தொடர் 28

                குழப்பம் இத்துடன் முடியவில்லை. உதவி தேடி வரும் அடியார்களின் கூட்டத்திற்கு எல்லா நபிமார்களும் பரிந்துரை செய்ய இயலாமல் கவலையால் தவித்து மற்ற நபிமார்களை நாடிச் செல்லுமாறு கூறுவார்கள், இறுதியில் என்னிடம் (முஹம்மது நபியிடம்) வருவார்கள் அப்பொழுது (ஒரு முறை அல்ல) நான்கு முறை பரிந்துரை செய்து மிகக் குறைந்த அளவு நம்பிக்கை உடையவார்களையும் காப்பாற்றி விடுவேன் என்கிறார். அல்லாஹ்வின் தீர்ப்பு பரிந்துரைகளால் திருத்தப்படுவதற்கு முன் நடைபெறும் நிகழ்ச்சிகளை முஹம்மது நபி விவரிக்கிறார். (பெரிய ஹதீஸ்தான் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேறு வழியில்லை)

புகாரி ஹதீஸ்  : 7510    

மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

…அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, “(இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பர் ஆவார்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும், “அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் மூசாவிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வுடன் உரையாடியவர் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது மூசா (அலை) அவர்களும், “தற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன். நீங்கள் ஈசாவைப் போய் பாருங்கள். ஏனென்றால், அவர் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது ஈசா (அலை) அவர்களும், “அதற்கு(த் தகுதியானவன்) நான் அல்லன். நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் போய் பாருங்கள்” என்று சொல்வார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், “நான் அதற்குரியவன்தான்” என்று சொல்லிவிட்டு, (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதிய ளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ் மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதய மாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன் முன்) நான் சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து), “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள். உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம்” என்பேன். அப்போது, “செல்லுங்கள், எவரது உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்” என்று சொல்லப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள் உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று கூறப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம் என் சமுதாயம், என்று சொல்வேன். அப்போது, “செல்லுங்கள், யாருடைய உள்ளத்தில் அணுவளவு, அல்லது, கடுகளவு, இறை நம்பிக்கை இருந்ததோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்லப் படும். நான் சென்று, அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் திரும்பி வந்து அதே புகழ்மாலை களைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும், “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள், தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம்” என்பேன். அதற்கு அவன், “செல்லுங்கள்: எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் ளஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் விடைபெற்றபோது நான் என் நண்பர்கள் சிலரிடம், “(ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமிருந்து தப்புவதற்காக) அபூ கலீஃபாவின் இல்லத்தில் ஒளிந்துகொண்டிருக்கும் ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களை நாம் கடந்து சென்றால், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நமக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய விஷயத்)தை அவர்களிடம் கூறினால் நன்றாயிருக்கும் ” என்று சொன்னேன். அவ்வாறே நாங்கள் ஹஸன் (ரஹ்) அவர்களிடம் சென்று (அனுமதி கேட்கும் முகமாக) சலாம் (முகமன்) சொன்னோம். அவர்கள் எங்களுக்கு அனுமதி அளித்தார்கள். நாங்கள் அவரிடம்,  “அபூசயீதே! உங்கள் சகோதரர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். பரிந்துரை பற்றி அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்று (வேறு யாரும் சொல்ல) நாங்கள் கண்டதில்லை” என்று கூறினோம். அதற்கு ஹஸன் (ரஹ்) அவர்கள், “அதை என்னிடம் கூறுங்கள்” என்றார்கள். அந்த நபிமொழியை நாங்கள் அவர்களிடம் சொல்லிக் கொண்டே இந்த இடம் (மூன்றாவது முறை பரிந்துரை செய்ய அனுமதிகோரி நான் என் இறைவனிடம் சென்றேன் என்பது) வரை வந்தபோது ஹஸன் (ரஹ்) அவர்கள், “இன்னும் சொல்லுங்கள்” என்றார்கள். அதற்கு நாங்கள், “இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் அவர்கள் கூறவில்லை” என்று சொன்னோம். அதற்கு ஹஸன் (ரஹ்) அவர்கள், “இருபது ஆண்டுகளுக்கு முன்னால் (நினைவாற்றல் மாறாத) இளமையில் அனஸ் இருந்தபோது (இந்த நபிமொழியை இன்னும் விரிவாக) எனக்கு அறிவித்தார்கள். (அந்தக் கூடுதலான விஷயத்தைக் கூற) அவர்கள் மறந்துவிட்டார்களா அல்லது நீங்கள் (நபிகளாரின் பரிந்துரை மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துக்கொண்டு நல்லறங்களில்) நாட்டமில்லாமல் இருந்துவிடுவீர்கள் என்பதால் கூறவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்கள். உடனே நாங்கள், “அபூசயீதே! அவ்வாறாயின் அதை நீங்கள் எங்களுக்குச் சொல்லுங்கள்!” என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹஸன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, “அவசரக்காரனாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் எப்படி இந்த நபிமொழியைக் கூறினார்களோ அதைப் போன்றே உங்களிடம் நான் அந்த நபிமொழியைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே நான் இவ்வாறு குறிப்பிட்டேன்” என்று (சொல்லிவிட்டு, அந்த நபிமொழியின் கூடுதல் விஷயத்தையும்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிறகு, நான்காம் தடவையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலை களைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரைசெய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான், “என் இறைவா! (உலகில்) லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற் குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை) என்று சொன்னவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக” என்று நான் கேட்பேன். அதற்கு இறைவன், என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும், பெருமையின் மீதும் ஆணையாக ! லா இலாஹ இல்லல்லாஹ், என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன்” என்று சொல்வான்.

