(ஆதங்கத்துடனான ஓர் அனுபவ பகிர்வு)

– வழக்கறிஞர் சி. மாதவி

‘சாத்திரம் எனும் பெயரில் முடமாக்கி, சாணிப்பாலுக்கும், சவுக்கடிக்கும் அஞ்சிடச் செய்து, எம் முந்தையத் தலைமுறையை ஒடுக்கிட்ட அதே ஆதிக்கச் சாதியினரின், ஆளும்வர்க்கம், “”””குண்டாந்தடிக்கும்”” பொய்வழக்கிற்கும் ஆட்படுத்தி ஒடுக்க நினைக்கிறது எம் தலைமுறையையும் – சட்டம்’ எனும் போர்வையில்!

ஆம். அதற்கு இன்னுமொரு உதாரணமானது ஊத்துக்குளி பகுதியில் வாழும் அருந்ததிய மக்களின் மீதான காவல்துறையின் அடக்குமுறை.

‘காணவில்லை இருவரை’- காவல் நிலையத்தில் முறையிட முடியா நிலை. ஏனெனில், இழுத்துச் செல்லப்பட்டது ஊத்துக்குளி காவலர்களால் தொடர்ந்திடும் இதுபோன்ற சம்பவங்களை சகிக்கமுடியாத அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரை அணுகுகிறார்கள். யாரையும் தாக்கவோ, யாருக்கும் இடையூறு செய்யவோ, எந்தப் பொருளையும் அழிக்கவோ முயலவில்லை. “”””மூன்று நாட்களுக்கு முன்பு காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டவர்களின் நிலை என்ன? என்று தெரியும் வரை, ‘பட்டினிப்போராட்டம்’ நடத்துவோம்””- என்றனர், அனுதினமும் வறுமையோடு போராடும் எம்மக்கள்-மக்கள் குறைகேட்பு நாளன்று!. மாவட்ட ஆட்சியர் நினைத்திருந்தால், அடுத்த அரை மணி நேரத்தில், காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டவர்களை கண்முன் நிறுத்தியிருக்க முயற்சி எடுத்திருக்கமுடியும்; குறைந்தபட்சம் விசாரணைக்காவது, உத்தரவிட்டிருக்க வேண்டும்.

அதைச் செய்திடாமல், கோரிக்கையுடன் வந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டது, எவரைப் பாதுக்க? என்பது அடுத்த ஆறு மணி நேரத்திற்குப் பின்னிட்டுத்தான் தெரிந்தது.

காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்தது. அது வரை எங்கு வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று தெரியாத இருவரையும் சேர்த்து!

இந்நிலையில்தான், தோழர் ஆனந்தன் கொடுத்த தகவலின் பேரில், கைதுக்குள்ளாக்கப்பட்டிருந்த மக்களைச் சந்தித்திட சென்றேன், ஒரு வழக்கறிஞராக!. காவலில் உள்ளவர்களுக்கு, வழங்கப்பட்டுள்ள ‘வழக்கறிஞரைச் சந்திப்பதற்கான உரிமை’ எவராலும் பறிக்கப்படக்கூடாத ‘அடிப்படை உரிமை’ என்று சட்ட ஏட்டில் எழுதப்பட்டிருந்திருந்ததை மனதில் வைத்துக் கொண்டு; திருப்பூர் தெற்குக் காவல் நிலையத் துணை ஆய்வாளரிடம், கைதுக்குள்ளாக்கப்பட்டவர்களை சந்தித்திட அனுமதி கேட்டேன். அனுமதி மறுக்கப்பட்டது. சட்டத்திற்குட்பட்டவர்கள் காவலர்கள் இல்லை போலும்! அது அரசியலமைப்புச் சட்டமாக இருந்தாலும்… என் பல மணி நேர வாதங்களுக்குப் பின்னிட்டு, அவர்களிடமிருந்து வந்த பதில், “”””யாரையும் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்பது சட்டத்தைக் காப்பற்ற நியமிக்கப்பட்டுள்ள மாவட்டக் கண்காணிப்பாளரின் உத்தரவு”” என்றனர்.

மாவட்டக் கண்காணிப்பாளரை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, “”””ஐயா, கைதுக்குள்ளாக்கப்பட்டவர்கள் பயங்கரவாதிகளா? வழக்கறிஞரைச் சந்தித்திடக் கூட தடை உத்தரவு போட்டிருக்கீங்க? இது மனித உரிமை மீறல், சட்ட மீறல் என்பது உங்களுக்குத் தெரியாதா?”” என்று கேட்டபோது, “”””நான் அவர்களிடத்தில் பேசுகின்றேன்”” என்னை சமாதானப்படுத்தினார். அதன் பின்னிட்டும், பல சாக்குபோக்குகளால், நானும், தகவல் பெற்று வந்திட்ட ஜனநாயக ஆற்றல்களும் வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டோம். காவலில் இருந்த காவலர்களுக்கு போராடியதால் கைது செய்தவர்களை விடுவிப்பதற்கான உத்தரவும், காவலர்களால் ஏற்கனவே இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் கோவை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு விட்டனர் எனும் தகவலும் கிடைக்கப் பெறும் வரை தடுக்கப்பட்டோம். ஏனெனில், மூன்று நாட்களுக்கு முன் இழுத்துச் சென்றவர்களை 24 மணிநேரத்திற்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாக காவலர்களுக்குத் தன்குற்றத்தை மறைத்திடவும்; பொய்வழக்கு புனைந்திட கால அவகாசம் அளித்திடவும்; இதற்கிடையில் எந்தவித எதிர்வினையும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும்; – மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் இணைந்து அழகாக காய் நகர்த்தியிருக்கிறார்கள் என்பதை அப்போது தான் உணரமுடிந்தது.

நாங்கள் மண்டபத்திற்குள் சென்றபோது, ‘வயர்லஸ்’ போனில் மிகவும் பரபரப்பாக தகவல் பரிமாற்றம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. தாங்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாகவே, சிறுவர்கள் கூட இருந்தனர். வாய்விட்டுக் கதறி அழுத குழந்தை ஒன்றின் அழுகுரல். இதற்கு மத்தியில், கத்தி அழக்கூட முடியாமல், தங்களைச் சுற்றி நின்று கொண்டிருக்கும் காவலர்கள் தங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கின்ற எச்சரிக்கையுணர்வுடன், தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கூறிடக்கூட அஞ்சிய அவர்கள், “”””நீங்கள் எங்கள் பகுதிக்கு வரவேண்டும்”” என்று மட்டும் பணித்தார்கள்.

