இங்கே நான் என்ன செய்யப் போகிறேன்

என்பதில் மிகத் தெளிவாக உள்ளேன்

நான் பாட்டாளி வர்க்கப் புரட்சியைச் சேர்ந்த

ஒரு படை வீரன்;

கம்யூனிஸ்ட் அகிலத்தின் படை வீரன்;

இந்த வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும்

அப்படிப்பட்ட ஒரு வீரனாகத்தான்

இங்கே, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு

வீரன் என்ற அடிப்படியில் நான்

என் வாழ்வின் இறுதிக்கணம் வரையில்

என் பணியைச் செய்வேன்.

                                        -டிமிட்ரோவ்.

கியோர்கி டிமிட்ரொவ் பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒப்பற்ற ஆசான். சர்வதேச கம்யூனிஸ்ட், தொழிலாளர் இயக்கத்தின் சிறப்புமிகு செயல்வீரர். லெனினின் வார்ப்பில் உருவான புரட்சியாளர். கொடுங்கோலாட்சிக்கும், அடிமைத்தனம் அனைத்திற்கும் எதிரான போராட்ட வீரர். அவரது தனிப்பெருமை ஒரு ஒழுங்கான மனித வாழ்விற்காகவும், மனிதர்களிடையே அமைதிக்காகவும், பரஸ்பர ஒற்றுமைக்காகவும் நிகழ்த்திய போராட்டத்தோடும், விடுத்த அன்பான அறைகூவல்களோடும் இணைந்து பரிணமிப்பதாகும். இந்தக் குறிக்கோள்களின் வெற்றிக்காகவே அவரது செயல்திறனை அரை நூற்றாண்டுக் காலம் செலவிட்டார். அவரது சிறப்பான அறிவையும், உண்மையான திறமையையும் கொண்டு சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கீழ்த்தட்டிலுள்ளவர்களின் மகத்தான விடுதலைக்காகவே இடையறாது செயல்பட்டார். மனிதத் தன்மையின், மிகவும் முற்போக்கான ஜனநாயகத்தின் வெற்றிக்காகவும் சோஷலிசம், கம்யூனிசம் ஆகியவற்றின் வெற்றிக்காகவும் பணியாற்றினார். தத்துவ ஞானியின் அறிவுத் தெளிவும் கற்பனாவாதியின் கற்பனைக் கண்ணோட்டமும் கொண்ட இந்தச் செயல்வீரர் புரட்சிகர யதார்த்தத்தையும் எதிர்காலத்தையும் ஒன்றாக்கி, மனத் துணிவிற்கும் முன்னேற்றத்திற்கும், சர்வதேசப் பார்வைக்கும், புதுவகையான பெருமைக்கும் மறுபெயராக தனது பெயரை வரலாற்றில் பதித்தார்.

கியோர்கி டிமிட்ரொவ், 1882 ஆம் ஆண்டு ஜூன் 18ம் நாள் பெர்னிக் மாவட்டத்திலுள்ள கோவாட் ஷேவ்ட்ஸி என்ற கிராமத்தில் பிறந்தார். 15வது வயதில்  சோஃபியா நகரில் அச்சுத் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் துவக்கினார். அந்த உணர்ச்சிமிகு இளைஞர் அறிவைப் பெறுவதற்காக கடின உழைப்பு என்ற பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது, முதலாளித்துவம் மனிதனை எவ்வாறு ஒரு சாதாரண விலை பொருளாக மாற்றிவிடுகிறது என்பதைக் கண்டார். இது நடைமுறையிலுள்ள சமுதாய அமைப்பில் உள்ள ஒற்றுமையின்மையையும், உணர்ச்சியற்ற தன்மையையும் காண உதவியது.

1902ஆம் ஆண்டில் கியோர்கி டிமிட்ரொவ் பல்கேரிய சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். 1903ல் அது உடைந்தபோது, அந்நாளில் ஃபால்கன் நாடுகளிலிருந்து மார்க்சிஸ்டுகளின் முன்னோடியும் கட்சியின் நிறுவனறுமான டிமிடர் பிளாகயேவ் தலைமையில் அமைந்ததும் கட்சியின் புரட்சிகர மார்க்சிஸப் பிரிவும் ஆன இடதுசாரி சோஷலிஸ்டுகள் என்றழைக்கப்பட்ட பிரிவில் தன்னை உடனடியாக இணைத்துக்கொண்டார்.

1909 ல் சமூக ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி சோஷலிஸ்டுகளின் மத்தியக் கமிட்டி உறுப்பினராக டிமிட்ரொவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியை அவரது வாழ்நாள் முழுவதும் வகித்து வந்தார்.

