தொடர் பகுதி – 3


முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள் இத்தீவைப்பு வழக்கு சம்பந்தமான ஒவ்வொரு அம்சத்தையும் அக்கறையோடு கவனித்தார்கள் இதன் விளைவாக ஐரோப்பிய புரட்சிகர உழைப்பாளி மக்களால் பாரிசில் ஒரு சர்வதேச விசாரணைக் கமிஷனை, உருவாக்கினர். அவர்கள் பல்வேறு வழிகளில் பத்திரிகைகளுக்கு கிடைக்கின்ற எல்லா தடயங்களையும் சேகரித்து ஆராய்ந்தார்கள். சில முற்போக்குவாதிகளால் லண்டனில் ”பழுப்பு நூல்” என்ற நூலை வெளியிட்டனர். இந்நூல் ஹிட்லர், கோயரிங் முகமூடியை கிழித்தெறிந்தது.

அது ஜெர்மானிய பாசிஸ்டுகளின் பயங்கரத் தன்மையையும் சர்வாதிகாரப் போக்கையும் விவரித்தது.

டிமிட்ரொவ் மற்றும் சில கம்யூனிஸ்டுகளின் மீது சாட்டப்பட்ட கீழ்த்தரமான குற்றச்சாட்டை எதிர்த்து ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பு இயக்கம் நடத்தினார்கள்.

 ஆனால் இவைகளைப் பற்றி ஏதும் அறியாவன்னம் டிமிட்ரொவ் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு ஆறு மாதத்திற்குப் பிறகே வழக்கு நடக்க ஆரம்பித்தது. விசாரணை நீதிமன்றத்தை ஆட்சேபித்தும், நீதிமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்தும், புகழ்மிக்க ரொமெய்ன் ரோலந்த், பர்பூஸ், வி. கொலரோவ் ஆகியோருக்கும் தாய்க்கும், சகோதரிக்கும் கடிதங்கள் எழுதியதோடு மட்டுமின்றி ஒவ்வொன்றிற்கும் நகலெடுத்து பாதுகாத்துக்கொண்டார். அவருக்கு ஒருமாதம் வரையிலும் அவரது கண்ணாடி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக கண் எரிச்சலும் தலைவலியும் உள்ளதென்று தனது நாட்குறிப்பில் அவர் குறிப்பிட்டு இருந்தார். நீண்ட போராட்ட்த்திற்குப் பின்பே நாஜி நாளிதழ்களை அவருக்கு கொடுக்கலாமென்று நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் திருப்பியளிக்கப்படவில்லை.

 அவரது குறிப்புகளின்படி இந்த வழக்கினை தயாரிப்பதில் இருந்த முக்கியமான அம்சம், நாடு முழுதும் ஏற்படுத்தப்பட்டிருந்த மிகப் பயங்கர குலைநடுங்க வைக்கும் பயமுறுத்தல்களாகும். ரைஷ்ஸ்டாக் தீ வைப்பிற்குப் பின் ஜெர்மனியில் 1933 ஆம் ஆண்டின் மிகவும் கொடூரமான மார்ச் மாதம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பாட்டாளிவர்க்க போராட்ட வீரர்களை சித்திரவதை செய்வதும், கொலை செய்வதும் ஜெர்மனி முழுவதும் நடைபெற்றது. யூதர்களை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குகின்ற நடைமுறையும் துவங்கியது. விஞ்ஞானத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிரான காட்டுமிராண்டித்தனமான பிரச்சாரம் நடத்தப்பட்டது.