மறுநாள் பத்திரிக்கைகளில் வெளியானது. “”””இரயிலைக் கவிழ்க்கச் சதி! இருவர் கைது”” ! என்று.

சாதியஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியிலோ, எதிர்வினையாற்றுவதிலோ கூட, தென்மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்குத் தமிழகத்தில் ஒரு வலுவான தன்மை இருந்ததில்லை. இச்சூழலில் என்னுடைய கேள்வி ஒன்றுதான்!

இன்னமும், தன்னை மிதிப்பவனைக் கூட, ‘சாமி’ என்று கும்பிடும் இம்மக்களிடத்தில், சமூகவிடுதலைக்காக இரயிலைக் கவிழ்க்க வேண்டும் என்கின்ற உணர்வு வந்திருக்குமேயானால், ‘அருந்ததியர்’ என்பதாலேயே அதிகார வெறியாட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் காவல்நிலையமே முதலில் அழிக்கப்பட்டிருக்கும் என்பதும்; எம்மக்களின் உடலில், சிந்தனையில் தலைமுறை-தலைமுறையாய் ஏற்றிவிடப்பட்டிருக்கும் ‘அடிமை’ எனும் நஞ்சு அவ்வளவு எளிதில் முறித்துவிடக்கூடியது அல்ல என்பதும்; உங்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படியிருக்கையில், ஏன் இந்தப் பொய்வழக்கு? காவல்துறையே, நீ செய்திட்ட எந்தக் குற்றத்தை நியாயப்படுத்துவதற்காக, உன்னை ஏவிவிட்ட எந்த எஜமானனை மறைப்பதற்காக எம்மக்கள் மீது இக்குற்றத்தைச் சுமத்தியிருக்கிறாய்? இந்தக் கேள்விகளை விதையாகக் கொண்டுதான், திருப்பூர் மாவட்ட அளவில் ஒரு வலுவான “”””மக்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பு”” உருவாக்கப்பட்டது.

காவல்துறையால் சதிகாரர்களாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரும் குற்றமற்றவர்கள். உரிய நீதிவிசாரணை வேண்டும் எனும் அடிப்படையிலான மனு, மனித உரிமை ஆணையங்கள், முதல்வரின் -தனிப்பிரிவு, மனித உரிமை நீதிமன்றம் என மனித உரிமையைக்காக்கும் அரணாகத் தன்னைக் காட்டிக் கொண்டிருக்கும் அத்துணை அரசு இயந்திரங்களுக்கும் கூட்டமைப்பு சார்பாக ‘மனுக்கள்’ கொடுக்கும் சடங்கு மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பின் செயல்திட்டத்தின் எல்லை விரிவடைந்து செல்லும் என்பதை ஊத்துக்குளி அருந்ததிய மக்கள் இருக்கும் எல்லையை அடையும் வரை உணர்ந்திடவில்லை.

டிச.6 அம்பேத்கார் நினைவு நாளன்று, எங்கள் தலைமுறையிலும் சாதிய அடக்குமுறைக்கு, அடிபணியும் நிலை தொடர்ந்திட விடமாட்டோம் எனும் உறுதியோடு, அவரது உரத்த சிந்தனைகளை நெஞ்சில் உரமாக்கிக் கொண்டு, மக்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்புத் தோழர்களுடன் நானும் அப்பகுதிக்குச் சென்றேன்.

அப்பகுதி மிகவும் அமைதியாகத்தான் இருந்தது. இருப்புப்பாதைக்கும்- அப்பகுதிக்குமான இடைவெளி ஏறக்குறைய 8 கி.மீ இருக்குமென்பதால், தொடர்வண்டிச் சத்தம் கூட கேட்டிடவில்லை. ஊத்துக்குளியிலிருந்து-ஏறக்குறைய 3 கி.மீ. உள்செல்ல, தார்சாலையோ, பேருந்து வசதியோ இல்லாத காரணத்தால் வாகனங்களின் சத்தம் கூட கேட்காமல் நிசப்தமாக இருந்த வேளையில், செவிப்பறையைக் கிழிக்குமளவிற்கான ‘வெடிச்சத்தம்’ கேட்டது என்னவென்று பார்க்கையில், ‘எச்சரிக்கை பலகை’ கூட ஏதுமின்றி செல்லும் பாதைக்கு அருகாமையிலேயே பெரிய பாறாங்கற்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது தெரிந்தது. தோழர் ஒருவர், “”””இவர்கள் எங்காவது, செலவில்லாமல் கற்களை, ஜல்லிகளாக்கிட இருப்புப் பாதையில் போடுகிறார்களோ?”” என்று கூறி சிரித்தபோது, என்னால் சிரிக்க முடியவில்லை. ஏனெனில்,

கண்கள் கடந்திட்ட அப்பகுதி என்னுள் ஒரு கனத்தை ஏற்படுத்தியிருந்தது. தனக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தரும்படி, அரசை நிர்பந்திக்கக் கூட முன்னெழாமல், அடிப்படை வசதிகளேதுமற்று, அன்றாடங்காய்ச்சிகளாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் “”””இம்மக்களிடமா இரவில் கவிழ்ப்பு -சதி வழக்கு விசாரணை””? என எண்ணி நகைத்திட முடியவில்லை. காரணம், காக்கிச் சட்டைக் காட்டுமிராண்டிகள்

தனது அட்டகாசத்தை இன்னும் அதிகமாகவே காட்டியிருக்குக்கூடுமோ? என்ற ஊகம் எனது சிந்தனையை ஆட்கொண்டிருந்தது. எனது ஊகத்தை உறுதிப்படுத்தியது அப்பகுதி மக்களின் உள்ளக் குமுறல்கள். அதனை ஒவ்வொன்றாக விளக்கத் தேவையில்லை ஏனெனில், ‘தேடுதல் வேட்டை’ எனும் பெயரில் சீருடைக்காரர்களால் நிகழ்த்தப்படும் ‘மனித வேட்டையில்’ மாறுதல் என்ன இருந்துவிடப் போகிறது?

