தரவிறக்கம் செய்துகொண்டு படிக்க விரும்புபவர்கள் இங்கே வலது சொடுக்கு செய்து save link as என்பதை சொடுக்கவும்

 

ஒரு சமூகத்தின் ஏற்றத்தாழ்வான வாழ்க்கைக்கு அவரவரின்  தலைவிதியே காரணம் என்று மதங்கள் கூறுகின்றன. இது உழைப்பவனின் உணர்வுக்கு வடிகால்கள் அமைத்து ஆளும் வர்கத்திற்கு சேவை செய்கிறது என்று பொதுவுடமை சிந்தனையாளர்கள் உரக்கவே கூறுகிறார்கள். ஆனாலும் இருப்பதையும் இழந்துகொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தின் ஆகப் பெரும்பான்மையினர் தமக்கு எதிரான மதத்திற்குள்ளும் தலைவிதி தத்துவத்திற்குள்ளும் புதைந்து உழன்று கொண்டிருக்கின்றனர்.

தந்தை பெரியாருக்குப்பின் மதக்கோட்பாடுகளுக்குள் புகுந்து அம்பலப்படுத்துதல் என்பது வெகுவாக குறைந்துவிட்டது. பொதுவுடமை இயக்கத்தினர் மற்றும் சில ஜனநாயகவாதிகள் பார்பனீயத்திற்கு எதிராக தீவிரமான பிரச்சாரம் செய்தாலும் பார்பனீயத்துக்கும் அடிப்படையாக அமையும் கடவுள் நம்பிக்கையையும் தலைவிதி தத்துவத்தையும் உடைத்து நொருக்குவதில் தொடரான தமது கடமையைச் செய்யத் தவறுகின்றனர். அதனாலேயே ஆகக் குறைந்தகூலியைப் பெற்று இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் வாழும் ஒரு தொழிலாளிகூட பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தும், தர்காவிற்கு சர்க்கரை வாங்கிகொடுத்து பாத்திஹா ஓதுவதும், சர்ச்சுக்கு மெழுகுவர்த்தி ஏற்றுவதுமாக சிந்திக்கின்றனரே தவிர சங்கமாக திரள்வதற்குக்கூட மறுக்கின்றனர்.

அதனால் மதவாதிகளின் புதுபுது தந்நிரங்களை இடைவிடாது கண்காணிப்பதும் அதனை மதக்கோட்பாடுகளுக்குள் புகுந்து அம்பலப்படுத்துவதும், அதற்கான அறிவியலை  மக்களிடம் எடுத்துச் செல்வதும், புதிதாக கண்டுபிடிக்கப்படும் அறிவியல் உண்மைகளை உடனுக்குடன் மக்களிடம் எடுத்துச்சென்று அது எவ்வாறு மதக்கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளது என்றும் அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமை.

கல்வி அறிவு பெற்றவர் – பெறாதவர் என்ற வேறுபாடில்லாமல் கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவருடைய சந்தேகமும் கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதைவிட இந்த உலகமும் உயிரினங்களும் எப்படித் தோன்றின? ஒருவர் இறந்தபின் அவரது உயிர் –ஆன்மா- என்னவாகிறது? எங்கே போகிறது? என்ற சந்தேகமே கடவுளையும் தலைவிதியையும் நோக்கித் தள்ளிவிடுகிறது. அதனால் இந்தக் கட்டுரையில் ஆத்மா பற்றிய சில உண்மைகளைப் பார்ப்போம்.

உயிர் பற்றிய அறிவியல் பாடங்கள், பழமைவாத கோட்பாடுகளை விமர்சிப்பதில்லை. அப்படியே சில விஞ்ஞானிகள், அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டாலும் அறிவியலுக்கான அதிகார பீடம் இன்னும் மதபீடங்களின் கட்டுப்பாடுகளில் இருப்பதால் விமர்சனங்கள் அதிகாரபூர்வமாக அச்சேறுவதில்லை. அதுவேறு இதுவேறு என்பதுபோல பல்கலைக்கழகங்களும் சதி செய்கின்றன. அதனால்தான் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என்று பலரும் இன்னும் மதவாதிகளாக உள்ளனர். அறிவு ஜீவிகளே நம்பிக்கை கொள்ளும்போது சாதாரண மனிதன் எம்மாத்திரம். எனவே உயிர் பற்றிய மதங்களின் கோட்பாடுகளை, அதிலும் இசுலாமியக் கோட்பாடுகளிலேயே எனக்கு அதிகமாக  தெரியும் என்பதால் அதில் விரிவாகவும் பார்ப்போம்..

ஆத்மா, ஆன்மா, உயிர் ஆகிய சொற்கள் ஒரே பொருளுடையவையே. வெறுமனே ஒன்றின் உயிர் பற்றிக் கூறும்போது ‘’உயிர்’’ (Live) என்றச்சொல்லையும் அந்த உயிர்மீது புனிதத்தன்மை ஏற்றிச் சொல்லும்போது ஆத்மா (Soul) என்றும் ஆன்மா என்றும் கூறுகின்றனர்.

உயிர் (ஆத்மா) என்றால் என்ன?

பொதுவாக மனிதர்களுடைய நிலைப்பாடும் அறிவியலும் வேறுவேறாக உள்ளது இயக்கம் உடையன உயிர் எனலாம். ஆனாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட சக்தியால் அது இயங்கககூடாது.

உயிர்களின் இயக்கம் என்றால் என்ன?

இதற்கு பிறப்பு, இறப்பு, வளர்ச்சி இனப்பெருக்கம் செய்தல், மூச்சுவிடுதல், நடத்தல், சாப்பிடுதல், என நீண்ட பட்டியல் உண்டு. ஒரு உயிரினத்தில் இந்த செயல்கள் அனைத்தும் மொத்தமாக நின்றுவிட்டால் அல்லது அனைத்தையும் மொத்தமாக நிறுத்திவிட்டால் அது இறந்துவிட்டதாக கூறுகிறோம். (இங்கே சிந்திப்பது, கேட்பது, வலி போன்றவற்றை உணர்வது என்ற செயல்களை மட்டும் புறக்கணியுங்கள். இது பற்றி பிறகு பார்ப்போம்.)  இறந்த பின்னான உயிர் பற்றி மதங்களின் பார்வையும் அறிவியலின் பார்வையும் வேறுவேறாக உள்ளது. உயிர் உடலில் இருந்து பிரிந்து தனி ஒரு பொருளாக சென்றுவிடுகிறது என்று மதங்களும், இறந்துவிட்ட பிறகு அதற்குமேல் ஒன்றும் இல்லை; உடலின் சத்துக்கள் மண்ணோடு மண்ணாக கலந்துவிடுகிறது என்று அறிவியலும் கூறுகிறது.

உயிர் எங்கிருக்கிறது?

உலகில் தத்துவங்கள் தோன்றிய நாட்களிலிருந்து இன்றுவரை உயிர் பொதுவாக இதயத்தில் இன்னும் சரியாகச் சொல்வதென்றால் இதயம் என்ற உறுப்பு பற்றி தெளிவான அறிவு பழங்காலத்தில் இல்லாதிருந்ததால் நெஞ்சுக்கூட்டிற்குள் இருப்பதாக நம்பப்பட்டுவந்தது. எல்லா மதக்கோட்பாடும் இதற்கு விதி விலக்கல்ல. அதுமட்டுமல்ல, ஆன்மாவின் மையம் இதயம் என்பதுபோல, இந்த இதயமே சிந்தனைக்கான (அறிவுக்கான) உறுப்பாகவும் கூறுகின்றன.

உயிர் பிராணவாயுவில் இருப்பதாக அத்வைதம் கூறினாலும் அது தங்கி இருக்குமிடம் நெச்சுக்கூட்டிலுள்ள இதயத்து அருகில் அல்லது முதுகந்தண்டிற்கு அருகில் ஒரு வெற்றிடத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக கூறுகிறது. பகவத்கீதையும் இவ்வாறே கூறுகிறது.

அறிவியல் வளர்ச்சி மதவாதிகளிடமும் சிறு அசைப்பை எற்படுத்தியுள்ளதால், உயிர் என்பது மூளையில் தங்கி உடல் உறுப்புகளை இயக்குகிறது என்று கொஞ்சம் படித்தவர்களிடம் மாற்றுக் கருத்து உருவாகியுள்ளது. இன்னும், அது உடல் முழுவதும் வியாபித்துள்ளது என்றும் அது இயங்கத்தேவையான உடல் உறுப்புகள், ஆக்ஸிஜன், இரத்தம் போன்றைவைகளில் பழுது ஏற்பட்டு இயங்காவிட்டால் அந்த உயிர் இறந்துவிடுகிறது என்றும் கருதுகின்றனர். எதுவானாலும் உடலில் ஒரு உயிர் தனித்த ஒரு பொருள்போல் உள்ளது என்றும், இறந்துவிடும்போது அது உடலைவிட்டு பிரிந்து விடுகிறது என்று மத நம்பிக்கையாளர்களும், அது இறந்துவிடுகிறது அவ்வளவுதான் அதற்குமேல் அதில் ஒன்றும் இல்லை என்று நாத்திகர்களும் கருதுகின்றனர்.

உயிரின் மூலம்

உபநிடதங்களில் ஒன்றுக்கொன்று சில முரண்பாடுகள் இருந்தாலும் மையமான கருத்தில் வேறுபாடு இல்லை. பிரகதாண்ய உபநிடதம் பின்வருமாறு கூறுகிறது.

அது முதலில் ஸோஹ் (நான் இருக்கிறேன்) என்று கூறியது. முதலில் இது ஒன்றுமே இல்லாதிருந்தது. அது தான் ஆன்மா உடையதாக வேண்டும் என்று விரும்பியது. அது விரும்பியதும் நீர் உண்டாயிற்று நிலம் உண்டாயிற்று. அங்கே அது களைத்துவிட்டது. களைத்து வெப்பமடைந்து அந்த பிரம்மத்தின் ஒளியின் சுவையே வெப்பமாக மாறியது.

நெருப்பிலிருந்து சிறு சிறு தீப்பொரிகள் வெளிவருவது போல இந்த ஆன்மாவிலிருந்து எல்லா உயிர்களும் எல்லா உலகங்களும் எல்லா தேவர்களும் எல்லா ஜீவன்களும் தோன்றுகின்றன. என்று கூறுகிறது.

ஐதரேய உபநிடத்தில் அதை இயற்றிய மஹிதாஸ் ஜதரேயர் கூறியதாவது. “இந்த ஆன்மா முதலில் தனிமையாக வாழ்ந்திருந்தது. அப்பொழுது வேறு எதுவுமே இருந்ததில்லை. அது உலகை படைக்க வேண்டும் என விரும்பியது. அது இவ்வுலகையையும், நீரையும், ஒளிக்கதிர்களையும் படைத்தது. அது உலகத்தை ஆளுபவர்களை படைக்க விரும்பியது. அது நீரிலிருந்து ஜீவனை மேலே எடுத்து நடுங்கவைத்தது. அதை மெல்ல சூடாக்கியது. வெம்மைபடர்ந்ததுமே அதன் முகம் முட்டை போல பொரிந்தது. – (கண், காது, தொப்புள் என பொரிந்து வந்ததாக ஒரு நீண்ட பட்டியல் உண்டு) பின்னர் ஆன்மா (பிரம்மம்) அந்த ஜீவனுக்கு பசியையும் தாகத்தையும் ஏற்படுத்தியது.

முண்டக உபநிடதம் கூறுவதாவது;

~அவர் தெய்வீகமான உருவமில்லாத புருஷர். வெளியேயும் உள்ளேயும் நிறைந்துள்ள பிறவி இல்லாதவர். உயிரும் மனமும் இல்லாதவர். புனிதமானதும் தொடப்படாததுமான இயற்கையையும் கடந்தவர். அவரிடமிருந்தே உயிரும், மனமும், அனைத்து புலன்களும் தோன்றுகின்றன. அவரே வானமும், காற்றும், ஒளியும்(நெருப்பும்), நீரும், உலகத்தை தாங்கும் நிலமும் ஆவார். அவரிடமிருந்து பலரகமான தேவர்கள் தோன்றினார்கள். கீழ்நிலைத் தேவர்கள், மனிதர்கள், மிருகங்கள் பறவைகள், உயிர், தானியங்கள், பக்தி, உண்மை,விதிகள் எல்லாமுமே அவர்தான்.

