உலகமயச் சூழலில் தமிழகம் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும்

தலைப்பை எனது வசதிக்காக பிரித்துக் கொள்கிறேன்.

1. உலக மயச்சூழல்

2. தமிழகம்

3. சிக்கல்கள்

4. தீர்வு

1. உலகமயச்சூழல்

உலகமயச் சூழல் என்றால்என்ன? வல்லரசு நாடுகளின் முதலாளிகளுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அது கார்ல்மார்க்ஸ் வெளிக்காட்டிய முதலாளித்துவ விதிகளுக்குட்பட்டே ஏற்படுகிறது. முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தால் ஏற்பட்ட அந்தக் கடுமையான நெருக்கடியை அவர்களால் நிரந்தரமாகத் தீர்க்க முடியாது என்பதை அவர்களே அறிந்திருக்கிறார்கள். என்பதைத்தான் முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளின் ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. சரி! நெருக்கடிகளை எவ்வாறு தீர்ப்பது?.

கொஞ்சம் வரலாற்றைப் பின்னால் பார்ப்போம். இங்கிலாந்து முதலாளிகள் தங்களது பேரரசி எலிசபெத் மகாராணிக்குக் கடன் கொடுக்கிறார்கள். கடனுக்காக வட்டியைக்கூட ஒழுங்காய்க் கட்ட முடியாத பேரரசி தனது ராணுவப் படைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எங்கு வேண்டுமானாலும் வியாபாரம் செய்து கொள்ளுங்கள் அல்லது கொள்ளையடித்துக் கொள்ளுங்கள் என்ற சொல்கிறார். படைகளோடு புறப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி காலனியாதிக்கத்தைத் துவங்கியது. இங்கே வந்த போது ஆற்காடு நவாபு, புதுக்னோட்டை தொண்டைமான், தஞ்சை சரபோஸி போன்றவர்களின் துரோக வரலாறும், கட்டபொம்மன் திப்பு சுல்தான் ஊமைத்துரை பூலித்தேவன் மருதுசகோதரர்கள் ஆகியோர் நடத்திய வீரப்போர் வரலாறும் நாமறிந்ததுதான். இறுதியாக விடுதலை வீரர்கள் வீழ்த்தப்பட்டதும் அதிகாரம் பெற்ற கம்பெனி ஆட்சியை நடத்தியது. கம்பெனிக்குள்ளேயே முதலாளிகளுக்குள் சண்டை வரவும் அதிகாரம் ராணி எடுத்துக் கொள்கிறார். 1947ல் இந்த நிர்வாகம் செய்கிற தொல்லையை மட்டும் இங்குள்ளவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள். கொள்ளையும் சுரண்டலும் தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலக அரங்கில் புதிய வியாபாரம் பொருட்கள் புதிய வியாபார முறைகள் தோன்றுகின்றன. புதிய முதலாளிகள் தோன்றுகிறார்கள். துவக்க காலப் பிணக்குகளுக்குப் பிறகு ஒன்று சேர்கிறார்கள். G8 உதயமாகிறது. உலகவங்கி உலகவர்த்தக மயம் உலக வர்த்தகக்கழகம் சர்வதேச நிதி நாணயம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இருப்பினும் நெருக்கடிகள் அதனால் தீர்ந்த பாடில்லை. காலனியாதிக்க முறைகளையும் புதிய வடிவங்களில் தொடர வேண்டிருக்கிறது. டங்கல் திட்டமிட்டுக் கொடுகிறார். காட், காட்ஸ் போன்று பல்வேற ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இன்று அமெரிக்காவின் தலைமையிலமைந்த உலக வல்லரசு நாடுகளில் முதலாளிகள் முப்படைகளை உருவாக்கி அதை மூன்றாம் உலக நாடுகளின் மீது ஏவிவிட்டு தங்களது மறுகாலனியாதிக்கத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த முப்படைகள் எது?

