ஒருநாட்டின் உள்நாட்டுக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கைகளையும் அந்த நாட்டின் ஆளும் வர்கத்தின் நலன்கள்தான் அவற்றைத் தீர்மானிப்பதில் முதன்மையானப் பங்காற்றுகிறது. தனி நபர்களின் விருப்பு வெறுப்பு அதனை ஒரு போதும் தீர்மானிப்பதில்லை. இந்தியாவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட நாடாக இலங்கையை பேணிக்கொள்ளும் வகையிலேயே இலங்கை குறித்த இந்தியாவின் கொள்கை உள்ளது. அதனாலேயே இந்திய அரசு, தேயிலைத் தோட்டத் தொழிளார்களில் 7 இலட்சம் பேரை நாடற்ற நாடோடிகளாகவும், 5 இலட்சம் பேரை இந்தியாவுக்கு அகதிகளாக ஏற்றுக் கொள்ளவும், 5 இலட்சம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கினாலும் ஒட்டுரிமையை பறித்துகொள்ளவும் சிங்களப் பேரினவாதத்திற்கு தமிழர்களைப் பலிகொடுத்தது. அது முதல் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை இந்திய தரகு முதலாளிகளுக்கு சாதகமாக அமையுமாறு பார்த்துக் கொண்டது.

1974 –ல் இந்திராகாந்தி மேலும் ஒரு துரோகத்தை தமிழர்கள் மீது திணித்தார், தமிழர்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறுவதைவிட தமிழக மீனவர்கள் மீது திணித்தார் என்பதே சரியாக இருக்கும். அது கட்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதாகும். ஆள் அரவமற்ற கட்சத்தீவு ஒரு பிரச்சனையா என்று பொதுவாகக் கூறும் அறிவுஜீவிகளும் உண்டு. உண்மையில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அந்தோனியார் கோவில் (சர்ச்) திருவிழாவைத் தவிர தமிழக மீனவர்களுக்கு அத்தீவில் ஒன்றுமில்லைதான். வலை உலர்த்துதல், ஓய்வு எடுத்தல் என்று கூறப்படும் காரணங்கள் உப்புக்கு சப்பாணிதான். ஆனால் கட்சத்தீவை கொடுத்தது மூலம் இந்திய- இலங்கை கடல் எல்லை மாற்றப்பட்டு கட்சத்தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துவந்த தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை பறிக்கப்பட்டது. அந்தப் பகுதியே மீன் வளமுடைய பகுதியாகும். இப் பகுதி இல்லையேல் தமிழக மீனவர்கள் குறிப்பாக இராமேசுவரம்- கோட்டைப் பட்டிணம் இடையிலுள் மீனவர்கள் இல்லை.

முதலாளிகளுக்கு தங்களது தொழில் தடங்களின்றி நடந்துவர பிரதேசங்களின் அமைதி என்பதும் முக்கியமானது. அதற்கு வில்லங்கம் ஏற்படும்போது அப்பிரதேசத்தின் மக்களை பிளவுபடுத்தி கலகங்களைத் தூண்டிவிடுகின்றனர். அக்கலவரங்களைக் காரணமாகக் கூறி தங்களுடைய எடுபிடிகளின் அரசாங்கத்தையும் அதன் இராணுவத்தின் தலையீட்டையும் அம்மக்கள் மீதும், அடிபணிய மறுக்கும் பிற அரசாங்கங்கள் மீதும் திணிக்கின்றன.

ஈழப் பிரச்சனையில் இலங்கை அரசை மிரட்ட புலிகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்த இந்தியா, புலிகளை ஒழித்து அமைதியை நிலைநாட்ட இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்கியதும் உலகறிந்த இரகசியம். இதனை முன்னின்று நடத்தியது ரா (R A W ) என்பதும் நாம் அறிந்ததே. அசோக் லேலண்ட் இந்துஜா, இலங்கை தேயிலைத் தோட்ட மலைகளை முழுவதும் கபளீகரம் செய்துள்ள டாட்டா, தொலைத் தொடர்புத் துறையில் மிட்டல் பார்தியா, ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய்களை இன்று முதலீடு செய்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளை ஒழிக்க இராணுவ உதவி செய்தது போல, இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதக் கொள்கைக்கு ஆதரவான இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களை இந்திய, தமிழக அரசாங்கங்கள் தண்டிக்கும், தடுக்கும் என்று எதிர்பார்ப்பது போன்ற முட்டாள் தனம் வேறு ஏதும் இல்லை.

இந்திய முதலாளிகளுக்காக கட்சத்தீவை, உண்மையில் தமிழக மீனவர்களின் வாழ்வை தாரைவார்த்துவிட்டு அவர்கள் மீதே “எல்லை தாண்டுகிறார்கள்” என்ற கோயபல்சு புளுகை குற்றமாக கூறுகின்றனர். சாமானிய மக்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றனர். இலங்கை மீனவர்கள் மத்தியிலும் இந்த நஞ்சை விதைத்து இருமீனவர்களையும் எதிர் எதிரே நிறுத்த முயற்சிக்கின்றனர்.

கட்சத்தீவையும் தாண்டி நெடுந்தீவு, காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மீன் பிடித்தலும், தங்கள் (முதல்நாள் சென்று தங்கிவிட்டு மறுநாள் வலை இழுத்துவருதல்) மற்றும் நெடுந்தீவில் படகுகளை பழுதுபார்த்தல் போன்ற தமிழக – இலங்கை மீனவர்களிடையேயான இணக்கமான உறவுக்கும் வேட்டுவைத்து பிரிவு மனப்பான்மையை இந்த ஆளும் வர்க்கம் விதைக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையே உள்ள தொழில்வகை முரண்பாடுகள் இன்று புதிதாக முளைத்தல்ல. தொழில்நுட்ப வகையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் உருவானவை இது. அதாவது பாச்சவலையிலிருந்து (நிலையாக ஒரே இடத்தில் வலைவிரித்து மீன்பிடிக்கும் முறை) இழுவலைக்கு (வலையை விரித்து இழுத்துக் கொண்டே வரும் இரட்டைமடி, ரோலர் மடி வகைகள்) தொழில்நுட்பத்தை மாற்றியதாலும், இயந்திரப் படகுகளின் வளர்ச்சி, முதலீடுகளின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியன இந்த முரண்பாடுகளுக்கு காரணமேயொழிய எல்லை தாண்டல் என்பதல்ல. இந்த முரண்பாடு இந்திய–இலங்கை மீனவர்களுக்கிடையான முரண்பாடு மட்டுமல்ல. தமிழக மீனவர்களுக்கிடையேயான முரண்பாடும்தான். அது வர்க்க முரண்பாடு.

மீனவர் என்றதும் ஒரு குறிப்பிட்ட சாதிவகையினர் “கடல்மேல் பிறக்கவைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்கவைத்தான்” என்ற பாடல் வரிகளும் மட்டுமே உங்கள் மனக்கண் முன் தோன்றலாம். ஒருகாலத்தில் அது உண்மையாக இருந்திருக்கலாம். அந் நிலை இன்று வெகுவாக மாறிவிட்டது. அனைத்து சாதியிலும் மீன்பிடித் தொழிலாளியும்  முதலாளிகளும் இன்று உண்டு. மீனவ சங்களின் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும் தேவர் சாதியினர் இன்றுள்ளனர்.

“எல்லை தாண்டல், இலங்கை மீனவர்களுடனான முரண்பாடு” ஆகியவற்றின் உண்மை நிலையை அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

—சாகித்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s