இந்திய அரசின் பாதுகாப்புப் படை; ‘பயங்கரவாதிகளின் வேட்டை’ எனும் பெயரில் படுகொலை செய்கிறது – காஷ்மீரிய மக்களை! இந்திய அரசின் இராணுவம் – ‘பசுமை வேட்டை’ எனும் பெயரில் அழிக்கிறது பழங்குடியின மக்களை! தமிழக – கர்நாடக அரசின் கூட்டுப்படை ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ எனும் பெயரில் வாச்சாத்தி கிராமத்தையே சுடுகாடாக்கியது.

“”””சீருடையின் நிறம் மாறலாம்; செயல் ஒன்றுதான்! வேட்டையாடுதல் – சிறுபான்மையின மக்களை; பழங்குடியின மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களை!””

ஒரு வேறுபாடு என்னவெனில், காக்கி உடை இப்பகுதியில் ‘படுகொலை’ நிகழ்த்தவில்லை. ஆனால் ‘மரணம் விளைவிக்காத கொலைக் குற்றத்தை’ செய்திருக்கிறது. ‘வண்புணர்ச்சி’ – எதுவும் அரங்கேற்றப்படவில்லை. ஆனால், பாலியல் தொந்தரவுகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

‘உள்ளுர் காவலர்கள்’ என்பதால் அல்ல; ‘வேட்டை’ துவக்க நிலையில் இருந்ததால்! இந்தத்துவக்க நிலைக்கே துவண்டுபோய் இருந்தனர் அங்கிருந்த சிறார்கள்.

“”””எங்களுக்குப் பயமா இருக்கு”” “”””நாங்க தூங்கும் போது, எங்க அப்பாவை, அம்மாவை போலீஸ் பிடிச்சிட்டுப் போயிடுமோன்னு தூங்கவே மாட்டோம்””, “”””பள்ளிக்கூடம் போகும் போது போலீஸ்காரங்க எங்க பேக்கையும், நோட்டுகளையும் பிடிங்கிப் பாக்குறாங்க; எங்களையும் பிடிச்சுட்டுப் போயிடுவாங்ளோன்னு, போலீஸ் வண்டிச் சத்தத்தைக் கேட்டாலே நாங்க ஓடிடுவோம்””- என்று இப்பிஞ்சுப் பிள்ளைகள் எங்களிடம் உதிர்த்திட்ட வார்த்தைகள், நெஞ்சைப் பிளப்பது போன்ற ஒரு வலியை ஏற்படுத்தியது.

பிஞ்சுப் பிள்ளைகள் குற்றமென்ன செய்தது? அருந்ததியரின் பிள்ளையாய் பிறப்பதுவும் குற்றமோ?

“”””பள்ளியில் தடியைப் பயன்படுத்தக் கூடாது”” அரசாணை – சரிதான்!

எம் பிள்ளைகளின் கனவில் கூட குண்டாந்தடிகள் அச்சுறுத்துகிறதே!

‘மரணம்’ அது கனபொழுது வேதனை; ஆனால் ‘மரணபயம்’ கணக்கிட முடியா வேதனை. அந்த வேதனை, அந்த பயம் அதிகரித்திருந்தது அம்மக்களிடம். காரணம், நாங்கள் செல்வதற்கு முன்தினம் அப்பகுதிக்கு வந்திட்ட காவல்துறை, “”””போராட்டமா? நடத்திறீங்க: இன்னும் 15 பேரை கைது செய்யவேண்டிய தேவை இருக்கு; ஜாக்கிரதை!”” என்று மிரட்டிச் சென்றிருந்ததால்!

காவல்துறை, அரசு, அரசு இயந்திரங்கள் இவை அனைத்துமே என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிற்கும் இணைபிரியாக் கூட்டணிக்காரர்கள்; உரிமைக்கான போராட்டத்தில் உயிரைக் கொடுத்தாலும் இவர்களிடத்தில் நீதியைப் பெற்றுவிட முடியாது என்பதையும்; நீதிக்காக குரலெழுப்புவர்கள் கூட, இவர்களின் கொடுங்கரத்தால் நசுக்கி எறியப்படுவார்கள் என்ற வரலாற்று உண்மையை உணர்ந்தவர்களாகவே அம்மக்கள் இருந்தனர், என்பதை என்னால் உணரமுடிந்தது,

“”””குண்டாந்தடிகளும், குற்றச்சாட்டுகளும் குனிந்தவர்கள் மீதுதானே பாயும்!””. பொய்வழக்கு, காவல் துறைக்கு கைவந்த கலை; பாதிப்பிற்குள்ளாகும் மக்களின் நிலை?  என்னுள்ளும் இக்கேள்வி எழுந்தது. அதேசமயம்,

“”””இழப்பதற்கு ஏதுமற்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலித்திடச் செய்திட்டால், ஓலமிடும் ஓநாய்கள் ஓட்டமெடுத்திடும். வரலாற்றையே புரட்டிப்போடும் வல்லமை, உழைக்கும் மக்களின் வலிமையான போராட்டத்திற்கு உண்டு”” -எனும் எனது அசைக்கமுடியாத உறுதியை என்னுள் எழுந்த அக்கேள்வி தளர்த்திடச் செய்யவில்லை. மாறாக, ‘மக்கள் உரிமைமீட்புக் கூட்டமைப்பின் செயல்பாடு குறித்த நடைமுறைத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தது.

