தலாக் என்று எடுத்துக்கொண்டால் முதலில் உபதேசம் செய்யவேண்டும் அதற்கு இணங்கவில்லை என்றால் படுக்கையில் தள்ளிவைக்க வேண்டும். அதற்கும் இணங்கவில்லை என்றால் அடித்து திருத்த வேண்டும். அதற்கும் இணங்கவில்லை என்றால்தான் தலாக் சொல்லவேண்டும். அப்படி தலாக் சொல்லும்போது ஒரேதடவையில் மூன்று தலாக்கையும் சொல்லக் கூடாது என்றும் மூன்று இடைவெளிகளில் மூன்று முறை கூறவேண்டும் என்றும் கூறுகின்றனர். குர்ஆனும் அப்படித்தான் சொல்கிறது.

குர்ஆன் 4:34 … இன்னும் எந்தப் பெண்களுடைய மாறுபாட்டை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் உபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிடில்) படுக்கையில் அவர்களை நீக்கி வையுங்கள். இன்னும் (திருந்தாவிடில்) அவர்களை அடியுங்கள். உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டுவிட்டால் அவர்கள்மீது வேறுவழியைத் தேடாதீர்கள்…

குர்ஆன் 2:228 விவாகரத்து சொல்லப்பட்ட பெண்கள் தங்களுக்காக மூன்று மாதவிடாய்கள் எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவர்களுடைய கற்பக்கோளரையில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. மேலும் அவரகளுடைய கணவர்கள் இணக்கத்தை அவர்கள் நாடினால் அதில் (மூன்று மாதவிடாய் காலத்திற்குள்) அவர்களைத் திருப்பிக்கொள்ள அதிக உரிமை பெற்றவர்கள். (மனைவியாராகிய) அவர்கள் மீது (கணவர்களுக்கு) முறைப்படி (கடமைகள்) இருப்பது போன்று (கணவர்கள் மீதும் மனைவியராகிய) அவர்களுக்கு (கடமை) உண்டு. (எனினும்) ஆண்களுக்கு அவர்களுக்கு(ஒர் உயர்வான) தகுதி இருக்கிறது…

குர்ஆன் 2:229 (இத்தகைய மீட்டுக்கொள்ளக்கூடிய) விவாகரத்து இரண்டு தடவை (தான்). நல்ல முறையில் (இத்தா தவணை முடிவதற்குள் மனைவியாக மீட்டு தன்னிடமே) தடுத்து வைத்துக்கொள்ளலாம். அல்லது நன்முறையில் விட்டு விடலாம்.

முதல் தலாக் சொன்னதும் ஒரு பெண் மூன்று மாதவிடாய் காலங்கள் இத்தா இருக்கவேண்டும். இந்த இத்தா என்பது மூன்று மாதவிடாய் காலங்கள் அன்னிய ஆண்களையோ, திருமணம் செய்துகொள்ளக் கூடிய உறவுமுறை உடைய ஆண்களையோ பார்க்காமல் தனித்து இருக்க வேண்டும். இந்த மூன்று மாதவிடாய் காலத்திற்குள் தலாக் சொன்னவர் விரும்பினால் மீண்டும் அப்பெண்ணை சேர்த்துக்கொண்டு வாழலாம். அப்படி அந்த மூன்று மாதகாலத்திற்குள் சேர்த்துக் கொள்ளாவிட்டாள் தலாக் முழுமை அடைந்துவிடும். ஒருவர் இப்படி தம் வாழ்நாளில் இருமுறை தலாக் சொல்லிவிட்டு மீண்டும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அந்தப் பெண் இருமுறையும் இத்தா இருந்து தீர வேண்டும். மூன்றாவது முறை தலாக் சொல்லிவிட்டாள் மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியாது. ஆனால் வேறு ஒருவரை அந்தப்பெண் திருமணம் செய்து உறவுகொண்ட பிறகு புதிய கணவன் தலாக் சொல்லிவிட்டால் மீண்டும் பழைய கணவர் அவளை திருமணம் செய்துகொள்ளலாம். இதுதான் சரியத் சட்டம். இதைத்தான் இசுலாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சிறப்பான சலுகை என்று கூறுகிறார்கள். இந்தச் சட்டம் மறைமுகமாக பெண்கள்தான் குற்றவாளிகள் என்று கூறுகிறது. பெண்ணாணவள் தவறு செய்யமாட்டாள் என்பதல்ல எனது வாதம். ஆண் தவறு செய்தால் குர்ஆன் என்ன கூறுகிறது என்றால் ஒன்றும் இல்லை.