1.தனியார் மயம். 2.தாரளமயம் 3.உலகமயம் _ அவைகள்தான் அந்த முப்படைகள். தனியார் மயம் என்பது மூன்றாம் உலக நாடுகளிலுள்ள அரசு பொதுத்துறைகளை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்க வைப்பதாகும். .தாரளமயம் என்பது ஒப்பந்தக்களில் கையெழுத்திட்ட நாடுகளில் எவ்விதத் தடங்கலுமின்றி தங்களது பன்னாட்டுக் கம்பெனி பொருட்களைத் தாராளமாகக் கொட்டி விற்பனை செய்வதாகும். உலகமயம் என்பது தனியார் மயமாக்கப்பட்ட தாராளமயச்சந்தையை உலகம் முழுவதும் விரித்துச் செல்வதாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமே என்பதாகத் துவங்கிய உலகமயம் இன்று வியாபாரத் துறைக்கும் அதன் திட்டமிட்டப்படியே வந்து நடந்து கொண்டிருக்கிறது. வியாபாரத் துறையில் வரும் எந்த ஒரு மாற்றமும் மக்களின் சமூக பண்பாட்டுக் கலாச்சாரத்தளத்தில் மாற்றங்களை உருவாக்கிய தீரும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

உலகமயச் சூழல் என்பது வல்லரசு நாடுகளின் முதலாளிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் ஏற்பட்டதாகும். இது முதலாளிகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கையான சூழல்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வல்லரசு நாடுகளின் பன்னாட்டுக் கம்பெனிகள் தங்களின் பொருட்களைத்தான் உலகமயமாக்குகின்றன தவிர தாங்கள் தங்களது நாடுகளில் கடைபிடிக்கும் திட்டங்களை அது உலகமயமாக்குவதில்லை.

அமெரிக்கா தனது நாட்டு விவசாயத்திற்கென அதிகஅளவில் மான்யத்தை ஒதுக்கிறது. ஆனால் உலக வங்கியின் மூலமாக மூன்றாம் உலக நாடுகளின் விவசாய மான்யத்தை தடைசெய்கிறது. சீனாவில் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் உலகவங்கி மிகக்குறைவான நிதியை விவசாயக் கடன்களுக்கு ஒதுக்க மூன்றாம் உலகநாடுகளின் அரசாங்ககளை நிர்பந்தித்து வருகிறது. வல்லரசு நாடுகளில் “கால்சென்டர்”_களில் பணிபுரியும் நபரின் ஒருநாள் சம்பளத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை புரிந்துவிடும். அப்போதுதான் புரியும் “டைட்டல் பார்க்” என்பது விஞ்ஞான வளர்ச்சியின் விளைவு அல்ல அது நவீன கொத்தடிகளின் கூடாரம் என்பது.

இந்த உலகமயச்சூழல் என்பது செயற்கையான சூழலே. இதுவும் விரைவில் அழியத்தான் போகிறது. அந்த அழிவு முதலாளித்துவத்திற்குள் ஏற்படும் நெருக்கடியினாலா? அல்லது பொதுவுடைமைப் புரட்சியாளர்களின் வெற்றியினாலா? என்பதுதான் கேள்வி. நவீன ராணுவக்கருவிகள் படுபயங்கர அணு ஆயுதங்கள் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப வசதிகளையும் வைத்துப்பார்க்கும் போது பொதுவுடமையப் புரட்சியாளர்களிடம் தான் அது மண்ணைக் கவ்வப்போகிறது என்பதே வருங்கால உண்மை.

2. தமிழகம்

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்கிற மறுகாலனியாதிக்கத்தின் முப்படைத் தாக்குதலில் தமிழகம் போன்று, ஒடுக்குமுறை நாட்டில் கட்டுண்ட எந்த ஒரு மாநிலமும் பாதிக்கப்படவே செயயும். சுயநலப் பணம் சம்பாதிக்கிற தொற்றுநோய்க் கிருமிகள் பிடித்துள்ள தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாக ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே செய்யும். புரட்சிகரமான அரசியல் சூழல் தமிழ் மக்களிடம் எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே கட்சி நடத்திக் கொண்டிருக்கிற போலிப் பொதுவுடைமைக் கட்சிகள் இப்பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்தவே துணை செய்யும். இவைகளெல்லாம் தொடர்ந்து நீடிக்குமேயானால் இறுதியல் உலகச்சூழலில் தமிழகம் வெறும் பெயர்பலகையாக மட்டுமெ நிற்கும். நம் தமிழ்மொழியின் பெருமை தமிழ்மண்ணின் வளம் தமிழ் மக்களின் வீரம் எல்லாம் முகமழிந்து வெறுமையாய் நிற்கும்.

