தனது விந்தகச் சுரப்பி புற்றுநோயால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு படுக்கையில் கிடக்கும் 88 வயதான தோழர் அப்துல் காதர் எலும்பின் மீது தோல் போர்த்திய உடம்பாக காட்சியளித்தார். காதர் என்றும் டேப் காதர் என்றும் தஞ்சை பகுதி மக்களால் செல்லமாக

தோழர் அப்துல்காதர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு
தோழர் அப்துல்காதர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு

அழைக்கப்பட்ட தோழர் அப்துல்காதர், இலாவணி கச்சேரியில் தமிழகத்தின் தலைசிறந்த பாடகர் என்றால் அது மிகையாகாது. பொதுவுடமைக் கொள்கைக்காக தம்மை அர்பணித்துக்கொண்ட இவர் படுக்கையில் கிடக்கும் நிலையிலும் அவரைப்பற்றிய விபரங்களை கேட்டபோது தனது  கம்பீரமான குரலால் ….

பாடுபட்டு ஒரு பயனும் காணோமே – நீங்கள்

பண்ணும் கொடுமையினால் இப்படியானமே…

என்று பாடத்தொடங்கி தனது வாழ்கையை கூறத் தொடங்கினார்.   1927–ல் கும்பகோணம் மேலக்காவிரி என்ற இடத்தில் மாந்திரீகத் தொழில் செய்த மலையாளியான குஞ்சு முஸிலியார் என்பவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தாவுத்பீவி என்ற அம்மையாருக்கும் மகனாப் பிறந்தார். இவரது அன்னை தனது வாழ்நாள் முழுவதும் நெல்லெடுத்து அவித்து அரிசியாக்கி வியாபரம் செய்து குடும்பத்தை காப்பாற்றியவர்.

            தோழர் அப்துல் காதர் தனது பள்ளிப்படிப்பை தஞ்சையிலுள்ள தனது பாட்டியின் வீட்டில் இருந்து படித்துள்ளார். 5 ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளிப்படிப்பு தொடரவில்லை. வறுமையும் பள்ளிப்படிப்பில் அக்கரை காட்டாத சமூக சூழ்நிலையும் இவரது படிப்பு தொடராததற்கு காரணங்களாக இருந்துள்ளன. பள்ளிப்படிப்பினூடே மதரஸாவிற்கு சென்று குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்ளும்போது நடந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்ந்து“அது மட்டும் நடக்கவில்லை என்றால் நான் ஒரு இசுலாமியக் கல்வி கற்ற ஆலிமாக மாறியிருப்பேன். அது என்வாழ்வில் எதார்த்தமாக நடந்த நிகழ்வு. அப்படி நடந்திருந்தால் கம்யூனிசத்தின் பக்கமும் வந்திருக்க மாட்டேன்; லாவணியும் பாடியிருக்க மாட்டேன்” என்று கூறி அந்நிகழ்வைப்பற்றி கூறினார். இது அவரது வாழ்க்கையில் முதல் திருப்பம்.

            மதரஸாவில் ஒரு குறிப்பிட்ட அளவு (ஐந்தாம் ஜுஸ் வரை) குர்ஆனை ஒதக்கற்ற அவர், பெருள் புரியாமல் வெறுமனே ஓதிச் செல்வதில் விருப்பமற்று “பொருள் புரியாமல் ஓதுவதில் என்ன பயன், பொருளறிந்து ஓதினால் பிறவற்றை ஓதும்போது ஒப்பிடவும், எளிதாக புரிந்துகொள்ளவும் உதவுமே” என்று அவரது ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரது ஆசிரியர் “ அதெல்லாம் குர்ஆனை முழுதாக ஓதிவிட்டு அப்புறம் பெரிய மதரஸாவில் ஓதினால்தான் புரியும். அப்படி எல்லாம் இங்கு நடத்த முடியாது” என்று கூறிவிடவே வெறுமனே ஓதப்பிடிக்காமல் மதக் கல்வியையும் துறந்துவிட்டார். பிறகு அவரது பள்ளிப் பருவம் தேனீர் விடுதிகளிலும், உணவு விடுதிகளிலும் கூலி வேலை செய்பவராக கழிந்துள்ளது. பொதுவாக அந்தக் காலங்களில் படிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் இசுலாமியரிடம் இல்லை. மதக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வியாபாரம் செய்வதுதான் அவர்களது பண்பாடாக இருந்தது. கல்லூரிக்கு சென்று கற்றதும் அரசு வேலைகளில் பணியாற்றும் விருப்பத்தோடு இருந்ததும் ஒரு சில பணக்காரர்கள் மட்டுமே.

