தமிழகத்தின் தாய்வீடு தஞ்சை மண்டலம். காவிரியின் கழிமுகம். நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை என்பது அதன் விவசாய பங்களிப்பை பறை சாற்றும்.

      உழவுத்தொழில் சார்ந்த ஒரு சொற்களஞ்சியமே பதிப்பிக்கும்படி புகழ் பெற்ற நெற்களஞ்சியமானது அதன் பூகோள அமைப்பில் தீபகற்பம்போல் காணக்கிடைக்கும். அதன் கங்குகரையில் மீன் வளமும், கூர்முகமான கோடிக்கரையில் மான் வளமும் பசுமை படர்ந்த காட்டு மலர்களின் தேன் வளமும், வரலாறு – இலக்கியம் யாவற்றிலும் தனது தடம் பதித்த தஞ்சைக்கு ஏன் அது தழுவி நிற்கும் தமிழகத்திற்கும் மீத்தேன் வடிவில் இன்று அழிவு வருகிறது. மீத்தேன் என்பது அதிக சக்தி வாய்ந்த எரிபொருள். உலக சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் ஏக கிராக்கியுள்ள பணமதிப்பு மிக்கது. அது மன்னார்குடியிலும் சுற்றியுள்ள 691 சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பகுதியிலும் நிலத்துக்கடியில் பேரளவில் இருக்கிறது. அதைவிடவும் பன்மடங்கு மதிப்பு வாய்ந்த பழுப்பு நிலக்கரியும் உள்ளது. இவைதான் தனியார் முதலாளிக்கும் மற்றும் அவர்களின் எடுபிடிகாளாயிருக்கும் அரசுக்கும் கண்ணை உறுத்துகிறது.

      “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி காரப்பரேஷன்” ஒரு தனியார் நிறுவனம் அதில் ஈடுபடுகிறது. இந்திய அரசு அதை அந்த நிறுவனத்திற்கு தாரை வார்க்கிறது. அரசின் தனியார்மய. தாராளமய, உலகமய கொள்கை அதற்கு காரணமாகிறது.

      ‘நெல்’ என்ற ஒரு சொல் இங்கு வாழ்வையும் அதன் மதிப்பீடுகளையும் தீர்மானித்தது. மாவுச்சத்து, நார்ச்சத்து, B-12 சத்து கொண்ட ஊட்டம் மிகுந்த உணவுப் பொருள் நெல். மாடுகட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டிப் போரடித்த சோழநாடு, கங்கைகொண்ட சோழபுரம், பொறியாளர்கள் வியக்கும் கல்லனை, பூதலூர் ஏரி, தென்பரம்பூர் சட்ரஸ், அரியலூர்- திருமானூர், கொள்ளிடம் கரை, முத்துப்பேட்டை, தில்லை மரங்கள் சூழ்ந்த இயற்கை அரண் எனும் அலையாத்திக் காடுகள், வடுவூர், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், தரங்கம்பாடி கோட்டை, கம்பன் பிறந்த தேரெழுந்தூர், தஞ்சைக்கு காவிரி தண்ணீர் வந்தால் மடைதிறக்கும் மாயாவரம் எனும் மயிலாடுதுறை இனிமேல் இவையாவும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷனின் வேட்டைக்காடு, காட்டிக்கொடுப்பது அரசு.

            வாழ்வு இழக்கப்போவது 50 இலட்சம் உழவர்கள். வாரிச் சுருட்டப்போவது தனியாரும், தரகு முதலாளிகளும். 1,64,819 ஏக்கர் பரப்பளவு அதன் இலக்கு. மீத்தேன் மதிப்பு 6.25 இலட்சம் கோடிகள். அரசுக்கு வெறும் 5 ஆயிரம்கோடி. 30 ஆண்டுகளுக்கு மீத்தேனும் அதன் பிறகு மலைபோல் அமைந்துள்ள நிலக்கரியை எடுப்பதே இறுதி இலக்கு.

      உலகின் மிகப்பெரிய விவசாய இயற்கைச் சமவெளி சின்னாபின்னமாகப் போவது நம் தலைமுறையிலா நடக்க வேண்டும். மீத்தேன் என்னும் இயற்கை எரிவாயுவை பெஞ்சமின் பிராங்கிளின் 1776ல் கண்டு பிடித்தார். பூமியில் 850 ட்ரில்லியன் கனமீட்டர் மீத்தேன் உள்ளது. 250 ஆண்டுகளுக்கு மட்டுமே அது பயன்படும். செக் குடியரசு, ருமேனியா, ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் யாவற்றிலும் தடுக்கப்பட்டுள்ள மீத்தேன் எடுப்புத் திட்டம் அமெரிக்காவிலும் 250 சமூகங்கள் அதனை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. ஆயினும் அங்கெல்லாம் மக்கள் நெருக்கம் அதிகமில்லாத பகுதிகளிலேதான் எடுக்கப்பட்டது. ஆனால் நமது டெல்டா ‘வயலும் வாழ்வும்’ என்பதுபோல குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் நெல்லும் நீரும் உறவாடுவதுபோல் அமைந்திருப்பதாகும்.

