நீண்ட வருடங்களுக்கு பிறகு என் குட்டிசுவத்து மேட் (க்ளாஸ்மேட் ஸ்கூல்மெட் மாதிரி) நண்பனை கோவை வ உ சி  பூங்காவில் சந்தித்தேன். குட்டி சுவராகவே மாறிவிடுவான் என எல்லாராலும் சபிக்கப்பட்டவன்  இப்போது பெரிய தொழிலதிபர் ஆகியிருந்தான். பத்து வருட நினைவுகள் என்னுடன் இருந்த நண்பனிடமும் அவனுடன் இருந்த நண்பருடனும் மீளாய்வு செய்து பகிர்ந்துகொண்டோம். அதில் அந்த குட்டி சுவரும் முக்கிய இடம் பிடித்துக்கொண்டது.

ஒவ்வொரு முறை தேர்தல் காலங்களிலும் எங்களிடமிருந்து கைவண்ணங்களிலிருந்து அன்னியப்பட்டு போகும் அந்த குட்டிசுவரில் இந்தமுறை யாருடைய சின்னத்தின் ஆதிக்கம் இருக்குமோ என்ற கேள்வியுடன் விடைபெற்று சென்றான். பிறகு நண்பருடன் வாகனத்தில் வீடு திரும்பும் வழியில் அந்த குட்டிசுவரையும் சென்று பார்த்தோம் எந்த சின்னத்தின் ஆதிக்கமும் இல்லாமல் சுத்தமாக வெள்ளை அடித்து  இருந்தது.

“ சுவர் விளம்பரங்களை தேர்தல் ஆணையம் தடை செய்தது நல்ல விசயமே” என்றான் என் நண்பன். நான் மெளனமாக இருந்தேன். என் சிந்தனை முழுவதும் நான் கடந்து வந்த சுவர்களை பற்றியே இருந்தது. என் பிள்ளை பருவத்தில், காந்திபுரம் காவல் நிலைய சுவர் எப்போதும் சிவப்புக்கலரில் என்னை அச்சபடுத்திக்கொண்டே இருக்கும். அதன் பின் நாங்கள் குடியேறிய இரத்தினபுரி சுப்பாத்தாள் லே அவுட் வீதியில் பச்சை வண்ண மசூதி சுவர், வெள்ளை நிறத்தில் நடுவில் சிலுவையை சுமந்து நிற்கும் சர்ச் சுவர், காவியும் வெள்ளையும் அடிக்கப்பட்ட கோவில் சுவர், அப்போதெல்லாம் “STICK NO BILLS ” என்ற வாசகத்தை சுமந்து நிர்ப்பது மேட்டுக்குடி சுவர்கள் மட்டுமே. அதை பார்ப்பதே அபூர்வமாக இருக்கும்.

பள்ளி வயது வந்ததும் முதல் நாள் என்னை அதிகமாகவே கலவரப்படுத்தி அழவைத்த என் பள்ளியின் (சபர்பன்) ஆளுயர பாறாங்கல் சுவர், பின் ஆறாம் வகுப்பிற்கு நான் மாற்றப்பட்ட பொழுது பெரிய சபர்பன் பள்ளியின், வண்ணப்பூச்சில் இந்திய வரைபடமும் தமிழக வரைபடமும் தாங்கி நின்ற அழகிய சுவர், யார் யாருக்கு யார் யாருடன் ஒருதலை காதல் இருந்தது என்ற அதே பள்ளியில் நான் படித்த முதல் கிசுகிசுவையும், சில ஆசிரியர்கள் மேல் சில மாணவர்களுக்கு சொல்லெனா கோபங்கள் உள்ளது என்பதையும் சொல்லித் தந்த கழிவறைச் சுவர்.

92 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடைக்கப்படுமென்ற கலவர வாசங்களை தாங்கி என்னை ஏதோ இனம்புரியா பயத்தில் ஆழ்த்திய ராம்நகர் வீதி சுவர்கள், கோவையில் நடந்த சில ஒற்றைப்பட மத கொலைகளுக்கு பழிவாங்கும் நோக்கில் “டேய் துலுக்கா தொட்டு விளையாடதே நாங்கள் வெட்டி விளயாடிவிடுவோம்” என்ற வாசகத்தை தாங்கி மதவெறியின் கோரமுகத்தை காட்டிய சாய்பாபா காலனி சுவர்கள்,  இப்படி எத்தனையோ சுவர்கள்.  என்னை செதிக்கியதிலும் சில சுவர்களுக்கு முக்கிய பங்குண்டு.