நஞ்சை உமிழும் உயிரினத்துக்கு ‘நல்லபாம்பு’ என்று பெயரிட்டது போல், ‘கருத்துரிமை’, கருத்துச் சுதந்திரத்தை’ காவு வாங்கிவிட்டு, தனக்கு ‘ஜனநாயகநாடு’ எனறு பெயரிட்டுக் கொண்ட இந்நாட்டில், ‘அழுவதாயிருந்தாலும் அனுமதி பெற்றாக வேண்டும்’ அல்லவா? ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்றிட , தன் பெயரிலான அனுமதி கோரும் கடிதத்துடன், தோழர் ரவி (சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி) முன் சென்றிட, தோழர் சக்திவேல், தோழர் செல்வராஜ் ஆகியோருடன் நானும் உடன் சென்றேன்.. அனுமதிக் கோரும் கடிதத்தை பெற்றுக் கொண்டு, எங்களை “”””இங்கேயே நில்லுங்கள்”” என்று கூறிச்சென்றார் திருப்பூர் வடக்குக் காவல் நிலையத் துணை ஆய்வாளர். சற்றுநேரம் கழித்து திரும்பி வந்த அவர், “”””நீ, அங்கே போய் உட்காரு; உன்னை கைது செய்திருக்கிறேன்”” – என்று தோழர் ரவியைப் பார்த்துக் கூறினார். பின்னிட்டு வழக்கம் போல, புனைவு – கைதுக் குறிப்பாணை போன்ற தயாரிப்பு பணியில் மும்முரமானார்- எங்களது வாதத்தை செவிமடுத்துக் கேட்டிடக் கூட நேரமற்றவர் போல!

உடன் வந்தவர், ஒரு மக்கள் அமைப்பின் பொறுப்பாளர், கண்முன்னால் அநியாயமாகக் கைது செய்யப்படுகிறார்- தடுத்திட முடியவில்லை என்ற போதிலும்; ஏன்? எதற்காகக் கைது செய்திருக்கிறீர்கள்? என்ற எங்களது கேள்விக்கான விபரத்தை வழக்கறிஞர் என்ற முறையில் கூட பெற்றிடமுடியவில்லை.

“”””கைதியின் உரிமைகளாம்; உச்சநீதிமன்றத்தின் 11 கட்டளைகளாம்””- காகிதப்பூக்கள், இதனைக் கொண்டு இன்னும் எத்தனை காலம் இம்மக்களை ஏமாற்றிவிட முடியும்?

தோழர் ரவி-யின் கைது, மக்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பிற்கு கூடுதலான பணி நெருக்கடியை மட்டுமல்லாமல், எங்களது போராட்டத்தை முடக்குவதற்கான முயற்சியை காவல்துறை துவக்கிவிட்டது என்பதையும் உணர்த்திடச் செய்தது.

எதையும் விவேகத்துடன் எதிர்கொள்வோம் என்ற முடிவுடன், மறுநாள், எனது பெயரிலான அனுமதி கோரும் கடிதத்தை, அதே காவல் நிலையத்தில் கொடுத்துவிட்டு, கூடுதலாக பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கும் திட்டமிட்டோம்.

அத்தினம் முதற்கொண்டே, காவல்துறையின் கண்காணிப்புப் படலத்திற்குள் என் பெயரும் சேர்க்கப்பட்டு விட்டது என்பதனை, திருப்பூர் மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் கண்ணன் (அவர் என்னிடம் கூறிய பெயர்). தொடர்ச்சியாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, என் நாடித்துடிப்பை அறிய முயன்றிட்ட பொழுதும்; “”””காவலர்கள் உங்கள் பற்றிய விபரத்தைக் கேட்டார்கள்”” என்று சக வழக்கறிஞர்கள் கூறிய பொழுதும் உணர்ந்து கொண்டேன்.

காவலரின் இந்தக் கயமைத்தனம் கூடுதலானது டிச.9 இரவு சுமார் 11.30 மணியிருக்கும். திருப்பூர் வடக்குக் காவல் நிலைய ஆய்வாளர், என் வீட்டிற்கு வந்து, ஆர்ப்பாட்ட அனுமதி மறுப்புக் கடிதத்தை என்னிடம் நீட்டினார். அத்துடன் நில்லாமல், இரவு நேரத்தில் காவலர் வந்து வீட்டைத் தட்டுவதை ‘அவமானமாக’ கருதிட்ட என் தாய்க்கு, கூடுதலாக பீதியையும் ஏற்படுத்தும் நோக்கில், என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் போல், அறிவுரையும் கூறினார். அடுத்து என்ன?

வீட்டிலும் இரவோடு-இரவாக போடப்பட்டது தடுப்புக் காவல் சட்டம் அதுவரை, ‘போராட்டம்’ குறித்து எனது நடவடிக்கைகளை வீட்டிற்குத் தெரியாமல் பாதுகாத்து வந்தேன். அக்காவலர் எதிர்பார்த்தது நடந்தது. ஆம். அடுத்து என்ன செய்வது? என்று சிந்திக்கக் கூட முடியாவண்ணம், வீட்டிலுள்ளோர் பேசிய வசை, கூடுதலான மன உளைச்சலைத் தந்தது. அவர்களுடன், சண்டையிடவோ, சமாதானப் படுத்தவோ அவகாசமற்றவளாய், அடுத்தநாள் (டிச.10) அமைதியாக வீட்டை விட்டு வெளியேறினேன்.

அதைவிட வேடிக்கை என்னவெனில், ‘ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றவனை (ஆண்ட்ரசன் – போபால் படுகொலை) அமைதியாக, அயல்நாட்டிற்கு மிகுந்த மரியாதையோடு அனுப்பி வைத்த இவர்கள், என்னைப் பின் தொடர்ந்தது! என் வீட்டு வாசலில் துவங்கிய சில சீருடையற்ற காவலர்கள், உளவுத்துறையைச் சார்ந்தவர்களின் பின் தொடர்வு பேருந்திற்குள்ளும் தொடர்ந்தது. அதனால், தொலைபேசி மூலமாகக் கூட, இன்றைய போராட்டம் குறித்து சகதோழர்களுடன் பேசிட முடியா சூழலில், என் வசமிருந்த, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வெளியிடவேண்டிய அறிக்கையை, உரியநேரத்தில் சேர்த்திட முடியாமல் தடுக்கப்பட்டு விடுவேனோ? என்ற என் மனத்தவிப்பு, ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த திருப்பூர் -குமரன் சிலையை அடையும் வரைத் தொடர்ந்தது. அங்கு, மக்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்புத் தோழர்கள், தங்கள் -தங்கள் அமைப்பை சார்ந்த தோழர்களுடன் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக வந்திருந்தார்கள்.

