தொடர் 27

புகாரி ஹதீஸ்:  7517 

…”ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவையிரண்டும் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்” என்று பதிலளித்தார்கள்.…

Readislam.net என்ற இஸ்லாமிய இணையதளத்தின் ‘மிஃராஜ்” பற்றிய ஒரு கட்டுரையிலிருந்து…

…ஸித்ரத்துல் முன்தஹாவின் வேரிலிருந்து நான்கு ஆறுகள் வெளியாகுவதைப் பார்த்தார்கள். இரண்டு ஆறுகள் வெளிரங்கமானது. இரண்டு ஆறுகள் உள்ரங்கமானது, வெளிரங்கமான இரண்டு ஆறுகள் நீல் (நைல்), ஃபுராத் ஆகும். இவ்விரண்டின் பிறப்பிடம் அங்கிருந்துதான் உருவாகிறது. மற்ற உள்ரங்கமான இரண்டு ஆறுகள் சுவர்க்கத்தில் உள்ள ஆறுகளாகும்…

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை சுமார் 6695 கிலோ மீட்டர் நீளம் உள்ள நைல் நதி எங்கிருந்து துவங்குகிறது என்று தெரியாமல் குழப்பமிருந்தது. கிபி 1862 ல் நைல் நதியை ஆய்வுசெய்த JOHN HENNING SPEKE என்னும் ஆய்வாளர் விக்டோரியா ஏரியில் உற்பத்தியாவதை கண்டறிந்தார்.  அவரை வரலாறு ஏனோ மறந்தது. பின்னர் கிபி 1937 BRUCKHAR WALDEKKER  ஜெர்மன் ஆய்வாளர் வெள்ளை நைல் உகாண்டாவில் உள்ள விக்டோரியா ஏரியிலிருந்தும், நீல நைல் எத்தியோப்பியாவின் தானா  ஏரியிலிருந்தும் உற்பத்தியாகிறது என்பதை உறுதி செய்தார். இந்த இரண்டு நதிகளும் இணந்து நைல் நதியாக ஓடி மத்திய தரைக் கடலில் கலக்கிறது. சுமார் 2781 கிலோ மீட்டர் நீளம் உள்ள யூப்பரடீஸ் நதி துருக்கியில் துவங்கி சிரியா, ஈராக் வழியே பாய்கிறது.

யூப்பரடீஸ் மற்றும் நைல் நதிகள் ஏழாம் வானத்தில் பிறக்கிறது என்பதை பகுத்தறிவு உள்ளவர்களால் எப்படி ஏற்க முடியும்?கங்கை நதி சிவனின் தலையில் இருந்து வருகிறது என்ற இந்து மதத்தினரின்  நம்பிக்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?.

அன்றைய ஆன்மீக அறிவாளிகள் தங்களுடைய நம்பிக்கைகளுக்க எதிரான கருத்து என்று பூமி உருண்டை என நிரூபித்தவனை கல்லால் அடித்து கொன்றதும், பிறகு தங்களுடைய வேதத்தில் திருத்தம் செய்து கொண்டதும் நீங்கள் மிகத்தெளிவாக அறிந்த செய்தி.

போலந்துக்காரர் கோபர் நிகஸ்(1473-1543)பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற கருத்தை வெளியிட்ட பொழுது எத்தனை பேர் அவரை நம்பினார்கள்?  இதே போன்ற மாற்றுக் கருத்தை ஆவேசமாக வெளியிட்ட  கியார்டனோ புரூனோ (1548-1600)என்ற இத்தாலியர், ரோம் நகரில் மதவாதிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.டைகோ பிராகே (1546-1601)என்பவர் தனது 20வருட கிரகங்களின் சஞ்சாரங்களைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்பை ஜோஹேன்ஸ் கெப்ளர் (1571-1630) என்பவரிவரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்தார். கலிலியோ (1564-1642),கோபர் நிகஸின், கெப்ளர் போன்றவர்களின் கருத்து உண்மையாதே என்று ஆதரத்துடன் நிரூபித்தற்காக அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தான் தவறான ஆதாரங்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை கூறிவிட்டதாகவும், பூமி தட்டையானதே என்று அழுது கொண்டே தனது கண்டுபிடிப்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டார். ஆனால் மனிதனின் அறிவுத் தாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் மதவாதிகளின் இத்தகைய தடைகளை மீறிக் கொண்டு வளர்கின்றன.

சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகே பூமி தட்டையானது,சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்பதைப் போன்ற பல கருத்துகள் தவறானவை என்பதை ஆன்மீகவாதிகள் மெதுவாக உணர்ந்தனர், தங்களது தவறான கோட்பாட்களுக்கும், விளக்கங்களுக்கும் புதிய முலாம் பூசி மறைத்தனர்.அடுத்தது குர்ஆன் தனக்குத் தானே முரண்படுவதைப் பாருங்கள்.

தீர்ப்புகள் திருத்தப்படலாம்

உலக வாழ்வின் பிரதிபலன், மண்ணறையில் முன்கர், நக்கீர் என்ற இரு மலக்குகளின் விசாரணையிலிருந்து துவங்குகிறது. அவர்களது எளிமையான கேள்விகளுக்கு சரியான பதில் கூறியவர்களுக்குப் பரிசாக மண்ணறை 70 முழம் விரிவடைந்து  பிரகாசிக்கும். அவர்களிடம் மணமகனைப் உறங்கு எனக் கூறப்படும். சரியான பதிலளிக்கத் தவறியவர்களின் மண்ணறைகள் இருண்டு, அவர்களது விலா எலும்புகள் ஒன்றோடொன்று இணையுமளவிற்கு நெருக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இந்நிலை யுக முடிவு நாள் வரைத்  தொடரும்.

உலகம் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்படுவார்கள். நரகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள, வாளின் முனையைவிட கூர்மையான, முடியை விட மெல்லிய “ஸிராத்” என்ற  பாலத்தைக் கடக்க வேண்டும். நம்பிக்கையாளர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து விடுவார்கள். மற்றவர்கள் நரகத்தில் வீழ்ந்துவிடுவார்கள். பிறகு அவர்கள் அனைவரும் விசாரணைக்கு அல்லாஹ்வின் முன்னே நிறுத்தப்படுவார்கள். என்ற அவர்களது செயல்கள் பற்றி பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப, வலக்கரத்திலும், இடக்கரத்திலும் வழங்கப்படும் “மீஸான்” என்ற தராசில்   அவர்களது செயல்கள் பற்றி பதிவு புத்தங்கங்கள் எடை போடப்படும்.

எடைபோடப்பட இருப்பவைகள் நன்மை தீமைகள் பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டுமல்ல வேறு சில பொருட்களும் உள்ளன.

புஹாரி ஹதீஸ் எண் : 2853

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனது வாக்குறுதியை நம்பியும் எவர் அல்லாஹ்வின் பாதையில் (புனிதப் போர் புரிவதற்காக) ஒரு குதிரையைக் கட்டி வைக்கின்றாரோ அவர் அதற்குப் போடுகின்ற தீனியும் அதற்குப் புகட்டுகின்ற தண்ணீரும்,அதன் சாணமும் அதன் சிறுநீரும் மறுமை நாளில் அவரது (செயல்கள் நிறுக்கப்படும் தராசில் அவரது நற் செயல்களின்) தட்டில் (வைத்து எடை) போடப்படும்.

இன்றைய காலத்தில் குதிரைகளின் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது என்பதை நாம் அறிவோம். குதிரை என்று ஹதீஸில் குறிப்பிடப்படுவதைப் போர்க்களத்தில் பயன்படும் வாகனங்களைக் குறிப்பிடுகிறதெனில், இன்றைய ஜிஹாதிகளுக்காக நாளை மறுமையில் எடைபோடத் தயாராக இருப்பவைகளாவன, போர்விமானம், போர்க்கப்பல், பீரங்கிகள் மற்றும் இதர வாகனங்கங்களின் எரி பொருட்களும், உயவு எண்ணெய், மசகு பொருட்களும், வாகனங்களின் உதிரி பாகங்களும் கழிவுகளாகவும்தான்  இருக்க முடியும். அல்லது நன்மையை அதிகமாக்கிக் கொள்ள குதிரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையிலிருந்து அது செய்ததும் இன்னும் தீமையிலிருந்து அது செய்ததும் தன் முன்னே கொண்டு வரப்பட்டதாகக் காணும் நாளில் …

(குர்ஆன் 3::30)

ஒவ்வொரு ஆத்மாவும் விசாரணையை சந்திக்க வேண்டுமா? எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கமாக விசாரணை செய்தால் ரகசியமாக செய்த தவறுகள் எல்லோருக்கும் தெரிந்து நாம் இழிவடைந்து விடுமே என்று முஸ்லீம்கள் கவலையடையத் தேவையில்லை மறுமையில் ரகசிய விசாரணைகளும் உள்ளது.

புஹாரி ஹதீஸ் : 4685  

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது

(அபூ அப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, அபூ அப்திர்ரஹ்மானே அல்லது இப்னு உமரே (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர் அவருடைய இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார். அல்லது இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார், அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா என்(று கேட்)பான். அவர், (ஆம்) அறிவேன். என் இறைவா என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகின்றேன் என்று கூறுவான்.…

இந்த விசாரணைகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

முஸ்லீம் ஹதீஸ் எண் : 317,  அத்தியாயம்: 1, பாடம்: 1.94,

அறிவிப்பாளர் : அபூஹுரைரா  (ரலி).

நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று கூறியபோது (உக்காஷா எனும்) ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். மற்றொருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று வேண்டினார். நபி (ஸல்) அவர்கள், “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்தி விட்டார்” என்று சொன்னார்கள்.

விசாரணையிலிருந்து எழுபதாயிரம் பேர்கள் மட்டுமே தப்பிக்க முடியும். மனிதர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது மிக மிக குறைவான எண்ணிக்கையே. சொர்க்கத்திற்கு  செல்ல வேறு குறுக்கு வழிகள் ஏதேனும்  உள்ளதா?

நடைமுறை வாழ்வில் பரிந்துரை தவிற்க முடியாததொரு செயல். பரிந்துரை செய்வதும், பரிந்துரைக்கப்படுவதும்  நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. பரிந்துரைகளால் ஏற்படும் தீய விளைவுகளையும் மறுப்பதற்கில்லை. தகுதியற்றவர்களுக்குச்  செய்யப்படும் பரிந்துரைகளால் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். சிபாரிசுகளால் தண்டனைகளின்  பிடியிலிருந்து தப்பித்தவர்களின் பட்டியல் நீளமானது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் இத்தகைய உதவிகள்  மரணத்திற்கு பின்னும் தொடருமா?  பரிந்துரைகளால் நரக தண்டனகளிலிருந்து தப்பிக்கவும் சொர்க்கத்திற்கு  செல்லவும் முடியுமா?

குர்ஆன் என்ன சொல்கிறது?

இன்னும் எந்த ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவிற்கு எந்தப் பலனையும் அளிக்க முடியாத அதற்காக எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாத இன்னும் அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்களே அத்தகைய (கியாமத்) நாளை  பயந்து கொள்ளுங்கள்

(குர்ஆன் 2::48)

ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவைத் தொட்டும் எதையும் பலனளிக்காத அதற்கு எவ்விதப் பரிந்துரையும் பலன் தராத இன்னும் அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்களே – அந்த மறுமை நாளை  நீங்கள் அஞ்சுவீர்களாக

(குர்ஆன் 2:123)

முஃமின்களே ! கொடுக்கல் வாங்கலும் நட்புறவும் பரிந்துரையும் (எந்த நாளில் பலன்) இல்லையோ அந்த நாள் வருவதற்கு முன்…

(குர்ஆன் 2:254)

…அவனன்றி அவர்களுக்கு எந்தப் பாதுகாவலனும் எந்த பரிந்துரை செய்பவனும் இல்லை

(குர்ஆன் 6:51)

அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு (உதவி) எதனையும் செய்யச் சக்தி பெறமாட்டாது. அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே சொந்தம்.

(குர்ஆன் 82:19)

பரிந்துரைகள் பலனளிக்காதா? மறுமை வாழ்வில் பரிந்துரைகளால் அல்லாஹ்வின் தீர்ப்பை மாற்ற முடியாதா?

எந்த பரிந்துரையாளனும் இல்லையென்று உறுதியாகக் கூறிய பின்னரும் என்ன முட்டாள்த்தனமான கேள்வி இது? என்று ஆத்திரப்பட வேண்டாம். அல்லாஹ்வின் முன் பேசவும், பரிந்துரை செய்து கொடிய நரக நெருப்பிலிருந்து காப்பாற்றவும் சக்தி பெற்றவர்கள் இருக்கிறார்கள். முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் மறுமை நாளில் பரிந்துரைகள் ஏற்கப்படும் என்பதில் உறுதியாகவும் இருக்கின்றனர். இவர்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களும்  உள்ளன.

முஸ்லீம் ஹதீஸ் : 289,  அத்தியாயம் : 1, பாடம் : 1.85,

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).

“சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதன் நானாவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவனும் நானாவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

பரிந்துரைத்தலைப்பற்றி கூறும்  ஹதீஸ்கள்,  குர்ஆன் வசனங்களுக்கு எதிரானவைகள் அல்ல. மறுமை நாளில் பரிந்துரைகள் ஏற்கப்படும் என்பதை உறுதி செய்யும்  குர்ஆன்வசனங்கள் சில…

…அவனுடைய அனுமதிக்குப் பின்னால் அல்லாமல் (அவனிடம்) பரிந்துரை செய்பவர் எவருமில்லை

(குர்ஆன் 10:3)

யாருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர அவனிடத்தில் பரிந்துரை செய்வது பலன் தராது …

(குர்ஆன் 34:23)

அந்நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவருக்கு (அவருடைய) சொல்லைப் பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர (எவருக்கும்) பரிந்துரை பலனளிக்காது

(குர்ஆன் 20:109)

பரிந்துரை செய்வதற்கு மலக்குகளும் உள்ளனர் எனக் கூறும்  குர்ஆன் வசனங்கள்,

அவன் பொருந்திக் கொண்டவர்களுக்கே தவிர (வேறு எவர்க்கும்) அவர்கள் (மலக்குகள்) பரிந்துரை செய்யமாட்டார்கள்

(குர்ஆன் 21:23)

மேலும் வானங்களில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர்; அவர்களுடைய பரிந்துரை அல்லாஹ் எவரை நாடி திருப்தியும் கொண்டானோ அவருக்கு அனுமதியளித்த பின்னரே தவிர எதையும் பலன் தராது.

(குர்ஆன் 53:26)

கொடுக்கல் வாங்கலும், நட்புறவும் பரிந்துரையும் பலனளிக்காத நாள் இருக்கிறது, அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு எந்த உதவியாளனும் இல்லை எந்த பரிந்துரையாளனும் இல்லை என்றெல்லாம்  கம்பீரமாக முழக்கமிட்ட  குர்ஆன் வசனங்கள்  இப்பொழுது அர்த்தமற்றதாகத் தெரியவில்லையா?

குழப்பம் இத்துடன் முடியவில்லை

தஜ்ஜால்….

தொடரும்….

1 thoughts on “ஆரம்பத்தை நோக்கி – தொடர் 27

  1. ஒரு குறிப்பிட்ட துறை அல்லது இயல் குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள முதலில் நாம் அந்த இயலில் அறியாதவர் என்பதை ஏற்று கொள்ள வேண்டும், அதன் பிறகு சரியான நூல்கள் அந்த துறை சார்ந்தவர்களிடம் பயிற்சி மற்றும் விவாதித்தல் போன்ற ஆரோக்கியமான வழிமுறைகளை கையாளலாம். இந்த கட்டுரையின் ஆசிரியர் இஸ்லாமிய அடிப்படை அறிவு கோளாறுகள் நிறைய உள்ளவர் என நினைக்கிறேன். நீங்கள் (இமாம்கள், முஸ்லிம் தலைவர்கள் )யாரிடமாவது ஏமார்ந்து போயிருந்தால் அதற்கு அவர் தான் பொறுப்பு.. இந்த வாழ்கை முறை அல்ல.
    புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வசை மாறி தூற்றலுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் இஸ்லாமிய நூல்களையோ அல்லது வேறு நூல்களையோ வாசித்திருப்பார் என எண்ணுகிறேன்.
    போட்டி, விவாதம் என்ற எண்ணம் இல்லாமல் அறிவை தேடும் முயற்சியாக பின் வரும் முகவரியை தொடர்புகொண்டால் உங்களுக்கு இஸ்லாத்தின் தூய உண்மை செய்தியை, அறிவை …அதன் வரலாற்று மற்றும் ஆதாரபூர்வ பின்னணிகளில் விளக்க நிறைய பேர் இருக்கிறார்கள்.

    138, பெரம்பூர் நெடுஞ்சாலை, (ஜமாலியா பேருந்து நிறுத்தம் அருகில் )
    பெரம்பூர்,
    சென்னை

    அமைதியான , ஆக்கபூர்வமான வழிகளில் … நாகரீகமான சமூகம் காண்போம்!!

பின்னூட்டமொன்றை இடுக