            உணவு விடுதி, தேனீர் விடுதி ஆகியவற்றில் கூலி வேலை செய்து சுற்றிய இவர் கும்பகோணம் மேலக்காவிரியில் உள்ள நூல் கயிறு திரிக்கும் கூலியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். உதிரியாக இருந்து ஒரு தொழிலாளர்கள் திரட்சியான வேலை அமைப்பில் ஈடுபட்டது அவரது வழ்க்கையின் இரண்டாவது திருப்புமுனையாக அமைந்துவிட்டது. இவர் வேலையில் சேர்ந்து சில நாட்களில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் தொடங்கியுள்ளது. இப்போராட்டத்திற்கு இந்திய பொதுவுடமை கட்சியின் AITUC தலைவராக இருந்த சோமராவ் அவர்களிடம் கட்சியின் ஆதரவையும் வழிகாட்டுதலையும் வேண்டியுள்ளனர். அவரோ “ சங்கம் கட்டாமல் போராட முடியாது; முதலில் சங்கம் கட்டுங்கள்” என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம். தொழிலாளர்களோ சங்கம் கட்டி போராடுவதெல்லாம் காலம் தாழ்த்தும் என்று தன்னெழுச்சியாக வேலை நிறுத்தத்தை அறிவித்து போராட்டத்தில் இறங்கிவிட்டனர். முதலாளிகளோ அசைந்து கொடுக்கவில்லை. ஆங்கில அரசும் கண்டு கொள்ளவில்லை. போராட்டமும் இரண்டு ஆண்டுகாலம் தொடர்ந்து நடந்துள்ளது. குளம் தூர்வாருதல், குடைரிப்பேர் என்று வேறு வேறு கூலி வேலை செய்துக்கொண்டு தொழிலாளர்களும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இப்போராட்டமும் தொடராக இழுபறியிலே இருந்துள்ளது. இதில் முன்னணியில் நின்றது காதரின் பொதுவுடமை சிந்தனை வளர்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

            அதன் பிறகு ஒருவருடம் கழித்து மாற்று ஏற்பாடாக தொழிலாளர்கள் அனைவரும் பங்குதாரர்காளாக இணைந்து Yarn Rop co – op Socity  என்ற கூட்டுறவு சங்கத்தை தொடங்கி நடத்தியுள்ளனர். இதற்கு வழக்கறிஞர் கல்யாணராமன் தலைவராகவும், வரதன் என்பவர் செயலாளராகவும் செயல்பட்டுள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் வெருப்புற்ற தோழர் காதர் AITUC தலைவர் சோமராவிடம் முறையிட, அவர் “ இந்த சிக்கலில் நீயும் சேர்ந்து உழள வேண்டாம். பேசாமல் கட்சிக்கு வந்துவிடு” என்று அழைப்புவிட, காதரும் இ.பொ.க.வில் தம்மை இணைத்துக்கொண்டு கட்சி வேலைகளில் ஈடுபடலானார். குடும்பச் சூழ்நிலையில் முழுநேர ஊழியராக பணியாற்ற முடியாது என்று பகுதி நேர ஊழியராக வேலைசெய்துள்ளார். அப்பொழுது அவருக்கு 16, 17 வயதிருக்கும் என்று கூறினார். தாமே தகரத்தில் ஒலிபெருக்கி கூம்புக் குழாயை செய்து வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்துள்ளார். எங்கு பிரச்சாரம் செய்வதாக இருந்தாலும் இந்தக் குழாயை பயன்படுத்த தயங்கவதே இல்லை.

18 வயதில் 16 வயதுடைய ராபியத் என்பவரை மணம்புரிந்துள்ளார். கட்சியில் இவர் பணிபுரிவது இவரது துணைவியாருக்கு சற்றும் பிடிக்கவில்லை. ‘பைசா பெறாத கட்சி வேலை ஒருவேலையா’ என்பது அவரது துணைவியாரின் கருத்து. வீட்டிலும் வெளியிலும் போராட்டமாக இவரது குடும்ப வாழ்க்கை கடைசிவரை இருந்துள்ளது.

            கட்சி சார்பாக புகையிலைத் தொழிலாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கவிழாவில் தோழர் காதரின் எழுச்சிகரமான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சங்கம் தொடங்கியதாலும் இவரின் பாடல்களாலும் கோபமடைந்த புகையிலை முதலாளிகள் இ.எஸ். மைதீன் (மைதீன் புகையிலை), கிட்டப்பா அபுபக்கர் (கிட்டப்பா புகையிலை), தங்கவிலாஸ் ரசாக் ஆகியோர் இவரை ஒழித்துக்கட்ட பாப்பு என்ற இசுலாமியரை ஏவி விட்டுள்ளனர். அந்த பாப்பு ஒருநாள் இவரை வழிமறித்து “இது ஹராமான கட்சி; இசுலாமியர்கள் எல்லாம் இதில் இருக்கக் கூடாது; திருந்து” என்று அறிவுரைக் கூறியுள்ளார். “இது உடலோடு ஒட்டிய விஷயம். நீ ஒண்ணும் சொல்லத்தேவையில்லை” என்று காதர் கூறிவிட பாப்பு மீண்டும் மிரட்டிவிட்டு “நான் உன்னை அடித்துப் போட்டுவிட்டு போய்விட்டதாக கூறிக்கொள்” என்று செல்லிவிட்டு போய்விட்டார். பாப்பு என்பவர் இவரின் தாய்மாமன் செ.சேக்தாவூத் என்பவரின் நணபர் என்பதால் மிரட்டுவதுடன் நிறுத்துக்கொண்டார்.