“வழக்கை தொடங்க எப்போதுமில்லாத வகையில் காலதாமதம் செய்வதன் மூலம், விசாரணையின்போதே அமைச்சகம் நேரடியாகத் தலையிடுவதன் மூலம், ஆச்சரியத்திற்குரிய பயங்கரமான சில விஷயங்களை வழக்கிற்குள் கொண்டு வருவதன் மூலம், ஐரோப்பா முழுவதையும் பாதிக்கின்ற சில சதிகளைப் பற்றிய ஆடம்பரமான அறிவிப்புகளின் மூலம், கைதிகளைக் கீழ்த்தரமாக நடத்துவதன் மூலம், இந்த வழக்கானது மிகப் பிரம்மாண்டமாக வடிவெடுத்தது. மேலும் இந்த வழக்கானது, ஐரோப்பிய பத்திரிக்கைகளின் கவனத்தை மட்டுமின்றி, மக்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், பெருமளவுக்குச் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. வெளிப்பார்வைக்காவது தென்படுகிற வகையில் சில ஆதாரங்களை முன்வைக்க வேண்டிய நிலைமைக்கு பிரஷ்ய ஆரசாங்கம் ஆளாயிற்று. அதுபோலவே, வெளித்தோற்றத்திற்காவது, நீதிபதிகளும் ஆதாரங்களை கேட்க வேண்டியதாயிற்று. இந்த நீதிபதிகள் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. அரசாங்கமானது, தனது முதல் தவறை மறைப்பதற்காக மற்றொரு தவறை செய்ய வேண்டியதாயிற்று. ஆரம்ப விசாரணையின் போது விசாரணை அதிகாரியாயிருந்த போலீஸ் அதிகாரி, நீதிமன்ற விசாரணையின்போது ஒரு சாட்சியாக வரவேண்டியதாயிற்று. சாதாரண வழக்கறிஞருடன் மற்றொரு வழக்கறிஞரையும் நியமிக்க வேண்டியதாயிற்று. குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டி தங்களது செயல் திறன் அனைத்தையும் காட்டி புதிய புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்க ஒரு மூன்றாவது சக்தியாக அரசாங்கமும் இந்த வழக்கில் தலையிட வேண்டியதாயிற்று. எனினும் தங்களது உண்மையின் வெற்றுத் தன்மையைக் கண்டு அவர்கள் பெருமூச்சு விட வேண்டியதாயிற்று. நீதிபதியும், அரசு வழக்கறிஞரும், பாராட்டத்தக்க பணிவுடன், தங்கள் பணிகளை (சாட்சியும், ஆலோசகரும், போலீஸ் அதிகாரியுமான) ஸ்டீபரிடம் ஒப்படைத்துவிட்டு, அடிக்கடி அவரின் முதுகுக்குப் பின்னே ஒளிந்து கொண்டனர்.”

 இந்த வரிகள் ரைஷ்ஸ்டாக் விசாரணையைப் பற்றிய குறிப்புகள் என்று நீங்கள் கருதலாம். இவை உண்மையில் பாட்டாளி வர்க்கத்தின் ஆசானான காரல்மார்க்ஸின் வரிகள். 1852 கொலோன் கம்யூனிஸ்டு வழக்கினைப் பற்றி அவர் எழுதிய குறிப்புகள் இவை.

 கொலோன் வழக்கு நடந்து 81 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த உலகமானது முற்றும் முழுதாக மாறிவிட்டது. கம்யூனிசம் ஒரு மகத்தான சக்தியாக மாறிவிட்டது. உலகத்தின் பரப்பளவில் ஆறில் ஒரு பகுதியில், சோவியத் யூனியனில், உழைப்பாளி மக்கள் கம்யூனிஸ்டுகளது தலைமையில் தங்களது மகத்தான சோஷலிசப் புரட்சியை நிகழ்த்திவிட்டனர். மனிதன் மனிதனைச் சுரண்டுவதை தடுத்தி நிறுத்தி ஒரு சோஷலிச சமூகத்தை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள். மற்ற நாடுகளிலுள்ள தொழிலாளிகள், சோஷலிசம், கம்யூனிசம் என்ற கொடியின் கீழ் முதலாளித்துவத்தை ஒரே அடியாக நசுக்குவதற்கு அணிதிரண்டு வருகிறார்கள். இருப்பினும் ஜெர்மன் பாசிஸ்டுகள் ஒப்புவமையில்லாத முட்டாள் தனத்தோடு, மார்க்ஸ் 81 ஆண்டுகளுக்கு முன் சுக்கு நூறாக கிழித்தெறிந்த அதே குற்றச்சாட்டுகளை, சூழ்ச்சி செய்ததாகவும், சதி செய்ததாகவும், கொலை செய்ததாகவும், சுரங்கங்களைத் தோண்டுவதாகவும் திரும்பவும் ஒப்பிக்கிறார்கள். முதலாளி வர்க்கம் தனது சாகும் தருவாயில் தனது மூளையைக் கூட இழந்து நிற்கிறது.

 இந்தப் பழமை பித்து பிடித்த கீழ்த்தரமன முதலாளிகளுக்கு ஒரு சவாலாக கம்யூனிசம் விளங்குகிறது. என்ற உண்மையை ஒரு கம்யூனிஸ்டான டிமிட்ரொவ் வெளிப்படுத்தியபோது, முதலாளிகளுக்கு இந்த உண்மை மிகப் பயங்கரமானதாகத் தென்பட்டது. அதனால்தான், வழக்கில் ஈடுபடுத்தப்பட்டு வர்க்க எதிரியின் நீதிமன்றங்களில் நிறுத்தப்படும்போது நீதிமன்றத் த்லைவரின் முதல் கேள்விக்கு பதிலளிக்கும்போதே ”நானொரு சமூக-ஜனநாயகவாதி. அப்படியென்றால் என்ன என்பதை எனது உரையில் உங்களுக்கு நான் விளக்குகிறேன்” என்று கூறிவிடும்படி லெனின் கம்யூனிஸ்டுகளுக்கு போதித்தார்.