 என் பத்தாம் வகுப்பு முடிந்தபொழுது நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் காலத்தில் டீக்கடைகளிலும் பேக்கரிகளிலும் எவன் வந்து நமக்கு என்ன ஆகப்போகுது, நாம உழைச்சாத்தான் நமக்கு சோறு என்று புலம்பிய தத்துவங்களைக் கேட்டு, அப்படி என்றால் என்ன செய்வது என்று புரிந்தும் புரியாமலும் இருந்த எனக்கு  “ஓட்டுப்போடதே புரட்சி செய்” என்ற வாசகத்தை ஏந்தி மாற்று வழியை பறை சாற்றிய, கரியால் தேர்தல் அரசியலை கரை படுத்திய கணபதி சுவர்கள்.

பின்னொருநாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்ட நாள் வீட்டிலிருந்து வீதிக்கு வந்ததும் “மொசாட்டின் ஆதரவு பெற்ற இந்து பயங்கரவாதிகளை கைது செய்” என்று தமிழக அரசை கேட்டுக்கொண்ட சுவர் என்னை ரொம்பவும் குழப்பிய சுவர். ஏனென்றால் அதுவரை பயங்கரவாதி என்ற சொல்லை நக்சல்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். எனவே எனக்கு இந்த சுவர் வாசகம் புதிய அனுபவமாக இருந்தது கூடவே மொசாட் அது யார் என்ற குழப்பமும் மனதில் குடிகொண்டது அந்த குழப்பத்திற்க்கான விடை அந்த தெரு முக்கிலேயே கிடைத்தது அந்த சுவரில் கரியைகொண்டு எழுதிக்கொண்டிருந்த கூட்டத்தில் என் பள்ளி நண்பனும் இருந்தான். அவனை அழைத்து விசாரித்ததும் மொசாட் என்பது இசுரேலின் உளவுப்படை என்பதை புரியவைத்தான். கூடவே நான் கேக்காத சில கேள்விகளுக்கும் பதிலளித்தான். அதாவது இசுலாமியர்களுக்கு இந்தியாவில் இருக்கும் ஆபத்தும் அதிலிருந்து இச்சமூகத்தை பாதுகாக்க அமைப்பாக திரளுவதின் அவசியத்தையும் விளக்கினான். எனக்கும் சரியாகவே பட்டது.

 பின்னொரு நாளில் அதுபோலவே கோவையில் மிகப்பெரிய இனப்படுகொலை நடந்தது. நண்பர் கூறிய அமைப்பாக திரளுவதின் அவசியம் புரிந்தது. பின்னொரு நாளில் இனப்படுகொலைக்கு பழிவாங்கும் முகமாக கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதை தொடர்ந்து குற்றவாளிகளும் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டனர் . அந்த நாட்களில் அதுவரை “அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லா ஒருவனுக்கே” என்றெல்லாம் ஆக்ரோசமாக பேசிவந்த எந்த அமைப்போ அமைப்பினரோ வரவில்லை இந்த சமூகமே அநாதை ஆக்கப்பட்டது . முசுலீமாக பிறந்த  எல்லோர் மனதிலும் ஒருவித குற்ற உணர்ச்சி குடிகொண்டுவிட்டது. எனக்கும்தான்.

 அதன் பிறகு எங்கள் பகுதிகளில் சில சுவர்கள் கரியால் எழுதப்பட்ட வாசங்களை காண நேர்ந்தது அது குண்டு வெடிப்பு என்பது எதிர்வினையே என்றும் அதற்காக அப்பாவிகள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் இருந்தது. அதன் கீழ் இவன்  ம.க.இ.க  என்று இருந்தது. இப்படி சரியானவைகளையும் தவரானவைகளையும். மத வரிகளையும். மனிதநேயங்களையும் பாமரர்களிடமும் பரப்பி வந்ததில் சுவர்களுக்கு முக்கிய பங்குண்டு. எல்லா கருத்துக்களிலிருந்தும் நாம் சரியான கருத்துக்களை தேர்ந்தெடுக்க சுவர்கள் நமக்கு சுதந்திரம் அளித்திருந்தன.