புகாரி 5264.  நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

மூன்று தலாக் சொல்லிவிட்டவர் குறித்து இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், ‘ஒரு தலாக், அல்லது இரண்டு தலாக் சொல்லியிருந்தால் (திரும்ப அழைத்துக்கொள்ளலாமே!) ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எனக்குக் கட்டளையிட்டார்கள். ஆனால், அவளை நீ மூன்று தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணக்கும் வரை உனக்கு அவள் விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்’ என்று பதிலளிப்பார்கள்.

அவர்கள் தலாக் சொல்வார்களாம். பிறகு விரும்பினால் சேர்த்து கொள்வார்களாம். ஆனால் பெண் தாலாக் சொல்லும்போதெல்லாம் இத்தா இருந்தாகவேண்டுமாம். இரண்டுமுறை தலாக் சொல்வதெல்லாம் ஆண்களின் இச்சைக்கு ஏற்ப ஒரு விளையாட்டாக இருப்பதை மேலுள்ள நபிமொழி உணர்த்துவதை கவனியுங்கள்

ஒருபெண் தவறுக்கு மேல் தவறு செய்யும்போது இந்த சரியத் சட்டம் பொருத்தமாக இருக்கலாம். இதுபோன்ற தலாக் பிரச்சனைகள் ஏற்படும்போது அதிகமான சிக்கல்கள் இல்லாமல் ஜமாத்துகளே பேசி தீர்த்து வைத்துவிடுகிறார்கள். அதுபோல கணவன் மனைவிக்கிடையே தீராத பிணக்கு ஏற்பட்டு சேர்ந்து வாழமுடியாது என்று அந்தப் பெண்ணும் கருதும்போது தலாக் செய்வது பிரச்சனை இல்லாமல் முடிந்துவிடுகிறது. இது போன்ற தலாக் பிரச்சனைகளுக்க நீதி மன்றங்களை நாடுவது தேவையில்லாதது தான். அது வீணாண காலவிரையத்தையே ஏற்படுத்தும்.

ஆனால் ஒரு ஆண் தவறிழைக்கும்போதும், மனைவியல்லாது வேறுஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளும்போதும், வேறுறொரு பெண்ணை மணந்துகொள்ளும் போதும் மேற்சொன்ன படுக்கையில் தள்ளி வைப்பது, அடிப்பது, மூன்று இடைவெளிகளில் தலாக் சொல்லவேண்டும் போன்ற சரியத் சட்டம் எப்படி பொருந்தும். 90 சதவீத தலாக்குகள் இப்படி ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதால்தான் நடைபெறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் நான்கு பெண்கள் வரை ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சரியத் சட்டம் இவர்களை ஆதரிப்பதால் தலாக் சொல்லப்டும் பெண்களின் நிலை பரிதாபத்திற்குள்ளாகிறது.

திருமணம் என்றால் எளிமையாகத்தான் இருக்கவேண்டும் என்று இசுலாம் கூறினாலும் நடைமுறையில் எப்படி உள்ளது என்பதையும் பார்க்கவேண்டும். அலைந்து திரிந்து தன் மகளுக்கேற்ற  மாப்பிள்ளையை தேடி, வரதட்சினை, திருமணச் செலவு, சீர்வரிசை என்று ஒரு பெரும் தொகையை செலவு செய்து ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். நாங்கள் வரதட்சினை வாங்கவில்லை என்று பீற்றிக்கொள்பவர்களின் திருமணமாக இருந்தாலும் நகை நட்டு, ரூம் செட், கிச்சன் செட் என்று சீர்வரிசையாக அதாவது மறைமுக வரதட்சினையாக பெற்றுக்கொண்டே திருமணம் செய்கிறார்கள். சீர்வரிசைக்கு சரியத் அனுமதி உண்டு என்பதால் பணக்காரர்களாக இருந்தாலும் ஏழைகாளாக இருந்தாலும் இது கண்டிப்பாக உண்டு. தூய மார்க்கம் என்று பேசுபவர்களின் திருமணங்களும் இப்படித்தான் நடக்கின்றன. வெளியே சொல்லாமல் வரதட்சினையாக பணம் வாங்கும் திருமணங்களும் உண்டு. நடைமுறையை பர்க்காமல் எங்கள் இசுலாத்தில் வரதட்சினை இல்லை என்று ஒப்பாரி வைப்பதில் எந்தப் பொருளும் இல்லை. எதற்கெடுத்தாலும் சரியத் என்று பேசும் இமாம்கள் இப்படி வரதட்சினை வாங்கும் திருமணங்களை நடத்தி வைக்கமாட்டோம் என்று கூறுவதில்லை. தங்களது பதிவுகளில் அச்சொல் இடம்பெறாமல் இருந்தால் அவர்களுக்கு போதும். இதனை எதிர்த்து எவரும் எந்த அமைப்புகளும் போர்கொடிகள் தூக்குவதில்லை. ஆர்ப்பாட்டங்கள் செய்வதில்லை. ஒப்புக்கு மேடைகளில் வரதட்சினை பற்றி கூறிவிட்டு “வரதட்சினை வாங்குவதால் ஆண்கள் பெண்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்” என்றும் அழுது தீர்க்கிறார்கள். மகர் கொடுத்தால் ஆண்கள் தங்கள் விருப்பம்போல் நடக்கலாமாம். இவர்கள் சொல்வதைப்பார்க்கும்போது வரதட்சினை கொடுப்பது ஒருவகையில் பெண்களுக்கு பாதுகாப்புபோல் தோன்றுகிறது.