            காதரின் தாய்மாமன் செ.சேக்தாவூத் அந்நாட்களில் லாவணி பாடகரா இருந்துள்ளர். அவர் பாடுவதை கேட்டு கேட்டு காதரும் சிறுவயதில் தகர டப்பாக்களில் தாளம் போட்டுக்கொண்டு பாடும் பழக்கம் உள்ளவராக இருந்ததால் கட்சியில் பாடுவதில் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். தன் இளமைக்காலங்களில் நான்கு கட்டை வரை பாடுவாராம் இவர்.

            பாப்புவின் மிரட்டலுக்குப்பின் முதலாளிகளின் நிர்பந்தத்தால் இவரது பகுதி ஜமாத்தினர் கூடி இவரைக்கூப்பிட்டு “கட்சியைவிட்டு விலகி விடு; இல்லையேல் ஜமாத்தைவிட்டு விலக்கிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். ஜமாத்தை விட்டு விலக்குவோம் என்றால் என்ன அர்த்தம் என்று இவர் கேட்க, “உங்க வீட்டு நல்லது கெட்டதுக்கு வரமாட்டோம். யார் மௌத்தா போனாலும் (இறந்து விட்டாலும்) வரமாட்டோம். கல்யாணம் கச்சேரிகளுக்கு ஜமாத் வராது” என்று கூறியுள்ளனர். அதற்கு இவர் “இப்போ எங்க வீட்டுல கல்யாணம் ஏதும் நடக்கப்போவதில்லை. எனக்கும் கல்யாணமாயிடுச்சி. நடக்கும்போது பார்த்துக்குவோம். செத்தா நீங்க தூக்கிட்டு போகாட்டா நாய் இழுத்துக்கிட்டு போகட்டும் என்று கூறியுள்ளார். மக்கள் நல பணி இவரது உயிர் மூச்சாக இருந்துள்ளது.

            பகுதிப் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடுவது இவரது தலையாய பணியாக மாறிவிட்டது. ஒரு முறை ரேஷன் கடை நடத்துபவரான அந்தப்பகுதி கவுன்சிலர் அப்துல் அஜீஸ் என்பவர் தன்னுடைய தங்கையின் மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என்று கடையை திறக்காமல் இருந்துள்ளார். அது அறியாத மக்கள் வெகு நேரமாக கடையின் முன் காத்திருந்துள்ளனர். இதனை அறிந்த காதர், அப்துல் அஜீஸ் வீட்டுக்குபோய் சண்டையிட்டு கடையை திறக்கவைத்துள்ளார். இன்னொருமுறை இந்த அப்துல் அஜீஸ் சர்க்கரையை பதுக்கி வைத்துக்கொண்டு இரவில் கடைகளுக்கு கள்ளமார்கெட்டில் விற்று வருவதைக்கண்ட தோழர் காதர் ஒருநாள் காலையில் தனது கூம்பு ஒலிபெருக்கி குழாயை எடுத்துக்கொண்டு ஊர்முழுக்க சென்று “இன்று ரேஷனில் 2 வீசை சர்க்கரை போடுகிறார்கள், விரைவாகச் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்” என்று அறிவித்து விட்டு வந்துவிட்டார். மக்களெல்லாம் ரேஷன் கடையில் திரண்டுவிட்டனர். கடைக்கு வந்த அப்துல் அஜீஸ் “சக்கரை எல்லாம் ஒரு பொட்டுகூட இல்லை. யார் உங்களுக்கு சொன்னது” என்று கேட்க ஊர்மக்கள் காதர் சொன்னதாக கூறியுள்ளனர். “அவரிடமே போய் கேளுங்கள்” என்று அப்துல் அஜீஸ் பதில் கூறியுள்ளார். சிலர் தோழர் காதர் வீட்டுக்கு வந்து, அவரிடம் கேட்க, தோழர் காதரும் கடைக்கு வந்து “சர்க்கரை கொடுக்கப் போகிறீர்களா இல்லையா” என்று கேட்க அப்துல் அஜீஸ் இல்லை என்று சாதித்து விட்டாராம். உடனே தோழர் காதர் அஞ்சல் நிலையம் சென்று (அப்பொழுதெல்லாம் அஞ்சல் நிலையத்தில் மட்டும்தான் தொலைபேசி இருந்த நேரம்) அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தகவல் தர அதிகாரிகளும் போலீசுடன் வந்து சோதனையிட்டு 28 மூடை சர்க்கரையை கண்டுபிடித்து மக்களுக்கு வினியோகம் செய்ய வைத்துள்ளனர். அதிலிருந்து போலீஸ் துறையிலும், அதிகாரிகள் மத்தியிலும் காதர் பெயர் பிரபலமாகியுள்ளது. மக்களும் எந்த பிரச்சனையானாலும் காதரை கூப்பிடு, காதரிடம் போ என்று கூற தொடங்கிவிட்டனர். ஊர் வில்க்கம் செய்யப்போன தோழர் காதரை ஊரே நாடும்படியாகிவிட்டது.

