தொடர் -3

வழிபாடுகளில் கவனம் தேவையா?

 முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்குப்பின் சஹாபாக்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை மறப்பதற்காக எனது சிந்தனையை வேறு வழியில் திருப்பினேன்.  இரத்தக்கறை படிந்த வரலாற்று செய்திகளை அறிந்த கொள்வதை முற்றிலும் நிறுத்தினேன். அரசியல் அதிகாரங்களுக்காக நடந்த படுகொலை வரலாற்றை படித்து வெறுப்படைவதற்கு பதிலாக, ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து படித்து மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.

 ஒரு முறை லுஹர் தொழுகையில் இமாம் இரண்டாம் ரக்ஆத் முடிவில் அத்தஹியாத் (தொழுகையின் இடையே அமரும் சிறு இருப்பு)  அமர்வதற்கு மறந்து விட்டார். அவரைப் பின்பற்றி தொழுகையை நிறைவேற்றிய அனைவருக்கும் இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? என்று குழப்பம் ஏற்பட்டது நினைவிற்கு வர தொழுகை மற்றும் நோன்பு தொடர்பாக எனக்கு ஏற்பட்ட அடிப்படையான சில சந்தேகங்களுக்கு விளக்கங்களை தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். கவனக் குறைவாக தொழுகையில் இருக்கும் வேளைகளில் எனக்கு தொழுகையில் ஏற்படும் மறதிகள், உதாரணத்திற்கு நான்கு ரக்ஆத்களுக்கு இரண்டு ரக்ஆத்துகளை அல்லது ஐந்து ரக்ஆத்கள் தொழுவது அல்லது  இரண்டாம் ரக்ஆத் முடிவில் அத்தஹியாத் இருக்க மறப்பது இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன். தொழுகையில் ஏற்படும் கவனக் குறைவுகளைப் பற்றி முஹம்மது நபி அவர்கள் என்ன சொல்கிறார்?

புஹாரி ஹதீஸ் -608

அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு

சப்தத்தை கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக்கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொழுகையில் இருக்கும் போதுதான் அதுவரையில்லாத நினைவுகளெல்லாம் வந்து என்ன தொழுதேன் என்ற நினைவையே மறக்கச் செய்து விடுகிறது இதைப் போன்ற ஷைத்தானின் பிடியிலிருந்து விலக வேண்டும் என்று உறுதிஎடுத்துக் கொண்டவனாக மறதியால் பாதிக்கப்பட்ட தொழுகைகளுக்கு விடைதேடினேன்.

புஹாரி ஹதீஸ் -1227

அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது, துல்யதைன், (ரலி) அவர்கள்  “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், “இவர் கூறுவது உண்மைதானா” எனக் கேட்டபோது அவர்களும் ’ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மஃக்ரிப் தொழுவித்தபோது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும் விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாச் செய்துவிட்டு, இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள், எனக் கூறினார்கள்

(புகாரி 1224 – 1230)

புஹாரி ஹதீஸ் :516

அபூகா தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஜெய்னப் அவர்களின் குழந்தை உமாமா வை (தோளில்) சுமந்து கொண்டு தொழுதார்கள். ஸஜ்தாவுக்கு செல்லும் போது இறக்கி விடுவார்கள். நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள்.

இதே போல் என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்தது. இதைப்பற்றி எல்லோரும் நன்கு அறிவர்  இதில் என்ன புதுமை உள்ளது என்கிறீர்களா?. புதுமை ஒன்றுமில்லைதான். ஆனால் அதிலிருந்து கேள்விகள் சில எழுந்தது. 

குழந்தையைத் தோளில் சுமந்து கொண்டு எப்படித் தொழ முடியும்? குறிப்பிட்ட அந்த ஹதீஸில் கூறப்பட்டதைப் போல தொழுதால் அது தொழுகையைப் போலவா இருக்கும்? எனக்குப் புரியவில்லை…! உங்களுக்கு…?