உணர்ச்சிவசப்பட்ட சில இளைஞர்களை உள்ளடக்கிய நூற்றுக்கு மேற்பட்ட உழைக்கும் மக்கள் ஒருபுறம்! போராட்டத்தை ஒடுக்குவதற்கு எந்த நிலைக்கும் சென்றிட தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த – சீருடையணியாத காவலர்கள் உள்ளிட்ட காவல்படையினர் மறுபுறம்; மேலும், நடு இரவில் அனுமதி மறுப்புக் கடிதத்தை கொடுத்தது…, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத் தளத்தை அடையும் வரை எந்தத் தடங்களும் செய்யாதிருந்தது…, இவையெல்லாம் ஏதோ ஒரு அசம்பாவிதத்தை அரங்கேற்றிட காவல்துறை திட்டமிடுகிறதோ? என்கின்ற ஐயத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தடையை மீறிய போராட்டம் உரிய பயனை தந்திட வாய்ப்பில்லா அதே நேரம் – உள்ளிருப்பவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்வதற்கான ஆதாரத்தை காவல்துறை பெற்றிடுவதற்கான வாய்ப்பாக இருந்துவிடக் கூடும் எனும் அடிப்படையில், ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு மட்டும் நிகழ்த்தப்பட்டது.

மறுநாள், பெரும்பாலான பத்திரிக்கைகள், “”””மனிதஉரிமை நாளன்று, மனித உரிமைக்கான போராட்டம் தடை செய்யப்பட்டது குறித்து, செய்தி வெளியிடுவதற்கும், தொலைகாட்சி செய்தி வாயிலாக இப்பிரச்சனை வெளியாவதற்கும்; மாகாளி. ஐ.ஜி. – தலித் மக்களின் மீதான இவ்வடக்குமுறைக்கு பதில் கூற வேண்டிய நிர்பந்தத்திற்கு, ஆளாக்கியதற்கும், மனித உரிமைக்கான போராட்டத்தில் தங்களுக்கான தனி இடத்தை பெற்றிருக்கும், வழக்கறிஞர்களான தோழர். ப.பா.மோகன், மற்றும்                தோழர். ச. பாலமுருகன் ஆகியோரின் துணையுடன் நடந்தேறிய ‘பத்திரிக்கையாளர் சந்திப்பு’ என்றால் அது மிகையாகாது.

“”””சாமானிய மக்கள் சாதுவாக இருக்கும்வரை காக்கிச் சட்டை தனது கடமையை செய்து கொண்டு தானே இருக்கும்”” வெங்கனூர் பகுதியைச் சார்ந்த பலர் காவலர்களால் இழுத்துச் செல்லப்பட்டிருந்த தகவலறிந்து, டிச-13 ஊத்துக்குளி காவல் நிலையம் சென்றேன்.

கடும்பனியில் நனைந்தபடி, இரவு முழுவதும் தூங்காமல், காவல்நிலையத்திற்கு வெளியே காத்துக்கிடந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 80க்கும் குறைவில்லாத மக்கள், உடலும், மனமும் தளர்ந்தவர்களாக ஆங்காங்கே இருந்தனர். காவல் நிலையத்தின் முகப்பு ஒரு ‘இலவு வீடு போல’ காட்சி தந்தது. அங்கேயே, அம்மக்களை ஒன்று கூட்டிடும் எனது முயற்சியை தடுக்க முயன்றிட்ட காவலரிடம், என் கட்டுப்பாட்டையும் மீறி, என்னுள்ளிருந்த ஆதங்கம் “”””உன்னால் முடிந்தால் என்னையும் கைது செய்”” என்று நீண்டு வார்த்தைகளாக வெடித்தது, உள் சென்றார் காவலர்; ஒன்று கூடினர் மக்கள். எனது முழு சக்தியையும் ஒன்றுதிரட்டி, ஏறக்குறைய 30 நிமிடம் பேசியதற்குப் பின்னிட்டு, “”””கல்லெடுக்காமல் அஞ்சி ஓடும் வரை நாய்கள் துரத்தத்தான் செய்யும்”” என்பதை உணர்ந்தவர்களாக, என்னுடன் வரத் தயாரானார்கள். நான், இம்மக்களுடன் வருவேன்- என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திக்கொண்டிருந்த மக்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்புத் தோழர்களிடம் – நாங்கள் வருகிறோம்; நீங்களும் தயாராக இருங்கள்- என்று கைபேசி மூலம் கூறிக்கொண்டிருந்த போது, உள்ளிருந்து வந்த காவலர், அம்மக்களில் சிலரிடம், காதோரமாக ஏதோ கூறிவிட்டுச் சென்றதை கவனித்த நான், தொலைபேசி – தொடர்பை துண்டித்துவிட்டு, அம்மக்களின் அருகில் சென்று, “”””காவலர் என்ன கூறினார்”” என்று கேட்டேன். என்னிடம் எதுவும் பேசாமல் மீண்டும் ஆங்காங்கே சென்று அமர்ந்தனர். அவ்வளவுதான். “”””என் 30 நிமிட முயற்சியையும் பயனற்றதாக்கியது; காவலர் ஒருவரின் ஒரு நிமிடப் பேச்சு””.

“”””சுட்டெறிக்கப்படும் போது பிணம் கூடத் திமிறுமாம்; வெட்டப்படும் போது புழுக்கூட சீறுமாம்; அதைவிடவும் கீழாக இருந்திடுமளவிற்கு இம்மக்கள் கோழைகளாக்கப்பட்டிருக்கின்றனரே!””

பார்ப்பனியத்தின் செயல் உத்தி-பல்லாண்டு காலமாக அடக்குமுறைக்கு அடிபணிந்தே இருந்திட்ட இம்மக்களின் உதிரத்துடன் தொடர்ந்து வருகிறது- ‘அடிமை மரபு’, முற்றிலுமாக அழித்துவிட முடியாதபடி! என்று எனக்கு அம்மக்கள் மீது ஓர் அனுதாபம் தான் வந்தது. அதனால், மீண்டும் முயற்சித்தேன். இப்போது, அவர்கள் என்னைக் கண்டு அஞ்சினார்கள்.