3. சிக்கல்கள்:

எதில் இல்லை?

கல்வி: பிற்படுத்தப்பட்ட சாதிகளில் மூன்றாவது தலைமுறையே இப்போதுதான் கல்லூரிகளில் கணிசமாக நுழைந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதிகளிலோ முதல் தலைமுறையே இப்போதுதான் கல்லூரிகளை முழுமையாகப் பார்க்கிறது. அதற்குள் கல்லூரிக் கல்விக்கு ஆப்படிக்கப்பட்டு வியாபாரப் பொருளாக்கப்பட்டதோடு கல்வி உரிமையும்கூட பறிக்கப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராட்டம் நடத்துகிற மேல்சாதித் திமிர் கொண்ட கும்பலின் தொடர் செயல்பாடுகள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளை பின்னக்குத் தள்ள முயல்கின்றன. ஐ.ஐ.டியில் நடக்கிற கொடுமை நாடறிந்தது.

விவசாயம் :

சமூகப் பொருளாதாரத்தில் விவசாயம் முதலிடம் வகிக்கிறது. விவசாயத்தின் நிலையோ சொல்லிமாள முடியாதது. விவசாயம் முழுவதுமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் பரிசோதனைச் சாலையாக தமிழக விளைநிலங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகளாக இருக்கிற உள்நாட்டு முதலாளிகள் பரிசோதனைச் சாலையில் எலிகாளக தாங்களே இருக்கிறோம் என்பதைக்கூட உணரவில்லை. நீங்களும் வீழ்வீர்கள் என எடுத்துச் சொன்னாலும் கூட லாபமே குறியாக இருப்பதால் அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

நெசவு :

விவசாயத்திற்கு அடுத்தபடியான நெசவு நைந்துபோன நூலாகிவிட்டது. ஆகக் குறைந்த லாபத்தில் ஆடைகளைத் தயாரித்து முடிக்கும் போது தமது அடக்க விலைக்கும் குறைவாக பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆடைகள் மலை மலையாய்க் குவிக்கப்படுகின்றன. “போட்டி போடுங்கள்” என்று ப.சிதம்பமும் தயாநிதி மாறனும் இங்கே உற்சாகப்படுத்துகிறார்கள். நெசவாளிகளோ கிட்னிகளை விற்கத் துவங்கிவிட்டனர்.

சிறுவணிகம் :

விவசாயம் நெசவிற்கு அடுத்து சிறுவணிகம் டெல்லியில் இராணுவத் தாக்குதலுக்கு உள்ளானது சிறுவணிகர்கள் மட்டுமல்ல சிறுவணிகமும்தான். விரைவில் தமிழகத்திலும் அதுபோன்றே ஏவப்படும் நிலை வரும். உலகமெங்கும் நீக்கமுற நிரவியிருக்கிற பன்னாட்டு முதலாளிகளின் கம்பெனியான இந்துஸ்தான்லீவரும் நெஸ்லேயும் மதிப்புக்குறைந்த இந்திய நாணய அளவில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கெல்லாம் கூட பொருட்களைத் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து சிறுவணிகக் கடைகளில் சரம்சரமாகத் தொங்கவிட்டது. பொருட்கள் இன்னும் விற்பனையாக முடியாத நிலையில் மிகவும் கீழிறங்கி வந்து வியாபாரத்தை நடத்தத் துவங்கிய பன்னட்டு மூலதனத்திற்கிருக்கின்ற ஒரே வழி சிறுவணிகத் துறையைச் சூறையாடுவதுதான். அதனால்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு மட்டுமில்லாமல் இராணுவத்தை அனுப்பி அதை அமுலாக்கவும் செய்தது. தமிழகத்திலும் இது நடக்கும். தயாநிதிமாறன் அதை வந்துவிட்டது பார் வளர்ச்சி என்பார் அதையும் இது நிபந்தையுடன் கூடிய முற்போக்கான ஆட்சி எனக் கைதட்டிக் கொண்டு ஒரு கூட்டம் சைக்கிள் பேரணி நடத்தும்.