பரம ரகசியமானதாக கூறுப்படும்  தீர்ப்பு நாளின் நிகழ்வுகள், திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பே வெளியான திருட்டு VCD மாதிரி ஆகி விட்டதே !

மறுமை நாளில் இப்ராஹிம் நபிக்கும், உருவவழிபாடு செய்தவரான அவரது தந்தையாருக்குமிடையே  நடைபெற இருக்கும் உரையாடலையும் அங்கு நிலவும் சூழ்நிலைகளைப் பற்றியும் முஹம்மது கூறுவதை கவனியுங்கள்.

புஹாரி ஹதீஸ் எண் :3350

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்   

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, இன்று உனக்கு நான் மாறு செய்யமாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையைவிட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்கு தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்) என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹிமே! உங்கள் கால்களுக்கு கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும் பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

நரகத்திலிருந்து இறுதியாக வெளியேறுபவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே நடைபெறும் உரையாடலையும்  முன்னறிவிப்பு  செய்கிறார்.

 

முஸ்லீம் ஹதீஸ் எண்: 274,  அத்தியாயம்: 1, பாடம்: 1.83,

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

“இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையக் கூடிய ஒருவர், (நரகத்திலிருந்து வெளியேறி) ஒருபோது நடந்தும் ஒருபோது தவழ்ந்தும் வருவார். ஒருபோது நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, ‘நற்பேறுகளுக்கு உரிய(என்னிறை) வன் உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றி விட்டான். (எனக்கு) முன்-பின்னோர் எவருக்கும் வழங்காத பேற்றை அல்லாஹ் எனக்கு வழங்கினான்!’ என்று கூறுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், ‘என் இறைவா! அந்த மரத்திடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! அதனிடம் நிழப் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! அதை நான் உனக்கு வழங்கினால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கேட்பான். அதற்கவர், ‘இல்லை; வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் இறைவா!’ என்று வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.

பின்னர், முதலில் காட்டப் பட்ட மரத்தை விட மிகவும் அழகான மற்றொரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் காணும்) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி கொடுத்தாயே! அதனிடம் உன்னை நான் கொண்டு சேர்த்தால் அதையன்றி வேறொன்றும் என்னிடம் கேட்க மாட்டாயே?’ என்று அல்லாஹ் கேட்பான். அவர், ‘வேறெதையும் கேட்க மாட்டேன்’ என்று (மீண்டும்) வாக்குறுதி அளிப்பார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு (இன்னொரு) வாய்ப்பளித்து, அவரை அந்த (அழகிய) மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் (கீழ் ஓடும்) நீரைப் பருகிக் கொள்வார்.

பிறகு முதலிரண்டு மரங்களை விடவும் பேரழகான, சொர்க்க வாசலில் உள்ள ஒரு மரம் அவருக்குக் காட்டப்படும். (அதைக் கண்ட) அவர், ‘என் இறைவா! அதனிடம் என்னைக் கொண்டு சேர்ப்பாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்துக் கொள்வேன்! அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறுவார். ‘ஆதமின் மகனே! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு இருமுறை) வாக்குறுதி கொடுத்தாயே! என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்; என் இறைவா! இந்தத் தடவை அதையன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்’ என்று கூறுவார். அவரது அவசரத்தைக் காணும் இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு சேர்ப்பான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல்கள் அவருக்குக் கேட்கும். உடனே அவர், ‘என் இறைவா! சொர்க்கத்தின் உள்ளே என்னை அனுப்புவாயாக!’ என்று கேட்பார். அதற்கு இறைவன், ‘ஆதமின் மகனே! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக் கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் நீ மனநிறைவு கொள்வாய் அல்லவா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீ என்னைக் கேலி செய்கிறாயா?’ என்று கேட்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

குறிப்பு:

இதை அறிவித்தபோது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) சிரித்தார்கள். பிறகு, “நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?” என்று மக்களைக் கேட்டார்கள். அப்போது மக்கள், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இவ்வாறுதான் (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள். அப்போது நபித்தோழர்கள், “ஏன் சிரித்தீர்கள்?, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அகிலத்தின் அதிபதியாகிய நீ என்னைக் கேலி செய்கிறாயா?” என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு அல்லாஹ் சிரிப்பான். (அதனால் தான் நானும் சிரித்தேன்.) மேலும், “நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்” என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

முஹம்மதுவை அல்லாஹ்வின் தூதரென்று ஏற்க மறுத்தவர்களுக்கு தனது பரிந்துரை எவ்வித பலனும் அளிக்காது  என்கிறார்.

