தோழர் சம்புகன் ஒரு சென்ட்ரிங் தொழில் செய்பவர். பட்டதாரியும் கூட. சமூக வாழ்க்கை, பொது தொடர்பு ஆகியவற்றில் 20 வருட அனுபவமுள்ளவர். இவர் ஒரு “ஏர் செல்லின்” வாடிக்கையாளர். ஒருநாள் அவருக்கு செல்பேசியில் ஒரு அழைப்பு வந்து, உடன் நின்று (Missed call)  விடுகிறது. அவரது தொழில் சார்ந்தவர்கள் அவருக்கு ‘தவறிய அழைப்புகளாகவே’ வழமையாக அழைப்பு விடுபவர்கள். காரணம் இவர் ஒரு ஒப்பந்தக்காரர்.

வழக்கம்போல தவறிய அழைப்புக்கு தனது செல்பேசியிலிருந்து தொடர்பு கொள்கிறார். “நீங்கள் பெண் நண்பர்களுடன் தொடர்புகொள்ள வேண்டுமா? அல்லது ஆண் நண்பர்களுடன் தொடர்பு கொள்ள வேண்ணுமா?” என்று மறுமுனையில் ஒரு பெண்ணின் குரலை கேட்டதும் ‘அய்யோ’ என்று பதறியடித்துக்கொண்டு அவசர அவசரமாக செல்பேசி இணைப்பை துண்டித்துவிட்டு எவ்வளவு போச்சோ என்று கவலைப்பட, ஏர்செல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்   சேவையில் குறைவைக்காது, முறையாக கடைசி அழைப்புக்கான கட்டணம் எவ்வளவு என்பதை தெரிவித்து விடுகிறது. நுகர்வோரின் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டுமல்லவா! அது 6 ரூபாய் என்று அறிவித்து விடுகிறது. நம்மளே ஏமாந்து 6 ரூபாயை இழந்துவிட்டோமே என்ற வருத்தத்துடன் அந்த தொலைபேசி எண் என்ன என்று பார்க்கிறார். அது 57000 72570 04 வழமையான 10 டிஜிடல் எண்களுக்குப் பதிலாக 12 எண்கள். வேறு எந்த 12 டிஜிடல் எண்களை அழைத்தாலும் “தாங்கள் அழைத்த எண்ணை சரிபாருங்கள்” என்று கூறும் பெண்குரல் இதற்கு மட்டும் 100 ரூபாய்க்கு கீழ் இருந்தால் அனுமதிக்காது. அப்படியானால் அவர்கள் அடிக்கும் கொள்ளையின் அளவை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஏர்செல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மாமா வேலை பார்ப்பது மட்டுமல்லாது வாடிக்கையாளர்களின் பாக்கெட்டிலும் தைரியமாக கைவிட்டு சட்டப்படி திருடிவிடுகிறது. ஆமாம், சட்டப்படியான திருட்டுதான். ஏர்செல்லின் வாடிக்கையாளர்கள் ஒரு கோடி பேர்களாம். அதாவது சில நிமிடங்களில் பல கோடி ரூபாய்களை அந்நிறுவனத்தால் திருடிவிட முடிகிறது. அதுவும் சட்டப்படியாக முடிகிறது என்றால் மக்கள் ஜனநாயகத்தின் மாண்பை என்னவென்று புகழ்வது? இத் திருட்டிற்கு படித்தவர் படிக்காதவர், அறிந்தவர் அறியாதவர் என்று எவரும் தப்ப முடியாது.

இந் நிறுவனம் மட்டுமல்ல. எல்லா நிறுவனங்களும் சட்டென்று தனது லாபத்தை லபக்கென்று வாடிக்கையாளர்களின் பாக்கெட்டில் கையைவிட்டு வழிப்பறி செய்துவிடுகிறது. ஆனாலும் அதற்கும் சட்டம் இருக்கிறது. சட்டத்தை அவர்கள் எள்ளவும் மீறுவதில்லை. அவ்வள்வு நேர்மையானவர்கள் இந்த முதலாளிகள். நமக்குத்தான் அது திருட்டு. லிபர்டேரியன்களுக்கு (ஜனநாயகவாதிகளுக்கு) அது சட்டப்படியான இலாபம்.