கியோர்கி டிமிட்ரொவ், அவரது அறியாப் பருவத்திலிருந்தே தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களில் தீவிரப் பங்கெடுத்துக்கொண்டார். ஒரு பிறவித் தலைவருக்கான தகுதிகளை அவர் வெளிப்படுத்தினார். எனவே 1904ல் பொதுத் தொழிலாளர் தொழிற்சங்கம் உருவாகியபோது, அதன் மத்திய குழுவிற்கு அவரைத் தேர்ந்தெடுத்ததிலோ, 1909ல் பல்கேரிய புரட்சிகர தொழிற்சங்கங்களின் மத்திய கவுன்சில் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலோ எந்த வித ஆச்சரியமும் இல்லை. இந்த நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் தனது அயராத புரட்சிப் பணியின் மூலம் உழைக்கும் மக்களின் அன்பை டிமிட்ரொவ் அடைந்த அதே நேரத்தில் முதலாளிகளின் தீவிர வர்க்க வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார். முதலாளிவர்க்கம் தாக்குதல்களையும், கைதுகளையும், குழி பறிப்புகளையும் மேற்கொண்டு அவரைப் பின்தொடர்ந்து வந்தது. இந்த தாக்குதல்களுக்கெல்லாம் அஞ்சாது பல்கேரிய பாட்டாளி வர்க்கதின் மகத்தான வேலை நிறுத்தங்களை உருவாக்கி, தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பணியை அவர் தொடர்ந்து செய்தார். 1913 லிருந்து 1923 வரை பல்கேரிய தேசிய சட்டமன்றத்தில் தேசிய பிரதி நிதியாக இடைவிடாது அங்கம் வகித்த காலத்திலும், பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும் மக்களின் நலன்களை, புரட்சிகர ஆர்வத்தோடு பாதுகாத்ததோடு, அரசாட்சியின், பல்கேரிய பிற்போக்கு முதலாளித்துவத்தின் யுத்த வெறி பிடித்த சுரண்டல் கொள்கையையும் அம்பலப்படுத்தவும் செய்தார். அவரது ஏகாதிபத்திய போரை எதிர்த்த புரட்சி நடவடிக்கைகளுக்காக, அரசாட்சியும் முதலாளித்துவமும் சேர்ந்து முதல் உலகப் போரில் டிமிட்ரொவை சிறையில் தள்ளியது. அவரது நீடித்த துணிவான போராட்டத்தோடு, நிலைமைகளை ஆராய்ந்து, சரியான முடிவுகளை எடுக்கும் திறமையோடு அவர் தன்னை தீர்க்கதரிசனம் மிக்க ஒரு தலைவராக உருவாக்கிக் கொண்டு, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் மக்களை அணிதிரட்டி, தலைமை வகிக்க தயாராக இருந்தார். பல்கேரியாவில் உலகப் போருக்குப் பின்பு தோன்றிய புரட்சிகர எழுச்சியில் நிகழ்ந்த மகத்தான முதல் வர்க்கப்போரான மாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம் 1919-20ல் நடைபெற்றபோது தலைமை தாங்கி நடத்தினார். 1923 செப்டம்பரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான புரட்சிகர ஞானஸ்நானமான பாசிஸ்ட் எதிர்ப்புக் கிளர்ச்சியில் உழைக்கும் மக்களை வாசில் கோலரொவுடன் இணைந்து தலைமை தாங்கி நடத்தினார். இந்த எழுச்சி வெகு ஜனங்களின் வீரமிகு போராட்டத்தால் ஆரம்பத்தில் வெற்றி கிட்டிய போதும், இறுதியில் அரக்கத்தனமாக நசுக்கப்பட்டது. உயிர் தப்பிய படையினரை அழைத்துக் கொண்டு டிமிட்ரொவ் நாட்டை விட்டு வெளியேறினார். பல்கேரிய பாசிச நீதிமன்றம் டிமிட்ரொவிற்கு இரண்டு மரண தண்டனைகளை விதித்தது.

1923க்குப் பிறகு டிமிட்ரொவ் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவில் பணியாற்றினார். மிகுந்த மனத்தெளிவோடு பல முக்கிய பயணங்களை மேற்கொண்டு, நிறைவேற்றினார். 1933ல் பாசிஸ்டுகள் தங்களது ரைஷ்ஸ்டாக் தீவைப்பு ஜோடனை வழக்கில் கம்யூனிஸ்டுகளை பலியாக்க முனைந்தபோது பெர்லினில் நாஜி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து லீப்சிக்கில் நடைபெற்ற அழிக்க முடியாத புகழ்பெற்ற விசாரணையில் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட டிமிட்ரொவ் பாசிசத்தை ஆணித்தரமாக குற்றம் சாட்டுபவராக மாறினார். இதுநாள் வரை வெளியே தெரியாதிருந்த டிமிட்ரொவ் உலகப்புகழ் பெற்றவராக மாறினார். மனத்துணிவையும், பாட்டாளி வர்க்க சர்வதேசக் கண்ணோட்டத்தையும், லெனினிச ஆர்வத்தையும் இணைத்துக் கொண்டு வெளிப்பட்ட அவரது உள்ளத் துணிவு, மிக முக்கியமான வரலாற்றுப் பகுதியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மிகுந்த வலிமையை அளித்தது.