நான்  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழும் ஒரு சராசரி மனிதன். உலகத் தேவைகளால், தினமும் புதுப்புதுப் போரட்டம். என் சிந்தனையை ஒருங்கிணைப்பது எனக்கு கடினமான பணி. முகம்மதுநபி அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. என்னைப் போல் ஒரு சராசரி மனிதவாழ்க்கை வாழ்ந்திருந்தலும், அவருடைய ஆன்மா அல்லாஹ்வின் மிகப் பெரிய அன்புக்கும் ஆசைக்கும் உரியது. அவருடைய வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றவும் இருப்பதாக முகம்மதுநபி அவர்களே சொல்கிறார். இறைவனை வழிபடும் முறையையும் அதன் ஒழுக்கத்தையும், மேன்மையையும் கற்பித்ததும் அவர்தான். அத்தகைய மனிதருக்கு என்னை போன்ற அற்பமனிதனுக்கு ஏற்படும் கவனக் குறைவுகளும்  ஏற்பட்டது ஏன்? அவரையும் ஷைத்தான் விடவில்லையா? அவர் தொழும்போதும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு அவர் அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக் கொண்டு இருந்தானா?

தொழுகையின் பொழுது போருக்கான யுக்திகள் குறித்து யோசிக்கிறேன் என்கிறார் உமர் (ரலி) அவர்கள்.

(புகாரி)

வழிபாடுகளில் மனம் ஒருநிலைப்படுதலும், வழிமுறைகளில் தீவிரமும் தேவையற்றதா?  விடை தெரியாத நிலையில் ஹதீஸ்களில் தீவிரமானேன்.

புஹாரி ஹதீஸ் : 1217
ஜாபிர்பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார்.

அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.

இது ஒரு சிறந்த கோட்பாடு அல்லது சிறந்த கட்டளையாகும், அதாவது ஒருவர் தன்னை படைத்தவனை, காப்பவனை தொழுது கொண்டு இருக்கும் வேலையில், அதைவிட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருக்கப் போகிறது?

           ஆனால், முகம்மதுநபி  இதற்கு நேர் எதிராக‌ நடந்துக்கொண்டு, தான் சொன்னதை தானே செய்யாமல் இருந்திருக்கிறார். அதாவது ஒரு மனிதன் தொழுகையில் இருக்கும் போது, முகம்மதுநபி அவரை அழைத்தார், அதற்கு அம்மனிதர் தொழுகையில் இருந்தவாரே பதில் தரவில்லை என்றுச் சொல்லி, அம்மனிதரை முஹம்மது நபி (ஸல்) கடிந்துக்கொண்டார். இதில் இன்னும் மோசமான‌ தகவல் என்ன‌வென்றால், அந்த‌ சஹாபி தன் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தூதருக்கு பதில் தரவேண்டும் என்பதை நியாயப்படுத்த‌ முஹம்மது முகம்மதுநபி குர்ஆன் வசனத்தையே ஆதாரமாக‌ காட்டியது தான்!

புஹாரி ஹதீஸ் : 4647
அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

நான் (‘மஸ்ஜிதுந் நபவீ’ பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், ‘நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், ‘இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்’ என்று கூறவில்லையா?’ எனக் கேட்டார்கள். …

         ஷாஃபி பிரிவைச் சேர்ந்தவன் நான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனைவியை தொட்டால் ஒளு (தொழுகைக்காக செய்து கொள்ளப்படும் தூய்மை)  முறிந்துவிடும் என்றும் தொழுகை இறைவனை முன்நோக்கும் செயல் எனவே அதிக கவனம் தேவை, தொழுபவரின் குறுக்கே செல்லும் குழந்தையைக்கூட கண்டிப்பதை பார்த்து வளர்ந்தவன்.

புஹாரி ஹதீஸ் : 0509

அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்)

அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தடுப்பு ஒன்றை வைத்துக் கொண்டு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் தொழுதுகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது பனூ அபீமுஜத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்லப் போனார். எனவே, அபூசயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் கையால் உந்தினார்கள். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் (அவர்களைக் கடந்து) செல்வதைத் தவிர நடை பாதையேதும் இல்லையெனக் கண்ட அந்த இளைஞர், மீண்டும் அவர்களைத் தாண்டி (குறுக்கே) செல்லப் போனார். எனவே அபூசயீத் (ரலி) அவர்கள் அவரை முன்பைவிடக் கடுமையாக உந்தினார்கள். உடனே அந்த இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களை ஏசினார். பிறகு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று அபூசயீத் (ரலி) அவர்கள் தம்மிடம் நடந்து கொண்டது பற்றி முறையிட்டார். அவருக்குப் பின்னால் அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், “உங்களுக்கும் உங்கள் சகோதரரின் புதல்வருக்குமிடையே என்ன பிரச்சினை, அபூசயீத் அவர்களே”, என்று கேட்டார். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், “மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தமக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை தடுப்பாக வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது எவரேனும் தமக்கு முன்னால் (குறுக்கே) கடந்து செல்ல முயன்றால் அவரைத் தள்ளிவிடுங்கள். அவர் (விலகிக்கொள்ள) மறுத்தால் அவருடன் சண்டையி(ட்டுத்த)டுங்கள். ஏனெனில் அவன்தான் ஷைத்தான்”, என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (எனவேதான், இந்த இளைஞரிடம் இவ்வாறு நான் நடந்து கொண்டேன்)”, என்று கூறினார்கள்.