நிலத்திலே மூலிகைச்செடிகள் முளைப்பதுபோல், உயிருள்ள மனிதனில் ரோமங்கள் தோன்றுவதைப்போல அழிவில்லாத பிரம்மத்திலிருந்து உலகம் தோன்றுகிறது.

கொழுந்துவிட்டெரியும் நெருப்பிலிருந்து ஒரேவிதமான ஆயிரக்கணக்கான ஜுவாலைகள் பிறப்பதைப் போல அழிவற்ற பிரம்மத்திலிருந்து கணக்கற்ற உயிர்கள் பிறக்கின்றன.

பொதுவாக பிரம்மம் என்ற ஆன்மா தன்னுடைய ஆத்மாவிலிருந்து உலகையும் உயிர்களையும் படைத்தது என்பது வேதங்கள், அதன் விரிவுரையான உபநிடதங்களின் நிலைப்பாடாகும்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலேயே உருவாக்கி உலகை படைக்க விரும்பிய தேவன் (பரிசுத்த ஆவி), உலகில் உள்ள அனைத்தையும் உண்டாகக்கூடியது என்று கூறி ஒவ்வொன்றாக உருவாக்கினான். மனிதனைப்படைத்து ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனுஷன் ஜீவாத்துமாவானான் என்று கிறித்தவர்களின் பைபிள் கூறுகிறது.

பரிசுத்த ஆவியாக உள்ள தேவன் மனிதனை மண்ணிலிருந்து படைத்து தன்னுடைய ஆத்மாவிலிருந்து மனிதனுக்கு ஊதி உயிரூட்டினான். அந்த முதல் மனிதனிலிருந்து பிற உயிர்களை உண்டாக்குகிறான் என்பது கிறித்தவர்களின் கொள்கையாக உள்ளது.

கிறித்தவர்களின் கொள்கை போலவே இசுலாத்தின் கோட்பாடும் இருக்கிறது. ஆதம் என்ற மனிதனை படைத்து தன்னிடமுள்ள ஆத்மாவிலிருந்து உயிரூட்டினான் என்பதும், ஆதமுடைய விந்தைக் கொண்டு பிற மனிதர்களைப் படைத்து செம்மையான உருவமாக்கியபின் தன்னிடமுள்ள ஆத்மவை ஊதி உயிர் வழங்குகிறான் என்றும் குரான் கூறுகிறது.

குரான் வசனம்.15:26- தட்டினால் ஓசைதரக்கூடிய, மாற்றத்திற்குரிய கருப்பு களிமண்ணால் திட்டமாக நாம் மனிதனை படைத்தோம் –என்றும், 15:29 அதனை நான் செவ்வைப்படுத்தி அதில் என் ஆன்மாவிலிருந்து நான் ஊதிய பொழுது அவருக்கு சிரம் பணிந்தவர்களாக நீங்கள் விழுங்கல் (என்று வானவர்களிடம் கூறினான்) – என்றும் 38:72 பிறகு அவரை செவ்வைப்படுத்தி, அவரில் என் புறத்திலிருந்து ரூஹை (ஆன்மாவை) ஊதியபோது அவருக்கு சிரம் பணிந்தவர்களாக நீங்கள் (கீழே) விழுங்கள் -என்றும் கூறுகிறது.

இவ்வசனங்கள் முதல் மனிதனை அல்லா படைத்ததற்கான குரானின் வசனங்கள்.

வசனம்.32:8 பிறகு அவனுடைய (ஆதமுடைய) சந்ததியை அற்பத் தண்ணீரின் சத்திலிருந்து (விந்திலிருந்து) உண்டாக்கினான் என்றும், 32:9 பிறகு அதனைச் சரியாக உருவாக்கி தன் புறத்திலிருந்து ஆத்மாவை ஊதினான் என்றும் கூறுகின்றன.

முதல் மனிதனுக்குப் பின்னால் படைக்கப்படும் மனிதர்களையும் கர்பப்பையில் உருவமைத்து பிறகு தன்னுடைய ஆத்மாவிலிருந்து ஊதி உயிரூட்டுகிறான் அல்லா என்று குரான் கூறுகிறது.

உயிரின் வடிவம் என்ன?

அறிவியல் இதற்கு வடிவம் தரவில்லை. அலைகள்போல, ஒளியைப்போல என்றுகூட கூறவில்லை. இயக்கம் உடைய பொருள் உயிருள்ளவை. இயக்கமற்ற பொருள் உயிரற்றவை என்று மட்டுமே கூறுகிறது. நாத்திகர்களும் இதனையே நம்புகின்றனர். ஆனால் பாவம், புண்ணியம் (வழக்கில் பொதுவான நன்மை, தீமை என்பது போல் அல்ல. மதக் கட்டளைகளுக்கெதிரான செயல்களால் விளையும் பாவம், புண்ணியம்) சொர்க்கம், நரகம் போன்ற கருத்தாக்கங்களைக் கொண்டுள்ள மதங்களுக்கு உயிர் பற்றிய ஒரு வடிவம் தராவிட்டால் சிக்கல்தானே. அதனால் உயிர் அல்லது ஆத்மா என்பது ஒரு புகையைப்போல ~ஆவி~ அல்லது காற்றைப்போல வெறுங்கண்ணால் பார்க்க முடியாதது என்று மதங்கள் கூறுகின்றன. இது மகான்களின் கண்களுக்குத்தான் தெரியும் அல்லது அவர்கள் மட்டுமே அதனை காற்றை நாம் உணர்வதுபோல உணறுவர் என்கின்றனர். அதற்காக சிறப்பு ஆன்மீகப் பயிற்சி எடுத்தால் நாமும் பார்க்கலாம், உணராலாம் என்றும் கூறுகின்றனர்.

எங்கோ உள்ள ஒலியையும் ஒளிக்காட்சிகளையும் தேசங்கடந்து, கண்டம் கடந்து, கோள்கள் கடந்து வானொலி பெட்டியிலும், தொலைக்காட்சி பெட்டியிலும் கேட்கிறோமே, பார்க்கிறோமே! அவைகளுக்கெல்லாம் உருவம் உண்டா? காந்த மற்றும் மின்காந்த அலைகளுக்கு உருவம் உண்டா? இவ்வலைகளை கண்களால் பார்க்க முடியாதுதானே. அது போலத்தான் உயிரும் என்று அறிவியலையும் துணைக்கு அழைத்துக்கொள்வதற்கும் இவர்கள் தயங்குவது இல்லை.

ரேடியோ அலைகள் மற்றும் பிம்பங்கள் பற்றிய அறிவை முழுமையாக உள்வாங்காத்தால் இந்த பிதற்றல். ஒலி அலைகளையும் ரேடியோ அலைகளையும் காந்த அலைகளையும் வெற்றுக் கண்களால் பார்க்க முடியாதுதான். ஆனால் அதற்கான கருவிகொண்டு பார்க்கமுடியும். அதன் பண்புகளை மிகத் துள்ளியமாக வரையறுக்க முடியும். அவ்வாறு உயிர் எனபதை காணமுடியுமா? முடியாது என்று நாம் சொல்லிவிடத்தான் விடுவார்களா அவர்கள்? இதற்கும் அவர்களிடம் விஞ்ஞான ஆய்வு தயாராகவே உள்ளது. அது பற்றி தேவையான இடத்தில் பார்ப்போம்.

எல்லா விளக்கங்களுக்கும் மேலாக இவர்களுக்கு ‘’நம்பிக்கை’’ என்ற கொள்கையும் இந்த உயிர் என்பதற்கு வடிவம் தருகிறது.

 

ஒரு பொருள் வடிவம், இருப்பிடம் இல்லாமல் இருக்கமுடியாதுதான். ஆனால் புகையைப்போல ஆவி என்றும், காற்றைப்போல பார்க்கமுடியாதது என்றும் கூறுவது சரியான பதிலில்லை. காலம் காலமாக மத நம்பிக்கையில் மூழ்கியிருப்பவர்களிடம் அந்த நம்பிக்கையில் உள்ள புளுகுகளை புரியவைக்காமல், இதற்கு நேரிடையாக பதில் கூறுவதன் மூலம் எளிதாக விளக்கிவிட முடியாது.

இவர்களுடைய உயிரின் இருப்பிடம் மற்றும் வடிவத்தைப்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள உயிர் உடலில் இருந்து பிரிந்தபின் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தத்துவ விளக்கத்தை முதலில் நாம் ஆய்வு செய்வோம்.

இந்துமதத்தின் ரிக்வேதம் ஆத்மா பிரிந்து சென்று தோன்றிய இடமான பரமாத்மாவுடன் இரண்டரக்கலந்துவிடுகிறது என்று கூறுகிறது. இக் கருத்து நிலபிரபுத்துவ சமூகமாக மாற்றமடைந்தபோது போதுமானதாக இல்லாததால் உபநிடதங்கள் ஆத்மாவிற்கு மறுபிறப்பை புகுத்தியது. செய்வினைப்பயனே மனிதனின் குலப்பிறப்பிற்கு (சாதிகள்) காரணம் என்றும் இழி பிறப்பு முற்பிறவியின் கர்ம பயன் என்றும் கூறத்தொடங்கியது. அதுபோல சொர்கம் நரகம் என்ற கருத்தாக்கமும் ஆளும் வர்க்கத்திற்கு அமுதமாகவே துணைநின்றது. ஆரியர்கள் மேற்கிந்தியப் பகுதிகளில் தமது ஆட்சியதிகாரம் செழித்தோங்கி இருந்த காலத்தில் மனு என்பவன் பார்ப்பனர்கள் மற்றும் சத்திரியர்கள் ஆத்மாவிற்கு மட்டுமே சொர்கம் என்றும், இவர்களல்லாத பிற சாதியினருக்கு (இழி பிறப்பினருக்கு) நரகம் என்றும் கொள்ளகையை வகுத்தான்.

ஆனாலும் காலம் இதனை தொடராக அனுமதிக்கவிடுமா?. பிறமதங்களின் தாக்கம் மக்களிடையே ஆளுமை செலுத்த தொடங்கியதும் இழிபிறவி ஆத்தமாவை, ஒருவன் இறந்த பிறகு புனிதப்படுத்தி (கருமாதி) சொர்கத்திர்கு அனுப்பிவைக்கும் கொள்கையை உருவாக்கினர். இழிபிறவி ஆத்மாவும்  பிரிந்தபின் நன்மை செய்த ஆத்மாவாக இருந்தால் அது சொர்கத்திற்கு சொல்லும் என்றும் தீமை செய்த ஆத்மாவாக இருந்தால் அது நரகத்திற்கு சென்று வேதனைகளை அனுபவிக்கும் என்றும் புதுகோட்பாடுகளை உருவக்கிக் கொண்டனர். இந்துமதக் கோட்பாடின்படி ஒவ்வொரு ஆத்மாவிற்கும் கர்மபயனுக்கு ஏற்ற சாதியில் ஏழுமுறை மறு பிறப்பு உண்டு.  அதன் பிறகு செத்தபின் ஒருவனுடைய ஆத்மா மட்டுமே சொர்கம் அல்லது நரகத்திற்கு செல்கிறது. உடல் இவ்வுலகில் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.

கிறித்துவமதத்திற்கு மறுபிறப்பில் நம்பிக்கை இல்லை. நன்மை செய்த ஆத்மாவாக இருந்தாலும் தீமை செய்த ஆத்மாவாக இருந்தாலும் ‘’இளைப்பாறுதல்’’ என்னும் இடத்தில் தங்கி இருக்கும். உலகம் அழிந்தபின் நன்மை தீமைக்கேற்ப சொர்கம் நரகம் செல்லும் என்று கூறுகிறது.

ஆத்மா, சொர்க்கம், நரகம், உலகம் அழியும் என்ற கருத்துக்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவை. மதங்களாக, புரோகிதத் தொழிலை முன்நிறுத்தாத பழங்குடி மலைவாழ் மக்களிடம்  ஆத்மா, சொர்க்கம், நரகம், உலகம் அழியும் போன்ற இக்கருத்துக்கள் இருப்பதாக தெரியவில்லை. துர் சக்திபடைத்த தெய்வங்கள் இவ்வுல வாழ்க்கையில் தமக்கு துன்பத்தை தருவதாகவும், நல்ல தெய்வங்கள் தம்மை அந்த துர்தேவதைகளிடமிருந்து (இயற்கை பேரழிவிலிருந்து) காப்பதாகவும் மட்டுமே நம்புகிறார்கள்.

