மனிதனின் ஆரம்பம்

உன்னுடைய ரப்பு வானவர்களை நோக்கி, “நிச்சயமாக நான் பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்.” என்று கூறிய போது….

(குர்ஆன்   2:30)

                அல்லாஹ், மலக்கு(என்ற வானவர்)களிடம் தன் முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன?  இதில் மலக்குகளின் முடிவை அறிவதன் முலம் இரண்டாம் கருத்து தேவை என்ற நிலையே தெரிகிறது.

குர்ஆனின் மூலம் மனிதர்களுடனே உரையாடும் அல்லாஹ், மலக்குகளுடன் உரையாடியதில் புதுமை ஒன்றுமில்லை எனத் தோன்றலாம். ஆனால் இந்த உரையாடலின் தன்மை சற்று வேறுபட்டதே.

“நாங்கள் உன்னுடைய புகழ் கூறி உன்னைத் துதிப்பவர்களாகவும் இருக்கின்ற நிலையில் அதில் குழப்பம் செய்து இரத்தங்களை ஓடச் செய்பவர்களையா நீ அதில் உண்டாக்கப் போகிறாய்?” என்று அவர்கள் கூறினார்கள்…

(குர்ஆன்   2:30)

                தெளிவு பெறும் விதமாக  கேட்கப்பட்டதாக தோன்றும்  இவ்வினா, அல்லாஹ்வின் முடிவிற்கு ஒரு மாற்று கருத்து. இதில் அனைத்து மலக்குகளின் முடிவும் ஒன்றே என்பதும் தெளிவாகிறது.

                மனிதன் தெளிவற்றவன், குழப்பவாதி, போர்க்குணம் கொண்டவன் என்பதே மலக்குகளின் கணிப்பு. மேலும் அல்லாஹ், தன்னுடைய பிரதிநிதியாக மனிதனை (ஒருமை) பூமியில் படைக்க இருப்பதாக மட்டுமே இங்கு தெரிவிக்கிறான். ஓரே தவணையில் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதாக கூறப்படும் ஆன்மாக்களைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை.

      குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பைப்பு, அவனின் திறமை, குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விவரங்களும் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தெரியாது. கடந்த காலங்களில் நிகழ்ந்த போர்களும், அநீதிகளும், படுகொலைகளும், கலவரங்களும் இன்றும் தீவிரமாக தொடர்கிறது. மனிதர்களால் உருவாகும் குழப்பங்களால் இரத்த ஆறு ஒடும் என்ற மலக்குகளின் கூற்று மிக மிகச் சரியானது. அவர்களின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை. வானவர்கள் அறிந்தது அல்லாஹ் தன்னுடைய பிரதிநிதியை  பூமியில் படைக்க இருக்கிறான் என்ற ஒற்றை வரிச் செய்திமட்டுமே!. அல்லாஹ் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?.

“அல்லாஹ்வின் பிரதிநிதி” என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல், மனிதனை அவன் விருப்பத்திற்கு பூமியை ஆட்சி செய்ய அனுமதி வழங்க அல்லாஹ் முடிவு செய்து விட்டான் என வானவர்கள் உணர்ந்தனர். அல்லாஹ்வின் ஆட்சி அல்லாமல் வேறு யாருடைய ஆட்சி எங்கு இருந்தாலும் குழப்பம்தான் ஏற்படும் என குறிப்பால் உணர்ந்து மறுப்பு தெரிவித்தனர் என்பதே மார்க்க அறிஞர்களின் விளக்கம். இவ்விளக்கத்தின் மறைவான உட்கருத்து மலக்குகள் பகுத்தறிவைப் பெற்றவர்கள் என்பதே. ஆனால் மலக்குகள் பகுத்தறிவற்ற படைப்பினம் என்பதே மார்க்க அறிஞர்களின் விளக்கம்.

மலக்குகளிடமிருந்து இப்படியொரு துடுக்குத்தனமான பதிலை அல்லாஹ் எதிர்பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. அவர்களின் இந்த பதில் அவனை எரிச்சலடையச் செய்திருக்க வேண்டும்.

…”நிச்சயமாக நான் நீங்கள் அறியாதவற்றை அறிந்திருக்கிறேன்” என்று அவன் கூறினான்   

(குர்ஆன்   2:30)

இவ்வாறு கூறியதோடு நிற்கவில்லை. மனிதனைப் படைத்து, வானவர்களின் துடுக்குத்தனத்திற்கு சரியான பாடம் புகட்ட விரும்பினான். ஆதமைப் படைத்து, அவருக்கு பெயர்களை அறிவிக்கும் பயிற்சியையும் அளிக்கிறான்.