சீர்வரிசை, வரதட்சினை என்று வாங்கும் நகை, பணம் சில விலைமதிப்புள்ள பொருள்கள் போன்றவைகள் கணவனாகப்பட்டவன் தன் தொழிலுக்கோ அல்லது தமது சகோதரிகளின் திருமணம் மற்றும் வரதட்சினை தேவைகளுக்கோ அல்லது உறவினர்களின் மருத்துவச் செலவுக்கோ பயன்படுத்திவிடுகிறான். இந்தச் சூழ்நிலையில் ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு முதல் மனைவியை புறக்கணிப்பது அல்லது தலாக் சொல்வது எப்படி சரியாகும்? இப்படி தலாக் சொல்லும்போது இந்த இழந்த பணம், நகைகளை எப்படி ஒருபெண் மீட்டெடுக்க முடியும்? ஒரு காலக்கெடுவுக்குள் திருப்பித்தரனும் என்று ஜமாத்துகள் தீர்ப்பு சென்னாலும் பெரும்பாலும் ஏமாற்றுப்படுவதுதான் நடப்பாக உள்ளது.

ஒரு பெண் தன்கணவன் இன்னொருவளை திருமணம் செய்து கொள்வதை அந்தக்காலத்திலிருந்தே ஏற்றுக்கொளவதில்லை. இன்று அந்த தன்மான உணர்வு பெண்களிடம் கூடுதலாகவே உள்ளது. அதனால் தன் கணவன் இன்னொரு திருமணம் செய்யும்போது தனக்கே உரியவன் என்று நம்பி ஏமாந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். இரண்டு மூன்று குழந்தைகள் உள்ளவர்களின் நிலை பெரிதும் பரிதாபத்துக்குள்ளாகிறது. பெண்ணை பெற்றவர்கள்கூட தன் மகளின் கணவன் வேறொரு திருமணம் செய்து கொள்வதை சரியத் சட்டம்தானே என்று சகித்துக்கொள்தில்லை. ஆனால் சிலர் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் வேறொரு திருமணம் செய்துகொள்கிறார்கள். முதல் மனைவி அதனை சகித்துக்கொள்ளவில்லை என்றால் தலாக் சொல்லிவிடுகிறார்கள். இதனை சில இசுலாமிய அமைப்புகளும் ஆதரவு தந்து முன்னின்று நடத்திவைக்கிறார்கள். இந்த அமைப்புகள் மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொள்கிறார்கள். எந்த மக்களுக்காக போராடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. இப்படிப்பட்ட இரண்டாம் திருமணங்களை நடத்திவைப்பதற்கு என்றே நாகூர் போன்ற தர்காக்களிலும் காசுக்காக பலர் அலைகிறார்கள்.

இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் எங்கள் சரியத் சட்டம் அனுமதிக்கிறது என்று 13, 14 வயது சிறுமிகளுக்குக்கூட திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த இளம் பிஞ்சுகளும் இந்த தலாக்கிலிருந்து தப்பிப்பதில்லை. பிஞ்சிலேயே கருகிவிடுகின்றனர்.