            சுதந்திரத்திற்குப் பிறகு 1948-49 களில் கட்சி அடக்குமுறைக்குள்ளாகி தலைவர்கள் கைதாகியும், தலைமறைவாகியும் வாழ்ந்த நேரம். இவர் ஐஸ் வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார். ஃபிளாஸ்கில் ஐஸ்ஸை வைத்து தூக்கிக்கொண்டு கிராமங்களில் விற்றுவந்துள்ளார்.  பழைய இரும்பு பேரீத்தம்பழம்  விற்று வந்த தோழர் ஈரோடு திருமூர்த்தி என்பவருடன் இணைந்து கிராமல்களில் வியாபரம் செய்துவந்த நேரங்களில் தலைமறைவாக இருந்த தோழர்களுக்கான செய்திகளை எடுத்துச்செல்லும் பணியை செய்துவந்துள்ளனர். தோழர் ஈரோடு திருமூர்தி என்பவர் ஒரு பாடல் மற்றும் மேடைநாடகக் கலைஞர். தோழர் திருமூர்த்திதான் எனது சித்தாந்த குரு என்றும் அவர் கொடுத்த பாடல் தொகுப்புத்தான் எனது பாடல்கள் என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இந்நாட்களில் போலீஸ் தோழர் அப்துல் காதரை பிடித்தால் தலைமறாவாக உள்ளவர்களை பிடிக்கலாம் என்று அவரைத் தேடத்துவங்கியதும் தோழர் அப்துல் காதரும் மும்பைக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

மும்பை சென்று அங்குள்ள தமிழர்களான 6 பேர் கொண்ட வியாபாரக் குழுவிற்கு சமைத்துப் போடும் வேலை செய்துவந்துள்ளார். அங்கும் பொதுவுடமை கட்சியினர் ஏதாவது போராட்டங்கள் செய்தால் கலந்து கொண்டுள்ளார். ஒருமுறை இந்தோனேஷியா மீது டச்சுகாரன் ஆக்கிரமித்ததைக் கண்டித்து போராட்டம் நடந்துள்ளது. போராட்டக்காரர்கள் ஊர்வலமாக துறைமுகம் சென்று டச்சு கப்பலில் வேலை செய்த இந்தியர்களை வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைத்துள்ளனர், அவர்களும் கப்பலில் இருந்து இறங்கி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் தோழர் காதர் பங்கெடுத்துள்ளார். அந்நாளில் மும்பையில் ஒவ்வொரு வெற்றிலை பாக்கு கடைக்காரர்களும் மூன்று நான்கு தொழிலாளிகளை வைத்துக்கொண்டு பீடி சுற்றி விற்பது வழக்கமாம். அத்தொழிலாளிகள் ஊதிய உயர்வு கேட்டு கடைவாசலில் போராடினால் அவர்களுடன் இணைந்துகொண்டு இவரும் குரல் கொடுப்பதுண்டாம். எங்கு இருந்தாலும் அவருக்கு தனது தொழிலாளி வர்க்கத்தின் மேல் தணியாத பற்று இருந்துவந்துள்ளதற்கு இது ஒரு சான்று.

            ஏறக்குறைய ஒருவருடம் கழித்து ஊருக்கு திரும்பிய இவர் ஐஸ் வியாபாரத்தை தொடர்ந்துள்ளார். அப்பொழுது ஒரு கடையில் கட்சிப் பத்திரிக்கை ஜனசக்தி போடப்படுவதை அறிந்து பத்திரிக்கையை போட்டவுடன் 5 பத்திரிக்கையை வாங்கிக்கொண்டு விற்பனைக்கு போகும் 5 கிராமங்களில் சில ஆதரவு உள்ள முக்கியமான இடங்களில் போட்டுவந்துள்ளார். பத்திரிக்கை கொடுப்பதுடன் விவாதங்களும் நடத்தியுள்ளார். அதிலும் நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள தோழர்கள் “வியாபாரம் கெட்டுவிடப்போகுது; பத்திரிக்கையை மட்டும் கொடுத்துவிட்டு போங்கள்’ என்று கூறியுள்ளனர்.

அப்பொழுது கட்சிக்கான கட்டிடமும் இல்லை. யார் யார் கட்சியில் இருக்கிறார்கள் என்ற விவரமும் அவருக்கு தெரியவில்லை. கடையில்

தோழர் அப்துல்காதர் கட்சிப்பணியில்
தோழர் அப்துல்காதர் கட்சிப்பணியில்

பத்திரிக்கை போடும் பணியை தோழர் எம்.எல்.கணபதி என்பவர் செய்து வந்துள்ளார். அவருக்கு யார் 5 பத்திரிக்கையை வாங்குவது என்று தெரியாமல் கடைக்காரிடம் கேட்க அவரும் “அவர் பற்றி விவரம் தெரியாது; பத்திரிக்கை போட்டுவிட்டு இருங்கள். அப்பொழுது தெரிந்துகொள்ளலாம்” என்று கூறியுள்ளார். அவரும் அவ்வாறே காத்திருந்து தோழர் காதரை சந்திக்க மீண்டும் தோழர் காதருக்கு கட்சி தொடர்பு ஏற்படுகிறது.