இதற்கு ஒரு காரணம் உள்ளது. ~கடவுள் நம்பிக்கையை~ ஒரு அடக்குமுறைக் கருவியாக இவர்கள் பயன்படுத்தவில்லை.. அதனால் சொர்க்கம் என்ற ஆசையூட்டலும் நரகம் என்ற பயமுறுத்தலும் இவர்கள் உருவாக்கவில்லை. அதனாலேயே இருவகைப்பட்ட தெய்வங்களுக்கும் பலியிட்டு வணங்குகின்றனர். இறந்தபின்னான உயிர் பற்றியோ உடல் பற்றியோ இவர்களிடம் எந்தக்கருத்தும் இல்லை. செத்துவிட்டான் அல்லது துர்தேவதை சாகடித்து விட்டது என்பதற்குமேல் அவர்களிடம் எந்தக்கருத்தும் இல்லை. புரோகிதத் தொழிலையும் சொத்துடமையையும் ஆதரிப்பவர்கள் மட்டுமே மதம் என்ற அடக்குமுறைக் கருவிக்கு சொந்தக்காரர்கள்.

இறந்துவிட்ட ஒருவரின் உயிர் (ஆத்மா)பற்றி இசுலாம் என்ன கூறுகிறது?

ஒரு உயிர் இறந்துவிட்டால் ஒட்டுமொத்தமான செயல்களை நிறுத்திவிட்டது என்று பொதுவாக நாம் நம்புகிறோம்.  அப்படி இல்லை; அது சாப்பிடுகிறது, நடக்கிறது என்று நான் கூறினால் என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? ‘’ஒரு மாதிரியாக’’ என்னைப் பார்ப்பீர்கள். காரணம் இவைகளை எல்லாம் ஒரு உயிர் நிறுத்திவிட்டதை கண்கூடாக நாம் பார்த்து உணர்ந்தபிறகே செத்துவிட்டதாக நம்புகிறோம். புதைத்தும் விடுகிறோம்.

மாறாக இறந்துவிட்ட ஒரு உயிர் நாம் பேசுவதைக் கேட்கிறது, சிந்திக்கிறது என்று கூறினால் அதுவும் உலகை ஆட்டிப்படைக்கும் மதங்களின் புனித நூல்கள் கூறினால்? ஏற்பதா கூடாதா என்ற சிக்கல் வந்துவிடுகிறது. நம்பமாட்டோம் என்று நாத்திகர்கள் கூறினாலும் அவர்களிடம், அது காதால் கேட்கவில்லை, சிந்திக்கவில்லை என்று நிருபியுங்கள் என்று கூறினால் அவர்களாலும் என்னதான் செய்யமுடியும்?. உடல் உறுப்புகள் அழிந்துவிடுகிறதே என்று நாத்திகர்கள் வாதிடலாம். அதனை மத நம்பிக்கையாளர் அறியவே செய்வார்கள். உடல் அழிந்தாலும் ஆத்மா கேட்கிறது, சிந்திக்கிறது என்று கூறினால்? அதனால் ஏற்றுக்கொள்வதையும் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும் இப்படிச் சொல்கிறவர்களின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் தீர்மானிக்கிறது. எனவேதான் மதங்கள் ‘நம்பிக்கையின்’’ மீது கட்டமைக்கப்படுகிறது. அதுபோல பார்த்துணர முடியாதவைகள்மீது தன் கற்கனைகளை கட்டவிழ்த்து விடுகிறது.

இதில் ஒன்றுதான் உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்கிறது என்ற கற்பனையும். பாவம் செய்த ஆத்மா பேயாக வந்து மனிதனை ஆட்டிப்படைத்த கற்பனை இதற்கு ஒரு சிறந்த சான்றாக உள்ளது. நகரமயமாக்களும், ஒளிமயமான இரவுகளும், மருத்துவத் துறையின் மனநோய் ஆய்வு வளர்ச்சியாலும் பேய், ஆவி மீதான கற்பனைக்கோட்டை நொறுங்கி விழுந்துவிட்டது. இன்னும் எச்ச சொற்ப நம்பிக்கையாளர்களும் அவர்களை ஏமாற்றுபவர்களும் இருந்தாலும் தர்க்கரீதியாக கட்டமைப்பாளர்களும் பிழைப்புவாதிகளும் காணாமல் போய்விட்டனர். ஆனாலும் உயிர் பிரிந்து சொர்க்கத்திற்கு செல்கிறது என்றும், ஆத்மாவின் ஊர் சுற்றும் உலாதான் உங்களின் கனவு (தூங்கும்போது கானும் நிஜக்கனவைச் சொல்கிறேன்) என்றும் அவர்கள் சொல்லுவதை ஒற்றைவரியில் மறுத்துவிட முடியுமா? அவர்களும் உங்களை சும்மா விட்டுவிடுவார்களா? காலத்திற்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்ப அவர்கள் கைவசம் அறிவியலும் விஞ்ஞானிகளும்  தயாரவாகவே உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானியின் விளக்கத்தைப் பார்ப்போம்.

திரு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் தமது குர்ஆன் மொழிபெயர்ப்பில் தன்னுடைய குறிப்பு பகுதியில் (குறிப்பு எண் 39;42) பின்வரும் அறிவியலை எழுதியுள்ளார்.

 

இங்கிலாந்திலுள்ள ஒரு பல்கலைக்கழத்தில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் இன்ஞினியரிங் பிரிவில் தலைவராக பணியாற்றும் அப்துல்லா அலிசன் (இசுலாத்தை தழுவியபிறகு இட்ட பெயர்) அறிவு மற்றும் உணர்வுகளுக்கு பதிலளிக்கக்கூடிய இசுலாத்துடன் உடனடியாக அறிமுகமாகிக் கொள்ளுமாறு மேற்கத்திய மற்றும் உலக விஞ்ஞானிகளுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். தூக்கத்திற்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய அவருடைய மின் மற்றும் மின்னணுக் கருவிகளின் துணைகொண்டு நடத்திய ஆய்வுமூலம் ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலில் இருந்து வெளிச்செல்கிறது என்றும் அது எப்பொழுது திரும்புகிறதோ அப்பொழுது விழிப்புணர்வு ஏற்படுகிறது என்றும் ஆனால் மரணத்தில் அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை என்பதையும் கண்டறிந்தார். இந்த ஓரு கண்டுபிடிப்புடன் மேலே சொல்லப்பட்ட விஞ்ஞான மாநாட்டிற்கு தேவையான ஆய்வுக் கட்டுரையை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டபொழுது குர்ஆனில் இது குறித்த வாசகத்தை கண்டதும் அவருடைய பிரமிப்புக்கு அளவே இல்லாமல் போனது.

அந்த வசனம் அவரது கண்டுபிடிப்பை முற்றிலும் ஆமோதிப்பது போலவே அமைந்திருந்தது. இதனை உறுதிப்படுத்தும்விதமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மனோதத்துவ பிரிவைச்சேர்ந்த டாக்டர் எஹ்யா அலிமுஷ்ரபின் துணையோடு தூக்கமும் மரணமும் ஒரே வழியைச்சார்ந்தவைதாம் என்று விஞ்ஞானபூர்வமாக மேற்கண்ட குர்ஆன் வசனத்தில் கூறியபிரகாரம் நிறுபித்துக் காட்டுகிறார்.

இதைப்படித்த்தும் ஒருபக்கம் அதிர்ச்சியாகவும் மறுபக்கம் பரிதாபமும் ஏற்பட்டது. இப்படி ஒரு விஞ்ஞானியால் கூறவும் முடியுமா? இன்னும் நூறாண்டுகள் கழிந்தாலும் முடியும் என்றே தோன்றுகிறது. மதங்களுக்கு எதிரான பிரச்சாரம் தவிர்கப்படுமானால் அதிலும் அவர்களுடைய அறிவியல் விளக்கங்களை அடையாளங்கண்டு அம்பலப்படுத்துவதை நமக்கேன் வம்பு என்று இருந்தால் இதற்குமேலும் கூறமுடியும் என்பதே உண்மையாக உள்ளது. இன்னொரு விஞ்ஞானியிருக்கிறார். அவருக்கு இந்த கண்டுபிடிப்பு என்ன உணர்வை தோற்றுவித்ததோ தெரியவில்லை. இதற்கு இப்படிச்சொல்வதைவிட வேறுவிதமாக கண்டுபிடித்துச் சொல்வோம் என்று தோன்றியது போலும். இந்த விஞ்ஞானியும் இன்னொரு விஞ்ஞானியை துணைக்கும் அழைத்துக் கொண்டார். இந்த விஞ்ஞானியின் விளக்கத்தை பார்ப்பதற்குமுன் அந்த விஞ்ஞானியின் அறிவியலுக்குள் சற்று செல்வோம்.

நீங்கள் தூங்கும் ஒருவரை பார்த்திருக்கிறீர்களா? என்ன அற்பத்தனமான கேள்வி என்று தோன்றலாம். ஆனாலும்  இது போன்ற அற்பத்தனமான கேள்விகளை இக் கட்டுரையில் கேட்பது தவிர்க்க முடியாதது. தயவு செய்து ஒருமுறை தூங்கும் ஒருவரை சற்று கவனமாக பாருங்கள். அடுத்து நான் சொல்பவற்றை உண்மையா என்று ஆய்வு செய்யுங்கள்.

இரவு உணவுக்குப்பின் தூங்கச் சென்று தூங்கும் ஒருவரை கவனியுங்கள். அவரின் இதயம் துடிக்கிறது. மூச்சு இழுத்துவிடுகிறார். ஒரு நிலையில் படுத்திருந்தவர் திரும்பி படுக்கிறார். கொசுவத்தியை கொலுத்திவைக்க மறந்துவிட்டதால் கொசு கடித்த இடத்தை சொறிந்து கொள்கிறார். ஒரு சிலர் ஏதோதோ முனகுகிறார்கள். ஒரு சிலர் ஒரு சில தெளிவான சொற்களையும் சொல்கிறார்கள். ஒரு சிலர் ஏதோ சொல்லிக்கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பூட்டிய கதவை திறந்துகொண்டு வெளியே செல்லவும் முயற்சிக்கிறார். புரண்டு புரண்டு படுத்தவர் திடுப்பென்று எழுந்து அவசர அவசரமாகச் சென்று சிறுநீரோ, மலமோ கழிக்கின்றார். பெரும்பாலான குழந்தைகள் படுக்கையிலேயே சிறுநீரைக் கழித்துவிடுகின்றன. ஒரு சில பெரியவர்களும் கூட அப்படித்தான்.

‘’கண்ணே எழுந்திருமா’’ என்று அம்மா பலமுறை அமைதியாக எழுப்பியும் அசையாமல் கிடந்தவர் ‘’டேய் எழுந்திரு’’ என்று சற்று குரலை உயர்த்தியதும் விழித்து விடுகிறார். சிலர் அதற்கும் மசியவில்லை. இரண்டு தட்டு தட்டிதான் எழுப்ப வேண்டியுள்ளது. இதில் ஒரு ஆச்சரியமான நிகழ்வும் உள்ளது. அந்தச் சூழ்நிலைக்கு அவர்தான் பாதுகாப்புக்கு பொறுப்பானவர் என்றால் சிறு ஒலியைக்கேட்டாலும் படக்கென்று எழுந்துவிடுகிறார். ஆனால் அருகிலுள்ளவர்களோ ஏதும் அறியாதவர்களாக நிம்மதியாக தூங்குகிறார்கள். இரவுவிளக்கு வெளிச்சத்தில் தூங்கிங்கொண்டிருந்தவர் குழல்விளக்கை இயக்கியதும் சிறிது நேரத்தில் புரண்டு வெளிச்சம் முகத்தில் படாதவாறு திரும்பி படுத்துக்கொள்கிறார். சிலர் இந்த வெளிச்சத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் நன்றாக உறங்குகின்றனர். இன்னும் ஒரு அதிசயமான செயல் ஒன்றும் நடைபெறுகிறது. யோசித்து யோசித்து விடைகிடைக்காமல் தொடர்ந்து அதற்கான விடையைத் தேடி சிந்தித்துக்கொண்டிருப்பவர்கள் பலருக்கு தூக்கத்தில் விடை கிடைத்த அதிசயங்களும் உள்ளன.

இன்னும் எத்தனை எத்தனையோ செயல்கள்கள். அத்தனையையும் நீங்கள் ஏதாவது கருவிகொண்டு ஆய்வு செய்து பார்க்கவேண்டிய அவசியம் உள்ளதா? வெற்றுக்கண்களுக்கு புலப்படக்கூடியவைகளே இவைகள்.

இது மட்டுமல்ல. உங்கள் கண்களுக்கு புலப்படாத, தொட்டுணறமுடியாத செயல்களும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இரவு உண்ட உணவு செரிமானச் சுழற்சியடைகிறது. சிறுநீரகங்கள் சிறுநீரைப் பிரித்தவண்ணம் செயல்புரிந்துகொண்டே இருக்கிறது. இதயமோ ஒரு வினாடிகூட ஓய்வில்லாமல் இரத்தத்தை பம்ப் செய்துகொண்டே இருக்கிறது. அந்த இரத்தத்தை நுரையீரல் வெளியிலிருந்து உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனைக்கொண்டு சுத்தப்படுத்திக்கொண்டை இருக்கிறது. இன்னும் செல்களின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் அழிவு என்று எண்ணற்ற செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகளை ஒரு படிப்பறிவில்லாதவர்கள்கூட மறுக்க முடியாத அளவிற்கு அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்படியானால் தூங்குவது  என்றால் என்ன? மூளை ஓய்வு எடுக்கிறது என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறோம். அதுவும் தவறுதான். உடலின் செயல்கள் அணைத்தும் மூளையால் இயக்கப்படுகிறது என்று அறிவியல் கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தூங்குபவனிடமும் கேள்வி புலன், பார்வைப் புலன், தோல்களின் உணர்வுப் புலன் ஆகியவை செயல்படுவதை பார்த்தோம். அது மட்டுமல்லாது நம் விருப்பத்திற்கு கட்டுப்படாமல் (அனிச்சையாக) நடைபெறும் அணைத்து உடல் உறுப்பின் செயல்களும் தூங்கும்போதும் செயல் பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மூளை ஓய்வு எடுத்தால் இச்செயல்கள் எவ்வாறு நடைபெறும்?

பார்வை, மற்றும் கேள்வி புலன்களை மட்டும் (கண் மற்றும் காதுடைய செயல்களை மட்டும்) கட்டுப்படுத்தும் மூளைப்பகுதி மட்டுமே ஓய்வு எடுக்கும் செயலைச் செய்கிறது. இதுவே தூக்கம். அதுவும் ஒரு குறிப்பிட் அளவு விகிதத்திலே மட்டும்தான். உணர்வின் அளவு மீறும்போது விழிப்புணர்வு ஏற்பட்டுவிடுகிறது.

தூக்கம் என்பது உடல் உழைப்பினால் எற்படும் அயற்சியின் அளவைப் பொருத்துள்ளது. அப்படி என்றால் உடலின் உறுப்புகளும் தூக்கத்தில் ஓய்வு எடுப்பதாகத்தான் பொருள்படும். இந்த ஓய்வுக்கும் நான் குறிப்பிட்டுள் மூளை எடுக்கும் ஓய்வுக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. மூளை ஓய்வு என்பது அதுவும் ஓரு குறிப்பிட் பகுதி மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவு உணர்வுத்திறனை குறைத்துக்கொண்ட ஓய்வு. உடலின் புறவேலைகளைச்செய்யும் உறுப்புகளின் ஓய்வு என்பது உணர்வுத்திறனை இழக்காத உழைப்பிலிருந்து மட்டுமான ஓய்வு. உடல் உள் உறுப்புகள் எப்பொழுதும் ஓய்வு எடுப்பதே இல்லை.

இப்படி என்னவேண்டுமானாலும் தூக்கத்தில் நடக்கட்டுமே. அப்துல்லாஹ் அலிசன் ஏதோ ஒன்றுதானே பிரிந்து செல்வதாக கூறுகிறார். இதை எப்படி மறுக்க முடியும்?

நாம் பார்த்த தூங்குபவனின் செயல்கள் அனைத்தும் இறந்தவனுடைய உடலில் நடைபெறுவதில்லை. இறந்தவர்களுடை உடலில் ஏறபடும் மாற்றம் என்ன? இறந்தவர் ஆடாமல் அசையாமல் மரக்கட்டையாக கிடக்கிறார், உடலின் சூடு சில மணிநேரத்திற்குள் மறைந்து சில்லிட்டுவிடுகிறது. உடல் நிறம் வெழுத்துவிடுகிறது. நாம் கத்தி கொண்டு கிழித்தாலும் எந்த அசைவும் இல்லாமல் இருக்கிறது. 20, 25 மணிநேரத்திற்குப்பிறகு உடல் அழுகி நாற்றமடிக்கத் தொடங்குவதுடன் சதைகள் கழன்று விழத் தொடங்குகிறது. புறநிலைத் தோற்றமான இவைகளுடன் உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் இறந்தவுடனே செயலிழந்து விடுகிறது என்பதையும் நாம் இன்று நிருபிக்கத் தேவையில்லை. இவை அனைத்தும் அலி அசனும் திரு.வஹ்ஹாப் அவர்களும் அறியாததில்லை. இங்கேதான் ஆன்மீகத்தின் புனித அறிவு தந்திரமாக வேலைசெய்கிறது. பிரிந்த அந்த ஏதோ ஒன்று திரும்பிவந்தால் விழிப்பு ஏற்படுகிறது. திரும்பி வராவிட்டால் மரணம் ஏற்படுகிறது” என்று சொல்லாடல் தந்திரத்துக்குள் புகுந்துக் கொள்கிறார். செத்தவனும் தூங்குபவனும் ஒன்றுதான் என்று நேரடியாக சொல்வதை தவிர்த்துவிடுகிறார்.  என்ன செய்வது! அவர் விஞ்ஞானியாயிற்றே! அப்படி அவரால் கூறமுடியுமா!

இங்கு நீங்கள் சற்று கவனமாக படிக்கவேண்டும். அந்த ஏதோ ஒன்று தூங்குபவனிடமிருந்து பிரிந்து விட்டாலும் தூங்குபவனிடம் நான் முன்பே பட்டியலிட்டுள்ளபடி எண்ணற்ற செயல்கள் நடைபெறுகின்றன. அதாவது தூங்குபவனுடை இந்த எண்ணற்ற செயல்களை அந்த ஏதோ ஒன்று கட்டுப்படுத்தவில்லை என்பது இதன் பொருள். அந்த ஏதோ ஒன்று திரும்பி வராவிட்டால் மரணம் என்றால் இறந்தவனுடைய உடலிலும் துங்குபவனுடை செயல்கள் போல் எல்லாம் நடைபெற வேண்டும். ஆனால் நேர் எதிர்மரையாக செயல்கள் உள்ளது. அதனால் தூங்குபவனும் இறந்தவனும் ஒரே இயற்பியல் நிலையில் இருக்கின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியானால் அந்த ஏதோ ஒன்றின் ஆய்வு எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது?

குர்ஆன் வசனம் 39;42, உயிர்களை அவை மரணிக்கின்ற நேரத்திலும் இன்னும்  தன் உறக்கத்தில் மரணிக்காமலிருப்பவற்றையும் அல்லாஹ்தான் கைப்பற்றுகிறான். (அவ்வாறு தூக்கத்தில் கைப்பற்றிய உயிர்களில்) எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் (தன்னிடம்) தடுத்து நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (உலகில் அதற்கு) குறிப்பிட்ட தவணைவரை (வாழ்வதற்கு) அனுப்பி விடுகிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்திற்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” என்று கூறுகிறது.

இறந்தவனுடைய உயிர்களை அல்லா கைப்பற்றி தன்னிடம் வைத்துக்கொள்வதோடல்லாமல் எவர் ஒருவர் எப்பொழுதெல்லாம் தூங்குகிறார்களோ அப்பொழுதெல்லாம்கூட அவரது உயிரை அல்லா கைப்பற்றிக் கொள்கிறான். தனது மஹ்புல்-லஹபூல் பலகையில் (ஒவ்வொருவரின் தலைவிதியையும் எழுதிவைத்துள்ள பலகை) ஒருவரின் வாழ்நாள் எவ்வளவு நாள் என்று எழுதிவைத்துள்ளானோ அந்த நாள் வரை தினமும் திருப்பி அனுப்பிவைத்து உலகில் உடலுடன்கூடி உயிராக வாழ வைக்கிறான். என்று இந்த வசனம் கூறுவதுடன் சிந்திக்கின்ற மக்களுக்கு இந்த உண்மையில் அல்லா ஒருவன் இருக்கிறான் எனபதற்கான சாட்சியாக உள்ளது என்றும் கூறுகிறது.

இது தொடர்பான நபிமொழிகளையும் பார்ப்போம்.

புகாரி எண்; 595 அபுகதாதா கூறியது.

நாங்கள் ஒரு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களை சற்று இளைப்பாறச் செய்யலாமே!’ என்று கேட்டனர். “நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் “நான் உங்களை எழுப்பிவிடுகிறேன்” என்று கூறியதும் அனைவரும் படுத்துக்கொண்டனர். பிலால்(ரலி) தம்முதுகை தமது கூடாரத்தின் பால் சாய்துக் கொண்டார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் “பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று என்று கேட்டார்கள். “இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை” என்று பிலால்(ரலி) கூறினார்கள். “நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பும்போது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பும்போது திரும்பவும் ஒப்படைக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு “பிலாலே, எழுந்து தொழுக்கைக்கு பாங்கு சொல்வீராக” என்றார்கள்.

இந்த நபிமொழி, தூக்கத்தில் அல்லா உயிர்களை கைப்பற்றி கொள்வதால் நாம் விரும்பும் நேரத்தில் விழிக்க முடியாது என்றும், அல்லா விரும்பும் போது அந்த உயிர்களை திருப்பி அனுப்பிய பிறகே விழிக்க முடியம் என்று நபி கூறியதாக கூறுகிறது.

புகாரி 1127:

நபி(ஸல்) அவர்கள் ஒரு இரவில் என்னிடமும் பாத்திமா அவர்களிடமும் வந்தார்கள், நீங்கள் இருவரும் தொழவில்லையா என்று கேட்டார்கள். அப்போது நான் ~அல்லாவின் தூதரே! எங்களின் உயிர் அல்லாவின் கையில் உள்ளன. அவன் எழுப்பும்போதுதான் நாங்கள் தொழமுடியும்.~ என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லளானார்கள். பின்னர் தமது தொடையில் அடித்து ~மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்~ என்று கூறிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்.

தூங்கும்போது உயிர்களை அல்லா கைப்பற்றிக்கொள்கிறான். அது திருப்பி அனுப்பப்படும்போதுதானே விழித்தெழ முடியும்! விழித்தெழுந்தால்தானே கடவுளை தொழமுடியும்! என்று அலி அவர்கள் முகம்மதுநபிக்கு பதிலாக கூறும் நபிமொழித் தொகுப்பு இது.

தனது தவறுக்கு பிலால் அய்யோ தூங்கிவிட்டேனே என்று வருத்தப்படும்போது அது பிலாலின் தவறல்ல, அல்லாவின் விருப்பம் என்று கூறுகிறார். அதுவே அலி அவர்கள் தமது தவறல்ல, அது அல்லாவின் விருப்பம் என்று கூறியதும் முகம்மதுநபி எரிச்சலடைகிறார். எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள்.

முகம்மதுநபி சொன்ன அறிவியல் உண்மையைத்தானே (?) அலி அவர்கள் பதிலாக கூறியுள்ளார்கள். அப்படியிருக்க முகம்மதுநபி தர்க்கம் செய்வதாக ஏன் எரிச்சலடைய வேண்டும்? ஒருவேளை முகம்மதுநபி தான் சொன்னதை தானே நம்பவில்லையா? ஆனாலும் இசுலாமிய தத்துவ இயலாளர்கள் இதனை இன்றும் நம்புகிறார்கள். குர்ஆன் கூறியுள்ளதால் நம்பாமல் இருக்கமுடியுமா?