இப்படி மன உளைச்சல், பொருளாதார இழப்பு என்று தலாக் சொல்லப்பட்ட பெண்கள் துன்பப்படும்போது இசுலாமிய வல்லுனர்கள் “இதற்குத்தான் இசுலாம் மறுமணத்தை ஆதரிக்கிறது” என்று பெருமையாகக்  கூறுகின்றனர். இரண்டாம் திருமணம் என்றால் மிகவும் எளிமையான ஒரு காரியம் என்பதுபோல் கூறுகின்றனர். மீண்டும் திருமணச் செலவு, வரதட்சினை, சீர்வரிசை என்று தொடங்கவேண்டும். அப்படியே செலவு செய்ய ஒரு குடும்பத்தால் முடிந்தாலும் பெண்ணின் பருவத்திற்கேற்ற மாப்பிள்ளை கிடைப்பதில்லை. எங்கோ வெகு சிலருக்கு அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் பலருக்கு வயது முதிர்ந்தவர்கள்தான் மாப்பிள்ளையாக கிடைக்கிறார்கள். பல ஏழைப்பெண்கள் தங்கள் பெற்றோருக்கு சுமையாக இருக்க விரும்பாமல் தனது தலைவிதி அவ்வளவுதான் என்று வயது கூடியவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். பலர் மறுமணம் செய்துகொள்வதே இல்லை. இரண்டு மூன்று குழந்தைகள் உள்ளவர்களின் நிலையை சொற்களால் விவரிக்க முடியாது. இதற்கு சரியத் சட்டம் என்ன தீர்ப்பு வைத்துள்ளது?.

குர்ஆன் 65:3 இன்னும் அவருக்கு அவர் நினையாத புறத்திலிருந்து உணவும் அளித்திடுவான். எவர் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவன் போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய காரியத்தை அடைந்தே தீருவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை திட்டமாக அமைத்து வைத்துள்ளான்.

அல்லாஹ் பாதுகாப்பான் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

இசுலாமிய வல்லுனர்கள் மேலும் ‘மகர்’ என்ற பாதுகாப்பும் உள்ளது என்று கூறுகின்றனர். ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்யும்போது வரதட்சினை வாங்காமல் ‘மகர்’ என்று ஒரு தொகையை கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்று இசுலாம் கூறுகிறது. இந்த மகர் தொகை 501, 1001 ரூபாயாகவோ அல்லது ஒரு குர்ஆன் வசனாமாகவோ இருந்தால் போதும்.  5 பவுன் 10 பவுன் நகையை மகராக கொடுத்தே திருமணம் செய்துகொள்கிறார்கள் என்று வைத்துகொள்வோமே. இசுலாமிய முறைப்படி தலாக் சொன்னால்  இதனை இரட்டிப்பாக்கி கொடுக்க வேண்டும். இந்த தொகை எவ்வாறு தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கு காலம் முழுவதும் வாழ்வதற்கு போதுமானதாக இருக்கும்?

மகர் தொகையை ஒரு பெண் தான் விரும்பிய அளவு திருமணத்தின் போது பெற்றுக்கொள்ளலாம் என்பதும் இசுலாமிய சரியத் சட்டம்தான். ஆனால் நிலைமை என்ன? பெற்றோர்களுக்கு சுமையில்லாமல் எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்று நடுத்தர வர்க்கத்தில் மேல்நிலையில் உள்ள ஒரு பெண்கூட நினைக்கும் போது  தன் விருப்பப்படி ஒரு இலட்சம் இரண்டு லட்சம் என்று மகர் தொகையை ஒரு பெண்ணால் கேட்கமுடியுமா? மகர் என்பது பெண்களுக்கான பாதுகாப்பு என்று சொல்வது வேடிக்கையாக இல்லையா!

குலா என்ற தலாக் அமைப்பையும் இசுலாம் பெண்களுக்கு வழங்கிய சிறப்பு என்பது இசுலாமிய வல்லுனர்களின் கூற்று. குலா என்றால் பெண் தன்னை தனது கணவன் தலாக் சொல்லிவிடும்படி பொறுப்பாளரிடம் முறையிடுவதாகும்.

புகாரி 5260. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்களின் துணைவியார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ரிஃபாஆ என்னை நோக்கி ஒட்டுமொத்தத் தலாக்கையும் கூறிவிட்டார். நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் அல்குறழீ அவர்களை மணமுடித்துக் கொண்டேன். ஆனால், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றதுதான்’ என்று கூறினார். (ஆனால், இந்தக் குற்றச் சாட்டை அப்துர் ரஹ்மான் மறுத்தார். முதல் மனைவி மூலம் தமக்குப் பிறந்த குழந்தைகளையும் காட்டினார்.)