எழுதப்பட்ட மனுவில், இப்பகுதி மக்களின் பாதிப்பையும் இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு மட்டும் கொடுத்துவிட்டு, வேதனையுடன் திரும்பினோம். இரு நாட்களுக்கு முன்பு இழுத்துச் செல்லப்பட்ட பலரில், மூவரின் மீது பொய்வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் – முன்னிலைப்படுத்தினர், காவல் துறை. இப்போது (டிச-14) சிறையிலடைக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், தொடர்பு கொள்ள வாய்ப்பிருந்த அத்துணை முற்போக்கு அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள், சிறுபான்மையினரின் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரிடத்திலும், இப்பகுதியில் நிகழும் தொடர் கொடுமைகள் குறித்து கூட்டமைப்பு சார்பாக எடுத்துச் செல்லப்பட்டதன் விளைவாகவும், செய்தியறிந்து தன்னெழுச்சியாகவும், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம், திருப்பூர் என ஏறக்குறைய மேற்கு-தமிழகம் முழுவதும், தலித் மக்களின் மீதான காவல் துறை அடக்குமுறைக்கு எதிரான முழக்கங்கள், துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், போராட்டங்கள் வாயிலாக எதிரொலித்தது. அதன் ஒருபகுதியாக, தோழர் ப.பா.மோகன்-வழக்கறிஞர் தலைமையில் வந்திட்ட ஈரோடு பகுதியைச் சார்ந்த வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளடங்கிய உண்மையறியும் குழு, பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டிருந்த அப்பகுதி மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. வெங்கனூர் பகுதிக்கு, உண்மையறியும் குழு சென்ற போது (ஊத்துக்குளி காவல் நிலையம் முன்பு) என்னைக் கண்டு அஞ்சி ஒதுங்கிய மக்களில் சிலர் என்னருகில் வந்து, “”””எங்களுக்காகத்தானே வந்தீங்க அன்றே நீங்க சொன்ன படி வந்திருந்தால், எங்க பிள்ளைகளை காப்பாற்றியிருக்க முடியும்””, “”””இனி, நீங்க எங்க கூப்பிட்டாலும் நாங்க எல்லாரும் வருகிறோம்””, – என்று கூறிய பொழுது, என்னால் உணரமுடிந்தது. வலுவான, போராட்டம் நிகடிநந்திடும் காலம் வெகு தொலைவில் இல்லை- என்ற நம்பிக்கை, என்னுள்ளும் ஊட்டப்பட்டதை!. ஆனால், எனது அந்த நம்பிக்கை வெகுநாட்கள் நீடிக்கவில்லை. கூட்டமைப்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னிட்டு, கோவை-திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்டத்திலுள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி திருப்பூரில் ஒரு மாபெரும் போராட்டத்திற்கான விதை ஊன்றப்பட்டது, அவ்விதை முளைவிடாமல் உளுத்துப்போனது, பூச்சிகள் அரித்ததால்.

‘காவல்-அனுமதி’ எனது பொறுப்பு என்று வலியவந்து ஏற்றுக் கொண்டவர், அனுமதி கிடைத்துவிட்டது என்று கூறியவர், துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் தயார் நிலையில் (டிச-27) போராட்டத்திற்கு ஒரு நாள் முன்புவரை அனுமதி கோரும் கடிதம் கூட கொடுக்காமலேயே எங்களை ஏமாற்றியதால்…

ஒதுக்கிவைக்கப்பட்டது, வலுவான போராட்டத்திற்கான திட்டம் மட்டுமல்ல, என்னுடன் சேர்த்து மக்கள் உரிமை மீட்புக் கூட்டமைப்பும்தான் என்பதை உணர்ந்திட்ட வேளையில்தான், உள்ளத்தைப் பரவசப்படுத்திய, தோழர், காந்தி, தோழர், பரமேஸ்வரன் இருவருக்கும் நீதிமன்றப்பிணை கிடைத்துவிட்டது எனும் அத்தகவல் வந்தது.

“”””பிரசவ வேதனையில் துடிக்கும் தாயின் வயிற்றிலிருந்து, பிள்ளையை வெளிக்கொணர, போராடும் பல மணி நேர முயற்சி – சுகபிரவமாக முடியும் அத்தருணத்தில்… ஒரு மருத்துவச்சி அடைந்திடும் மகிழ்ச்சியை விடவும், நிம்மதியை விடவும் அதிகமான மகிழ்ச்சியை அடைந்தோம். மீதமிருக்கும் மூவருக்கும் விரைவில் பிணை கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையில், இச்செய்திக்காக உழைத்திருந்த, காத்திருந்த அத்துணைபேரிடமும் இம்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம் – இரு நாட்களுக்கு மேல் இம்மகிழ்ச்சி நீடிக்காது என்றுணராமல் … ஆம்.

எது நிகழ்ந்துவிடக் கூடாது என்றஞ்சி, போராட்டத்திலும், அரசு இயந்திரங்களை அணுகுவதிலும், கவனத்துடன் அடியெடுத்துவைத்தோமோ அதுவும் நிகழ் ந்துவிட்டது. தோழர். காந்தி, தோழர் பரமேஸ்வரன் மீண்டும் சிறைபடுத்தப்பட்டனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான கைது உத்தரவால்.

அந்திய தேசக்காரன், எம்மக்களுக்குச் சொந்தமான, இத்தேசத்தின் நிலங்களையும், வளங்களையும் … சுருட்டுவதற்கும், சுரண்டுவதற்கும் அனுமதியுடன் பாதுகாப்பும் கொடுத்திடும் இவர்கள் அரியணையில், எம்மக்கள் சிறைக்கொட்டடியில், ‘ தேசிய பாதுகாப்புச்சட்டம்’ எனும் பெயரில்…

கடந்த நாட்களில், சிறையிலிருப்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மனதைரியம், ஆறுதல் கொடுத்திடவும், சமாதானப் படுத்தவும் மிகுந்த சிரத்தை எடுக்கவேண்டியதாயிருந்தது. பிரச்சனையை கையாளும் போது இருக்கும் மன நெருக்கடியை விட, கூடுதலாக சிரமப்படுவேன்… பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டிருந்த அவர்களை சந்திக்கும் வேளையிலும், தேற்றுவதற்கான ஆறுதலான, நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைத் தேடி…

‘மீண்டும் சிறை’ என்ற செய்தியைக் கேட்ட பின், அதுபோன்ற வார்த்தைகளைத் தேடிடக் கூட சக்தியற்றவளாக, அவர்களை சந்திக்தேன். இப்போது அவர்கள், மாறியிருந்தார்கள், எனக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுக்குமளவிற்கு, அதுவே என்னை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்தது.