 லீப்சிக் நீதிமன்றத்தில் கம்யூனிஸ்டு தத்துவத்தின் கொள்கைகளை உலக முழுவதிற்கும் முன்பாக டிமிட்ரொவ் முன் வைத்தார். முதல் விசாரனையின் போது அவர் அறிவித்தார்.

நான் ஒரு போல்ஷ்விக். பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காரன். என்பது உண்மையே. நான் பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், கம்யூனிஸ்டு அகிலத்தின் செயற்குழு உறுப்பினரும் ஆவேன். நான் ஒரு முக்கியமான ஊழியனும், தலைவனும் ஆவேன். ஆனால் இதன் அடிப்படையில் நான் ஒரு பயங்கரவாதியோ, அராஜகவாதியோ, திடீர் புரட்சிக்கோ அல்லது தீவைப்பதற்கோ சதி செய்பவனல்ல.

நான் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிரமான ஆதரவாளன், ரசிகன் என்பதும் உண்மையே. ஏனெனில் இந்த கட்சி உலகத்தின் மிகப் பெரிய நாட்டை ஆளுகிறது. உலகின் ஆறில் ஒரு பகுதியில் சோஷலிசத்தை வெற்றிகரமாக கட்டி வருகிறது. இதே நீதிமன்றத்தில் மார்க்ஸின் மகத்தான வாக்கியங்களை டிமிட்ரொவ் நினைவூட்டினார்.

 “அவர்கள் (கம்யூனிஸ்டுகள்) இப்போதுள்ள சமுதாய அமைப்பு முழுவதையும் பலவந்தமாக அழிப்பதன் மூலமே தங்களது லட்சியங்களை அடைய முடியும் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். கம்யூனிஸ்ட் புரட்சியை நினைத்து ஆளும் வர்க்கங்கள் நடு நடுங்கட்டும். இதில் பாட்டாளி வர்க்கத்திற்கு தங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர இழப்பதற்கு வேறெதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஓர் பொன்னுலகம் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்.

 லீப்சிக் நீதிபதிகள் மிகவும் குழப்பமுற்றார்கள். அவர்கள் இதைத் தவிர வேறுவகையான எந்த எதிர்ப்பையும் சமாளிக்கத் தயாராக இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள் தங்கள் கட்சிக்காக வாதாடுவார்களே தவிர தங்களுக்காக வாதாட மாட்டார்கள் என்றோ, தங்களது லட்சியங்களுக்காக வாதாடுவார்களே தவிர தங்கள் உயிரப் பாதுகாத்துக்கொள்ள வாதாட மாட்டார்கள் என்றோ அவர்களுக்குத் தெரியாது. டிமிட்ரொவின் வாயை அடக்கி வைக்க அவர்கள் முடிந்ததை எல்லாம் செய்தார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது. அந்த துணிச்சல்மிக்க பாட்டாளி வர்க்கப் புரட்சியாளனின் ஓவ்வொரு வார்த்தையையும் உலகத்திலுள்ள பாட்டாளி வர்க்கம் முழுவதும் குறிப்பாக பாசிஸ்ட் சர்வாதிகாரச் சங்கிலிகளால் பிணிக்கப்பட்டிருந்த ஜெர்மன் பாட்டாளி வர்க்கம் மூச்சையடக்கிக் கொண்டு கேட்டது.

டிமிட்ரொவ் ஒரு உண்மையான லெனினிஸ்டாக நீதிமன்றத்தின் முன் நின்று எதிரிகளின் மீது குற்றம் சாட்டினார். அவர் தனக்காக வாதாடவில்லை குற்றஞ்சாட்டப்பட்ட அவரே நீதிபதியாக மாறினார்.