            ஊர்காணிகளை எல்லாம் உழுது பயிரிட்ட பின்புதான் நீ தில்லை நடராஜனை பார்க்க போகமுடியும் என்று கட்டளையிட்டதும், உழுது பயிரிட்டு பின் தில்லைக்கு நந்தன் சென்றபோது அவனுக்கு சாதி இழிவு சூட்டி தில்லை ஆலயத்திலே நுழையக் கூடாது என தடுத்து நந்தன் தடுப்புச் சுவர் இன்றும் உள்ளது. காவிரி நதி பாயும் கரிசல் பூமியெல்லார் பாவி பண்ணையார்கள் சுருட்டிக் கொண்டனர். நிலபிரபுத்துவத்தின் நெருப்பு நாக்குகளுக்கு 44 உழைக்கும் கண்மணிகளை பலிகொண்ட வெண்மணியும், நெல் மணிகளை மையப்படுத்தியே நிகழ்ந்த சம்பவம் ஆகும். வர்க்கப்போரின் வீரமறவர்களை இந்த மாநிலத்திற்கே தந்த மரபு தஞ்சையின் தனிச்சிறப்பு. ஆம்பலாபட்டு ஆறுமுகம், தென்பரையில் சங்கம் கட்டிய ஜாம்புவானோடை சிவராமன், வாட்டாகுடி இரணியன், களப்பாள் குப்பு, பின்னாளில் இலக்கியத்தில் அதனை பதிவு செய்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுயமரியாதைச் சுடர் பட்டுக்கோட்டை அழகிரி, ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் உனக்குத் தேவையா தியாகேசா என்ற திருக்குவளை கருணாநிதி, காவிரிப்படுகையின் வரலாறு என்பது அதன் உற்பத்தியில் யாருக்கு பங்கு என்பதிலேயே மையங் கொண்டிருந்தது.

      தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா.

இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ !

      -என்று பாரதி பாடியது விடுதலையை என்றால், தஞ்சையில் அது வேளாண் தொழிலுக்கு பொருந்தும். இறையாண்மை மிக்க அரசும், அதன் சோசலிச அணுகுமுறை அரசு நிறுவனங்களும், தற்சார்பு தொழில் கழகமும் மீத்தேன் திட்டத்தை கையில் எடுக்கும் என்றால் டெல்டாவையே இந்த தேச நலனுக்காக தியாகம் செய்ய தஞ்சை விவசாயி தயங்கமாட்டான். ஆனால் பொதுத்துறைகள் தனியார் மயமாக்கம், கல்வி, மருத்துவம் யாவும் தனியார்மயம், சில்லரை-மொத்த விற்பனைகளில் அந்நிய கம்பெனிகளுக்கு அனுமதி. ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் ஆளையும் கடித்த கதையாக திங்குற சோத்துல மண்ணை அள்ளி வைப்பதுபோல. பொன்விளையும் பூமியாம் தஞ்சையையும் தாரை வார்க்க தயாராகிவிட்டது அரசு.

      ONCG என்கிற அரசு நிறுவனத்துடன், ஆரம்பகட்ட வேலைகளை GEEC தொடங்கிவிட்டது. திருட்டுத்தனமாய் சதிவேலைகள் ஆரம்பமாகிவிட்டது. இன்று எங்கு திரும்பினும் கண்மாய்கள், பம்ப் செட்டுகள், கால்வாய்கள். ஓரிரு ஆண்டுகளில் காட்சிகள் மாறும். ரசாயன மணல் குன்றுகள், ரசாயன கலவைநீர் டேங்குகள், கிணறுகள், 2000 இடங்களுக்கு மேல் 2000 அடிவரை கீழே இறக்கப்பட்ட 3அடி விட்டமுள்ள குழாய்களை காத்து நிற்கும் உலோக கோபுரங்கள், ராட்சச டேங்கர் லாரிகளின் இறைச்சல்கள், புகை மண்டலங்களுக்குள் மறைந்து நிறம் குன்றிபோன மரங்கள், செடிகள். இப்படி உருக்குலைக்கப்பட்ட தஞ்சை மண்டலத்தை பார்க்க சகிக்குமா? சம்மதமா? பசுமைப்புரட்சி விளைவுகளால் பாழாகிக் கிடக்கும் மண், மீத்தேன் திட்டத்தால் பாலைவனமாகும்.