மற்ற மூன்று தோழர்களுக்கும், பிணை கிடைத்து விட்டது. காவல்துறையின் அடக்குமுறையும் குறைந்திருந்தது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் பிடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டிட நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்திடுவோம் எனும் நிலையில், காலத்தின் கட்டாயத்தால், மாவட்டம் கடந்து சென்றிட்ட போதிலும், தனித்து விடப்பட்டிருந்த நிலையிலும், தோழர் குன்னங்குடி அனீபா அவர்கள் மூலம் இப்பிரச்சனையை இன்றைய முதல்வரிடத்தில் நேரடியாக வைத்திடவும், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி தோழர்கள் சட்டமன்ற முற்றுகை போராட்டம் நிகழ்த்தும் நேரத்தில் மக்களை அணிதிரட்டவும், தீர்ப்பாயத்தை அணுகிட, சமூக ஆர்வலர்கள் மூலம் நிதிதிரட்டிக் கொடுப்பது போன்ற என் செயல்களுக்கு இயன்றதை இறுதி வரை செய்வோம் என்னும் என் எண்ணத்திற்கு ஊக்கமாய், உந்து சக்தியாய் இருந்தது அவர்களின் நம்பிக்கை. அமைப்புகள் பல போராட்டங்களுக்கு அழைக்கும் போது, “”””போராட்டத்திற்கு கூப்பிடறாங்க, நாங்க போகவா?”” என்று கேட்கும் அத்தருணம் என் மீது நீளும் அவர்களது நம்பிக்கை – சொல்லிடும் சக்தி என் வார்த்தைகளுக்கு இல்லை. இன்றும் அந்த நம்பிக்கைக்கும், அம்மக்களுக்கும், இப்பிரச்சனையை முன்னெடுக்கும் தங்களது பணியிலும், போராட்டத்திலும் என்னையும் இணைத்துக் கொண்ட, தோழர். சக்திவேல், தோழர். ப.பா.மோகன், தோழர்.பாலமுருகன், தோழர். ஆனந்தன், தோழர். கவுதம சக்திவேல், தோழர். தமிழ்வேந்தன், மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், மக்கள் ஜனநாயகக் கட்சி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, தமிழர் விடுதலை இயக்கம், ஆதிதமிழர் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புளைச் சார்ந்தவர்களுக்கும் என் நன்றிகள்.

இன்று, பொய்வழக்கில் கைதுக்குள்ளானவர்கள், அனைவரும் விடுதலை செய்யப்படாமல், பிணையில் விடுவிக்கப்பட்டடுள்ளனர். மகிழ்ச்சிதான் ஊத்துக்குளி-அருந்ததிய மக்கள் வாழும் பகுதியில் காக்கிச் சட்டையின் அட்டகாசம் குறைந்துள்ளது,  பெருமகிச்சிதான்.

இமையை உறுத்தும் தூசியால் அல்ல இதயத்தை குத்தும் ஈட்டியாய் இன்றும் என்னை வதைத்துக் கொண்டிருக்கும் எனது கடைசிகேள்வி?

ஓராண்டுகாலமாக, அமைதியின்று மனதில் பீதியையும், முகத்தில் கண்ணீரையும் சுமந்து கொண்டு நடைபிணங்களாக உழன்றனர். இழிபிறவிகளாக நடத்தப்பட்டனர். அப்பகுதி அருந்ததிய மக்கள்.

காக்கிச் சட்டையால், பொய்வழக்கில் சிறையிலடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக இருக்கலாம். இவர்களுடன் சேர்த்து, சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை ஏராளம்.

சிறைக்குள்ளிருந்தவர்களைவிட, வெளியில் அவர்கள் குடும்பத்தினர் அடைந்திட்ட வேதனை, பெற்றிட்ட அவமானம், இன்னும் தொடர்கின்ற அதன் பாதிப்புகள் ஏராளம்.

இன்றும் நீளும் அக்கொடுமைகளுக்கு ஈடாக, பெரிதாக என்ன செய்திட முடிந்தது நம்மால்?.

ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருந்திட்ட காலத்தில் மாவட்ட நீதிமன்றம் ஊத்துக்குளிக்குட்பட்ட பகுதியில் அமைந்திடுவதற்கான திட்டம் இருந்த சமயத்தில் நில ஆக்கிரமிப்பிற்கும், நில விலையேற்றத்திற்கும் தடையாக இருந்திட்ட அருந்ததிய குடியிருப்புகளை அகற்றும் நோக்கில், அவர்களாகவே அஞ்சி வேறிடத்திற்கு குடிபெயர்ந்து சென்றிட காவல் கைக்கூலிகளைக் கொண்டு, ஆள்பலம், பணபலம் பொருந்தியவர்களால் தீட்டப்பட்ட ஆக்கிரமிப்பு திட்டமா? ஏனெனில் தேடுதல் வேட்டைக்குப் பின்னிட்டு குடிபெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

சாதிக்கட்டமைப்பைக் காட்டிடவும், சாதியத் திமிறைக் காட்டிடவும், முட்டுக்கட்டையாக, முன்னெழும் அருந்ததியத் தலைவர்களை, தலித் அமைப்புகளை முடக்குவதற்காக, காவல்-கைக்கூலிகளைக் கொண்டு, ஆதிக்கச் சாதிக்காரர்கள் சிலர் அரங்கேற்றிட்ட சாதி ஆதிக்கத் தாண்டவமா?  இதுவரைக்கும் இருப்புப் பாதைக்கு அருகிலிருக்கும் ஆதிக்கச்சாதிக்காரர்கள் ஒருவரிடத்தில் கூட விசாரணை மேற்கொள்ளப்படவில்லை.