1952  தேர்தல் வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் தோழர் காதரின் குழாய் ஓங்கி ஒலிக்கிறது. நீடாமங்கலம் தொகுதியில் கட்சி சார்பாக நிற்கும் தோழர் வெங்கடேச சோழகருக்கும் தஞ்சை தொகுதியில் பூதலூர் ஸ்டேசன் மாஸ்டராக இருந்து கட்சி தொடர்பால் வேலை நீக்கம் செய்யப்பட்ட தோழர் எல்.இராமலிங்கம் என்பவருக்கும், பிரச்சாரமும் நிதிவசூலும் செய்து கொடுக்கிறார். அப்பொழுதே சாதி அரசியல் இருந்தது என்று நினைவு கூறும் தோழர் காதர் தஞ்சையில் காங்கிரஸ் சாமிநாதன் என்ற கள்ளர் சாதிகாரரை நிறுத்தியதால் இ.பொ.க. பூதலூர் தோழர் எல்.இராமலிங்கம் என்ற கள்ளர் சாதிக்காரரை நிறுத்தியது என்று கூறினார். பாராளுமன்றத்திற்கு இ.பொ.க. எவரையும் தஞ்சையில் நிறுத்தவில்லை. காங்கிரஸில் ஆர்.வெங்கட்ராமனும் (முன்னால் குடியரசுத் தலைவர்)  அவரை எதிர்த்து மாவூர் சர்.ஆர்.எஸ்.சர்மா என்ற பார்பன ஜமீன்தார் சுயேட்சையாகவும் போட்டியிட்டுள்ளனர்.

தோழர் காதரின் குழாய் பிரச்சாரம் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது. அவரின் பிரச்சாரத்தைக் கேட்ட சர்மா, தோழர் காதருக்கு ஒரு பெரும் தொகையை தருவதாகக் கூறி தமக்காக பிரச்சாரம் செய்ய அழைத்துள்ளார். அப்பொழுது தோழர் காதரின் நிலையோ தொழில் எதும் இல்லை. கட்சியும் ஏதும் செய்யமுடியாத நிலை. 8 மாத வீட்டு வாடகை பாக்கி. குடும்பச் செலவுக்கு எதும் கொடுக்கமுடியாத நிலை. மூத்த மகன் கல்லூரிக்குச் செல்ல பேரூந்து கட்டணத்திற்கு காசில்லாமல் கல்லூரிக்கு செல்லவில்லை. இந்நிலையில் நீடாமங்கலம் வேட்பாளர் தோழர் வெங்கடேச சோழகர் 20 ரூபாய் கொடுத்தது மட்டுமே கையில் இருந்துள்ளது. அது 15 நாள் குடும்பச்செலவுக்கு மட்டுமே உதவும். தேர்தல் வேலையால் தொழிலுக்கும் போகமுடியவில்லை. ஆனால் பொதுவுடமையின் மேல் கொண்ட பற்றால் சர்மாவின் இலட்ச ரூபாயை துச்சமென மதித்து ஒதுக்கி தள்ளிவிட்டார்.

அந்த தேர்தலில் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்று தந்தை பெரியாரும் சர்மாவுக்கே ஆதரவு அளித்துள்ளார். வெற்றி வாய்ப்பும் சர்மாவுக்கே என்ற நிலையில் சர்மா பத்தர் சாதிக்காரர்களை அவர்கள் தொழில் குறித்து இழிவாகப் பேசிதால் விஸ்வகர்மாக்கள் அனைவரும் வெங்கட்ராமனுக்கு வாக்களிக்க காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சட்டசபைக்கு தோழர் வெங்கடேச சோழகரும், தோழர் பூதலூர் இராமலிங்கமும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் வெற்றியில் தோழர் காதரின் பிச்சாரம் பெரும்பங்காற்றியுள்ளது என்பது மறுக்க முடியாதது.

தேர்தலுக்குப் பிறகு  நடந்த கட்சி மாவட்டக்குழுவில் “ரஷ்யப் புரட்சிக்கு மர்க்ஸிம் கார்க்கி போன்ற கலைஞர்களின் பங்கும் பிரதானமானது என்று கூறுகிறீர்கள். ஆனால் நமக்கு கலைக்குழு அமைப்பதைப் பற்றி விவாதிக்கவே இல்லையே” என்றுகேள்வி எழுப்பியுள்ளார். அது விவாதிக்கப்பட்டு கலைக்குழு கட்டும் பணி தோழர் காதரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