தூங்குபவனும் இறந்தவனும் ஒரே இயற்பியல் நிலையில் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்படியானால் அலிசன் அவர்களுடைய ஆய்வின் நோக்கம்தான் என்ன? தீர்ப்பை எழுதிவிட்டு விசாரனை நாடகம் நடத்தும் நேர்மையை அலி அசனின் ஆய்வு வெளிப்படுத்துகிறது. இந்த ஆய்வை எடுத்தெழுதியுள்ள திரு. அப்துல் வஹ்ஹாப் அவர்கள் இசுலாம்தான் இந்த அரிய உண்மையைக்(?) கூறுவதாகவும் அகமகிழ்ந்து போகிறார்.

இதுபற்றி பிரகதாரண்ய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;

அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அவன் எதையுமே உணர்வதில்லை. இதயத்திலிருந்து புரீதத் சக்கரத்திற்கு ஹிதா என்னும் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகள் போகின்றன. அவற்றின் வழியே ஜீவன் புரீதத் சக்கரத்திற்குச் சென்று அங்கே உறங்குகிறது. சிறு குழந்தையும், பேரரசனும், சிறந்த பிராமணனும் ஆனந்தத்தின் எல்லையை அடைந்து ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிடுவதுபோல, ஜீவனும் புரிதத் சக்கரத்தில் தூங்குகிறான்.

சாந்தோக்கிய உபநிடதம் பின்வருமாறு கூறுகிறது;

எங்கு ஜீவன் மிக மகிழ்து கனவு காணாமல் இருக்குமோ அப்போது அது ஹிதா என்னும் நாடிகளில் உறங்கும் –என்று கூறுகிறது.

இதற்கு முரண்பாடாகவும்  சாந்தோக்கிய உபநிடதம் ~அன்பிற்குரியவனே! ஜீவன் உறங்கும்போது அது பிரம்மத்துடன் கலந்திருக்கும். அது தன்னை பிரம்மத்துடன் இணைத்துக்கொண்டிருக்கும்~ என்று உத்தாலக் ஆருணி தனது மகனான ஸ்வேதகேதுவுக்கு கூறுவதாக கூறுகிறது.

இவ்வாறு நாள்தோறும் பிரம்மத்துடன் கலந்துகொண்டே இருக்கிறோம் என்று கூறும் சாந்தோக்கிய உபநிடதம் மேலும் கனவு பற்றி கூறுவதாவது;

~கனவுக்குள் இருக்கும் விஷயத்தை உணர்ந்துகொள். கயிற்றால் கட்டப்பட்ட பறவை நாலா திசைகளிலும் பறந்தாலும் விலகிச்செல்ல இயலாமல் கட்டப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வதைப்போல் மனமும் பல திசைகளில் பாய்ந்து திரிந்தாலும் வேறு போக்கிடம் இல்லாததால் உயிரிடமே வந்து சேருகிறது~ என்று உத்தாலக் ஆருணி தனது மகனான ஸ்வேதகேதுவுக்கு கூறுவதாக கூறுகிறது.

இசுலாமிய கருத்துக்கும், மிகப் பழமையான இந்து மத வேதங்களின் கருத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது? 1400 ஆண்டுகளுக்கு முன்பே எப்படிக் கூறமுடியும் என்று வியக்கும் அலிசன் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதம் கூறியுள்ளதை ஏன் பார்க்கவில்லை?

அடுத்து ஒரு விஞ்ஞானியான பிஜே அவர்கள் இதுபற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஒரு மனிதன் தூங்கும்போது அவனது பாதி ஆத்மா பிரிந்து சென்று உலகத்தை எல்லாம் சுற்றி வருகிறதாம். அதாவது இதயம் துடிக்க மற்றும் அனிச்சை செயலுகளுக்கு தேவையான அளவு உயிர் மட்டும் உடலில் தங்கிக்கொண்டு மீதி உயிர் பறந்து பறந்து ஜாலியா உலகத்தை சுற்றி வருகிறதாம். அந்த பாதி ஆத்மா எங்கபோய் எதையெல்லாம் பார்க்கிறதோ அதுதான் கனவாக வருகிறதாம். பிறவிலேயே கண்பார்வையற்ற ஒரு பெண்ணிடம் நடத்தின ஆய்வில் கண்டுபிடித்த உண்மை என்று கூறுகிறார் இவர். ( இது குறித்த அவரது பேச்சுவை காணொளியாக காணஇங்கே சொடுக்குக http://www.youtube.com/watch?v=p2Jtu30tSGw அல்லது அருகிலுள்ள பிஜேவின் கனவு என்பதை சொடுக்குக.)

வேடிக்கையை பார்த்திர்களா? உங்கள் உடம்பில் உள்ள ஆத்மா முழுமையான ஒன்றே ஒன்றுதான் என்றுதானே நம்பியிருந்திர்கள்? பாதி ஆத்மா, கால்வாசி ஆத்மா, காலே வீசம் என்றெல்லாம் துண்டாடப்படும் என்று நீங்கள் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டீகள்.

உடல்நிலையில் நோய்வாய்ப்பட்டு மோசமாக ஒருவர் இருக்கும்போது அரை உயிருடன் இருப்பதாக கூறும் வழக்கம் நம்மிடம் பொதுவாக உள்ளதுதான். ஆனால் பாதி உயிர் போய்விட்டு மீதி உயிர்தான் இருப்பதாக உண்மையில் நாம் நம்புவதில்லை. அதுபோல இந்த உயிருக்கு உருவம் இல்லாததால் அரை உயிரு, கால் உயிரு என்றெல்லாம் எந்த தத்துவ விளக்கமும் இதுவரை தத்துவவியலாளர்கள் கூறியதில்லை. ஆனால் பிஜே அவர்களுக்கு அலிஅசனின் ஆய்வில் ஏதோ நம்பிக்கை இல்லை போலும். அதனால் பாதி உயிரு பறந்து போகிறது என்ற அறிவியலைக் கண்டுபிடித்துள்ளார்.

அதுசரி..  பாதி உயிரை அல்லா கைப்பற்றிக்கொள்கிறான் என்று குர்ஆன் கூறவில்லையே. கனவுகள் என்பது அல்லாவின் கட்டளைகளும், அறிவிப்புகளும், வழிகாட்டுதல்களும் என்றுதானே முகம்மதுநபி கூறியுள்ளார்கள். அப்படியிருக்க பாதி உயிர் என்றும், அது பறந்து சென்று பார்ப்பதே கனவு என்றும் இசுலாத்தின் கோட்பாடுகளுக்கே முரணாக இவரது கண்டுபிடிப்பு உள்ளதே. ஏன்? எல்லாம் அறிவியல் படுத்தும் பாடுதான். இந்த ஆத்மாவும் பாதி உயிர், கால்வாசி உயிர் என்று பெரும்பாடுபடுகிறது. கனவுபற்றி சாந்தோக்கிய உபநிடதம் கூறும் கருத்துக்கும் இவரின் கருத்துக்கும் எந்த வேறுபாடுமில்லை.

இவர் கூறியபடி பாதி ஆத்மா பறந்து சென்று எதையெல்லாம் பார்க்கிறதோ அதுதான் கனவு என்று நாமும் கொஞ்சம் நம்புவோம். வாலிப பருவத்தில் அல்லது திருமணம் செய்துகொண்டு பல நாட்கள் உடலுறவு தவிர்க்கப்பட்ட ஒருவருக்கு `ஒருமாதிரி` கனவு வருகிறதே. (இந்தக் கனவிற்கு அவர்கூட விதிவிலக்காக இருந்திருக்க முடியாது என்றே கருதுகிறேன்) அப்படியானால் கற்பு பற்றிய இசுலாத்தின் கொள்கைகளை எப்படி புரிந்துகொள்வது? எவருமே கற்புடன் இல்லை என்று பொருள்கொள்ளலாமா? மர்மத்தலங்களை பாதுகாத்துக்கொள்ளும்படியும் புர்கா போட்டு மூடிக்கொள்ளும்படியும் ஒப்பாரி வைக்கிறார்களே. கனவில் போய் பார்த்துவிட்டால் கற்பு கெட்டுப்போகாதா? இதற்கு தெளிவான பதில் உங்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவரிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இசுலாமிய விஞ்ஞானிகளின் ஆத்மாபற்றிய அறிவியலைப் பார்த்தோம். அடுத்ததாக இந்த ஆத்மா பற்றி குர்ஆன் கூறும் முரன்பாடுகளைப் பார்ப்போம்.

இறந்த உடலும் அதன் ஆத்மாவும் – குர்ஆனிலுள்ள முரண்பாடுகள்.

ஒருவர் இறந்தபின் அவருடைய உடல், ஆத்மா பற்றி கொஞ்சம் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வோம். ஒவ்வொரு உயிரையும் படைக்கும்போது பரமாத்மா (கடவுள்) தன்னிடம் உள்ள ஆத்மாவிடமிருந்து -உயிரிடமிருந்து- ஒருசொட்டு எடுத்து புதிய உடலுக்கு கொடுத்து உயிராக்கிறது. இந்து, கிறித்துவ, இசுலாமியக் கோட்பாடுகள் அனைத்தும் இவ்வாறே கூறுகிறது.

இறந்தபின் ஒருவருடைய உடல் அழிந்துவிடுகிறது என்றும் அதன் ஆத்மா மறுபிறப்பிற்கெல்லாம் பிறகு பரமாத்மாவிடம் சென்று சங்கம்மாகிறது என்றும் இந்து மதம் கூறுகிறது. உடல் அழிந்து ஆத்மா மட்டும், உலகம் அழியும்வரை நடுவானில் இளைப்பாறிவிட்டு சொர்கம் அல்லது நரகத்திற்கு போகிறது என்று கிறித்துவம் கூறுகிறது.. ஆனால் இசுலாம் இதில் முரண்பட்டக் கருத்தைக்கொண்டுள்ளது. உலகம் அழியும்நாள் வரை நரகமோ சொர்கமோ இல்லாமல் இந்த மனிதனை சும்மாவிட்டால் அச்சநிலையில் இருத்திவைக்க முடியாது என்று முகம்மதுநபி உணர்ந்திருந்த்தால் இந்த முரண்பாடுகள்.

இதற்கு காரணம் அக்காலத்திலேயே இறந்த மனிதன் மீண்டும் உயிர் எழுப்பப்படமாட்டான் என்ற தத்துவ விளக்கங்கள் யூதர்களிடமும், குறைசிகளிடமும் தோன்றத் தொடங்கி இருந்தன. இதன் பொருள் அவர்களிடம் கடவுள் மறுப்பு கோட்பாடு ஆதிக்கம் செலுத்தியது என்பதல்ல. ~முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்~ என்ற கருத்தாக்கம் உருவாகிநிருந்ததே இதற்குக் காரணம். அதாவது, பாவத்திற்கு தண்டனை இறந்தபின்தான் கிடைக்கும் என்ற கருத்தாக்கம் அவர்களின் ஆளும் வர்கத்திற்கு போதுமானதாக இல்லை.

முகம்மதுநபிக்கு பிறகு தோன்றி இசுலாமி தத்துவவியலாளர்களில் ரோஸ்த் என்பவருடை தத்துவங்களே ஐரோப்பிய தத்துவங்களை பொருள் முதல்வாதத்தை நோக்கித் தள்ளத்தொடங்கியதாக ராகுல்ஜி குறிப்படுகிறார்.

குர்ஆன், ஹதீது வழியாக முகம்மதுநபியின் முரண்பாடுகளைப் பார்ப்போம். நான் முன்பே கூறியுள்ளதுபோல் செத்துவிட்ட ஒருவர் நாம் பேசுவதைக் கேட்கிறார்; தொடுவதை உணர்கிறார்; பதில் சொல்கிறார் ஆனால் அவரின் சொற்கள் நமக்கு கேட்பதில்லை என்று வரிசையாக நிறைய குர்ஆனும் ஹதீதுகளும் கூறுகின்றன. இறந்தபின் ஒருவரின்  மண்ணறை வாழ்வு தொடங்குகிறது என்று ஆத்மாவின் இரண்டாம் கட்ட வாழ்வாக கூறுகிறது. ( உலகம் அழிவுக்குப்பின் நீதிவிசாரனை நடத்தி சொர்கம் நரகம் கொடுப்பது மூன்றாம் கட்ட வாழ்வுபோலும் )

புகாரி314.  இறைத்தூதரஅவர்கள் கூறினார்கள்.”