சமூகம் :

வாழ்க்கைமுறை பண்பாடு கலாச்சாரம் அவைகளைப் பன்னாட்டு நிறுவலனங்கள் குத்தகைக்கு எடுத்துவிட்டன. பத்திரிக்கை, சினிமா, தொலைக்காட்சி, பண்பலை, வானொலிகளின் விளம்பரங்கள் இந்தக் குத்தகையைக் கொடுப்பதற்கான ஏஜெண்டுகள் “கோக்கில் விஷமுள்ளது” என இந்திய விஞ்ஞானிகள் கழகம் சொல்கிறது கோக்கைக்குடித்துவிட்டு “மெண்டோய்” எனும் மிட்டாயைச் சாப்பிட்ட பிரேசில் நாட்டுச் சிறுவன் மாரடைப்பு வந்து இறந்து போனான். ஆனால் சன் தொலைக்காட்சியில் ராதிகா கோக் மிகவும் சுத்தமானது அதில் விஷமில்லை என் குடும்பம் அதைத்தான் குடிக்கிறது. எனக்கு என் குடும்பத்தின் மேல் அதிக அக்கறை உண்டு என்கிறார். எத்தனையாவது குடும்பம் என்று சொல்லவில்லை. எம்.ஆர்.ராதாவிற்குப்போய் இப்படியும் ஒரு வாரிசு. இந்தச் சித்தி சொல்வது சத்தியமானது என தமிழ்ப்பெண்கள் நம்பிவிடுவார்கள் என்கிற அலட்சியம் தவிர கோக்கிற்கு வேறு என்ன நோக்கமிருக்க முடியும்? இட்லிக்கும் தோசைக்கும் பெப்ஸியை ஊற்றிச் சாப்பிடுகிறார்கள் சென்னை இளைஞர்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பொருட்களால் பிணைக்கப்பட்டுள்ளது. மீளுவதற்குக் கடினமான வகையில் நுகர்வுவெறி வலைப் பின்னலுக்குள் தமிழ்மக்க்ளின் வாழ்க்கை சிக்கிக் கிடக்கிறது. தமிழ் சினிமாவானது வலையை மேலும் பெரிதாகப் பின்னிக் கொண்டே போகிறது. அது எப்போதாவது தலை நிமிரும் போதெல்லாம் தமிழ் சினிமாப் பெருமுதலாளிகள் அதன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிடுகிறார்கள்.

அம்பேத்காரையும் அஜீத்தையும் ஒரே தகரப்பலகையில் வரைந்து வைத்து மன்றங்களைத் தொடங்குகிறார்கள் தாழத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள். “பாரு”க்குள்ளேயே (மதுபான விடுதிகளில்) உலகம் என்று சுழல்கிறது தமிழகத்தின் இளைய தலைமுறை. இடஒதுக்கீட்டு முறையினால் தலை நிமிர்ந்த பிற்பட்ட சாதிகளில் பிறந்து பார்பனர்களாக மாறிவிட்ட கும்பலால் ஸ்ரீரகத்தில் பெரியார்சிலை உடைக்கப்படுகிறது. பார்ப்பனர்கள் மறியல் செய்கிறார்கள் பெரியாரால் அடிக்பப்ட்ட பாம்பு அவரது வாரிசுகால் உயிரூட்டப்பட்டுவிட்டது.