1957 –ல் தஞ்சையில் உள்ள தியாகி சிவராமன் நாடகக் குழுவுடன் இணைந்து பயிற்சி எடுத்துள்ளார். அர்களுடன் இணைந்து அண்ணன் மகன், யார் செயல், இந்திரஜித் போன்ற சமூக நாடகங்களிலும் கட்சி மேடைகளில் காணி நிலம், யாருக்கு இந்த உலகம், சொர்க்கத்தில் காந்தி போன்ற நாடகங்களிலும் நடித்துள்ளார். அப்பொழுது லாவணி பாடுவதில் ஆர்வம் ஏற்பட கல்யாணி என்ற வாத்தியாரிடம் பயிற்சி பெற்று தஞ்சாவூர் குஜிலி மார்க்கெட்டில் ( பழைய இரும்பு சந்தை) அரங்கேற்றம் செய்துள்ளார். அது முதல் மன்மதனை எரித்த புராணக்கதையில் இவர் எரியாத கட்சி ( மன்மதனை எரிக்கவில்லைkader 2 என்ற நிலைப்பாடு) சார்பாக லாவணி பாடுவதில் புகழ் பெற்றவராக திகழ்ந்துள்ளார். எரிந்த கட்சி என்பதனை காமன் தகனக கட்சி என்றும் எரியாத கட்சி என்பதானை காமன் தகன கண்டனக் கட்சி என்றும் அழைப்பார்களாம். எரிந்த கட்சி காரர்களாக அந்நாளில் புகழ் பெற்ற கடுவழி மாணிக்கம், குளிச்சம்பட்டு இராமசாமி, மெட்ராஸ் எல்லம்மா, புதுக்கோட்டை கனகாம் புஜம், சீரங்கம் மனோன்மணி, சென்னை ஏகவல்லி போன்றோருடன் பல மேடைகளில் பாடியுள்ளார். ஒரு முஸ்லிமாகப் பிறந்து மன்மதப் புராணம், கந்தபுராணம், சிவபுராணம், விஷ்ணுபிராணம், சிவ்வாக்கியர் முதலான சித்தரகளின் பாடல்கள் போன்றவைகளை நன்கு கற்று கச்சேரிகளில் பாடியது இவருக்குள்ள தனிச் சிறப்பாகும். அது மட்டுமில்லை, வெரும் பாடல்காளாக இல்லாமல் அதற்கான விரிவான விளக்க உரைகளையும் சொல்லி பாடுவது இவர் வழக்கமாம். அதனால் என்றுமே மக்களிடம் எரியாத கட்சிக்கே ஆதரவு இருந்துள்ளது. இக்காலக்கட்டங்களில் கட்சியின் கிளைச் செயலாளராகவும் பிறகு நகரச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

1969-ல் நடந்த ஜமீலா வழக்கில் இவரது பணி இன்றியமையாதது. சிவப்பு நாயக்கன்வாரியில் குடியிருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த ஜமீலா என்ற இசுலாமியப் பெண், ஆம்னி பஸ் ஓட்டுனராக வேலை செய்த தன் கணவரைத் தேடி பேரூந்து நிலையம் வந்த போது ‘சந்தேக கேஸில்’ பிடித்துக்கொண்டு போன போலீஸ் கற்பழித்து கொலையும் செய்துள்ளது. பிறகு வாய்வழியாக விஷத்தை ஊற்றிவிட்டு, சாராய வியாபாரி, விபச்சாரி என்றும் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் வழக்கை ஜோடித்துள்ளது. இதனை எதிர்த்து நீதி விசாரனைக்கேட்டு பல முறை ஆர்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். எந்த நடவடிக்கையும் இல்லாததால் பேரணி ஒன்றிற்கும் பொதுக்கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். போலீஸ் அதனை நடக்க விடாமல் தடுக்க போலீஸ் கும்பலை இறக்கி விட்டு பயபீதி ஏற்படுத்த முயற்சித்துள்ளது. பேரணியில் கலக்காமல் மக்கள் பயத்து சாலை ஓரங்களில் ஒதுங்கி நின்று கொண்டிருந்துள்ளனர். பேரணி நடத்தவிடாமல் தலைவர்களை சுற்றி போலீஸ் நின்று கொண்டு மிரட்ட தோழர் காதர் அவர்களிடம் நீண்ட வாக்குவாதம் செய்து சாலை ஒரங்களில் நிற்கச் செய்துவிட்டு மக்களின் பயத்தை போக்கி பேரணியில் கலந்து கொள்ளச் செய்து வெற்றிகரமாக பேரணியையும் அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தையும் நடத்தியுள்ளார். அதனடிப்படையில் அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்கடர் மற்றும் போலீஸ்காரர்கள் உட்பட 12 பேரை தற்காலிய பணிநீக்கம் செய்தது. இச்சம்பவம் இவரின் அஞ்சாமைக்கும், மன உறுதிக்கும் ஒரு சான்றாகும். இதன் பிறகு இவரை போலீஸ் ‘anti police group leader ‘  என்று முத்திரை குத்தியுள்ளனர்.