என்னை வீட்டில் இறக்கி விட்ட நண்பனிடம் சொன்னேன் “இல்லை நண்பா தேர்தல் ஆணையம் சுவர் விளம்பரங்களை தடை செய்தது நல்லதில்லை” என்றேன். ஆச்சரியத்துடன் என் முகத்தை பார்த்த நண்பன் என்னிடம் ஏன் என்று எதிர் கேள்வியை முன்வைத்தான். அவனிடம் நான் கேட்டேன் “நூர் முஹம்மது என்ன சின்னத்தில் இம்முறை போட்டி இடுகிறார்?” என்று அவனிடம் பதிலில்லை என் கருத்து சரி என்பதுபோல் மொவுனமாக தலையாட்டினான்.

நூர்முஹம்மத்! இவரை தெரியாத கோவைவாசிகள் இருப்பது குறைவு. கவுன்சிலர் எலக்சன் முதல் M P எலக்சன் மற்றும் இடை தேர்தல்களிலும் தவறாமல் போட்டியிடுபவர். ஒவ்வருமுறையும் எங்கள் குட்டிசுவரின் எதிரில் நிச்சயம் அவர் தேர்தல் விளம்பரமும் இடம்பிடிக்கும். எனவே ஒவ்வொரு முறையும் அவரின் சின்னத்தை வைத்து கேலி பேசுவோம் . இம்முறை அவரின் சின்னம் என்ன என்பதை கூட அறிந்துகொள்ள முடியவில்லை.

 இது ஒரு போலி ஜனநாயகமாக இருந்தாலும் இதுவரை குறைந்த பட்சம் சுயேட்சையாக போட்டியிடுவனுக்கு தெரு சுவரேனும் விளம்பரம் செய்ய வாய்ப்பு  கொடுத்தது. இனி அதுவும் இல்லாமல் ஆகிவிட்டது.  பெரிய கட்சிகளோ சொந்தமாக TV நடத்தி 24 மணிநேரமும் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டனர். எனவே நடந்தது கார்ப்பரேட் கட்சிகளுக்கு இடையேயான தேர்தலே என்பதை நண்பனுக்கு விளக்கினேன்.

மறுநாள் நண்பனே அலை பேசியில் அழைத்தான் “டே… நேற்று நீ சொன்னது உண்மைதான். சுவர்கள் நல்ல பாடசாலையாகவும் இருக்கும் என்பது உண்மையிலும் உண்மை. இன்று மாலை பெரியார் படிப்பகத்தில் பெரியார் திராவிடர் கழகம் ஒரு புத்தகம் வெளியிடுகின்றனர். நாம் போகலாம் ரெடியா இரு” என்றான் .

 புத்தகத்தின் தலைப்பு என்றேன் . “சுவரெழுத்து சுப்பையாவின் பொறி மொழிகள்” சுப்பையா சுவரில் எழுதிய எழுத்துக்களையே புத்தகமாக்கி இருக்கிறார்கள் என்றான்

            — சண்டாளன்

One thought on “குட்டிச்சுவர்

  1. குட்டி சுவர் மற்றும் அதன் அரசியல், சமூக பங்கும் வாழ்க்கையிலிருந்து சொல்லியிருக்கின்றீர்கள். உங்கள் அளவிற்கு குட்டிசுவர்கள் எனக்கு பாடம் நடத்த வில்லை என்றாலும், சென்னை புறநகரின் ஆன்மீக, சாதி, அப்ப்குதி பிரமுகர் விஷயங்கள் அமைதியாக சொல்லிக்கொடுத்தது; முக்கியமாக என்னை ஈர்ப்பதாக DYFI-யின் “பகத்சிங்” வரைபடம்… இப்பதிவை படிக்கும்போது நினைவிற்கு வருகின்றது.

    -ஓவியா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s