ரைஷ்ஸ்டாக் தீவைப்பு வழக்கின் இறுதியில், அவ்வழக்கின் குற்றவாளிகள் நெறிமுறையிலும் அரசியல் முறையிலும் மனித குலத்தின் எதிரிகள் என்று அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, டிமிட்ரொவ் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டாலும், அவரது பல்கேரிய குடியுரிமையை பல்கேரிய பாசிச அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டது. அதன் பிறகு சோவியத் யூனியன் அவருக்கு சோவியத் குடியுரிமை வழங்கியவுடன் மாஸ்கோவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டார். கைவிலங்குகளைக் கழற்றிவிட்டு அப்போதுதான் வந்திருந்த போதிலும், மாஸ்கோவில் இறங்கிய உடனேயே, அவருக்கு அப்போது தேவைப்பட்ட ஓய்வையும் மறுத்துவிட்டு, சர்வதேச கம்யுனிஸ்ட் இயக்கத்தின் போராட்டத்தில் உடனடியாக ஈடுபடத்துவங்கினார். அப்போது உழைக்கும் வர்க்கத்திற்கும் பாசிச எதிர்ப்பு அணிக்குமிடையே உருவாகிக் கொண்டிருந்த ஒற்றுமையைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

1935ல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரசின் முக்கிய அறிக்கையை டிமிட்ரொவ் சமர்பித்தார். முழுமையான கற்றுணர்ந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்டைப் போலவே அவர் யுத்தத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தின் யுத்த தந்திரங்களையும் திட்டத்தையும் உருவாக்கினார். டிமிட்ரொவின் மகத்தான ஆளுமையைக் கண்ட ஏழாவது காங்கிரஸ் அவரை மத்தியக் கமிட்டியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது. 1943ம் ஆண்டு கம்யூனிஸ்ட் அகிலம் செயல் இழக்கும் வரையில் அவர் அதன் தலைமையை வகித்து வந்தார். முன்னோடியான கேடர்களை கண்டுபிடித்து அவர்களை மார்க்சிச-லெனினிசக் கல்விக்கு உண்மையானவர்களாக, பாட்டாளி வர்க்க சர்வதேசியக் கொள்கை பிடிப்புள்ளவர்களாக, அவர்களின் தாய்நாட்டின் மக்களின் நலன்களைக் காக்கப் போராடும் உறுதியான புரட்சிப் போர்வீரர்களாக வளர்த்தெடுப்பதில் டிமிட்ரொவ் தனது தனித் திறமையை வெளிப்படுத்தினார்.

டிமிட்ரொவின் தலைமையில் பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி தனது குறுகிய சீர்குலைவுப் போக்கை களைந்து, லெனினிசத்தால் தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டது. இதல்லாமல் பாசிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக மக்களை தலைமை தாங்கி நடத்திச் சென்றிருக்க முடியாது.

1941ல் இரண்டாவது உலகப் போர் தலைக் காட்டிக் கொண்டிருந்த போது, டிமிட்ரொவ் தலைமையிலான பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஆயுதந்தாங்கிய எழுச்சியை மேற்கொண்டு, மறைமுக இயக்கத்தை உருவாக்கி, ஜெர்மன் பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அவர்களின் பல்கேரிய அடிவருடிகளுக்கும் எதிரான போராட்டத்தில் உழைக்கும் மக்களை தலைமை தாங்கி நடத்திச் சென்றது.

1942ல் டிமிட்ரொவின் முயற்சியினால் தேசத்தின் புரட்சி சக்திகளை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக தந்தையர் நாட்டு முன்னணி பல்கேரியாவில் உருவாக்கப்பட்டது. இந்த முன்னணி 1944 செப்டம்பரில் பல்கேரிய மக்கள் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

1945 நவம்பர் 6ம் தேதி கியோர்கி டிமிட்ரொவ் தாய் நாட்டிற்குத் திரும்பினார். பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியையும் பல்கேரிய மக்கள் குடியரசு அரசாங்கத்தையும் எல்லையற்ற வலிமையோடும், தீர்மானமானத் தெளிவோடும், உண்மையான அரசியல் நிபுணத்துவத்தோடும் தலைமை தாங்கி பல்கேரியாவின் சர்வதேசத் தனிமைக்கு முடிவு கட்டியதோடு, மக்கள் அரசாங்கத்தின் அடித்தளமாக விளங்கும் தொழிலாளர்கள்-விவசாயிகளிடையே ஒரு உறுதியான கூட்டுறவை ஏற்படுத்தவும், நாட்டை சோஷலிசத்தை நோக்கி உறுதியாக இட்டுச் செல்கின்ற வகையில் மாபெரும் சமூக பொருளாதார, சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதிலும் டிமிட்ரொவ் ஈடுபட்டு வெற்றிகண்டார்.

பல்கேரியா அதன் வரலாற்றிலேயே முதன் முறையாக இவ்வளவு ஊக்கமும், அன்பும், எல்லையர்ற நம்பிக்கையையும் கொண்ட ஒரு புரட்சிகர செயல் வீரரைக் கண்டது என்பதில் எவ்வித வியப்புமில்லை.

1949ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி டிமிட்ரொவ் மறைந்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s