இக்காலக்கட்டங்களில் ஒருநண்பர் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்து ஏமாற்றப்பட்ட நிலையில் தோழர் காதருக்கு இந்தி தெரியும் என்பதாலும் மும்பையில் இருந்த அனுபவம் உள்ளதாலும் துணைக்கு அழைத்துள்ளார். இவரின் துணையுடன் வெளிநாடு செல்வதற்கான அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு வெளிநாடு சென்ற அவர், பிறறிடமும் தோழர் காதரின் உதவியை நாடும்படி கூறியுள்ளார். இது தோழர் காதரை வெளிநாட்டிற்று ஆள் அனுப்பும் தொழிலுக்கும் மாற்றிவிட்டது. தனது மகன்கள் இருவரையும்கூட வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர்களின் வருமானத்தில் மனைவி பெயரில் ஒரு சொந்த வீடுகட்டியும் குடியேறியுள்ளார். மும்பையில் இருக்கும்போது பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றும் ஏஜட்களை பற்றி AITUC சங்க தலைவர்களிடம் முறையிட்டு விசாரித்து உரியவர்களுக்கு இழந்த தொகைகளை மீட்டுக்கொடுத்துவந்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ் கட்சியிலிருந்து (சிபிஐ) இந்தியக் கம்யூனிஸ் கட்சி (மார்க்ஸிட்) (சிபிஎம்) பிரிந்த காலங்களில் கீழத்தஞ்சையில் சிபிஎம் கட்சி செயல்பட்டாலும் மேலத்தஞ்சையில் கட்சியில் எவரும் இல்லாத நிலையில் தோழர்கள் பூதலூர் தியாகி வெங்கடாச்சலம், கணபதி, கணேஷன், மன்னர் மன்னன், மணியரசன், அறிவுருவோன் ஆகியோர்ளுடன் கட்சிக்குழு கட்டி கடுமையாக கட்சிப்பணி செய்து வந்துள்ளனர். இப்பணியிலும் தோழர் காதரின் பங்கு அளப்பறியது.

காலப்போக்கில் இவருக்கு கடன் சுமை ஏறியுள்ளது.ஒரு திமுக பிரமுகரிடம் 10,000 ரூகாய் கடன் பெற்று அந்தக்கடனை அடைக்க தன் மனைவி மக்கள் உதவி செய்ய மறுத்துவிட்டனர். கடன் பெற்ற நெஞ்சம் கலங்கியதால் தஞ்சையை விட்டு தன் தம்பி வசிக்கும் இராஜஸ்தானிக்கு சென்று அங்கு 15 ஆண்டு காலம் வசித்து வந்துள்ளார். தம்பியின் நடைபாதை உணவு வியாபரத்திற்கு துணை செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

பிறகு தஞ்சைக்கு திரும்பியுள்ளார். முதுமை அடைந்த இவரை இவரது பிள்ளகளும், பிள்ளைகளின் மனைவிமார்களும் (மருமகள்களும்) ஆதரிக்க மறுத்துள்ளனர். அதனால் கட்சியை அனுகியுள்ளார். கட்சி அலுவலகத்தில் தங்கிக் கொள்ள மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன் ஏற்பாடு செய்துகொடுத்து உதவியுள்ளார். ஆனாலும் கட்சியில் உள்ள பிறருக்கு இவரின் மீது அக்கரை ஏற்படவில்லை. முதுமையால் தனியாக தங்க முடியாத நிலை, கட்சிக்காரர்களின் புறக்கணிப்பு ஆகிவற்றால் அங்கிருந்து வெளியேறி அன்னை வேளாங்கன்னி பெண்கள் விடுதி என்ற பெண்கள் விடுதியில் சமையல் உதவியாளராக பணி செய்து கொண்டு 4 ஆண்டுகளை கடத்தியுள்ளார்.

உடல் நிலையும் மோசமடைய திக்கு தெரியாமல்kader 6 விழித்துக்கொண்டிருந்த இவரை தஞ்சை ம.க.இ.க. தோழர்கள் அழைத்து வந்து மருத்துவ உதவி உட்பட பராமரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மகஇக-வின் மேடைகளிலும், ஆர்பாட்டங்களிலும் உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராமல் உற்சாகமாக பாடிவருகிறார். 2012 மேதின போராட்டம் திருச்சியில் மகஇக நடத்தியது. அச்சமயம் தோழர் அப்துல் காதர் காய்ச்சல் கண்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவ்விழாவிற்கு அவர் வர வேண்டாம் என கூறிவிட்டு பிற தோழர்கள் சென்றுள்ளனர். ஆனால் இவருக்கு இருப்புக்கொள்ளாமல் தனியாக பேரூந்தேறி திருச்சி சென்று அப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அவர் வந்துள்ளதை அறிந்த தோழர்கள் அவரை மேடை ஏறி பாடச் செய்துள்ளனர். இவரின் வர்க்கப் பாசமும், மன உறுதியும் நமக்கு ஓர் வழிகாட்டல் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. தங்களின் ஏழ்மை நிலையிலும் இன்று படுக்கையில் கிடக்கும் ஒருவரை அனைந்து உதவிகளையும் செய்து அன்புடன் பராமரித்து வரும் தோழர்களின் வர்க்க உணர்வும் அளப்பரிது.

