அருள் எழிலனின் ஆனந்த விகடன் (30.10.2013) கட்டுரையில் “உப்பு வெச்ச இடம் தான் மிச்சம்” என்ற டேப் காதரின் பாடலின் தலைப்பில் சில விவரங்களை கூறியிருந்தார். அதற்கு முன்னால் பறையோசை வலைதளத்தில் “பொதுவுடைமைக் கலைஞரின் வாழ்க்கைத் தடம்” விரிவாக கூறியிருந்தது.

கலை என்பது சமூக இயக்கத்தில் முன்னேற்றகரமான பாத்திரம் வகிக்கும் தருணங்கள் யாவும் புரட்சிகர கலைஞர்களுக்கே உரித்தானவை.

சமூகத்தின் ஓர் அடிமைக்கு அவனை அடிமை என்று உணர வைத்ததும், விடுதலை விதைகளை ஆதிக்கத்திற்கு எதிராக அவன் மனதிலே விதைத்ததும், போராட்ட களங்களையும், அதன் எதிர்கால நலன்களை பற்றி போதித்ததிலும் கலைஞர்களுக்கு பெரும் பங்கு உண்டு.
வரலாறு நெடுகிலும் போராட்டங்களின் போக்குகளை வீரியம் குன்றாமல் எடுத்துச் சென்றதும் வெற்றியின் மீது போராளிகளின் அடி மனதில் நம்பிக்கையை விதைத்து ஆத்மார்த்தமாக நடத்தியதிலும் கலைகளுக்கு பங்கு உண்டு.
ஆனால் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகளோ பண்டைய ராஜதர்பார்களில் ராஜாங்க பரிபாலனைகளின் முடிவில் நடத்தப்படும் ஆடல், பாடல், போன்ற பொழுதுபோக்கு கலைகளுக்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்தைத் தான் கலை மற்றும் கலைஞர்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதை அவர்களை எந்த விதமாக பராமரிக்கிறார்கள் என்பதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. குழப்பமும் அச்சமும் மேலிடுகிறது. காலத்தின் சக்கரத்தை பின்நோக்கி சுழற்றும் இயக்கவியல் மறுப்பாளர்களோ இந்த பாராளுமன்ற கம்யூனிஸ்ட்கள் என கருத வேண்டியுள்ளது.

தென்பரை – வெண்மணி, சாணிப்பால், சவுக்கடி – அமாவாசை கூட்டம் – தலைமறைவு வாழ்க்கை – துப்பாக்கிச் சூடு, கிசான் போலீஸ் என்ற சொற்கள் கீழ தஞ்சை மண்ணின் சிவப்பு பக்கங்களில் காணக்கிடைப்பதாகும்.

சீனிவாசராவ், மணலூர் மணியம்மை, இராமானுஜம், களப்பால் குப்பு, இரணியன், சிவராமன், ஆறுமுகம், இலரா போன்ற களப்பணியாளர்களின் தியாகமும், புரட்சிகர நடைமுறைகளை கலைமொழியில் தஞ்சை மண்ணில் மக்களுக்கு சமகாலத்திலும் பிற்காலத்திலும் சொன்னவர்கள் நாகை சாமி நாதன், பாவலர் வரதராசன், திருமூர்த்தியார், அப்துல் காதர் போன்றோர் என்பதும் தஞ்சை மக்கள் யாவரும் அறிந்ததே.

அவர்களின் கலை வடிவமும் உணர்ச்சியும் இன்றைய முற்போக்கு கலைப் படைப்பாளிகள் அனைவரிடமும் காணப்படுவதைப் பார்க்கலாம். அதில் அப்துல்kader 2 காதரின் லாவணி என்பது எசப்பாட்டு வடிவிலானது. அந்தக் காலங்களில் காமன் பண்டிகையிலும் இன்னபிற நிகழ்ச்சிகளிலும் அது கையாளப்பட்டது. இன்றைய வில்லுப்பாட்டுக்கு அது முன்னோடி. அந்த ஈர்ப்புடைய கலை வடிவத்தை சமூக மாற்றத்துக்கு தமிழ்ச் சூழலில் முதன் முதலாக கையாண்ட பெருமை அப்துல் காதருக்கே உரியது.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் ஒரு முறை தஞ்சையில் அப்துல் காதர் தலைமையில் அமைந்த சிவராமன் நாடக மன்றதின் நாடகத்தை தொடங்கி வைக்க வந்த போது அதில் இடம் பெற்ற வினா விடை அமைப்பிலான கலை வடிவத்தினைக் கண்டு பாராட்டினார். அதன் பிறகு தான்

·           மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?…

·               அவன் தேடிய செல்வங்கள் வேற எடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி …

– என்று தொடரும்  லாவணி போன்ற பாடல்கள் நாடோடி மன்னனில் வந்தது என்றால் மிகையில்லை

பறையோசை வலைதளத்தில் காணப்படும் காதரின் வாழ்க்கைத் தடம் வாழ்வின் எந்த நிலையிலும் போராட்டம் என்பதே அவரின் உயிர் மூச்சு மற்றும் கடின உழைப்பு, கலைத்திறன் ஆகிய பரிமாணங்களை கூறுகிறது.