ஜனாஸா (பெட்டியில் வைக்கப்பட்டு) அதை ஆண்கள் தங்களின் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள் என்று கூறும். அது தீய அறங்கள் புரிந்ததாக இருந்தால் கைசேதமே! எங்கே என்னை கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்துவிடுவான்.

அபூ ஸயீதுல் குத்ரி அறிவித்தார்.

இறந்த ஒருவரை புதைக்கச் செல்லும்போது நன்மை செய்தவராக இருந்தால் தமக்கு மண்ணறையில் ( புதைகுழியில் ) சொர்கம் போன்ற சுகமான இருப்பிடம் கிடைக்கும் என்று சீக்கிரம் தம்மை புதையுங்கள் என்று கூறுவாராம். தீமைகள் செய்தவராக இருந்தால் தமக்கு மண்ணறையில்       ( புதைகுழியில் ) நரகம் போன்ற நெருப்புக் காற்றும்., புதைகுழி நெருக்கி துன்பப்படுத்தும் என்பதால் என்னை புதைத்துவிடாதீர்கள் என்று கதறுவார்களாம் என்று இந்த நபி மொழி கூறுகிறது.

புகாரி 1373.  அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்)கதறிவிட்டார்கள்.

புகாரி 1374.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத்(ஸல்) குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இதன் அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.”

அனஸ்   இப்னு  மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறந்த ஒருவரை புதைத்தவுடன் இரு வானவர்கள் (தேவர்கள்) புதை குழிக்குள் சென்று புதைக்கப்பட்டவனிடம் கேள்விகள் கேட்பார்களாம். அவர்கள் கேட்கும் கேள்விக்கு புதைக்கப்பட்டவனால் பொய்யான பதில் கூறமுடியாது. அந்த வானவர்கள் அவனிடம் ஒரு விசாரனை நாடகம் நடத்தி ( எற்கனவே தலைவிதியை தீர்மானிக்கும் பலகையில் எழுதப்பட்டவைகள்தான் ) அவன் செய்த நன்மைகளையும் தீமைகளையும் தனித்தனி குறிப்பேட்டில் எழுதிக்கொள்வார்களாம்.

தீமைகளை அதிகம் செய்தவனுக்கு புதைகுழி சுருங்கி அவனை நெருக்கும். நரகத்திலிருந்து கடும் வெப்பக் காற்று புதைகுழிக்குள் வீசும். நன்மைகளை அதிகம் செய்தவனுக்கு புதைகுழி அகன்று சொர்கத்தைப்போல அமைக்கப்படும். அதில் அவன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பான் என்று நபிமொழிகள் கூறுகின்றன.

புகாரி1361 .இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, ‘இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்’ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று கேட்டதும், ‘இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த நபிமொழிகள் இறந்தவிட்ட ஒருவர் பேசுவதைக்கேட்கிறார், பதில் சொல்லுகிறார், வலி போன்ற வேதனைகளை உணர்கிறார் என்று கூறுகின்றனஆனால் குர்ஆனுடைய பின் வரும் வசனங்கள் இதற்கு முற்றிலும் முரணாக இறந்தபிறகு (தூக்கத்திலும்கூட) ஆத்மாவை அல்லா கைப்பற்றிக் கொள்வதாகவும், உலகத்தை அழித்தபிறகே, சிதைந்து சிதறிவிட்ட எலும்புகளை எல்லாம் ஒன்று கூட்டி சதைகளையும் உயிரையும் கொடுத்து எழுப்பப்படும் என்று கூறுகின்றன.

குர்ஆனின் வசனம் 39;42  உயிரைக் (ஆத்மாவை) கைப்பற்றி அல்லா தன்னிடமே வைத்துகொள்கிறான் என்று கூறுகிறது.

வசனம் 2;259 ஒரு கிராமத்தின் பக்கம் சென்ற ஒருவரை (நீர் கவனிக்கவில்லையா? அந்த கிராமமானது அதனுடைய (வீட்டு) முகடுகளின் மீது இடிந்து விழுந்து கிடந்தது. இவ்வாறு இது அழிந்துவிட்டபின் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான் என்று அவர் கூறினார். அப்போது அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணமடையச் செய்தான். பிறகு அவரை ( உயிர் கொடுத்து ) எழுப்பி ~எவ்வளவு நேரம் (இந் நிலையில் இங்கு ) தங்கி இருந்தீர்? என்று கேட்டான். (அதற்கு) ~ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் தங்கி இருந்தேன்~ என்று அவர் கூறினார். ~அவ்வாறில்லை. நீர் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) தங்கியிருந்தீர். (இதோ) உம்முடைய உணவையும், பானத்தையும் பார்ப்பீராக. அவை மாறிவிடவில்லை. ஆனால் (மக்கி மடிந்துவிட்ட) உனது கழுதையைப் பாரும். உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக்குவதற்காக (உம்மை மரணிக்கச் செய்து எழுப்பினோம்.) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும். (உம் கண்முன்) அவற்றை எவ்வாறு நாம் ஒன்று சேர்க்கிறோம்; பின்னர் அவற்றிற்கு (எவ்வாறு) சதையை அணிவிக்கிறோம்~ என்று அவன் கூறினான். எனவே (இவை அனைத்தும்) அவருக்கு தெளிவானபோது ~நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின்மீதும் சக்கியுள்ளவன் என்று (உறுதியாக) அறிகிறேன்~ என்று கூறினார்.

செத்து எல்லாம் அழிந்துவிட்டபிறகு எப்படி எங்களை நரகத்தில் போடமுடியும் என்று இசுலாத்தை எற்றுக்கொள்ளாதவர்கள் தர்க்கம் செய்தபோது,  ஒருகிராமத்தானை சாகடிக்கச் செய்து, சதையும், தோலும், உடல் உறுப்புகளெல்லாம் அழிந்துவிட்டாலும் நூறாண்டுகளுக்குப்பிறகு அவைகளையும் எலும்புகளையும் ஒன்று திரட்டி மீண்டும் அந்த கிராமத்தானை,  அல்லா உயிர் கொடுத்து எழுப்பிய கதையை, அவர்களிடம் எடுத்துக்காட்டாக முகம்மதுநபி கூறிய வசனம் இது. நூறாண்டுகள் புதைகுழியில் இருந்த அந்த கிராமத்தான் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும்போது சில மணிநேரங்களே தாம் ஏதும்அறியாத செத்த நிலையில் இருந்ததாக உணர்வார் என்றும் கூறுகிறது.

இதே கருத்தை குர்ஆன் வசனம் வசனம் 10;45  அவர்களை அவன் ஒன்று சேர்க்கும் நாளில், ஒரு பகலில் சற்று நேரமே தவிர நிச்சயமாக தாம் (உலகில்) தங்கியிருக்கவில்லை போலும் (என்று எண்ணுவார்கள். அப்போது) அவர்களிடையே ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வார்கள்……

— உலகம் அழியும்போதுதான் உயிர் கொடுக்கப்கடுகிறது என்று கூறுகிறது.

உயிர் இல்லாத உடல் எப்படி பேசுவதைக் கேட்கும்? பதில் சொல்லும்? வேதனைகளை உணரும்? உலகம் அழியும்வரை உயிரற்று சிதைந்துபோன உடலுக்கு மண்ணறை வாழ்வு என்ற கோட்பாடு குர்ஆனுக்கே முரண்பாடாக உள்ளதே.

ஆனால் குர்ஆன் தன்னுடைய முரண்பாட்டிற்கே முரண்பாடாக வசன எண்; 40;46 -ல்

நெருப்பு – காலையிலும் மாலையிலும் அதன்மீது அவர்கள் எடுத்துக் காட்டப்படுவார்கள். மறுமைநாள் நிலைபெறும்போது பிர்அவுனுடைய கூட்டத்தாரை அதில் புகுத்துங்கள் என்று கூறப்படும்.

– என்று புதைக்கப்பட்ட பிர்அவுனின் கூட்டத்தார்களுக்கு தினமும் நகரத்தின் நெருப்பு புதைகுழிக்குள் காட்டப்படுவதாகவும் உலகம் அழிந்த பிறகு அவர்கள் அந்த நரகத்திற்கு அனுப்பப்படுவதாகவும் கூறுகிறது.

உலகம் அழிந்த பின்னர் உயிர்கொடுத்து எழுப்பப்படுமா? அல்லது புதைக்கப்படும்போதே உயிர் கொடுக்கப்பட்டுவிடுமா?

இக் கேள்வி அக்காலத்திலேயே தத்துவ இயலாளர்களிடமும் பெறும் தர்க்கத்தை எற்படுத்திய ஒன்றுதான். பாரா இப்னு ஆஜிப் என்பவர் புதைத்தப் பிறகு அவ்வுடலுக்குள் ஆத்மா புகுத்தப்படும் என்கிறார்.

புதைத்துவிட்டு சொந்த பந்தங்கள் கொஞ்ச தூரம் கூட நடந்திருக்கமாட்டார்கள். திடீரென்று நாம் இதுவரை பார்த்தேயிராத இரண்டு வானவர்கள் நம் கண்முன் வந்து நிற்பார்கள். கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆயத்தமாவார்கள். ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (நல்லவர்களின் செயல்கள் பதியப்படும் ஏடு) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள (மண்ணறையிலுள்ள) அவனது உடலில் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள்! பூமியிலே அவர்களை நான் படைத்தேன்… இன்னும் மற்றொரு முறை அதிலிருந்து அவர்களை நான் (மறுமையில்) வெளியேற்றுவேன் என இறைவன் கூறினான். அதேபோல் அவனுடைய ஆத்மா(பூமியிலுள்ள) அவனது உடலில் புகுத்தப்படுகிறது. அப்போது அவனிடத்தில் (முன்கர், நகீர் எனும்) இரண்டு வானவர்கள் வந்து அவனை அமர வைப்பார்கள். அவ்விருவரும் அம்மனிதனை நோக்கிப் பின் வருமாறு கேள்விகள் கேட்க, அவனும் பதிலளிப்பான்.

கேள்வி : உனது இறைவன் யார்?

பதில் : எனது இறைவன் அல்லாஹ்

கேள்வி : உனது மார்க்கம் என்ன?

பதில் : எனது மார்க்கம் இஸ்லாம்

கேள்வி : உங்களிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல அனுப்பப்பட்டாரே அவர் யார்?

பதில் : அவர் அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

கேள்வி : அதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்?

பதில் : அல்லாஹ்வுடைய (நெறி) நூலை ஓதினேன்; அதனை முழுமையாக நம்பினேன். அதனை உண்மைப் படுத்தினேன். இவ்வாறு அம்மனிதன் பதிலளிப்பான்.

என்னுடைய அடியான் உண்மை சொல்லிவிட்டான். அவனுக்காக சுவனத்தில் இருந்து ஒரு விரிப்பை விரித்துவிடுங்கள். சுவனத்தில் ஒரு ஆடையை அவனுக்கு அணிவியுங்கள்…! சுவனத்திலிருந்து ஒரு கதவை அவனுக்காக திறந்து விடுங்கள்! என்று சொல்லக்கூடிய சப்தமொன்று வானத்திலிருந்து வரும். சுவனத்தில் இருந்து மென்மையான காற்றும், நறுமணமும் அவனிடம் வரும். அவனுடைய பார்வை எட்டுமளவு அவனுடைய மண்ணறை விசாலமாக்கப்படும் (புதுமாப்பிள்ளை எந்த தொல்லையுமில்லாமல் தூங்குவது போல் அவன் மறுமையில் எழுப்பப்படும் வரை தூங்குவான்).

வானவர்கள் சுமந்து சென்ற கெட்ட ஆத்மாவின் செயல்கள் ஸிஜ்ஜீனிலே (தீயவர்களின் செயல்கள் பதியப்படும் ஏடு) பதியப்பட்டு அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். பிறகு அவனிடம் இரண்டு வானவர்கள் வந்து அவனை அமரச் செய்து, அவனிடத்தில் பின்வருமாறு கேள்விகள் கேட்க, அவன் பதிலளிப்பான்.

கேள்வி : உனது இறைவன் யார்?

பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!

கேள்வி : உன்னிடத்தில் மார்க்கத்தை எடுத்துச் சொல்ல அனுப்பப்பட்ட மனிதர் யார்?

பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!