முஸ்லீம் ஹதீஸ் : 305, அத்தியாயம்: 1, பாடம்: 1.89,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்” எனும் (26:114)ஆவது இறைவசனம் அருளப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குறைஷிக் கூட்டத்தாரே! (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) உங்களை நீங்களே (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) காப்பாற்றிக் கொள்ளுங்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன். அல்லாஹ்வின் தூதருடைய புதல்வி ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! (தருவேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து உன்னைக் காப்பாற்றுவதற்கு நான் பயன்பட மாட்டேன்” என்று சொன்னார்கள்.

ஆனால் முஹம்மதுவை அல்லாஹ்வின் துதூதரென்று மறுத்த அவரது பெரிய தகப்பனார் அபூதாலிப் அவர்களது நிலையைப் பற்றி கூறுவதைப் பாருங்கள்,

முஸ்லீம் ஹதீஸ் : 308, அத்தியாயம்: 1, பாடம்: 1.90

அறிவிப்பாளர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி).

“அல்லாஹ்வின் தூதரே! தங்களைப் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்த அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு, “ஆம்; (செய்தேன். அதனால்) அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையேல் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

முஸ்லீம் ஹதீஸ் : 309,   அத்தியாயம்: 1, பாடம்: 1.90

அறிவிப்பாளர் : அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி).

“அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் தங்களைப் பாதுகாப்பவராகவும் தங்களுக்கு உதவி செய்பவராகவும் இருந்தாரே! அது அவருக்குப் பயனளித்ததா?” என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; அவரை நான் நரகத்தின் மையப் பகுதியில் கண்டேன். எனவே, அவரை(க் கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நெருப்பின் பகுதிக்கு அங்கிருந்து அப்புறப்படுத்தினேன்” என்று கூறினார்கள்.

(மண்ணறையிலிருந்து அபூதாலிப்எழுப்பப்பட்டு விட்டாரா? அவருக்கு மறுமை நாளின் விசாரணை முடிந்து,நரகத்திற்கும் சென்று விட்டாரா…!? அப்படியானால், ஏற்கெனவே ஒரு கூட்டம் விசாரணையை சந்தித்து விட்டது. முன் சென்றவர்கள் மண்ணறையில்தான் இருப்பார்கள் என்றும், இறுதித்தீர்ப்பு நாள் இதுவரை நிகழவில்லை என்றும்  நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.)

 மறுமை நாளின் நிகழ்வுகளையும் உரையாடல்களையும் முன்கூட்டியே அறிந்ததெப்படி?  தன்னுடைய மனைவி ஆயிஷாவின் கற்பின் மீது அவதூறு கூறப்பட்ட பொழுது, உண்மையை அறிய முடியாமல் ஒரு மாத காலம் திணறியவர் மறுமையின் உரையாடல்களைக் கூறுவது வேடிக்கையாக இல்லையா?

ஷஃபியாவின் கணவன் கினானா, மறைத்து வைத்திருந்த  நகைகள் அடங்கிய தோல்பை இருக்குமிடம் தெரியாததால்,  அதை அறிவதற்காக,  கினானாவை சித்திரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டவர் சொர்கத்திற்குள் இறுதியாக நுழைபவரின் புலம்பலைக்கூட மிகத் துள்ளியமாக கூறுவது மிகப்பெரிய அற்புதமாகும். இத்தகைய முஹம்மது நபி தன்னைப்பற்றி கூறும்பொழுது,

…மறைவானதை நான் அறிந்தவனாக இருந்தால் நன்மையிலிருந்து (எனக்கு) அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன்; …

(குர்ஆன் 7: 188)

I am a Prophet of Allah but I do not know what will be my end.

 Sahih Bukhari, Chapter “Al-Janaiz”

தன்னுடைய முடிவைப் பற்றியே தனக்கு தெரியாது என்று கூறுபவர் இறுதித் தீர்ப்பு நாளின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூறுவது வேடிக்கையிலும் மிகப் பெரிய வேடிக்கை. மிகச்சிறிய கடுகின் எடையை விட சிறிய அளவு ஈமான் உடையவர்களும் முஹம்மது நபியின் பரிந்துரை காரணமாக  நரகத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று தெரிந்த பிறகும், மறைவானது, பயங்கரமானது, என்றெல்லாம் குறிப்பிடப்படும் தீர்ப்பு நாளைக் குறித்து எச்சரிக்கும் குர்ஆன் வசனங்களில் எவ்வித அர்த்தமுமில்லை. ஏனென்றால் இந்த அளவிற்குக் கூட மிகச் சிறிய நம்பிக்கையில்லாதவர் முஸ்லீமாகவே இருக்க முடியாது.

 தொடரும்…

3 thoughts on “ஆரம்பத்தைநோக்கி – தொடர் 28

  1. இஸ்லாமிய வருடத்துக்கு 355 நாள்கள்தானாமே? ஒவ்வொரு மாதமும் தொடக்கதேதியில் குழப்பம்தானாமே? பல அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னறிவித்த அல்லா ஒழழுங்கான நாட்காட்டியை அறிவிக்கவில்லையா? இதப்பத்தி ஒரு கட்டுரை போடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக