சேர்த்து கொச்சைப்படுத்தும் வேலையையும், சீமானின் தம்பி போல நான் பொதுவுடைமைவாதி எனப் பீற்றிவிட்டு, கொதித்தெழுந்துவரும் இளைஞர்களையும் கலெக்டர் ஆகு! போலீசு ஆகு! என்ற கேவலத்தையும் ஜனநாதன் செய்யவில்லை. நன்றி.

எனினும் நாம் பேராண்மையைப் பிரித்தரிந்து ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. அது காந்தி, காந்தியம் என்றும், அதுவே உலகின் இறுதிதீர்வு என்றும் பேசிப் பெருமையடித்துக் கொண்டிருந்த கமல் போன்ற மஹான்களின் முகத்தில் கரியைப் புசி உழைப்பவர்களிடமிருந்து. உழைக்காதவர்களிடம் பணம் போய்ச்சேர்ந்த செய்தியையும், வெறும் போர்முறைகள், ஆயுதபலம், இராணுவப்பயிற்சி வைத்துக் கொண்டு மட்டும் போரிட முடியாது. அரசியல் பொருளாதாரத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் (புலிகள் விசயத்தில் மிகச்சரி) என்பதையும், சர்வதேச அரசியலைப் படித்தாக வேண்டும், பொதுவுடைமை அரசியலைவிடச் சிறந்தது இல்லை என்பதையும், உழைக்கும் மக்களின் சர்வாதிகாரமே உலகத்தின் இறுதித்தீர்வு என்பதையும், முகத்தில் ஆணியடித்ததைப் போல் வெளிப்படுத்தியதற்காக பேராண்மையைப் பிரித்தரிந்து ஆதரித்தே தீரவேண்டும். பாளையக்காரர்களாக இருந்தாலும் வெள்ளைப் பரங்கியரை வெளியேற்ற மக்களோடு மக்கள் வழிநடந்த கட்டபொம்மன், மருதுவீரர்களை மனதில்கொண்டு.
படத்தின் இறுதியில் ஒரு சாட் வரும். என்.சி.சி பயிற்சிகளுக்காக துருவன் தயாராகும் முன்பு அவனது முகத்தில் சோகமும், கோபமும், ஏக்கமும் கலந்து வெளிப்படும். படம் முடிவதன் முந்தைய தருவாய் அது. தன்னால் ஒரு நேர்மையான, முழுமையான மார்க்சீயவாதியாக, பொதுவுடைமைவாதியாக, கம்யுனிசவாதியாக, பொருள்முதல்வாதியாக செயல்பட முடியவில்லையே என்பதே அந்த வெளிப்பாட்டிற்கான உள்ளர்த்தம்.

இறுதிக் குறிப்புகள்:

1. கருத்துமுதல்வாதம் தோற்றுவித்த விமர்சனங்களாக ஆனந்தவிகடன், இந்து பத்திரிக்கை, ஹாசினி பேசும் படம் ஆகியவற்றைக் கொள்ளலாம். (கலைஞர் டிவியும், சன் டிவியும் ஆதவன் திரைப்படத்தை ஆதரிப்பதால் ஜெயாடிவி பேராண்மையை ஐங்கரனின் தயவால் ஆதரித்தே ஆகவேண்டிய வலுக்கட்டாயத்தில் முக்கி,முனகி நல்லாயிருக்கு. ஆனால்…. என்ற மாதிரியாக மணிரத்னத்தின் மனைவி விமர்சனம் செய்தார்)

2. பொருள்முதல்வாதம் தோற்றுவித்த விமர்சனங்களாக மதிமாறன், சுகுணாதிவாகர் மற்றும் வினவு ஆகியவற்றைக் கொள்ளலாம். சிறப்பான தெளிவான பார்வைகளின் வெளிப்பாடு. துருவன் மார்க்சியவாதியாக இல்லையே என்ற கோபத்தின் வெளிப்பாடுகள்.

3. பொருள்முதல்வாதம் – கருத்துமுதல்வாதம் இவைகள் உள்ளிட்ட எதுவுமே புரியாதவர்களுக்கு, உங்களுக்கு வேறு வழியேயில்லை, பேராண்மை கூறுவதுபோல் பொதுவுடைமை அரசியலை நீங்கள் படித்தே தீரவேண்டும்.
– உள்ளடக்க விமர்சனம்
ம.அ.சூரிய பிரதமன்

Advertisements

One thought on “பேராண்மை- சூரி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s