இவன் பொய் சொல்கிறான். நரகத்திலிருந்து ஒரு விரிப்பை இவனுக்காக விரித்து விடுங்கள்…! நரகத்திலிருந்து ஒரு கதவை இவனுக்காக திறந்து விடுங்கள்…! என்று சொல்லக்கூடிய சப்தமொன்று வானத்திலிருந்து வரும். நரகத்தின் உஷ்ணமும், விஷக்காற்றும் அவனுடைய மண்ணறைக்குள் வீசும். அவனுடைய வலது, இடது விலா எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னுமளவுக்கு மண்ணறை அவனை நெருங்கிக் கொண்டே இருக்கும். அவன் மறுமையில் எழுப்பப்படும் வரை இவ்வாறு வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் : பாரா இப்னு ஆஜிப்(ரழி) நூல் : அஹ்மத் ஹ 8561.

பாரா இப்னு ஆஜிப் நபிமொழியை அப்படியே எடுத்துக்கொண்டு ஆத்மா புகுத்தப்படும் என்பதை சேர்த்துக் கொள்கிறார்.

(இந்த ஆதாரத்தை http://senkodi.wordpress.com/2010/10/26/senkodi-pj/#comment-3131 என்ற வலைத்தள முகவரியில் எழுதியுள்ள வலையுகம்; ஹைதர்அலி அவர்களுக்கு நன்றி http://www.valaiyukam.blogspot.com )

ஹைதர்அலி அவர்களுக்கு கலை என்பவர் பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறார்.

ஆஆஆற்றல் மிக்க அல்லாவுக்கு எதற்கு வேலையாட்களாக வானவர்கள். அவரே ”குன்”னுன்னு சொல்லி எல்லாத்தையும் செய்யமுடியாதா?

///அதேபோல் அவனுடைய ஆத்மா(பூமியிலுள்ள) அவனது உடலில் புகுத்தப்படுகிறது///

ஆத்மாவை புகுத்தியவுடன் டபுக்குன்னு எந்திரிச்சிருவாங்களா! அவரு (வானவர்கள்) கேள்வி கேட்டாருன்னா இவரு பதில் சொல்லனும். பதில் சொல்லனும்னா காது கேக்கனும், நாக்கு அசையனும், வாய் அசையனும், நுரையீரல் இயங்கனும், இதுக்கெல்லாம் மூளை இயங்கனும், மூளை இயங்க இரத்தம் வேணும், இரத்ததை பிரிக்க இருதயம் இயங்கனும், அப்புறம் சிறுநீரகம் இயங்கனும் இப்புடி எல்லா இயங்க இரத்தமும் ஆக்ஸிஜனும் வேணும். வானவர்கள் இரத்தத்தையும், ஆக்ஸிஜனையும் கையோடு கொண்டுவருவாங்களா! இல்ல இங்க ஏதாவது ஆஸ்பத்திரியில சுடுவாங்களா!

இதயத்துல அடைப்போடு செத்த பொணத்த என்னா செய்வாங்க! செவிட்டு பொணத்திடன் எப்புடி பேசுவாங்க! மூளை நசுங்கி செத்த பொணத்தோட பேசமுடியுமா! கண்,காது, மூக்கு, நுரையீரல், இதயம், மூளை, சிறுநீரகம் இப்படி எல்லாத்தையும் போஸ்மார்டதின் மூலம் இழந்து வர்ற பொணம் எப்படி பதில் சொல்லும். இல்லாத உறுப்புகளை உடம்புக்குள் பொருத்திவிட்டு அப்புறமா கேள்விக் கேட்பார்களா! வானவர்களுக்கு அறுவை சிகிச்சைத் தெரியுமா! அப்புறம் அறுவை சிகிச்சைக்குத் தேவையான சாமானுல்லாம் வேணும். இதெல்லாம் தேவையில்லை அல்லா தன் ஆற்றலினால் சரிசெய்து பேசவைப்பான் என்றால் பிறகு எதற்கு வானவர்கள்?

///கேள்வி உனது இறைவன் யார்?

பதில் : அதுவா….? அதுவா…? எனக்கு தெரியாதே…..!///

செத்தபிறகு நான் சொல்லப் போற இக்கேள்விக்குண்டான பதிலை எப்புடி நீங்களாகவே சொல்லுறீங்?

இதற்கு பதில் தேடிப்பாருங்கள், ஆத்மா பற்றிய புளுகுமூட்டையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இன்னொருவகையான முரண்பாடினைப் பார்ப்போம். ஒன்று நடைபெறுமா நடைபெறாதா என்பதில் உங்களுக்கு சந்தேகம் எற்படலாம். உலகையே இயக்கும் கடவுளுக்கு எற்படலாமா?

குர்ஆன் வசனம் 27;80 மற்றும் 30;52 ஆகியவை, (நபியே) நிச்சயமாக நீர் மரணிக்கச்செய்தோரை செவியேற்கச் செய்யமாட்டீர்…… என்று கூறுகிறது.

கல்லரைக்கருகில் நின்றுகொண்டு நாம் இறந்தவர்களிடம் எதனைக் கூறினாலும் வேண்டுதல்கள் வைத்தாலும் அதனை அவர்கள் கேட்கமுடியாது என்று இந்த வசனங்கள் மூலம் அறிவிக்கும் அல்லாவிற்கு  சந்தேகமேற்பட்டு,

வசன எண்; 35;14-ல்  அவர்களை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். அவர்கள் செவியுற்றபோதும் உங்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்….. என்று அறிவிக்கிறான்.

இறந்தவர்கள் நாம் சொல்லுவதை கேட்க முடியுமா முடியாதா என்று உலகத்தை படைத்த அல்லாவிற்கும் சந்தேகம். அவனுடைய தூதருக்கும் சந்தேகம். 1400 ஆண்டுகள் கடந்து அறிவியலை எல்லாம் கண்டுபிடிக்கும் திரு பி.ஜே. அவர்களுக்கும் இந்த சந்தேகம் விட்டபாடில்லை.

திரு பி.ஜே. அவர்கள் தமது, குர்ஆன் மொழிபெயரப்பில் அதற்கான பொருள் அட்டவணை பகுதியில் பக்கம் எண் 1157, 1158 –ல் இறந்தவர்கள் எதனையும் அறியமுடியாது, செவியேற்கச் செய்ய முடியாது என்று தலைப்பிட்டும் பக்கம் எண் 1150 –ல் செவியேற்றார்கள் என்றுவைத்துக் கொண்டாலும் பதில் தர முடியாது என்று தலைப்பிட்டும் தனது கூட்டத்தாருக்கு அறிவு களஞ்சியத்தை வாரி வழங்குகிறார்.

மேலும் சில முரண்பாடுகளைப் பார்ப்போம்.

மனிதனுக்கு மரணம் இரண்டு, பிறப்பு இரண்டு. ஒருவன் பிறப்பதற்கு முன் உயிர் இல்லாத நிலையில் இருந்த மரணநிலை ஒன்று. (இதன் மூலம் வித்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இல்லை என கூர்ஆன் கூறுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்) பிறந்து வளர்ந்து மரணமடையும் மரண நிலை இரண்டாவது மரணம். அதுபோல பிறந்தது முதல் பிறப்பு. இறந்தபின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவது இரண்டாவது பிறப்பு.

நபிமார்களும் மனிதர்களே. மனிதர்கள் உலகம் அழியும் நாள் அன்று உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். உலகம் அழியும் நாளில் முதன் முதலாக முகம்மதுநபிதான் உயிர்கொடுத்து எழுப்படுவார்  என்று நபிமொழி கூறுகிறது. அப்படியானால் முகம்மதுநபிக்கு பிறகுதான் பிறநபிமார்களும் மனிதர்களும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்றாகிறது.

ஆனால் இதற்கு முரண்பாடாக முகம்மதுநபி ஏழுவானங்களையும் கடந்து அல்லாவை சந்திக்க சென்றபோது (மிஹ்ராஜ் பயணம் என்று இதைக் கூறுவர்) ஒவ்வொருவானத்திலும் ஆதம், மூஸா, இபுராஹிம் என்று ஒவ்வொருநபியையும் சந்தித்த தாகவும், சொர்கத்தில் இன்புறுபவர்களையும், நரகத்தில் துன்புறுபவர்களையும் பார்த்ததாகவும் நபிமொழிகள் கூறுகின்றன.

எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்தது, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்” என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள் என்று நபிமொழி கூறுகிறது

உலகம் அழியும்நாளில்தான் உயிர்கொடுத்து கல்லரையிலிருந்து எழுப்பப்படுவர் என்றும் அதற்கு முரணாக உயிருடன் வானத்தில் பார்ததாகவும் கூறுவது என்னவகைத் தத்துவம்?

செத்து புதைத்த பின் ஆத்மா உடலுக்குள் புகுத்தப்படுமா? புகுத்தப்பட மாட்டாதா? செத்தவனை வேதனை செய்யப்படுகிறதா? இல்லையா?

~வரும்…. ஆனால் வராது.~ திரைப்படத்தில் வந்த இந்த நகைச்சுவைக் காட்சியைக் கண்டதும் ~ என்ன இது. வரும் ஆனால் வராது என்று சின்னத்தனமா உளறுவதைபோய் நகைச்சுவை என்று எடுத்திருக்கிறார்களே என்று நினைத்தேன். உலகின் மாபெரும் தத்துவங்களே இப்படி இருக்கும் போது…. ஒருவேளை, என்னத்த கன்னையை இதிலிருந்துதான் இந்த நகைச்சுவைக் காட்சியை உருவாக்கி இருப்பாரோ!

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல முடியாத முன்னுக்குபின் முரண்பாடுகளால் ஆன மொத்த உருவம் இசுலாம். ஆத்மா கடவுளிடம் போகிறது என்பதும், மண்ணறை  வாழ்வு, சொர்கம், நரகம் என்பதும் ஒட்டுமொத்த மதங்களின் கற்பனை. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் ஒரு உயிர் உள்ளது என்றும் அது பிரிந்துவிட்டால் இறந்துவிடுகிறோம் என்றும் புரிந்து வைத்துள்ளான். அந்த எளிமையான அறிவை பயன்படுத்திக் கொள்ளும் ஆளும் வர்க்கம், செத்தபின்னான ஒரு வாழ்வு இருக்கு என்றும் அங்கே சொர்க்கமும் நரகமும் இருக்கு என்றும் கற்பனைக் கோட்டைகளைக்கட்டி, ஆசைகாட்டியும் பயமுறுத்தியும் பொருளாதாரத்தை புரிந்துகொள்ளவிடாமல் உழைப்பவனிடமிருந்து சுரண்டிக் கொழுக்கிறது.

இந்த ஆத்மா, சொர்கம், நரகம் ஆகிய ஆனைத்தும் பொய் என அவர்களின் முரண்பாடான உளரல்களைக் கொண்டு மட்டுமல்லாது நமக்குத் தெரிந்த எளிமையான அறிவியலைக்கொண்டும் புரிந்து கொள்ளலாம்.

உயிர்பற்றிய அறிவியலை சற்று சுருக்கமாக பார்ப்போம்.

உயிர்களின் அடிப்படை அமினோ அமிலமாகும். இது புரதங்களுடன் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் இணையும்போது இயக்கமுள்ள உயிருள்ளதாக மாறுகிறது. இதனை ஒருசெல் உயிரி என்கிறோம். இந்த ஒரு செல் உயிரி புறச்சூழ்நிலையிலிருந்து உணவைப்பெற்று வளர்கின்றன. வளர்ச்சிபெற்ற இந்த ஒரு செல் உயிரி தன்னைத்தானே இரண்டாக பிரித்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின்றன. ஒரு செல் உயிரி காலப்போக்கில் புறத்தாக்குதல்களால் பல செல் உயிரிகளாக ஊர்வன, பறப்பன, நடப்பன என்று பரிணாமம் அடைந்தன.