தோழர் அப்துல்காதர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு
தோழர் அப்துல்காதர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு

எப்படியாயினும் இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரை தரிசிப்பது கம்யூனிசத்தையும், கலைகளையும் நேசிப்போரின் கடமை என்ற விதத்தில் ம.க.இ.க தோழர் இராவணன் மூலமாக அப்துல் காதரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தள்ளாத வயதில் உள்ள தோழர் காதரின் உடல் நிலையை கவனித்து மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்ற இராவணனின் வேண்டுகோளின் பேரில்தான் நான் காதரை சந்தித்தேன். அவருடன் பேசிய 2 மணி நேரங்கள் எனது வாழ்வின் முக்கியமான நேரங்கள் என்று கருதினேன். முடிவில் மக்களை நேசிப்பது என்பதை விட ஒரு மனிதனுக்கு சிறந்த மருந்து எதுவும் இல்லை என்பதை உணர முடிந்தது. தஞ்சாவூர் கோபுரத்தை விடவும் கம்பீரமான அவரது வார்த்தைகளும் வாழ்க்கையும் என்னை சிலிர்க்க வைத்தது. ஆனாலும் என்னுள் சில கேள்விகள் மட்டும் விடை காண முடியாமல் தகிக்கின்றன.

1.         குடும்பம் என்பது பொது வாழ்வில் ஈடுபட்டு நலிந்தோரை புறக்கணிக்கும் சுயநல நிறுவனமா? போராட்டங்களின் பயன்களை குடும்பங்கள் அனுபவித்ததை மனசாட்சியோடு உணர்வதில்லையா?

2.         கம்யூனிச இயக்கம் கலைஞர்களின் படைப்புலகின் சமூக பொறுப்புணர்வை கரிவேப்பிலை போன்று கையாள்கிறதா?

3.         கலை நிகழ்ச்சி என்பது கட்சிகள் கூட்ட முடிவில் மக்கள் கலையாமல் நிற்க மட்டுமே பயன்படுத்திய தந்திரமா?

4.         கலைஞர்கள் மக்களின் புரட்சிகர அரிப்பினை சொரிந்து விடும் விரல் நகத்தினைப் போல மட்டும் பயன்படுத்தப்பட்டார்களா?

5.         அடிமைத் தனங்களிலிருந்து சற்று விடுதலை பெற்ற இந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கலைஞர்கள் எவ்விதத்திலும் பருண்மையான பங்களிப்பை தரவில்லையா?

6.         சகோதரத்துவம் – சமத்துவம் போன்ற கோட்பாடுகளைப் பேசும் இசுலாம், காதரைக் கையாண்ட விதத்தினால் தனது மதக் கோட்பாடுகளையே துச்சமாக மதிக்கிறதா?

7.         தீவிரவாதி, போராளி போன்ற சொற்களுக்கு துல்லியமான எல்லைக் கோடுகள் எதுவென்று இசுலாம் அறியுமா? அதாவது மத எல்லையை தாண்டினால் போராளியும் தீவாரவாதிதான் என்பதும் – மத எல்லைக்குள் நின்று போராடினால் தீவாரவாதியும் போராளிதான் என்றும் இசுலாம் கருதுகிறதா?

போராளியை ஆளும் வர்க்கமும் அரசும் விளிப்பது தீவாரவாதி என்று! உழைக்கும் மக்களுக்கோ அவர்கள் தலைவர்கள். தஞ்சை ராஜேந்திரன் – செல்வி தம்பதியர்க்கு (தோழர் காதர் அவர்களை தற்சமயம் பராமரித்துவருபவர்கள்) ஞான தந்தையாக (god father) தெரிகிறவர், ஏன் இசுலாத்திற்கு அன்னியராகத் தெரிகிறார்?

இசுலாத்தில் உழைக்கும் மக்கள் கிடையாதா? மக்களின் பிரச்சினைகளை தொழுகையினால் மட்டும் தீர்த்து விட முடியுமா?

இசுலாமிய தீவிராவதிகள் என்போரை மத நீக்கம் செய்யப்பட்டுள்ளதா?

8.         போராடும் கம்யூனிஸ்ட்டாக இருந்த போது அப்துல்காதர் போன்ற பலரின்kader 10 உழைப்பில் உயர்ந்து பறந்த செங்கொடி இன்று ராஜாங்க கம்யூனிஸ்ட்டாக மஞ்சள் குளிக்கும் போது  தப்பித் தவறி உயிரோடு இருக்கும் அந்த பொக்கிஷங்களை ஏன் புறம்போக்காக கருதுகிறார்கள்? அல்லது ஏரெடுத்துப் பார்க்கவும் மறந்தார்கள்?

9.             இந்த மண்ணில் உழைப்பு, தியாகம், அர்ப்பணிப்பு என்பதெல்லாம் செல்லா காசா? அல்லது அவரிடம் உள்ள சிறுநீரகம் போன்ற உறுப்புகளை விற்று கட்சிக்கு நன்கொடை கொடுத்தாலாவது நினைத்துப் பார்ப்பார்களா?

எனது மனதில் தகிக்கும் இந்த கேள்விகளிக்கு பதிலுண்டா? யார் கூறுவார் இந்த பதிலை?

– மருத்துவர் தசரதன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s