புஹாரி ஹதீஸ் :0510

புஸ்ர் பின் சயீத் (ரஹ்)

புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே நடந்து செல்பவர் அடைந்துகொள்ளும் பாவம் என்ன என்பது பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள், என்று அபூஜுஹைம் அப்துல்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டுவருமாறு ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் என்னை அனுப்பிவைத்தார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்) தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்_மாதங்கள்_வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீ உமைய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது, என்று சொன்னார்களா அல்லது மாதங்களில் நாற்பது, என்று கூறினார்களா அல்லது, வருடங்களில் நாற்பது, என்று குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

         மேற்கண்ட ஹதீஸ்கடந்து போவதற்கு வேறு வழியின்றி, தொழுபவரின் குறுக்கே  நடந்து  செல்வதையே  குற்றம் என்று தடுக்கிறது. ஆனால் இறைவனைத் தொழுது கொண்டிருப்பவரை நோக்கி காலை நீட்டிக் கொண்டிருப்பதும், அது தனது வழிபாட்டிற்கு இடையூறாக இருப்பதை உணர்த்திய பின்னரும் மீண்டும் காலை நீட்டிக் கொண்டிருப்பவரை என்னவென்று சொல்வது? 

புஹாரி ஹதீஸ் -1209

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும்போது நபி (ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் சஜ்தாச் செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன்

          ஷாஃபி பிரிவைச் சேர்ந்தவன் நான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆயிஷா  அவர்களின் இந்த செயலை முகம்மதுநபி அவர்கள் தடுத்ததாகவோ, கண்டித்ததாகவோ எந்த தகவலுமில்லை.  ஆயிஷா   ஏன் அவ்வாறு செய்தார்?  முகம்மதுநபி ஏன் கண்டிக்கவில்லை? எனக்கு கற்பிக்கப்பட்டது யாருடைய வழிமுறை? ஒருவேளை மனைவியின் மீது கொண்ட அதிகமான அன்பு காரணமாக இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

அதை உறுதி செய்ய நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையைப்பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

புகாரி ஹதீஸ் -5068

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்து விடுவார்கள்.  (அப்போது) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

(புகாரி 5068,5215)

புகாரி ஹதீஸ்

நபி (ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது’ என நாங்கள் பேசிக் கொள்வோம்’ என அனஸ் (ரலி) கூறினார்” என கதாதா அறிவித்தார்.

இந்த ஹதீஸை படிக்கும் வேளையில் அதிர்ச்சியடைந்தேன்  காரணம், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களின் எண்ணிக்கை  திருக்குர்ஆன்  அனுமதித்த அளவை விட இரண்டு மடங்குகள் அதிகம். மேலும் இந்த ஹதீஸ்கள் அவரது பாலியல் வலிமையைப் பற்றியும் கூறவே மிகுந்த குழப்பமடைந்த என் மனதில் தடுமாற்ற எண்ணங்கள் ஆரம்பமாயின. எனது மனதில் தோன்றிய சந்தேகங்களை பிறரிடம் வெளிப்படுத்தவும் தயங்கினேன். இந்த தடுமாற்றம் சரியானதா?

முஸ்லீம் ஹதீஸ் எண் : 188, அத்தியாயம் : 1, பாடம் : 1.60

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

 நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 எனது தடுமாற்றமும் ஒருவேளை ஒளிவுமறைவற்ற இறை நம்பிக்கையாக இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.

— தஜ்ஜால்

One thought on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 3

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s