நமது உடல் செல்கள் அனைத்தும், நாம் உண்ணும் உணவிலிருந்து சத்துக்களைப் பெற்று வளர்ச்சியடைகின்றன. செல் பிரிதல் மூலம் தினந்தோறும் இலட்சக் கணக்கில் புதியன பிறக்கிறது. அதுபோல தகுதியற்றதாக மாறிய செல்கள் தினமும் இலட்சக்கணக்கில் இறக்கின்றன. பிறப்பு விகிதம் கூடினால் எடை கூடுதலாகி வளர்கிறோம். இறப்பு விகிதம் கூடினால் மெலிந்து விடுகிறோம். ஆணின் ஒரு சொட்டு விந்தணுவில் பலகோடி உயிரணுக்கள் உள்ளதாம். இது இன்று படிப்பறிவு இல்லாத மனிதர்களும் அறிந்த ஒன்று. அப்படியானால் தினந்தோறும் எவ்வளவு உயிர்கள் இறக்கின்றன. நம் உடலில் எத்தனை ஆத்மாக்கள்தான் உள்ளன? அந்த ஆத்மாக்கள் எல்லாம் எந்த சொர்கம் நரகத்திற்கு போகும்?

தாவரம் மற்றும் பிற விலங்குகளை உண்டு மனிதனும் விலங்கினங்களும் வளர்கின்றன.  மனிதனும் விலங்கினங்களும் இறந்த பிறகு சிதைந்து சத்துகளாக மண்ணில் கலந்து தாவரங்களுக்கான உணவாக மாறுகிறது. இதுவே உயிரினச் சுழற்சி முறையாகும்.

நம் உயிர் எங்கிருக்கிறது என்ற கேள்வியை எழுப்பி பதில் தேடுவோம். இதயத்தில், மூச்சுக்காற்றில், மூளையில் இரத்தத்தில் என்று ஒவ்வொன்றாக அலசிப்பாருங்கள்.

இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து மனிதன் வெற்றி பெற்றுள்ளான். மாற்று இதயத்தை பெற்றவரிடம் இருக்கும் ஆத்மா யாருடையது? அவருடைய அறிவு செயல்பாடுகள் எவருடையது போல இருக்கும்? இதயத்தை கொடுத்தவர்போலவா? இதயத்தை பெற்றவர்போலவா? இதயத்தை கொடுத்தவரின் ஆத்மா (உயிர்) பிரிந்து போனபின்தான் இதயத்தை எடுத்து பிறருக்கு பொறுத்தப்படுகிறது. உயிரற்ற இதயம் உயிருள்ளதாகி விடுகிறது. இதய வால்வு மாற்று சிகிச்சை தசைக்கோளாரினால் இயங்கமூடியாத இதயத்தை இயக்கும் பேஸ்மேக்கர் என்ற கருவியைப் பொருத்துவது எல்லாம் இன்று சர்வசாரணம். அப்படியானால் இதயத்தில் ஆத்மா குடிகொண்டில்லை எனலாம்.

கோமாவில்  எந்த செயல்பாடும் வெளியுலக உணர்வும் இல்லாதிருக்கும் ஒருவரின்  மூளையின் பெரும் பகுதி இயங்கவில்லை. உடல் உள்ளுறுப்புகள் சிலமட்டும் இயங்கத்தேவையான மூளையின் பகுதி மட்டுமே இயங்குகிறது. இதனையறியும் நாம் உயிர் மூளையில் இருப்பதாக கூறலாம். ஆனால் அவருக்கு தொடர்ந்தால் போல் 6 ,7 நிமிடங்கள் சுவாசத்தை நிறுத்திவிடுவோம். என்ன நடக்கும்? கோமாவில் உள்ளவர் மட்டுமில்லாது மூளை உட்பட எல்லா உறுப்புகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளவர்களும்கூட இறந்துவிடுகின்றனர். அதனால் மூளையில் உயிர் மையம் கொண்டில்லை என அறியலாம்.

சுவாசத்தில் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நல்ல ஆக்ஸிஜனை குறைவில்லாமல் ஒருவருக்கு கிடைக்கச் செய்துவிட்டு மூளையையோ அல்லது இதயத்தையோ அல்லது சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் என்று ஏதாவது ஒன்றை எடுத்துவிடுவோம். உயிருடன் ஒருவர் இருக்க முடியுமா?

இரத்தத்தில் உயிர் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இரத்தமாற்று ஒருவுக்கொருவர் செய்துகொள்வது இன்று சர்வசாதாரணம். பிறரின் இரத்தத்தை தமது உடலில் ஏற்றிக்கொண்டவர் பிறரின் ஆத்மாவிலிருந்து கொஞ்சத்தை பிய்த்து எடுத்துக்கொண்டதாக கூறலாமா? பிஜே அவர்கள் அப்படி சொன்னாலும் வியப்பதற்கில்லைதான்.

உடலின் எந்த உறுப்பின்மீதும் ஆத்மாவை தேடிப்பாருங்கள். எதிலும் இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இப்பொழுது இந்துமதம் சொல்லுவதுபோல தனியாக, கண்ணுக்குப் புலணாகாத, எக்ரே ஸ்கேன் போன்ற கருவிகளுக்கெல்லாம் அகப்படாத ஒன்றாக உடலில் தொங்கிக்கொண்டு உள்ளது என்று எடுத்துக் கொள்வோம். இது ரேடியோ அலைகள் மூலமாக அல்லது எக்ஸ் கதிர்கள், காமா, பீட்டா கதிர்கள் போல ஏதோ ஒரு கதிரைக்கொண்டு உடலை இயக்குவதாக அவர்கள் கூறுவதாகவும் எடுத்துக் கொள்வோம். அலிஅசன் அலைகளையும், கதிர்களையும் ஆய்வு செய்யும் கருவிகொண்டு, தான் பார்த்ததாக கூறும்போது நாம் எவ்வாறு மறுக்க முடியும்? அந்த கருவிகளுடன் தொடர்புள்ளவர்கள் வேண்டுமானால் எளிதாக மறுத்துவிடலாம். சாமாணிய மனிதன் என்ன செய்வான்? ஏற்கனவே தம்மிடமுள்ள நம்பிக்கைகளில் இதனையும் சேர்த்துக் கொண்டு பிறரையும் நம்பச்செய்வதற்கு முயற்சிப்பான்.

 

உலகில் உயிரினங்களும் மனித இனமும் தோன்றி பல இலட்சக்கணக்கான ஆண்டுகளாகிவிட்டன. இதோ உலகம் அழியப்போகிறது என்று எல்லாமதங்களும் அப்பப்போ சாமியாடினாலும் உலக அழிவு என்பது கற்பனையாகவே உள்ளது. இலட்சக்கணக்கான ஆண்டுகளாக வினாடிக்கு வினாடி கோடிக்கணக்கான ஆத்மாக்கள் பிறந்துகொண்டும் இறந்துகொண்டும் இருக்கும் போது ஆத்மா பிரிந்து செல்கிறது, அதற்கு சொர்கம் நரகம் உண்டு என்பது கற்பனையே. இந்தப் பொய்யான கற்பிதத்தைக் கொண்டு உங்களின் வாழ்க்கையை தீர்மானிக்காதீர்கள்.

ஆத்மா, சொர்க்கம், நரகம் என்று பயமுறுத்துபவர்களே இதுகுறித்து முன்னுக்கு பின் முரனாக உளறுவது மட்டுமல்லாது மனித சமுநாயத்திற்கு எதிராக குற்றங்களை செய்துகொண்டிருக்கும் போது நாம் என் அதனை நம்பி பயப்படவேண்டும்? அதனை நம்பி நமது வாழ்வை சுரண்டுபவர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும்?

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு மனிதன் வாழ எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல நம் சமுதாயம் வாழ நாம் ஒவ்வொருவரும் அவசியம். அதனால் பிறருடன் இணைந்து சமத்துவமாக வாழ்வோம். அதன் மூலம் நம்மை இந்த பூமியில் நிலைத்து நிற்கும் உயிரினமாக ஆக்குவோம்.

–சாகித்

**********************

குறிப்பு; இந்துமதக் கோட்பாடுகள் பற்றிய விளக்கங்கள் ராகுலசாங்கிருத்தியாயனின் இந்துத் தத்துவ இயல் என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

10 thoughts on “ஆத்மாவும் அதுபடும் பாடும்

 1. அருமை தோழர்,

  சிறப்பான தொகுப்பு, சீரிய விளக்கங்கள். உள்வாங்கிக் கொள்ள உகந்த எளிமையுடன் இருக்கிறது. நீளம் சற்று அதிகமாக இருப்பதனால் இரண்டு, மூன்று பகுதிகளாக பிரித்து வெளியிட்டிருக்கலாம்.

  செங்கொடி

 2. மிகச்சிறப்பான பதிவு

  மனித உயிருக்கு ஆன்மா என்று புனிதம்பூசி புரியாத‌ உயரம் கொண்டு செல்லும் அதே நேரம், மனித உழைப்பை இம்மை என்று கேவலப்படுத்துபவர்களை அறிவியல் சாட்டையால் சொடுக்கியிருக்கிறீர்கள்.

  இந்த நீள்கட்டுரையை என்னுடைய தளத்திலும் மீள்பதிவு செய்ய எண்னுகிறேன். அனுமதி உண்டா?

 3. கடவுளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துவது என்பது தற்போதைய அமைப்பு முறையில் நடவாத ஒன்று. அது திக வாக இருந்தாலும் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் முடியாது.

 4. அன்று எங்கோ ஒருவர் நாத்திகராக இருந்தார். இன்று உலக முழுவதும் நிரப்பமாக உள்ளனர். ஆயிரக்கணக்கான ஆண்டு நம்பிக்கையை உடனே அழித்துவிடமுடியம் என்று கற்பனை செய்யவில்லை. ஆனால் முடியாது என்று ஒத்தூதுவதும் சமூக ஆக்கரைக்கான செயல் இல்லை.

 5. இப்படி என்னென்ன செய்து மதங்களின் மூலாதாரத்தை தகர்க்க முடியுமோ , அதை செய்வோம்.
  அறிவியல் முறையில் உயிர் , உள பகுப்பு செய்ய வேண்டும்.
  ஆத்துமா இல்லை , தெளிவான விளக்கங்கள்…
  நன்றி சாஹித் பாய் ..!!!

 6. வணக்கம்,
  நண்பர் சாகித் அவர்களுக்கு,
  சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவு, மதவியாபரத்தின் மூலதனமான ஆன்மா-ஆத்மாவை மதநூல்களின் ஆதாரங்களைக் கொண்டே தகர்த்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்…!
  மதக்கோட்பாடுகளிலுள்ள இத்தகைய முரண்பாடுகளை மதவாதிகளும் அறிவர். குறிப்பாக இஸ்லாமில், உயிர்-ஆத்மா மற்றும் விதி தொடர்பான சர்ச்சை முஹம்மது அவர்களின் காலத்திலேயே துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. இன்றும்கூட முஸ்லீம்களில் சிலர் இம்முரண்பாடுகளை ஒப்புக்கொள்கின்றனர். மறுமை வாழ்க்கை, நரகதண்டனை என்ற மதவாதிகளின் ஆதிக்க சதியை உணராமல், மேற்கொண்டு அம்முரண்பாடுகளை விவாதிக்க விரும்பாமல்(அஞ்சி?) மீண்டும் அவர்கள் பகுத்தறிவற்று அதே மதச்சகதியில் புரள்வதுதான் மிகப்பரிதாபமானது.
  பதிவின் துவக்கத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள//தந்தை பெரியாருக்குப்பின் மதக்கோட்பாடுகளுக்குள் புகுந்து அம்பலப்படுத்துதல் என்பது வெகுவாக குறைந்துவிட்டது// என்பதைக் குறித்து பகுத்தறிவாளர்கள் சிந்ததக்க வேண்டும். இஸ்லாமைப் பொருத்தவரையில் அச்சுருத்தல்களையும் மீறி அதன் கோட்பாடுகளை பகிரங்கமாக விமர்சிக்க துணிந்து களமிறங்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் இந்நிலை மாற, உண்மையைக் கூறும் இத்தகைய பதிவுகள் மக்களைச் சென்றடைய ஆவனசெய்யவேண்டும்.
  தஜ்ஜால்

 7. நாம் தூங்கும் போது உயிரை பரித்துக் கொண்டு செல்லும் அல்லாஹ் நாம் 3 அல்லது 4 மணிக்கு அலாரம் வைத்து எழும் சமயம் திரும்ப உயிரை தந்துவிடுகின்றானா..? புரட்சி நகைச்சுவையாளர் பி.ஜே என்று பட்டம் வழங்கி மகிழ்விக்கலாம்…

 8. வணக்கம் ஐயா!
  நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
  நன்றி ஐயா!
  http://www.eppoluthu.blogspot.in

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s