இந்த திருட்டில் மேலும் சில வகைகள்:

1. உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை நீங்கள் திறந்து என்னவென்று பார்த்தாலே போதும். உங்கள் இருப்புத் தொகையில் 30 ரூபாய்கள் காணாமல் போய்விடும். வாடிக்கையாளர்களின் சேவை (நுகர்வோர் சட்டப்படிதான்) மையத்தினை அழைத்து காணாமல் போன தொகையைப் பற்றி கேட்டால் “பாடல் அல்லது கேம், அல்லது செய்தி என்று ஏதாவது ஒன்றைச் சொல்லி, அதனை நீங்கள் தேர்தெடுத்துள்ளதாக அமைதியாக பதில் தருவார்.

அவர்களுடன் சண்டைபோட்டு அத் தொகையை திரும்பப் பெற்றவருகளும் உண்டு. இழந்தவர்களும் உண்டு. இதில் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் படிப்பறிவில்லாதவர்களே. அதிலும் ஏழைகள் தம்மாலும் ஒரு அதி நவீன கருவியை, அறிவியலின் அற்புதத்தை பயன்படுத்தி தமது உறவுகளுடன் தொலைபேசியில் பேச முடிகிறதே என்று பூரித்துப்போகும் இவர்களும், தாம் நம்பும் ஜனநாயக அரசின் ஜனநாயத் தூண்களான முதலாளிகளால் ஏமாற்றப்படுவதுதான். சட்டப்படியான இத் திருட்டால் தமக்கு ஏற்பட்ட இழப்பை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு இவர்கள் மறைத்துக்கொண்டு புழுங்குகின்றனர். இதுதான் அறிவியல் கண்டுபிடிப்புகளை முதலாளித்துவம் மக்களுக்கு தரும் இலட்சணம்.

2. நீங்கள் ஒருவரை தொலைவேசியில் அழைக்கும் போது ரிங் டோனாக பாடல் ஒலித்தால் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். “இந்தப் பாடலை உங்களது ரிங்டோடான தேர்ந்தெடுக்க ஸ்டார் மற்றும் ஹேஸ் பட்டனை அழுத்தவும்” என்று ஒரு பெண் குரல் ஒலிக்கும்.” ஆனால் நீங்கள் எந்தப் பட்டனை அழுத்தினாலும் 30 ரூபாய்கள காணாமல் போய்விடும். அது மட்டுமல்ல. அதனை நீங்கள் கவனித்து செயலிழக்கச் செய்யாவிட்டாள் மாதம் மாதம் 30 ரூபாய்கள் திருடிக் கொண்டேயிருப்பார்கள.

இந்தத் திருட்டில் முதலாளிகளை மட்டும் பொறுப்பாக்க முடியாது. அங்கு பணி புரியும் தொழிலாளிகளுக்கும் முழுமையான பொறுப்பு இல்லாவிட்டாலும் பங்கு உள்ளது. சாப்ட்வேர் உருவாக்கி கொடுப்பது, அதை இயக்குவது, வாடிக்கையாளர்களை கவர்வது, வாடிக்கையாளர்களின் சேவையில் நியாயப்படுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது என்று தொடராக பல வழிகளிலும் தமக்கு நல்ல சம்பளம் கிடைத்தால் போதும் என்று செயல் படுவதால் ஒவ்வொரு தொழிலாளியும் இதற்கு பொறுப்பானவர்களே. அப்படியல்ல, என்று அவர்கள் கருதுவார்களானால் அதனை எதிர்த்து அவர்கள் போராடி இருக்கவேண்டும், செயல்படுத்த மறுத்திட வேண்டும். இல்லையேல் அவர்களும் இதற்கு பொறுப்பானவர்களே.

சாகித்

3 thoughts on “திருட்டு ஆனாலும் சட்டப்படி தான் திருடுவோம்

  1. இது போன்ற திருட்டுக்கள் அமெரிக்காவில் இல்லை. நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு நிறைய பேர் இவர்களை இழுத்தால் இந்த கொடுமை குறையலாம்.

பின்னூட்டமொன்றை இடுக