மேலும் (பொருட்களின்) பெயர்கள் அனைத்தையும் ஆதமுக்கு அவன்கற்றுக் கொடுத்தான்..

(குர்ஆன்   2:31)

ஆதமுக்கு வழங்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகளுக்கு மலக்குகள் அழைக்கப்படவில்லை. அல்லாஹ்வின் இந்த ரகசிய திட்டத்தைப் பற்றி அவர்கள் எதுவும் அறிந்திருக்கவில்லை.

புஹாரி ஹதீஸ் : 7517 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

…பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ள மாட்டார்கள் …

…பிறகு அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.

(குர்ஆன் 2:31)

மலக்குகள் (வானவர்கள்) பகுத்தறிவற்றவர்கள் என்ற விளக்கம்  உண்மையாக இருப்பின், அல்லாஹ்வின் இந்த சவால் அர்த்தமற்றது. இந்தப் போட்டியின் மூலம் மலக்குகளின் கருத்து தவறென்று நிருபிக்க விரும்பியிருக்கலாம் அல்லது படைப்பின் ரகசியத்தைத் தவிர அவர்கள் அறியாத உண்மைகளும் உண்டென்பதை வானவர்களுக்கு உணர்த்த விரும்பி இருக்கலாம். எனவே  மலக்குகளின் மனிதனைப் பற்றிய மாற்றுக் கருத்து அவர்களின் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் காரணமாகவே கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லாஹ்வின்  இந்த போட்டியில் மலக்குகள்  தோல்வியை ஒப்புக் கொள்கின்றனர்.

“…(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை…”

(குர்ஆன்   2:32)

ஆதமின் அறிவு கூர்மையை வானவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம்  மனிதனைப் பற்றிய அவர்களின் (தவறான?) கருத்தை மாற்ற முயற்சிக்கிறான். அல்லாஹ் முன்பே பயிற்சி அளித்த பொருட்களிலிருந்து, ஆதமின் முன் சில பொருட்களைப் காண்பித்து அவற்றின் பெயர்களைக் அறிவிக்கக் கூறுகிறான்.

(அப்பொழுது) ஆதமே! அவற்றின் பெயர்களை இவர்களுக்கு அறிவிப்பீராக என்று கூறினான். (அவ்வாறே) அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவித்த பொழுது, (மலக்குகளை நோக்கி) “நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பதை அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துகிறதையும் மறைத்துக் கொள்கிறதையும் அறிவேன் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா?” என்று அவன் கூறினான்.

(குர்ஆன்   2:33)

அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கை பதிலிலிருந்து, மலக்குகள் (வானவர்கள்) என்ன பதில் கூறுவார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டே மனிதனைப் படைப்பதைப் பற்றிய செய்தியை அவர்களிடம் கூறியிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. ஒருவேளை ஆதம், பொருட்களின் பெயர்களைத் தப்பும் தவறுமாக ஏதாவது உளறியிருந்தாலும் வானவர்களால் அதை அறிந்திருக்க முடியாது. ஏனென்றால், அதைப் பற்றிய எந்தவிதமான அறிவும் தங்களுக்கில்லை என்ற பதிலிருந்து தெரிந்து  கொள்ளலாம். இதன் மூலம் மனிதனைப் பற்றி அல்லாஹ் முன்பே வானவர்களிடம் கூறியிருக்க வேண்டும் என்பதும் அவனால் கற்றுக் கொடுக்கப்பட்டதையே அவர்கள் அல்லாஹ்விடம் கூறியுள்ளார்கள். எனவே வானவர்களின் துடுக்குத்தனமான பதில் அவர்களின் பகுத்தறிவால் கூறப்படவில்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