இவரின் லாவணி பாடும் சிறப்பறிந்து பாண்டிச்சேரி வானொலி நிலையமும், கலைஞர் டிவியும் இவரது கச்சேரியை ஒளிபரப்பியுள்ளன. தஞ்சை பல்கலைக்கழகம் நடத்தும் வானொலி ஒலிபரப்பிலும் இவர் பாடியிள்ளார். தேன்கூடு என்ற திரைப்படத்திலும் காமன் கூத்து பாடல் காட்சி ஒன்றில் இவர் நடித்துள்ளார். அழிந்து வரும் இக்கலையை தமிழ் கூடம் என்ற அமைப்பு இவரின் கச்சேரியை மையமாக வைத்து ‘லாவணி’ என்ற ஒரு ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். வல்லம் கட்டிடத் தொழிலாளர் சங்கம்,ஆண்டு ஆண்டு தொடர்ந்து நடத்தும் சித்திரை திருவிழாவை கோவில் கட்டும் பணிக் காரணம் கொண்டு அடுத்த ஆண்டு நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்த நிலையில் இவரின் உடல் நிலையைப் பார்த்து இந்த ஆண்டே இவரின் லாவணிக்க கச்சேரியை மட்டுமாவது நடத்திவிடுவது என்று லாவணிக்கச்சேரி விழாவை நடத்தி தோழர் அப்துல் காதரை சிறப்பித்துள்ளனர்.

kader 10

தமிழக கலை பண்பாட்டுத்துறை இக்கலையை ஆதரித்து கலையர்களுக்கு ‘கலை முதுமணி’ என்ற விருது கொடுத்து மாதமாதம் உதவித் தொகையாக ரூ1000/= கொடுத்துவருகிறது. அது இவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் தென்னக கலை பண்பாட்டு மையம் (South Zone)  என்ற அமைப்பு முற்றிலும் இக்கலையை புறக்கணித்து வருகிறது. அதற்கு இக்கலையில் தர்க்க கூறுகள் உள்ளடங்கி இருப்பத்தும் நாத்திக தன்மையும் உள்ளதும் ஒரு காரணம் என்று தோழர் காதர் கூறுகிறார். மத்திய அரசும் ஆதாரிக்காவிடில் இக்கலை அரிகிவிடும் என்றும் அவர் கூறுகிறார். அதனால் மத்திய அரசு எந்தப்பாகுபாடுமின்றி இக்கலையையும் வளர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது தோழர் அப்துல் காதரின் வேண்டுகோளாக உள்ளது.

இவருக்கு 4 ஆண்மக்களும் 1 மகளும் உள்ளனர். தஞ்சையிலேயே வாழும் இவர்கள் ஓரளவு வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வந்தாலும் தம்முடன் நோய்வாய் பட்டு தளர்ந்துள்ள தமது தந்தையை வைத்துக்கொண்டு பராமரிக்க மறுத்துவிட்டனர். தாயார் ஒரு வீட்டு வேலைகாரியாக  இருந்துவருவதால் அவரை மட்டும் உடன் வைத்துக்கொண்டுள்ளனர். தமிழ் பண்பாட்டுக்கழகம் மாத மாதம் தரும் உதவித்தொகை ரூ1000 மட்டுமே இவரது வாழ்க்கைக்கான ஆதரவாக உள்ளது. ஒரு பொதுஉடமை கலைஞனின் இன்றைய நிலையை பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன. மகஇக தோழர்கள் மட்டும் இல்லை என்றால் இவரின் நிலையை நினைத்துப்பார்கவே முடியவில்லை. அதை நினைக்கும்போது தான், தான்மட்டும், தன் சுகம் என்ற பண்பாட்டினை வளர்த்துள்ள முதாலாளித்துவ சமூகத்தின் மீது கோபம்தான் வருகிறது.

சாகித்

Advertisements

2 thoughts on “ஒரு பொதுவுடமைக் கலைஞனின் வாழ்க்கைத் தடம்

  1. நல்ல நாள்,

    நான் ஒரு பதிவு தனியார் பணம் கடன் இருக்கிறேன். நாம் உலகின் எந்த பகுதியில் 30 ஆண்டுகளுக்கு திருப்பி கால காலம் ஒரு வருடத்திற்குள் 3% ஆக குறைந்த மிக குறைந்தபட்ச வருடாந்திர வட்டி விகிதங்கள் உலகெங்கிலும் தமது நிதி நிலையை மேம்படுத்த வேண்டும் மக்கள், நிறுவனங்கள், உதவ கடன் கொடுக்க. நாம் 100,000,000 யூரோ வரை 5,000 யூரோ எல்லைக்குள் கடன் கொடுக்க. நமது கடன்கள், நன்றாக காப்பீடு அதிகபட்ச பாதுகாப்பு எங்கள் priority.Interested நபர் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று: (calvinkingloanfirm@gmail.com)

    கடன் வழங்குகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s