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடந்த சூழ்ச்சி நடவடிக்கைகளுக்காக பாசிசத் தலைவர்கள் மீது அவர் குற்றம் சாட்டினார். முன்னெப்போதும் இல்லாத வகையில், தொழிலாளி வர்க்கத்தின் மீது, உழைப்பாளி மக்களின் மீதும் கீழ்த்தரமான அடக்குமுறையைத் கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்று அவர்கள் மீது குற்றஞ்சாட்டினார். தன் மீது மற்ற கைதிகள் மீதும் காண்பிக்கப்படும் காட்டுமிராண்டித்தனமான போக்கைக் கண்டித்து அவர்கள் மீது குற்றஞ்சாட்டினார். தன் வழக்கறிஞரைக் கூட தேர்ந்தெடுக்க அனுமதி அளிக்காமல் சட்டத்தை புறக்கணிக்கின்ற நீதின்மன்றத்தின் மீது குற்றஞ்சாட்டினார். தனது வாதத்திற்குத் தேவையான முக்கியமான விஷயங்கள் எதையும் சேகரித்துக் கொடுக்காத டைஷர்ட் என்பவரைத் தனது தரப்பு வழக்கறிஞராக நியமித்த நீதிமன்றத்தின் நேர்மையின்மையைக் கண்டித்தார். பொய் வழக்கை சிருஷ்டித்ததாக அரசு வழக்கறிஞர் மீது குற்றஞ்சாட்டினார். பெரும்பாலான குற்றச்சாட்டுகள் முதல் கட்ட விசாரணைக்குப் பின்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவைகளை தான் இப்போதுதான் முதன்முதலாக கேள்விப்படுவதாகவும் அறிவித்து குற்றப்பட்டியலை படிக்கும்போது குறுக்கிட்டு அதை இடையில் நிறுத்தி வைத்தார். தனது வார்த்தைகள் இப்போதோ அல்லது சிறிது காலத்திற்கு பின்னோ தொழிலாளி வர்க்கத்திடம், பரந்த மக்கள் பகுதியிடம் சென்று சேரும் என்ற சர்வ நிச்சயத்துடன், பல்கேரிய பாசிச அரசாங்கம் 20,000 புரட்சிகர ஊழியர்களையும் விவசாயிகளையும் அறிவு ஜீவிகளையும் கொன்று குவித்ததாக குற்றஞ்சாட்டினார்..

 இறுதியாக 1933ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி முடிவுரை நிகழ்த்துபோது அவர் கூறினார்.

 பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இயற்பியல் விஞ்ஞானத்தின் தந்தையான கலிலியோ நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு மக்கள் நம்பிக்கைக்கு விரோதமானவர் என்ற காரணத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, ஆழ்ந்த உறுதியோடும், தீர்மனத்தோடும்

 “எனினும் இவையனத்திற்கும் மேலாக உலகமானது சுழன்று கொண்டிருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையானது மனிதகுலம் முழுமைக்கும் பின்னாளில் தெரியும்” என்று கூறினார்.

 “கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் கலிலியோவை விட உறுதியிலும் தீர்மானத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற அடிப்படையில்,

 எனினும் இவையனைத்திற்கும் மேலாக, உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. வரலாற்றுச் சக்கரங்கள், மேலும் முன்னேற்றத்தை நோக்கி மாறிச் செல்கிறது. அது கம்யூனிசத்தின் இறுதி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: நகரும்”.

 இந்த உணர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்ட 13 ஆண்டுகளுக்குப் பின்பு, பாசிச கொலைகாரர்களுக்கு ந்யூரம்பெர்க் நீதிமன்றம் அளித்த தண்டனையை உலகம் முழுவதும் கேட்டது.

 1945ம் ஆண்டில் கியோர்கி டிமிட்ரொவ், ஆழ்ந்த உலத் திருப்தியோடு கீழ்க்கண்டவாறு கூறினார்.

“ஹிட்லரின் தோல்விக்குப் பிறகும் உலகைத் தாங்களே ஆளவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் சர்ச்சில் ஆதரவாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை. தங்கள் ஆயுதங்களை உருவி, அணுகுண்டு அபாயத்தைக் காட்டி பயமுறுத்தும் அனைவருக்கும் விடுக்கப்படுகின்ற தீவிரமான முன்னெச்சரிக்கை இது. ஆக்கிரமிப்புப் போரை நடத்த வேண்டுமென்று, குறிப்பாக சோவியத் யூனியன் மீது போர் தொடுக்க வேண்டுமென்று, கூறிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இது. ஹிட்லரின் ஆதரவாளர்களும், உலகத்தை வெல்வதற்காக போல்ஷிவிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிராக எவ்வாறு நடவடிக்கை ஆரம்பித்தார்கள், எவ்வாறு தங்கள் முடிவைத் தேடிக்கொண்டார்கள் என்பதை அவர்கள் மனதில் வைத்துக் கொள்ளட்டும். எதிர்கால ஹிடலர்களாகவும், கோயரிங்குகளாகவும் மாற வேண்டும் என்பவர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லை. ஹிட்லரைப் போன்று 1932 முதல் 1945 வரை அவர்கள் நீண்ட நாட்கள் நீடித்திருக்க முடியாது. தங்களது ந்யூரபெர்க் விசாரணையை அவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும்.

இது மூளையுள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய, காத்திருப்பவர்கள் கேட்க வேண்டிய, பார்வையுள்ளவர்கள் பார்க்க வேண்டிய ஒரு பாடமாகும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s