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீ (உன் பழைய கணவர் ‘ரிஃபாஆ’விடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? இல்லை! (அவ்வாறு பழைய கணவரை மீண்டும் மணந்துகொள்ள முடியாது; உன்னுடைய இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் (முன்னாள் கணவரான ரிஃபாஆவை மணக்கமுடியாது)’ என்று கூறினார்கள்.

புகாரி 5276. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவரின் குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும் நான் இறை நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்’ என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘சரி! அவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்து விடுகிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவரும் ‘ஆம்’ என்று கூறினார்கள். பின்னர், (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார்.( மேலும் ஸஹீஹுல் புகாரி 5273, 5274, 5275, 5277)

மேலுள்ள இரண்டு நபிமோழிகளும் பெண்கள் தலாக் கோருவதற்கான சான்றுகளாகும். பெண் தாலக் வேண்டினால் அவள் அதற்கு ஈடாக எதையாவது கொடுக்கவேண்டும். இரண்டாம் திருமணம் செய்துகொள்பவர்கள் அனைவரும் தாங்கள் முதலில் தலாக் சொல்ல விருபம்புவதாக கூறுவதில்லை. காரணம் இவர்கள் தண்டத்தொகை கொடுக்கவேண்டும் என்பதே. முதல் மனைவியே தலாக் சொல்லட்டும் என்று நயவஞ்சகமாக நடந்துகொள்ளத்தான் இந்த குலா உதவும். ஆனால் பெண் கடிதம் கொடுத்தாலும் தவறு யார் மீது உள்ளது என்று ஜமாத்துகள் பார்க்கும் காலம் ஒன்று இருந்தது. இன்று இந்த நிலைமையை புரட்சிகர இசுலாமிய அமைப்புகள் சரியத்தை காட்டி மாற்றிவிட்டன.

இன்று இரண்டாம் திருமணம் செய்துகொள்வதால் ஏறபடும் தலாக் பிரச்சனையில் ஜமாத்துகள் பெரும்பாலும் ஆணின் சார்பாக நின்று பெண்களை அடங்கிப்போகச் சொல்கிறது. முடியாத பட்சத்தில் இப்பிரச்சனையில் தலையிடாமல் கைகழுவி விடுகின்றனர். இதற்கு சரியத் சட்டத்தையும் தனது பணபலத்தையும் ஆண்கள் பயன்படுத்துவதும் ஒருகாரணம். இந்நிலையில் பாதிக்கப்படும் அப்பெண் காவல் நிலையத்தையும், நீதி மன்றங்களையும் நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை. இதில் இன்னுமொரு கொடுமை என்வென்றால் காவல்துறை நமக்கேன் வம்பு என்று ஜமாத் பக்கமே தள்ளிவிடுவதுதான்.

காவல் துறையையும் நீதி மன்றங்களையும் நாடும் பெண்களை இசுலாத்திற்கு விரோதமானவர்கள் என்பது போல இழிவுபடுத்துகின்றனர். சமூகப் புறக்கணிப்பை மறைமுகமாகத் திணிக்கின்றனர். நீதி மன்றங்களுக்குப் போவதால் சரியத் சட்டமும் அதைத்தொடர்ந்து இசுலாமும் அழிந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டி மிரட்டுகின்றனர். இப்படிப்பட்ட மிரட்டல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் சமூகப் புறக்கணிப்புக்குப் பயந்து வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மனதளவில் புழுங்கி நித்தமும் செத்துக் கொண்டிருக்கின்றனர். நீதிமன்றங்களால் விரைவான தீர்ப்பு கிடைக்காவிட்டாலும் குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல் விடுவதால் குற்றம் குறைவதற்கு வழிவகையே இல்லாமல் போய்விடும். ஒரு மனைவிக்கு மேல் குடும்பம் நடத்த சக்தி பெறமாட்டாய் என்றும் குர்ஆன் கூறுகிறது. நான்கு மனைவிவரை திருமணம் செய்யலாம் என்று சரியத்… சரியத்… என்பவர்கள் இந்த பிரச்சனைகளில் மட்டும் குர்ஆன் கூறுவதை காதில் போட்டுகொள்ளாமல் குர்ஆனுக்கு புறம்பாக செயல்படுகிறார்கள். அதனால் நீதிமன்றங்களின் கதவுகளை தட்டுவது தவிர இவர்களுக்கு வேறு வழியே இல்லை.