காக்கிச் சட்டையில் பதக்கம் ஏறிட, காவல்துறை தானே செய்திட்ட கைகாரியமா? இன வெறிப் பசிக்கு எம் ஈழத் தமிழர்களை உண்டு இளைப்பாறிய சிங்கள இன வெறியர்களுக்கும் இந்திய பாசிசவாதிகளுக்கும் உறுதுணையாக இருந்திட்ட தமிழின தலைவனுக்கு செம்மொழி மாநாடு எனும் பெயரில் பாராட்டுவிழா கோவையில் எந்த வித இடையூறுமின்றி நிகழ்த்தப்பட வேண்டுமென்பதற்காக கொதிப்படைந்த உணர்ச்சியுள்ள தமிழர்களை ஊமையாக்கிட எண்ணி ஒரு வித பீதியை ஏற்படுத்தும் நோக்கில் அரசு தனது கைக்கூலிகளான உளவுத்துறையையும், காவல் துறையையும் கொண்டு அரங்கேற்றிட்ட பூச்சாண்டி வித்தையா? இவர்களால் பொய்வழக்கிற்கு புனையப்பட்ட கதையின் கரு இதுவாகத்தான் இருந்தது. மேலும் கல்வைப்பிற்கு காவல் துறை உளவுத்துறை கூறிய காரணங்கள் இன்னும் நிலுவையில் இருக்கையில் அரங்கேற்றப்பட்ட கல்வைப்பு நாடகம் ஆட்சி மாற்றத்திற்கு பின்னிட்டு அதிகாரிகளின் மாற்றத்திற்கு பின்னிட்டு நிறுத்தப்பட்டது ஏன்?

தோழர் அய்யப்பன் அவர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்திட்ட அரசு மருத்துவருக்கு காவல் துறை தான் கொடுத்திட்ட வாக்கை காப்பாற்றிட இடையூறாக வழக்கிற்குள்ளான தோழர்கள் இருந்திட்டதால் குறிப்பாக இவர்கள் பலிகடா ஆக்கப்பட்டனரோ? தேடுதல் வேட்டைக்கு காரணமாக இருந்தவர்களின் திட்டங்களுக்கு!

காயம்பட்டவர்களை அடையாளம் காட்ட முடிந்ததே ஒழிய காயத்திற்கான காரணகர்த்தாக்களை அம்பலப்படுத்த முடியவில்லையே ஏன்?

காக்கிச் சட்டைக்குள் ஒளிந்திருக்கும் காயம் ஏற்படுத்திய குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற முடியவில்லையே ஏன்?

அருந்ததிய மக்களின் மீதான அடக்கு முறை என்பதாய், என்று மட்டும் சுருக்கிக் கொள்வோமேயானால் அது நம் அறியாமை. நெடுங்காலமாக தொடர்ந்திடும் போராட்ட வரலாற்றுப் பதிவுகளின் பக்கங்கள் நீளும் விதமாக பல்லாயிரம் மக்கள் கண்ணுற்ற காட்சியாய் இருக்க பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட அப்பட்டமான சாதிவெறி படுகொலைக்கு எதிரான போராட்டமானாலும், வாழ்வாதாரத்தை பெற்றிட முடியாத தமிழக மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் ஆதரவான உரிமை போராட்டங்களானாலும் இதன் உச்சகட்டமாக கண்ணிமைக்கும் கணப்பொழுதில் தமிழ்த் தேசம் சுடுகாடாக்கப்படலாம் எனும் நிலையில் வெடிகுண்டு தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள அணு உலைக்கு எதிரான போராட்டங்களானாலும் இதே நிலைதான், இன்னும் எத்தனை காலமானாலும்…

சுரண்டலுக்கெதிரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான, சிறுபான்மை மக்களுக்கான, தமிழ்தேச உரிமைக்கான என்று முழக்கங்களை தனித்தனியே முன்வைத்து போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டாலும் எதிரி ஒன்று தான். ஆம் ஏகாதிபத்திய முதலாளிகள், பார்ப்பனியம், பாசிச வாதிகள் என எப்பெயரிட்டாலும் அதன் வடிவம் ஒன்றுதான். இந்திய ஆளும்வர்க்கம், அதன் கைப்பாவைகளாக செயல்படும் தமிழக ஆளும்வர்க்கம்.

வீழ்த்தப்படவேண்டியது ஒன்று தான் என்றாலும் வலிமையாக்கப்பட்ட ஒன்று என்பதையும் கருத்தில் கொள்ளும் அதே நேரத்தில் தேவையானது எதிர்ப்பை காட்டிடுவதற்கான துண்டறிக்கைகளோ, அங்கொன்றுமான, இங்கொன்றுமான அடையாளப் போராட்டங்கள் மட்டுமல்ல, எதிரியை நிலைகுலையச் செய்யும் அளவிற்கான வேறோடு பிடுங்கி எறிவதற்கான போராட்டம் அரங்கேற்றப்பட போர்க்களம் புகவேண்டும் தமிழக உழைக்கும் மக்கள் எனும் கொடியின் கீழ் ஒரணியாக, போர்ப்படையாக… அது நிகழ்த்தப் படாதவரை எந்தப் பிரச்சனையிலும் ஈடான தீர்வை பெற்று விட முடியாது என்பதே நிசர்னமாக உண்மை. இன்னும் எத்தனைக்காலம் நீளும் வரலாற்றுப் பதிவிற்கான போராட்டம்? வரலாற்றைப் புரட்டிப் போடும் போராட்டம் எப்போது?

இன்னும் எத்தனைக் காலம்...
Advertisements

3 thoughts on “இன்னும் எத்தனை காலம்?

  1. சாதி ஒடுக்குமுறையும், காவல்துறை ஒடுக்குமுறையும் ஒன்றிணைந்த இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இன்னும் நீண்ட காலம் இது நீடிக்கும். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த சக்திமிக்க எதிர்ப்புப் போராட்டங்களின் தொடர் அழுத்தமே ஒடுக்குமுறையை மட்டுப்படுத்தும்.ஒன்றிணைந்து நிற்போம்.
    – மீ.த.பாண்டியன், தமிழ் மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை

  2. சாதி ஒடுக்குமுறையும், காவல்துறை ஒடுக்குமுறையும் ஒவ்வொரு தலைமுறையாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டமக்கள் பொது நலனை முன்னிலை படுத்தி ஒற்றுமையாக இருந்து போராடும்போதுதான் ஒடுங்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s