நுகர்வு வெறிக்குப் பலியானவர்களால் அலட்சியப்படுத்தப்படுகிற முதியோர்கள் வீட்டைவிட்டு வெளியேறிப்போய் ஒன்ற பிச்சையெடுக்கிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். சகலதளங்களிலும் பெண்களை காம இச்சைக் கருவிகளாகப் பார்க்கும் ஆணாதிக்கப் பார்வையே இன்னும் நிலவுகிறது. மேலும் “நாங்களும் காம இச்சைக் கருவிகள்தான். எங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என ஆணாதிக்கம் நவீன மொழியில் திரை போட்டுப் பேசுகிறது. பெண்களும் அதற்கு இரையாகுகிறார்கள். குழந்தைகளையும் சிறுவர்களையம் தழிழ்ப் பண்பாடே தெரியாமல் வளர்த்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு நர்சரிப் பள்ளிகள் இயங்குகின்றன. மேடம் மாண்டிச்சோரி என்றாலே யார் எனத் தெரியாதவர்கள் தான் கிண்டர்கார்டன் பள்ளிகளை நடத்துகிறார்கள்.

மொத்தத்தில் தமிழ்ச் சமூகம் சகலவிதமான நவீன அறிவியல் வசதிகளுடன் சீரழிந்து நாறி வருகிறது.

4.தீர்வு :

தமிழகம் இருண்டு போகுமா? உலகமயம் விரைவாக அதைச் செய்து முடிக்கமா? முடிக்கலாம். ஒருவேளை மார்க்சியம் தோன்றாமலிருந்திருந்தால்.

தமிழகம் தனது சிக்கல்களுக்கான தீர்வினைத் தனியாகத்தீர்த்துக் கொள்ள முடியாது. காரணம் அதன் சிக்கல்களே சர்வ தேசியத் தன்மையுடையது. எனவே அதன் தீர்வுகளும் சர்வதேசத் தன்மையோடுதானிருக்கும். என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் இவற்றைப்பதிலாக இப்போது சொல்லி வைக்கலாம்.

உற்பத்தியிலுள்ள சீரழிவு முறையை உடனே தடுத்து நிறத்தவேண்டும். அது வர்க்கப் போராட்த்தின் வழியாகப் பெறப்பட்ட அதிகாரம் கிடைக்கும் போதுதான் நடக்கும். வர்க்கமாக அணி திரள வேண்டும். தடையாயிருப்பவைகளை எதிர்கொண்டு மீற வேண்டும். சாதி ஒரு தடை என்றால் அதை மீற வேண்டுமேயன்றி “சாதிதான்” எல்லாம் என்று அப்படியே நின்றுவிடக்கூடாது.

ஒரு புதிய ஜனநாயக அரசு வேண்டும். பொதுவுடமைப் புரட்சியாளர்கள் அதை அமைத்தே தீருவார்கள். இதுவே இயங்கியல் விதி.

உலகமயம் என்பது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முதலாளித்துவம் செய்த ஏவல். ஆனால் உலகமயம் விளைவிப்பதோ முதலாளித்துவத்தை அழித்தொழிப்போம் எனும் அறை கூவல். இன்று முதலாளித்துவ வாதிகள் முதலாளிகளின் பக்கங்களில் நிற்பதைவிட போலி ஜனநாயகவாதிகளின் பக்கமாகவே இருந்து காரியமாற்றுகிறார்கள். அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு அப்புறப்படுத்தபட வேண்டும்.

சுருக்கமாகச் சொல்லலாம் கத்தியின்றி இரத்தமின்றி கறிக்குழம்பு செய்ய முடியாது. செய்ய முடியும் என்கிற இதுநாள் வரையிலான மடமைத்தனமே சிக்கல்கள் உருவாக முதற்காரணம். அந்த மடத்தனத்தைக் கைவிடுவதே உலகமயச் சூழலில் தமிழகம் எதிர் கொண்டுள்ள சிக்கல்களின் தீர்விற்கான முதற்படி. மறுகாலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைவது இரண்டாவது படி.

-குருசாமி மயில்வாகனன்

Advertisements

One thought on “உலகமயச் சூழலில் தமிழகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s