2000 அடிகள் பூமிக்குள் இறக்கப்படும் ராட்சத குழாய்களின் முடிவில் பக்கவாட்டில் நாலா திசைகளிலும் 2 கி.மீ. தொலைவிற்கு பல துளைகள் இடப்பட்டு நிலக்கரி பாறைகளில் விரிசல் ஏற்படுத்த செலுத்தப்படும் கனநீர் கரைசலே நம்மை முதலில் கொல்லப்போகும் எமன். 600க்கு மேற்பட்ட கொடிய ரசாயன கலவைகளும், மணலும் கலந்த கனநீரில் முக்கால் பாகம் பூமிக்குள்ளேயே தங்கியிருந்து நிலத்தடி நீரை நஞ்சாக்கிவிடும். ஆனால் மீத்தேனை மேலே கொண்டுவரும் முன்னாலேயே ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லாமல் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு குளங் குட்டைகள், ஏரி, ஆறுகள் யாவும் பாழடிக்கப்பட்டு ஆடு, மாடு, மீன் என அத்தனை உயிர்களும் மடிந்துவிடும்.

      40 ஆண்டுகள் வரை ஆயுள் காலம் உள்ள ஒவ்வொரு கிணறுகளும் நமது வரலாறு, பசுமை, பண்பாடு, வாழ்வு, கனவுகள் என யாவற்றையும் புதைக்கும் சவக்குழியாக விளங்கும். அதன்பின் பூமியைப் பிளந்து தற்போதைய கணக்கெடுப்பின்படி 19788 மில்லியன் டன் என இந்தியாவிலேயே அபரிமிதாக கிடைக்கும் பழுப்பு நிலக்கரியை எடுப்பார்கள்.  விவசாயிகளின் நெஞ்சைப் பிளந்து இருதயத்தை பிடுங்குவதுபோல மக்களையும் மண்ணையும் பிணமாக்கிவிட்டு தனியார் கம்பெனிகள் அதை பணமாக்கி கொள்வார்கள்.  அதற்கு கங்காணி வேலை, காவல் காக்கும் உரிமையை மட்டும் அரசு ஏற்றுக்கொள்ளுமாம்.

      பாறை அடுக்குகளுக்கு கீழே இருந்து உறிஞ்சி மேலே கொண்டு வரப்படும் தண்ணீரில் கடல் நீரைவிட 5 மடங்கு உப்புத் தன்மையிருப்பதாலும், கனநீரின் கொடிய விஷத்தன்மையாலும் டெல்டாவின் புல்லும் மருந்தாயிருந்த காலம் மலை ஏறும். ஆமாம், மருந்துக்குக்கூட புல்லையும் இங்கு பார்க்க முடியாமல் போகும். சுவாசிக்கும் காற்றில் பென்சீன் என்ற ரசாயனம் கலந்துவிடும். தலைவலி, மயக்கம், பார்வை இழப்பு, மூளை நரம்பு நோய்கள், இருத நோய், சிறுநீரக நோய் என் பற்பல நோய்களுக்கு மக்கள் ஆளாவார்கள். ஒரு அறிவிக்கப்படாத ரசாயன யுத்தம் நிகழ்த்தப்படும்.

      இத்தனை துன்பங்களையும் தவிர்க்க முடியாதா? மாற்று வழியில் மீத்தேன் தயாரிக்க முடியாதா? மீத்தேனில் கிடைக்கும் வருவாயை வேறுவழிகளில் ஈட்ட முடியாதா? நிச்சயமாக முடியும்.

      30 ஆண்டுகளுக்கான 1,60,000 ஏக்கர் நிலத்தில்

      இருபோக நெல் உற்பத்தி வருவாய் மதிப்பு          ரூ. 20,736  கோடி

      மரம் விறகு மதிப்பு                                                             ரூ.  2,304  கோடி

      ஆடு மாடுகள்                                                                         ரூ.  4,336.5 கோடி

      பயறு ஏக்கருக்கு ரூ. 9 ஆயிரம்.

      30 ஆண்டுகளுக்கு                                                              ரூ  4,320   கோடி

       ஆக கூடுதல்                                                                        ரூ. 31,696.5 கோடி

ஆனால் 30 ஆண்டுகளில் கிடைக்கும் மீத்தேன் எரிவாயுவின் மதிப்பு ரூ. 34,246 கோடிகள்.

இந்த வருமானம் முழுக்க முழுக்க தனியாருகே கிடைக்கும். விவசாய வருமானம் என்பது சாதாரண உழவர்களுக்கு கிடைக்கும். இங்கு இது யார் ஆளும் வர்க்கம் வெளிச்சம் போட்டு காட்டி விடுகிறது.