ஒரு பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ஜமாத்துகளில் பரவலாக ஒரு பழக்கம் இருந்தது. தலாக் என்று ஒரு ஆண் தன் மனைவியிடம் தாம் விரும்பியபோது சொல்ல சரியத் சட்டம் அனுமதித்தாலும் ஜமாத்துகள் அப்படி அனுமதிப்பதில்லை. கணவன் மனைவி இருவரில் எவர் ஒருவர் தலாக் சொல்ல விரும்பினாலும் முறைப்படி ஜமாத்திற்கு கடிதம் கொடுக்க வேண்டும். அவர்கள் முறையாக விசாரித்து எவர் மீது தவறுள்ளதோ அவருக்கு தண்டம் விதிப்பார்கள். கணவன் மீது தவறிருந்தால் பெண் விரும்பினால் மட்டுமே தலாக் செய்ய அனுமதிப்பார்கள். இல்லையேல் தலாக் செய்ய முடியாது. இரண்டாவது திருமணத்தையும் அங்கீகரிப்பதில்லை. தலாக்தான் தீர்வு என்றால் அப்பெண்ணிற்கான வாழ்க்கை செலவாக ஒரு தொகையை தண்டத்தொகையாக பெற்றுத்தருவர். குழந்தைகள் இருக்குமானால் அக்குழந்தைகளை தாயிடம் ஒப்படைத்துவிட்டு அக்குழந்தைகுளுக்கான வாழ்க்கைச் செலவுத் தொகையாக மாதமாதம் ஒரு தொகையை குழந்தைகள் வளரந்து பெரியவர்களாகும் வரை கொடுக்கவேண்டும் என்று கட்டளையிடுவர். பெண்குழந்தைகளுக்கு வளர்ந்து பெரியவளாகும்போது திருமணம் செய்வதற்கு ஏற்ப ஒரு தொகையை நிர்ணயித்து ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வங்கியில் அக் குழந்தையின் பெயரில் சேமிப்பு கணக்கில் செலுத்தும்படி தீர்ப்புச் செய்வர். இன்னும் ஒரு சிறப்பான நடவடிக்கையும் இருந்தது. வரதட்சினையாக கொடுக்கும் தொகையை மகர் கொடுத்த தொகையாகப் பதிவு செய்து தலாக் செய்யும்போது அதனை இரட்டிப்பாக்கி பெண்ணுக்கு பெற்றுக்கொடுத்தனர். இன்றும் கூட பல இடங்களில் இந்த தடைமுறை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் புதிது புதிதாக தோன்றிய அமைப்புகள் அதிலும் மத தீவிரவாத அமைப்புகள் இது சரியத் சட்டத்திற்கு எதிரானது என்று பெண்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டுகின்றனர்.

தமிழகத்தின் தாலிபான்களாக வளர்ந்துவரும் இசுலாமிய அமைப்புகளின் தலைவர்கள் தங்கள் பிம்பங்காளாக சில பெண்களை தாயாரித்து இதற்கு எதிராக பேசவைக்கின்றனர். இசுலாமியப் பெண்களே இவர்கள் உங்கள் வீட்டு கதவை தட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அதனை புரிந்துகொண்டு உங்களின் உரிமைகளை நிலைநாட்ட இப்பொழுதே செய்லபடத் தொடங்குங்கள்.

Advertisements

2 thoughts on “விவாகரத்து சரியத் சட்டம் அபலைப் பெண்களை பாதுகாக்குமா?

  1. சரியான மொழிபெயர்ப்பை படிக்கவும், உங்கள் சொந்த கருத்துகளை குர் ஆன் வாசகம் என்று போடதிர்கள் …, எடுத்துகாட்டு
    4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

    1. சாஞ்சியப்பா அவர்களே,
      குர்ஆன் வசனம் 4:3ல் இக்கட்டுரைக்கு தேவையான பகுதியைமட்டும் (பிற் பகுதி) எடுத்தாளப்பட்டுள்ளது. அதனைச் சுட்டவே … (புள்ளிகள்) வைக்கப்பட்டு வசனத்தை தொடங்கியுள்ளேன். நீங்கள் சரியான மொழிப்பெயர்பிலிருந்து எழுதியள்ளதிலிருந்து எந்த இடத்தில் இது வேறுபடுகிறது என்று சுட்டிக்காட்டுங்கள். கவனமாக படிக்காமல் சொந்த கற்பனை என்றும் சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்றும் குருட்டாம்போக்கில் கூறவேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s