எனவே, அல்லாஹ் ஒரு கருத்தை வெளியிட்டு, அதற்கொரு மாற்று கருத்ததையும் மலக்குகளின்  மூலமாக வெளியிட்டுக் கொண்டான் என்று கூறலாம். இவ்விடத்தில் மலக்குகள், அல்லாஹ்வால் கற்றுக் கொடுக்கப்பட்டதை  அல்லது அவர்களின் சிந்தனையில் பதிவு செய்யப்பட்டதை  மட்டும் வெளிப்படுத்தும்  ஒருவகை இயந்திரமே (Audio recorder cum player). (இத்தகைய இயந்திரங்களில் எண்ணற்றவைகள் ஸஜ்தாவில் சதா சர்வகாலமும் அல்லாஹ்வை புகழ்ந்து துதித்துக் கொண்டிருப்பதாகவும் மார்க்க அறிஞர்கள் விளக்கமளிக்கின்றனர்)

எனவே, மலக்குகள் என்ற பகுத்தறிவற்ற வழிபடும் இயந்திரங்களின் வாயிலாக  அல்லாஹ், தனக்கு தானே பேசிக் கொண்டான் என்று முடிவு செய்யலாம். எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன் இவ் உரையாடல்கள் நிகழ்ந்தது என்று மனிதனுக்கு தெரியாது. அல்லாஹ் – மலக்குகள்   இவர்களிடையே நிகழ்ந்த இந்த செய்திகளின் பரிமாற்றம்  எவ்வகையில், எதன்மூலம் நிகழ்ந்ததென்பது நமக்கு தற்சமயம் தேவையற்றது.

(மலக்குகளை நோக்கி) “நிச்சயமாக நான் வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பதை அறிவேன்; இன்னும் நீங்கள் வெளிப்படுத்துகிறதையும் மறைத்துக் கொள்கிறதையும் அறிவேன் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா?” என்று அவன் கூறினான்.

(குர்ஆன்   2:33)

வானவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு  அல்லாஹ்வின் இந்த மறுமொழியிலிருந்து. மலக்குகள் மட்டுமல்லாமல் படைப்பினங்களின் அனைத்து வகையான சிந்தனையையும் அல்லாஹ் அறிவான்  என்பதே  இதன் நேரடிப் பொருள். ஆனால் அல்லாஹ், மலக்குகள்  வெளிப்படுத்திய கருத்தை மறுத்த விதமும் இறுதியில் அவர்களுக்கு அளித்த பதிலையும் கூர்ந்து கவனித்தால் மலக்குகள் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலுடையவர்களாகவே தோன்றுகிறது. ஏனென்றால் அல்லாஹ்வால் கற்றுக் கொடுக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் தாங்களாகவே அறிந்து கொள்ளமுடியாத ஒரு படைப்பினத்திடம் இந்த விதமான பதிலைக் கூறுவது அர்த்தமற்றது.

                    உதாரணத்திற்கு, இணைய தளத்தில் பதிவு  செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் பிரமிப்பூட்டுபவைகளாக இருக்கிறது. அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரைப் பார்த்து  இதுதான் உலகின் மிகப்பெரிய அறிவாளி என்று நாம் கூறுவதில்லை. அல்லது அதில் பதிவு செய்யப்படாத தகவலைத் தரவில்லையென்றவுடன் கம்ப்யூட்டரைப் பார்த்து உனக்குத் தெரியாத செய்திகள் எனக்குத் தெரியும் என்று பெருமையடித்துக் கொள்வதுமில்லை. அப்படி ஒருவர் கம்யூட்டரைப் பார்த்து  கூறுகிறார் என்றால், அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அந்த கம்ப்யூட்டர் சுயமாகக் கற்று பகுத்தறிந்து  செயல்படக் கூடியதாக இருக்கலாம்.

                    எனவே, அல்லாஹ் தெளிவானவன் என்று கூறினால், மலக்குகளின் கருத்து அவர்களுடைய பகுத்தறிவால் கூறப்பட்டுள்ளது என உறுதியாக சொல்லலாம். (என்ன…! தலை சுற்றுகிறதா?)

                    மனிதனைப் படைப்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருந்தாலும்,  அல்லாஹ் ஆணையிட்டதும் மலக்குகள் ஆதமுக்கு ஸுஜூது (தலைகுனிந்து [காலில் விழுந்து] வணக்கம்) செய்தனர்.

மலக்குகள் அனைவரும் ஸுஜூது செய்தனர்.

இப்லீஸைத் தவிர; அவன் ஸுஜூது செய்தவர்களுடன் ஆவதை விட்டும் அவன் விலகிக் கொண்டான்.

யார் இந்த இப்லீஸ்?     எங்கிருந்து வந்தான்?    எதற்காக வந்தான்?

தொடரும்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s