      பொருளாதார வருமானத்துக்கும் மீத்தேன் உற்பத்திக்கும் உறுதியளிக்கும் ஒரு திட்டமும் உள்ளது. அது மனித, விலங்கு கழிவுகளிலிருந்து மீத்தேன் தயாரிப்பதாகும். 11 இலட்சம் மாடுகள், 12.5 இலட்சம் ஆடுகள், 50 இலட்சம் மனிதர்களின் கழிவுகள் ஒரு நாளைக்கு 347.5 இலட்சம் கிலோ. ஒரு கிலோ கழிவுக்கு 0.03 கன மீட்டர் வீதம் கிடைக்கும் எரிவாயு 1,425 இலட்சம் கன மீட்டர். ஒரு கன மீட்டருக்கு ரூ 30 வீதம் கிடைக்கும் மீத்தேனின் மதிப்பு ஒரு நாளைக்கு ரூ 312.75 இலட்சம் 30 ஆண்டுகளுக்கு   ரூ 34,246 கோடி. ஆடு, மாடுகளை வளர்க்க உழவர்களுக்கு அரசு உதவினால் 34,246 கோடியை இரட்டிப்பாக்கலாம். மீத்தேனை வைத்து மின் உற்பத்தி செய்யலாம். இத் திட்டம் இலகுவானது. ஆனால் இதை செய்ய அரசு தயாரில்லை. நமது சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை சிபாரிசு செய்யவும் உரிமையற்றவர்கள். ஏனெனில் ஆள்வது அவர்கள் இல்லை. முதலாளிகள். இனி யாரை நம்புவது? எதிர்காலம் இருள்மயமாய்த் தெரிகிறது. ஆனால் இந்திய வரலாற்றில் இதுபோன்ற எல்லா இருட்டையும் கிழித்து வெளிவந்த அடையாளங்களும் நமக்குத் தெரிகிறது.

      1860 பிரிட்டிஷ் அரசு தங்கள் நாட்டு நவீன நூற்பாலைகளுக்குத் தேவையான சாயம் தயாரிக்க இந்திய விவசாய நிலங்களில் உணவுப் பயிருக்குப் பதிலாக அவுரி பயிரிடச் சொல்லி கொடுமைபடுத்தி நிர்பந்தப்படுத்தியபோது விவசாயிகள் வெகுண்டெழுத்து ஒத்துழையாமை எனும் வேலை நிறுத்தத்தை நிகழ்த்தி ஆங்கிலேய அரசை பணிய வைத்தனர். தியாகமும் வீரமும் நிறைந்த அந்தப்போர்தான் 60 ஆண்டுகளுக்குப் பின்னால் நிகழ்ந்த காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கே முன்னோடி என்றால் விவசாயிகள் தலைசிறந்த தலைவர்கள் என்பது சிலிர்க்க வைக்கிறது.

      1855-56ல் சாந்தால் விவசாயிகளின் மாபெரும் கிளர்ச்சி, 1857 புரட்சில் விவசாயிகளின் பேராதரவு, 1836-1896 கேரளத்தில் நடந்த மாப்பிள்ளை விவசாயிகளின் பேரெழுச்சி, ஆகியன இந்து-முஸ்லீம் ஒற்றுமையாய் நின்று வெள்ளை ஏகாதிப்பத்தியத்தை நிலைகுலைய வைத்த வரலாற்றுப் பதிவு ஆகும்.

      1830-31 மைசூர் விவசாயிகளின் பேரெழுச்சி. 1830ல் மைசூரில் விவசாயிகள் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ‘சதார்மல்லா’ என்கிற விவசாயிகளின் அரசை நிறுவினார்கள். 1831ல் ஃபாத்பாத் என்ற இடத்தில் இவான்ஸ் என்ற வெள்ளைக்காரன் தலைமை ஏற்று வந்த படையை விவசாயிகள் தோற்கடித்தனர்.

      அன்றைக்கும் கொள்ளயடிக்கும் ஏகதிபத்திய நிறுவனங்கள், ராணுவம், போலீஸ், காட்டிக்கொடுக்கும் உள் நாட்டு அதிகார மையங்கள் எல்லாம் இருந்தன. வாழ்வுரிமைகளும், இயற்கை வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இன்றைக்கு பெயர்கள் மாறியுள்ளன. நிலைமைகள் அப்படியேதான் உள்ளது. விவசாயி போராளிகளாய் மாறவேண்டியது மட்டுமே தேவையாய்  உள்ளது. நாம் உள்ளூரில் மீத்தேன் எடுக்கும் நிறுவனத்திற்கு கொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலும் தனியார்மய – தாராளமய- உலகமய கொள்கைகளை தலையில் தாங்கி திரியும் துரோக அரசுக்கு சம்மட்டி அடியாகும்.

மருத்துவர். தசரதன்,

திருத்துறைப்பூண்டி.

செல்: 97880 49424

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s